கட்டுரை

தூண்

Paarthen Ezhuthugiren

c. 2024

செட்டிநாட்டு வீட்டுத்தூண்களின் கலை நுணுக்கம், அசோகரின் சாரநாத் தர்மஸ்தம்பம், அலகாபாத் தூண், யூப வேள்வித் தூண், உமர்கய்யாமின் மினார் கவிதையை கவிமணி தமிழாக்கியது, ஒள்வையின் மூதுரை, அஹோபிலத்து உக்கிரஸ்தம்பம் — தூண்களில் உறையும் சரித்திரம், பக்தி, உறுதியின் தியானம்.

தூண்! எனக்கு நான் பிறந்த செட்டிநாட்டு வீட்டுத்தூண்கள் பற்றிய எண்ணங்கள் மனதுக்குள் வந்து போகின்றன. எனது சிநேகிதிகளின் வீடுகளுக்குச் சென்றபோதெல்லாம் அந்தத் தூண்கள் என்னை அந்தச் சிறு பிராயத்திலேயே ரொம்பவே பிரம்மிக்கச் செய்தவை! அந்தத் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகளும், கலை நுணுக்கங்களும்,...அப்பப்பா! இருகைகளாலும் கட்டிஅணைக்க முடியாதபடி, மிகவும் பருமனாக இருந்த அந்தத் தூண்கள், இன்னமும் நினைக்கும் தோறும், என்னை வியப்படையச் செய்பவை. "செம்பருத்திப் பூவைப் போலச் செதுக்கியே தூணை வச்சேன்! சந்தன மரத்தைப் போலச் சரிபாதி தூணை வச்சேன்! நிலைத்தூணு ஓங்கி நிக்க நெலவாசப் படியும் வச்சேன்! அன்பால அரவணைக்க அழகான தூணை வச்சேன்! ஆலமர உறுதி போல அசையாத தூணை வச்சேன்! மாலையிலே வந்து சாய மரத்தாலே தூணை வச்சேன்! அன்னையை நினைச்சு நானும் அர்த்தமாய்த் தூணை வச்சேன்! எனக்கொரு உறுதிப் பாடாய் எங்கேயும் தூணை வச்சேன்!" இப்படியாகத் தூண் பற்றிய பாடல்கள், அவற்றின் உறுதிப்பாட்டையும், நிலைத்தன்மையையும், தற்காப்பு அல்லது நம்பிக்கை போன்றவற்றை மையமாகக் கொண்டவை. பழைய நாட்டுக்கோட்டைச் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிய பாடல்வரிகள் இதோ…. "ஐயன் நட்ட தூணே! என் ஆத்தா நட்ட தூணே! பாட்டன் நட்ட தூணே! என் பக்கபலத் தூணே! கனமான தூணே! என் கஷ்டம்தீர்க்கும் தூணே! தாங்கி நிக்கும் தூணே! என் தாயார் நீயே தூணே!" இந்தத் தூண் என்பதை என்னவென்று சொன்னால் சரியாக இருக்கும்? கல்லில் உறைந்த காவியமா? இல்லை வெறும் பாரம் தாங்கும் உறுப்புகளா? இல்லை, அந்தந்த காலச் சரித்திரத்துக்கு ஏற்ப சமயம், கலை, மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் சான்றுகளா? மிகவும் முக்கியமான அங்கம் என்பதற்கு அனேக உதாரணங்கள் உள்ளன. எதைச் சொல்ல, எதை விட?....சற்றே விரிவாகப் பார்த்தாலன்றி தூணைப் பற்றிய பெருமை நமக்குத் தெரியாது! செட்டிநாட்டு வீடுகளில் உள்ள தூண்கள், கலை நயத்துக்கும், உறுதிப்பாட்டுக்கும் புகழ்பெற்றவை. அந்தக் கம்பீரமான வீட்டின் கெளரவத்தை இத்தூண்கள் அடையாளம் காட்டுபவை. உயர்தரமான தேக்கு, கருங்காலி, ரோஸ்வுட், போன்ற மரங்களால், நீண்ட நிலைப்புத் தன்மைக்கும், பூச்சிகளால் வீணாகாமல் இருக்கும்படியாகவும் உள்ளவை. தூணின் அடிப்பகுதி (plinth) கருங்கல்லால் ஆனது. இப்பகுதியில் தாமரைப்பூக்களின் செதுக்கல்கள் இருக்கும். உடல் பகுதியில் (shaft) நீண்ட உருளை அல்லது சதுர வடிவம் இருக்கும். மேலே செல்லச்செல்ல, குறுகலாய் இருக்கும், தலைப்பகுதியில், (Crown or Capital) கலை நயமிக்க யாளி, அன்னம், யானைகள், பூங்கொடிகள் செதுக்கப்பட்டிருக்கும்! சிற்சில