❋Paarthen Ezhuthugiren
c. 2023
இரண்டெழுத்துச் சொல்லான அடியில் ஆயிரம் அர்த்தங்கள்! — ஒரு பாதிப்பு, மரத்தின் அடி, செய்யுளின் அடி, இறைவனின் திருவடி. "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பழமொழியிலிருந்து மாணிக்கவாசகரின் பக்தி, பரதனின் பாதுகை ஆட்சி, கம்பன் தனது மகன் அம்பிகாபதியைக் காப்பாற்றியது, செய்யுளின் அளவுகள் வரை.
உங்களைப் பொறுத்த மட்டில் அடி என்பது என்ன? … ஒரு பாதிப்பு, ஒரு மரத்தின் அடி, செய்யுளின் அடி, சொல்லின் அடி, இறைவனின் அடி… இப்படி நிறைய விதத்தில் அடியைப்பற்றி உங்கள் நினைவில் வந்து போகலாம்… சிறுவயதில் அம்மாவிடமோ, அப்பாவிடமோ அடி வாங்காத குழந்தைகள் இருக்க முடியாது… இந்த இரண்டெழுத்துச் சொல்லான அடியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா?...
எனது சிந்தையில் நிறைய அடிகள் வந்து போகின்றன… "அடிக்கிற கைதான் அணைக்கும்"... உண்மை தானே? மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அடிக்கின்ற கைகள், மனது ஆசுவாசப்பட்ட பிறகு அணைக்கின்ற கைகளாகிவிடும் விந்தை நடக்கவே செய்கிறது! "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"... இது சற்று நம் சிந்தையைத் தூண்டும் கருத்து… அந்த அடி மனதில் வடுவாக மாறினாலும், போகிற போக்கில் ஒரு மாற்றத்தை அவர்களின் நடத்தையில் ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை…
இன்னொரு பழமொழி நினைவுக்கு வருகிறது… "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்"…. மிகவும் கனமான கல்தான் அம்மி… அதன் மீது குழவிக்கல்லை வைத்து அசைக்கும்போது பொருட்கள் மசிகின்றன… ஆனால் அந்தக் குழவியை வேகமான விசையுடன் மிகவும் அழுத்தமாய் நகர்த்தும் பட்சத்தில் அந்த அம்மி நிஜமாகவே அசைந்து கொடுக்குமல்லவா? அது போல், மிகவும் வலுவான மனோதிடம் கொண்டவர்களைத் திரும்பத் திரும்பப் பேசி, அவர்களைத் தங்களுடைய வழிக்கு கொண்டுவருவதை நாம் பார்க்க முடிகிறது…
இது தவிரவும், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பதும் ஒரு சொலவடை! வாழ்வில் நொந்து போனவர்கள், "நான் நன்றாக வாழ்வில் மிகவும் அடிபட்டிருக்கிறேன்…" என்று கூறுவதைக் கேட்டிருப்போம். எனவே அடி என்பதை ஒருவரது மனதின் அளவுகோல், எண்ணத்தின் அதிர்வு, உணர்வுகளின் கொந்தளிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு கவிஞரின் எண்ணத்தில், அடி என்பது, எழுத்தின் வடிவில் உதித்த ஒரு அசை, அசையின் ஓசையில் மலர்ந்த சீர், சீர்களின் சங்கமத்தில் பிறந்திடும் அடி,... மொழியின் நடையடி அந்தக் கவிதையின் நாடியாக இருக்கும்…
பக்தி இலக்கியத்தில் அடி என்பது, இறைவனின் திருவடியைச் சொல்வது. மாணிக்கவாசகர், தாது திருவாசகத்தில் இறைவனின் திருவடியை ஆன்மீக உச்சமாகப் பாடுகிறார். இங்கு "அடி" என்பது மொழி இயல் அலகு அல்ல, ஒரு ஆன்மீகச் சின்னம்! இறைவனின் அடியைப் பணிந்தவர்கள் அடியார்கள் எனப்பட்டனர். "தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்…" இங்கே அடியார்கள் இறைவனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் எனத் தெரிகிறது…
திருவிளையாடல் புராணத்தில் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கும் பிட்டுக்கு மண்சுமந்த படலத்தில் பிரம்படி பட்டு, வந்தி என்ற மூதாட்டிக்கும் சிவபெருமான் அருளியதாக அறிகிறோம்!
பாரதத்தில் பகவான் கிருஷ்ணர், தலைமாட்டில் நின்ற துரியோதனனுக்கு உதவாமல், தனது திருவடியைப்பற்றிய தருமருக்கு யுத்தத்தில் உதவ நிச்சயித்தார் என்பது இறையடி எத்தனை போற்றத்தக்கது என்பதைத் தெளிவுபடுத்துகிறது!
