Banooravi at home in Singapore, holding a small Pillaiyar figure, with part of her collection displayed in wooden cabinets. Tamil Murasu, September 2012.
தங்கம், வெள்ளி, வெண்கலம், பாதரசம் ஆகிய உலோகங்களிலான பிள்ளையார் சிலைகள், கிரிஸ்டல், பவளம், பச்சை மாணிக்கக் கல், மரக்கல், செங்கல் என பலரக கற்களினால் ஆன பிள்ளையார் சிலைகள், இந்தியா, இந்தோனீசியா, ஹாங்காங், சீனா, திபெத் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பிள்ளையார் சிலைகள் என திருமதி பானுமதி வெங்கட்ரமணியிடம் இருக்கும் பிள்ளையார் சிலைகளின் பட்டியலோ நீண்டுகொண்டே போகின்றது.
அவர் வீட்டில் எங்கு திரும்பினாலும் பிள்ளையார் உருவச் சிலையையோ அல்லது உருவப்படமோ அவர் வீட்டை அலங்கரிப்பதைப் பார்க்கலாம். 1008க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகளைச் சேகரித்த பானுமதியிடம் மைசூர் சந்தன சோப்பில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் இருந்தது.
சிறு வயதில் அஞ்சல் தலைகள், விசித்திரமான சில்லரை காசுகளைச் சேகரிக்கும் பழக்கமுடைய பானுமதிக்கு ஒரு முறை வீட்டில் நடந்த நவராத்திரி விழாவின்போது வித்தியாசமான பிள்ளையார் சிலைகளையும் சேகரிக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.
"1992ம் ஆண்டில் எங்கள் வீட்டு நவராத்திரி நிகழ்ச்சிக்கு நான் என் நண்பர்கள், உறவினர்களை அழைத்தேன். வருபவர்களுக்கு தாம்பூலத்தோடு பிள்ளையார் சிலைகளைக் கொடுத்தேன். மீதம் இருந்த பிள்ளையார் சிலைகளைப் பார்த்தவுடன் வித்தியாசமான கோலங்களை உடைய பிள்ளையார்களையும் சேகரிக்கலாமே என யோசனை தோன்றியது. அன்றிலிருந்து பிள்ளையார் சிலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்," என்றார் பானுமதி.
குழந்தையைப் போன்று தவழ்வது, படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பது, நான்கு மூஞ்சுறுகளைத் தேரில் பூட்டித் தேரில் பயணிப்பது என பல கோணங்களில் பிள்ளையார் சிலைகளைச் சேகரித்திருக்கும் பானுமதி, முதன் முதலில் மாக்கல் பிள்ளையார் சிலைகளையே சேகரித்தார்.
அவர் சேகரித்த பிள்ளையார் சிலைகளில் அவருக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் சிலை எது என்று கேட்டபோது எதை சொல்வது எனத் தெரியாமல் தன் பேழைகளை அங்குமிங்கும் பார்த்துவிட்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பிள்ளையார் சிலையை எடுத்துக் காட்டினார்.
அவர் பிறந்து வளர்ந்த செட்டிநாட்டில் (கானாடுகாத்தான்) எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவிலைப் பார்த்துவிடலாம்.
சிறுவயது முதல் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து வளர்ந்ததால் திருமதி பானுவிற்கு பிள்ளையார் என்றால் மிகவும் விருப்பம்.
அவ்விருப்பமே அவரை வித்தியாசமான பிள்ளையார் சிலைகளைச் சேகரிப்பதற்கு வழிவகுத்தது. திருமதி பானுமதியின் வீட்டில் விசேஷம் என்றால் அவரின் உறவினர்கள், நண்பர்கள் அவருக்குப் பரிசளிப்பதற்கு முதலில் தேர்வு செய்வது பிள்ளையார் சிலைகளே.
திருமதி பானுமதி இந்தியாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் பயணங்கள் மேற்கொள்ளும்போது திருமதி பானு அவ்வூர்களிலிருந்து நினைவுப் பரிசாக பிள்ளையார் சிலைகளையே வாங்கிக் கொண்டு வருவார்.
அவரிடம் இருக்கும் 1008க்கு மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் வேறுபட்டு விளங்குகின்றன.
திருமதி பானுமதியின் பிள்ளையார் சிலைகள் சேகரிப்பினைக் கண்டு லயித்துப் போன இவருடைய ஃபிரஞ்சு மருமகன் தம்முடைய பெயர் அட்டையில் பிள்ளையாரின் உருவம் இடம் பெற செய்திருக்கிறார்.
"எனது பிள்ளைகளின் பிறந்தநாள் எனக்கு எவ்வளவு சிறப்பானதோ அது போல விநாயகர் சதுர்த்தியும் எனக்கு சிறப்பானது. அன்று, சிறப்பு பூஜைகளும் என் வீட்டில் நடத்தப்படும்," என்றார் திருமதி பானுமதி.
பிள்ளையார் சிலைகள் சேகரிப்புடன் அவற்றைச் சிரத்தை எடுத்து அவருடைய பணிப் பெண் ரோஸின் உதவியோடு பராமரித்து வருகிறார் திருமதி பானுமதி.
இந்த கட்டுரையின் மூல உரிமை Tamil Murasu-க்கு உரியது. பானுரவியின் குடும்பக் காப்பகத்தில் இடம்பெறுகிறது.