தூண்கலில் அவை இணையும் இடங்களில், பித்தளைப் பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஈடு, கால், பதும், பந்தம், கலசம், கும்பம், பலகை, இதழ், உத்திரம், சுபோதம், இவை தூணின் முக்கிய உறுப்புக்களாகும். தூண்களில் பலவகை உண்டு. தீபத்தூண்கள், வெற்றித்தூண்கள், இசைத் தூண்கள், கல்வெட்டுத் தூண்கள், இப்படிப் போகிறது! மரம், கல், மற்றும் உலோகத்தால் ஆன தூண்கள், அன்றைய அசோகர் காலம் முதல் தமிழகக் கொவில்கள் வரை, பண்பாடு/கலை மற்றும் வெற்றியின் அடையாளச் சின்னமாக விளங்குகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட பண்டைய மணற்கல் தூண், இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பல அரச வம்சங்களின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கிறது. அசோகரைப் பொறுத்தவரை, இந்தத் தூண் ஒரு தர்மஸ்தம்பம்! (நீதியின் தூண்) இவற்றில் அசோகரின் ஆறு கட்டளைகளைக் காணலாம். நேப்பாளம், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இவ்வகைத் தூண்கள் அமைந்துள்ளன. நான்கு சிங்கங்களைக் கொண்ட தூண் சாரநாத்தில் உள்ளது. இது நமது இந்தியாவின் தேசியச் சின்னமாகவும் விளங்குகிறது. மேலும், சாஞ்சி, நந்ததுர்க்கம், ராம்புர்வா, வைஷாலி, மீரட், போன்ற இடங்களில் அசோகரின் இந்தத் தூண்களைப் பார்க்கலாம். அன்றைய கலிங்க தேசமான இன்றைய ஒடிஸாவில் நான் அசோகரின் கல்வெட்டைப் பார்த்து மலைத்துப் போனேன். தௌலி, மற்றும் ஜவுகடா ஆகியவை இன்றைய புவனேஷ்வர் நகருக்கு அருகே தயா நதிக்கரையில் உள்ளன. நான் இவற்றைக் கண்ணுற்றபோது, எனது மனக்கண் முன்னே அசோகச் சக்ரவர்த்தியும், அவர் நிகழ்த்திய கலிங்கத்துப் போரும், போரின் முடிவில் எண்ணற்ற வீரர்கள் மடிந்ததை எண்ணி வருந்தி அவர் பெளத்த மதத்தைத் தழுவியதும் படக்காட்சிகளாக விரிந்தன. குப்தர், மெளரியர், மற்றும் முகலாயப் பேரரசுகளின் கல்வெட்டுக்களைக் கொண்டது அலகாபாத் தூண்! இது, திரிவேணி சங்கமம் நிகழும் இடமான உத்திரப்பிரதேசத்தின் ப்ரயாகையில் உள்ளது. இத்தூண் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது முதலில் அசோகரால் கெளசாம்பியில் நிறுவப்பட்டு, பின்னர் அக்பரால் அலகாபாத் கோட்டைக்கு மாற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதைப் ப்ரயாக் பிரசஸ்தி என்று அழைப்பர். முப்பத்து மூன்று வரிகளைக் கொண்ட சமஸ்க்ருதக் கவிதை வடிவில் இதன் கல்வெட்டு உள்ளது. நான் இங்கும் சென்றிருக்கிறேன். நமது மன்னர்களைப் பற்றிய திறமையையும், அவர்களைப் பற்றிய கலை நுணுக்கம் பொருந்திய இத்தகைய சான்றுகளும் எனது சரித்திர தாகத்தை இன்னமும் அதிகப்படுத்தியவை என்றால், அது மிகையில்லை…. வேள்வி நெடுந்தூண்…. இது என்ன வகைத் தூண்? யூபம் என்பது அந்தக் காலங்களில், யாகங்களின் போது பலியிடப்படும் விலங்குகள், அல்லது பொருட்களைக் கட்டிவைக்கப் பயன்படும் வேள்வித் தூணாகும். யூபம் என்பது சமஸ்க்ருதச் சொல்லாகும். (இதைப் பாலி மொழிச் சொல் எனவும் சொல்லலாம்) இதை யாகசாலையின் மையப் பகுதியில் நட்டு