இராமாயணத்தில், இராமன் காட்டுக்கு ஏகும் பொது, பரதன் அவரது திருவடிகளைத் தாங்கிய பாதுகைகளைக் கொண்டே அரசாண்டதாக அறிகிறோம்! இங்கே அடி என்பது தர்மத்தின் பிரதிநிதித்துவமாகத் தெரிகிறது… இங்கே கிரீடம் ஆட்சி செய்யவில்லை; அடிதான் ஆட்சி செய்கிறது.
இன்னொரு சுவாரஸ்யமான கவிதையும் நினைவுக்கு வருகிறது…
கம்பனின் மகன் அம்பிகாபதியும், குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். இந்தப் பொருத்தமற்ற காதலை அரசனிடம் ஒட்டக்கூத்தர் புகார் செய்து ஒரு விருந்து வைத்து அதை நிரூபிக்க நினைக்கிறார்… இளவரசி அமராவதி அன்னமிடுவதைக் கண்டு புலவன் அம்பிகாபதி இவ்வாறு பாடுகிறான்…. "இட்ட அடி நோக ..எடுத்த அடி கொப்பளிக்க, வட்டில் சுமந்த மருங்கசைய,..." என்ற இந்த இரு அடிகளை அவன் பாடுகையில் அரசனுக்குப் புரிந்துவிடுகிறது. உடனே அரசன் தன்மகன் அம்பிகாபதியைச் சிரச்சேதம் செய்துவிடுவானே என்று கம்பர், பின்வரும் ஈற்றடிகளான "கொட்டிக் கிழங்கோ கிழங்கு! என்று கூவுவாள் தன் நாவில் வழங்கோசை வையம் பெறும்!" எனப் பாடி, அம்பிகாபதியைக் காக்கிறார்!
இலக்கியத்தில் செய்யுள் எழுத ஆறு உறுப்புக்கள் உண்டு; இந்த ஆறு உறுப்புகளில் ஐந்தாவது உறுப்பு அடி என்பதாகும். "எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை" என்பது இதை விளக்குகிறது. அது மட்டுமல்ல, "அடுத்து நடத்தலின் அடியே! அடி இரண்டு… தொடுத்து மன் சேறலின் தொடையே" என்னும் நூற்பா, அடி என்பதின் பெயர்க்காரணத்தையும் விளக்கத்தையும் ஒருசேரக் கூறுகிறது. எப்படி என்றால், சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி நடையைத் (rhythm) தளை என்போம். அந்தச் சீர்கள் தொடர்ந்து இயங்கும்போது, அவற்றை அடி என்கிறோம்… (concatenated chain movement)
பேச்சு வழக்கில் கூட அளவறிந்து பேச வேண்டும் என்பார்கள். பேசும் பேச்சுக்கே அளவு வேண்டுமெனில் புனையும் செய்யுளுக்கும் அளவு தேவை தானே? நூலார் யாவரும் ஒப்புக்கொண்ட கருத்து இந்த அடியின் அளவு!
"குறள் ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்; முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி; ஐந்தளை முதலா எழுதளையாவும்; வந்தவும் பிறவும் கழிநெடிலென்ப…."
அதாவது, யார் எந்த மொழியில் கூறினாலும், செய்யுள் என்பது குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்பதை ஒட்டியே ஆக்கம் பெறுகிறது…
இப்படியாக அடியைப்பற்றி தெரிந்து கொண்டாலும், அடி என்னும்போது, நான் முதலில் எழுதியபடி நாம் யாரிடமிருந்தாவது வாங்கிய அடிதான் யாருக்குமே நினைவுக்கு வரும்… சரியாகப் படிக்காவிட்டால், உண்ணாவிட்டால், எதிர்த்துப் பேசினால், எல்லாவற்றுக்கும் அடிதான் ஒரு பெரிய பாடமாக இருக்கிறது.
Spare the Rod, spoil the child என்பது நாம் வளர்ந்த காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். கசையடி கொடுத்துத் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதெல்லாம் மலையேறி விட்டது… "அடியாத மாடு பணியாது" என்பதெல்லாம் இப்போது செயலாக்கம் பெறுவதில்லை. இன்றைய நாட்களில், அடிப்பது என்பது ஒரு சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
இது வரவேற்கத்தக்க மாற்றம் தான்… காலம் மாறுகையில், கண்டிக்கும் விதமும், மாற்றம் அடைகிறது. அடித்தல், திருத்தல் இல்லாமல் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதுவது போல, அடித்தலும் அதட்டலும் இல்லாமல் ஒருவரை நெறிப்படுத்துவது என்பது ஒன்றும் இமாலய சாதனை அல்ல என்றுதான் எனக்கும் தோன்றுகிறது… உங்களுக்கு?
பானுரவி சிங்கப்பூர்
பானுரவி / Banooravi
கட்டுரைகள் →