கட்டுரை

நான் ஒரு கதைசொல்லி!

Singapore

கதைசொல்லி என்றால் யார்? வியாசர், கம்பர், சேக்கிழார், வில்லிப்புத்தூரர் இல்லாமல் நமக்கு ராமாயணம், மஹாபாரதம், பெரியபுராணம் எதுவும் தெரியுமா? ஆதி காலத்தின் வாய்மொழி இலக்கியத்திலிருந்து, ஷகர்ஜத்தின் 'ஆயிரத்தோரு இரவுகள்' வழியாக, ஜீஜாபாயின் கதைகள் சிவாஜியை வளர்த்ததும், ஹரிச்சந்திர நாடகம் காந்திஜியை வளர்த்ததும், மரத்து நிழலில் தம்பி தங்கைகளைச் சுற்றி வைத்துக் கதை சொன்ன அக்காவையும், வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு ஊட்டியபடியே கதை சொன்ன பாட்டியையும் தொட்டு வரும் சிந்தனை. திரை கதைசொல்லியின் இடத்தில் அமர்ந்த இந்த நாட்களில் அமைதியாக நாம் இழந்து வருவது என்ன — பெற்றோர்களின் படைப்புச் சிந்தனை — என்பதைப் பற்றியதோர் கட்டுரை. கடைசியில் ஆசிரியர் வாசகர்களிடம் ஒரு கேள்வி: "உங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒரு கதைசொல்லியாக உணர்ந்திருக்கிறீர்களா?"