வைப்பார்கள். ராஜஸ்தான், இந்தோனேசியா, உத்திரப்பிரதேசம் போன்ற இடங்களில் இருபதுக்கும் அதிகமான வேள்வித் தூண்கள் உள்ளன. யாகம் தவிர அலங்காரத்திற்காகவும் இத்தூண்கள் அமைக்கப்பட்டன. இவை பதினேழு முழம் அளவைக் கொண்டது ஆகும். நெட்டிமையார் என்ற பழங்காலப் புலவர் பாண்டியன் நெடுவழுதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்…. ",,,,,,,,,,,,,,"நால்வேதத்து அருஞ்சீர்ப் பெருங் கண்ணுறை நெய்மலி ஆவுதி பொங்க—வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல்? யாபல கொல்லோ?" இதன் பொருள்: "மன்னனே! உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்களின் எண்ணிக்கை அதிகமோ? அல்லது, நான்கு வேதங்களில் சொல்லியபடி யூபஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாகங்கள் அதிகமா?" இந்த யூபஸ்தம்பங்கள், கருங்காலி மரத்தால் செய்யப்பட்டு, மேற்புறத்தில் திரிசூலம் அமைப்புடன் காணப்படும். இதை, யாக சாலையின் கிழக்குப்புறம் வைத்து, அதில் நெய் தடவித் தோரணங்கள் கட்டி வைப்பர். இதெல்லாம் நமக்கு வியப்பூட்டும் செய்திகள் அல்லவா? இஸ்லாமியக் கட்டிடக்கலையில், மிக உயர்ந்த தூண் கோபுரங்கள் ஒரு தனிப் பண்பாடாகும். ஆங்கிலத்தில் இதனை TURRET என்பர். காலைச் சூரிய ஒளி, இத்தூண்களில் பட்டுத் தெறிக்கும் வகையில் இவை அமைந்திருக்கும். இதை மினார் என்பார்கள். புகழ்பெற்ற உமர்கய்யாம் என்ற புலவர் எழுதிய கவிதையைப் பாருங்கள்… "The Hunter of the East has caught the Sultan's Turret In a noose of light" இது தமிழில் எப்படி ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்…. கவிமணியின் வார்த்தை ஜாலம், நம்மை மதி மயக்கம் கொள்ளச் செய்வது உண்மை… "காலத் தொரு கீழ்த்திசை வேடன் தாங்கும் கதிரவன் கண்ணிகளால் சீலக் கோமான் திருக் கோயில் சிகரம் கொண்டான்! அதைக் காணீர்!...." சரி. நமது ஒள்வைப்பாட்டி என்ன சொல்லுகிறாள் இந்தத் தூண்களைப் பற்றி? இதோ மூதுரையில் காணப்படும் அழகிய செய்யுள்… "உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையால் பற்றலரைக் கண்டால் பணிவரோ? ..கல்தூண் பிளந்திறுகுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்?..." அதாவது, மானக்குறைவினால் தன் உயிரையும் கொடுத்துக் காக்கும் தன்மையுடையவர்கள், பகைவர் முன் நிச்சயமாகப் பணிந்து போக மாட்டார்கள். பெரும்பாரம் தாங்கி நிற்கும் தூண் பிளந்து உடையுமே அன்றி, எதற்கும் வளைந்து கொடுக்காது என்பதே இதன் பொருள்! இதைவிட ஒரு தூணின் வலிமையை யாரால் தெளிவுறக் கூறமுடியும்? கோவில் தூண்கள் என எடுத்துக்கொண்டால், அனேகம், அனேகம்! சுமார் நூற்றிருபது தூண்களைக் கொண்டது, தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இத்தூண்களில், நாட்டிய மங்கையரின் அனைத்து அபினயங்களையும், முத்திரைகளையும் காணலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் இசைத்தூண்கள் உள்ளன. சரிகமபதநி எனும் சப்தஸ்வரம் எழுப்பும் அதிசயத் தூண்கள் அவை! ஆழ்வார்திரு நகரிக் கோவிலில் இரண்டு இசைத்தூண்கள் உண்டு! ஒரு தூணில் மூன்று சுரங்களும், மற்றைய தூண் ஊதி இசையெழுப்பும் தூணாகவும் உள்ளது. அத்தூணில் உள்ள இரண்டு துளைகளில் ஒன்றில் சங்கின் நாதமும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கும்! சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்கள் உண்டு. அக்காலத்தில் தேவதாசிகள், இக்கோவில் தூண்களில் இசையெழுப்பி நிகழ்ச்சிகளை நடத்தியதாக அறிகிறோம். கோவிலுக்கு வரும் சாமானிய மனிதன், மூலவரைத் தரிசிப்பதற்கு முன்னரே, தூண்களின் கலை நயத்தைப் பார்த்து இறைவனின் பெருமையை உண்ர வேண்டும் என்பதற்காகவே இப்படி உருவாக்கப்பட்டுள்ளது. சரி…இத்தனை பார்த்துவிட்டோம். கொஞ்சம் புராணத்தின் பக்கம் போவோமா? புராணம் என்றவுடன் தூணிலிருந்து புறப்பட்ட நரசிம்மரே நினைவுக்கு வருகிறார், அல்லவா? அஹோபிலம் என்ற இடத்தில் உள்ள உக்ரஸ்தம்பம் அல்லது உக்குத்தூண் ஒரு வழிபாட்டுத் தூணாகும். இரணியகசிபு, பிரகலாதனிடம் வெகுண்டு கேட்கிறான்… மகனே! உனது நாராயணன் இந்தத் தூணில் உள்ளானா? கேட்டதோடு மட்டுமின்றி, தனது வெற்றித்தூணைக் காலால் எட்டி உதைக்கிறான்…. அடடா, அங்கே நிகழ்ந்தது என்ன? எழுதுகையில் என் மெய் சிலிர்க்கிறதே… "சாணிலும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்…இந்நின்ற தூணினும் உளன்; நீசொன்ன சொல்லிலும் உளன்; இத்தன்மை காணுதி விரைவில்".... பிரகலாதன் இப்படி இறை நம்பிக்கையோடு பணிவாகச் சொல்லுகிறான்… பக்தனைக் காப்பவனாயிற்றே இறைவன்! ஒரு கணமும் தாமதிக்காமல் அவன் சொன்னவண்ணம் வருகிறான்… எப்படி? "…நசைதிறந்து இலங்கப் பொங்கி "நன்று! நன்று!" என்ன நக்கு விசைதிறந்து உருமு வந்தீ தென்ன ஓர் தூணின் வென்றி இசைதிறந்து உயர்ந்த கையால் ஏற்றினான் ஏற்றலோடும் திசைதிறந்து அண்டம்கீறச் சிரித்தது! அச்செங்கண் சீயம்"!! அந்தத் தூண் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? இது கம்பனின் பாடல் வரிகள். நமது பாரதி எப்படிச் சொல்கிறான் பாருங்கள்? "தூணில் இருப்பான் நாரணன் எனச் சொன்னதைக் கேட்டே இரணியன் கான அனலெனச் சீறினான்,,, கதையால் கடியத் தடிமுறுக்கினான் 'நாராயணனாய் நாமனோ? நமை நான்குஞ் சொல்லுக் கிசைவனோ?' என்றுகதையைத் தூணிலே அவன் இடித்தான் இடிபோலதன் கண் நின்றொரு சிம்ஹம் ஆகியே நாரணன் வந்தான்! அவனியர் போற்றவே!" இப்படியாக இந்த அழகிய தூண்கள், பக்தி, சரித்திரம், வீரம் , வெற்றி, முத்திரை, உறுதி என்ற பலவகையாக நின்று நமக்கு ஒரு மகத்தான அர்த்தத்தைத் தருகிறது. மேலே குறிப்பிடப்பெற்ற பிரசித்தி பெற்ற தூண்களைக் காணும் சந்தர்ப்பங்களை எனக்குக் கடவுள் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்… இன்னமும் கூட நான் கண்டுவந்த சாரநாத் தூண்களும், திருமலை நாயக்கர் மஹாலின் தூண்களும், டெல்லியின் முகலாயத் தூண்களும், அகோபிலத் தூண்களும், இன்ன பிற அயல் நாட்டுத் தூண்களும் எனது நெஞ்சத்துள் உறுதியாக நின்று என்னை இன்னமும் திடமாக வாழச் செய்கின்றன… உங்களையும் தானே?... அன்புடன்/பானுரவி (சிங்கப்பூர்)

பானுரவி / Banooravi

கட்டுரைகள்