கதைசொல்லி என்றால் யார்? இந்தக் கதைசொல்லிகள் என்ன செய்கிறார்கள்? இவர்களின் தொடக்க காலம் என்ன? சிறிது சிந்தித்துப் பார்த்தால், ஆதி காலம் தொட்டே இவர்கள் இருந்துவருவது புரியும்… ஒரு வியாசரோ, கம்பரோ, சேக்கிழாரோ, வில்லிப்புத்தூரரோ இல்லாவிட்டால் நமக்கு ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும், பெரியபுராணத்தையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியுமா? வாய்மொழி இலக்கியமே இந்தக் கதைசொல்லிகளின் துவக்க நிலையாக இருந்திருக்க வேண்டும்! எழுத்துக்கள் தோன்றி, அச்சில் ஏறும் காலம் வரை, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள், நிச்சயம் இந்தக் கதைசொல்லிகளாகத் தான் இருக்க வேண்டும்… இல்லையா? நமது புராணங்களும், இதிகாசங்களும் இப்படித்தான் காலம் கடந்து வாழ்ந்தன என்று நான் நம்புகிறேன். கதாகாலட்சேபங்கள், மேடைக் கூத்துக்கள், நாடகங்கள் என்று விதவிதமாக மக்களை இந்தக் கதைகளில் மூழ்கடித்தவர்கள், இந்தக் கதைசொல்லிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா, என்ன? மகுடி இசைக்குப் பாம்புகள் மயங்குவது போல் இந்தக் கதைகளைக் கேட்டறியவும் மக்கள் தீரா மோகம் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை! ஒரு கதை நினைவுக்கு வருகிறது… உங்கள் அனைவருக்கும் 'ஆயிரத்தோரு இரவுகள்' கதை பற்றித் தெரிந்திருக்கும்… சமர்க்கண்ட் நாட்டின் அரசன் ஷாரியர், பெண்களை ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுத்தவன். அவன், தினமும் ஒரு பெண்ணை மணந்துகொண்டு, அவளை அனுபவித்தபின், கொன்றுவிடுவான். இதனால், அந்த நாட்டில் பெண்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. மந்திரி தவித்துப் போகிறான்… அரசரைத் திருத்த முயன்றும் முடியவில்லை… என்ன செய்வது என்று தெரியாது விழிக்கிறான்! மந்திரியின் மகளான ஷகர்ஜத் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருகிறாள். தந்தையைச் சமாதானப்படுத்தி, அரசரை மணந்து கொள்கிறாள். முதல் நாள் இரவில், அரசருக்குக் கதை கேட்பதில் விருப்பம் உண்டா எனக் கேட்கிறாள்… மன்னனும் கதை கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவன்… எனவே விடியும்வரை அவளிடம், அரசன் கதை கேட்பதில் கவனம் கொள்கிறான்… புத்திசாலியான ஷகர்ஜத், கதையை மிச்சம் வைத்துவிடுவாள்… முடிப்பதில்லை… 'தொடரும்' என்று சொல்லி மறுநாளுக்குத் தள்ளி வைப்பாள். கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், அரசனும் ஒவ்வொரு நாளும் கதை கேட்கும் நேரத்தை நீட்டிக்கிறான்… இதனால, கதையின் தொடர்ச்சி ஆயிரத்தொரு இரவுகளுக்கு அவர்களை இட்டுச் செல்கிறது… இப்படி மிகவும் சுவாரசியமாக, சாமர்த்தியமாகக் கதை சொல்லி அந்த மன்னனை ஷகர்ஜத் நல்வழிக்குக் கொண்டு வந்துவிட்டதால், அவள் இறப்பிலிருந்து தப்பித்து விடுகிறாள்… கதையின் வலிமைக்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லுவேன். அரசன் கதையை மட்டும் ஷகர்ஜத்திடம் கேட்கவில்லை… அவளோடு ஒருவித நல்லிணக்கத்திற்கும் தயாராகி நல்வழியில் சென்றான் என்று முடிகிறது அந்தக் கதை! ஒரு கதையின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால், பொழுது போக்காக மட்டும் அல்லாமல், கதை கேட்பவர்களை ஓரளவுக்கு நல்வழிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக, இந்தக் கதைகள் பெரியவர்களிடம் மட்டுமல்ல, சிறு குழந்தைகளிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பேன். சத்ரபதி சிவாஜிக்கு அவரது அன்னை ஜீஜாபாய் சொல்லிவந்த கதைகளே அவரை இந்துசமய சாம்ராஜ்யம் அமைக்க உற்ற அடித்தளமாக இருந்தது. நமது காந்திஜியை எடுத்துக் கொண்டால், அவர் கண்ணுற்ற அரிச்சந்திரன் நாடகமும், ராமர் கதையும்… வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசவேண்டுமென்ற எண்ணத்தை, அவரது ஆழ்மனத்துள் புதைத்தது. கதை கேட்க விரும்பாத குழந்தைகள் உண்டா, என்ன? குழந்தைகளை வளர்ப்பதற்கும், வசப்படுத்துவதற்கும் இந்தக் கதை சொல்லும் முறையை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பது எத்தனை சிறப்பான விஷயம்? நமது தாத்தாவும் பாட்டியுமே, குழந்தைகளின் சிறந்த கதைசொல்லிகளாக இருந்தார்கள் என்பது வெளிப்படை… ஏனென்றால் அது இன்றளவும் தொடர்கிறதே! மரத்து நிழலிலும், முற்றத்துத் திண்ணைகளிலும், தம்பி தங்கைகளை வட்டமாக உட்கார வைத்துக்கொண்டு கதை சொன்ன அம்மாவையோ, அக்காவையோ இன்று காண முடியவில்லை… பாட்டியானவள், வெள்ளிக் கிண்ணத்தில் பேரக்குழந்தைகளுக்குப் பால்சோற்றை ஊட்டியபடியே கதை சொன்ன அந்த நாட்களும் இன்று உயிர்ப்போடு இல்லை… உலோகத்தைச் சாப்பாட்டுக்குப் பயன்படுத்தல் சரியில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது… பிளாஸ்டிக்கும், மற்றைய நவீனப் பொருட்களும் வந்துவிட்டன. மற்றபடி, வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு, இருக்கவே இருக்கிறது யூட்யூபும், மற்றைய தகவல் தொழில் நுட்பக் கருவிகளும்… ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் ஒரு காட்சியோடு கூடிய கதை திரையில் ஓடுகிறது. குழந்தைகள் எளிதாக அவற்றில் லயித்து விடுகிறார்கள்… இந்த நவீன காலத்தில் இங்கு எது காணாமல் போகிறது என்றால், பெற்றோர்களின் படைப்புச் சிந்தனை என்பேன். ஒரு ஏற்ற இறக்கத்துடன் பெற்றோரோ, தாத்தா பாட்டியோ குழந்தைகளுக்குக் கதை சொன்னால், அவர்களுக்கும் ஒரு படைப்புத் திறன் என்பது ஏற்படும்… கற்பனைத்திறன் கூடும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது… இன்றைக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் செயல்முறையில், ஒரு பொம்மையை அல்லது வரைபடத்தை உண்டாக்கிக் குழந்தைகளுக்குக் கதை நேரத்தைச் செலவிடுவதாக ஒரு செய்திக்குறிப்பு உள்ளது. உப்பில்லாமல் உணவு இல்லை என்பது போல், கதை இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்பதே சரி… நாம் கதையைச் சொல்வதின் மூலம், குழந்தைகள் கதையைக் கேட்க மட்டுமல்லாது உணரவும் செய்வார்கள் என்பது கண்கூடு! கதை சொல்லும்போது, குரலில் ஏற்ற இறக்கம், முக பாவனை, உடல்மொழி இவற்றொடு நாம் சொல்லும்போது நிச்சயம் குழந்தைகள் கதையோடு மட்டுமல்ல, நம்மோடும் ஒன்றிப் போய்விடுவார்கள்… *The power of storytelling is in helping children become so involved that they visualise the story for themselves.* இன்றைய நாட்களில் காகம் வடை திருடிய கதையும், ஸிண்ட்ரெல்லா கதையும், சிங்கம் எலி கதையும் குழந்தைகள் மனதில் பதியக் காரணம் கதை சொல்லும் முறையால் என்பதே உண்மை… பானுமாவாகிய நான் எனது பேரக் குழந்தைகளுக்கு அனேகக் கதைகள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கதையின் முடிவில் வரும் நீதியை அவர்கள் தெரிந்து கொள்ளும்போது, மனதில் அலாதி நிம்மதி ஏற்படுகிறது. அவர்கள் நான் சொல்லும் கதையை உணரும்போது, நான் ஒரு கதைசொல்லியாக அவர்களிடம் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே தோன்றுகிறது. நீங்கள் ஒரு கதைசொல்லியாக அப்படி உங்கள் குடும்பத்தில் உணர்ந்துள்ளீர்களா? — பானுரவி / சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கட்டுரைகள்