கட்டுரை

கதவு

Paarthen Ezhuthugiren

c. 2018

கதவு என்பது ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பு மட்டுமா? செட்டிநாட்டு தேக்கு மரக்கதவுகள் முதல் துருக்கியின் கப்படோசியா சுழல்கற்கதவுகள் வரை — ஒரு வீட்டின் அடையாளம் அதன் கதவில் தெரிகிறது.

உங்களைப் பொறுத்தமட்டில் கதவின் முக்கியத்துவம், அல்லது ஒரு அடையாளம் என்பது என்னவாக இருக்கும்? பொதுவாக நாம் அனைவருமே கதவு என்பது ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பு தருவது என்ற ரீதியில்தான் அர்த்தம் செய்து கொள்ளுவோம், இல்லையா? ஆனால், இந்தப் பொருளை மிஞ்சிய வகையில் கதவின் அருமையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்… அந்தக் காலத்தில், உண்டு, உறங்கி,இனப்பெருக்கம் செய்யும் இடமாகவே வீடு என்பது அறியப்பட்டது…அந்த வீடு தனக்கொரு அடையாளமாக ஒரு நுழைவாயிலைக் கொண்டிருந்தது…அதாவது, வீட்டின் வாயிலை வைத்து அந்த வீட்டில் இன்னார் வசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது…அவை அந்த வீட்டின் அந்தஸ்த்தைப் பறை சாற்றும் அடையாளமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை… இலக்கியங்களிலும் இந்தக் கதவுகளைப்பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது..”கடவுள் அஞ்சி வானத்து இழைந்த….தூங்கெயில் கதவம் காவல் கொண்ட..” என்று பதிற்றுப்பத்திலும், “ஓங்கெயில் கதவம் …. உருமூச் சுவல் சொறியும்” என்று புறநாநூற்றிலும் கதவைப்பற்றிக் காணமுடிகிறது…மேலும் “ஆலய மணிக்கதவே! தாள் திறவாய்” என்றும் “கண்ணினால் உனைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்மினே” எனத் தேவாரமும், “மாமன் மகளே..மணிக்கதவம் தாள்திறவாய்” என்று ஆண்டாளும் பாடுகிறார்கள்… உங்களில் பலருக்குச் செட்டிநாட்டு வீடுகளின் கட்டமைப்பு பற்றித் தெரிந்திருக்கலாம். ஒரு முழுத் தெருவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அத்தகைய வீடுகளின் கதவுகளும், ஜன்னலும், மிகவும் பெயர் பெற்றவை..செல்வச் செழிப்புற்ற அம்மக்கள், தங்களது வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்மாத் தேக்குகளாலும், பெல்ஜியம் வண்ணக்கண்ணாடிகளாலும் கதவுகளை செய்து வைத்தனர். இத்தகைய கதவுகள், அவர்களின் வீடுகளுக்கு கம்பீரத்தையும், கௌரவத்தையும் அளித்தன.. நுணுக்கமான வேலைப்பாடுகள், யாளி, யானைகள், கஜலட்சுமி, தசாவதாரக்காட்சிகள்,போன்றவற்றை அந்தக் கதவுகளில் காணலாம். விதவிதமான தாமரைகளையும், பூக்களையும், அழகிய பெண்டிர் சிற்பங்களையும் அந்தக் கதவுகளில் காணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது…அத்தனை நுணுக்கம்… முக்கியமாக இந்தக் கதவுகள், ஒரே மரத்தால் ஆனவை. தேக்கு மரத்திற்கு காலத்தால் அழியாத உறுதிப்பாடு இருப்பதால் அவர்களின் தேர்வு, அநேகமாகத் தேக்கு மரமாகவே இருந்திருக்கிறது… இந்த நுழைவாயில் கதவுகள் வீட்டின் தாழ்வாரம், உள்நுழைவு,விருந்தினர்கள் அறை, பூஜை அறை, சமையல் அறை என்ற ரீதியில் ஒவ்வொருவிதமாக வடிவமைக்கப்பட்டவை…9 அடுக்கு, 7 அடுக்கு, 5 அடுக்கு என்ற வகையில் நிலைப்பாட்டைக் கொண்டவை…கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பழங்கால வெண்கலப்பிடிகள், கொக்கிகள், அந்தக் கதவுகளுக்கு ஒரு அணிகலன் போன்று விளங்கும். “நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு … தேயம் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு …ஒப்ப மனைவகுத்து”...நெடுநல் வாடையின் இந்தக் கூற்றுப்படிக் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்தக் கதவுகள் ஒரு பலம் பொருந்திய காவல் தெய்வமாக அல்லவா விளங்குகின்றன! சில ஆண்டுகளுக்கு முன், துருக்கி நாட்டுக்குப் பயணித்த பொது, கப்படோசியா என்ற இடத்துக்குச் சென்றிருந்தேன்…அடேயப்பா…இது ஒரு நிலத்தடி நகரம். இதன் நிலப்பரப்பு எரிமலைச் சாம்பலால் உருவானது…இங்கே பாறைகளைக் குடைந்து கட்டப்பெற்ற குடவரை வீடுகள் அநேகம். தேவாலயங்களும், மடாலயங்களும் எரிமலைப் பாறைகளால் உருவானவை என்பது சிறப்புச் செய்தி. இந்த வீடுகளுக்கு உள்ளிருந்து மட்டுமே திறக்க அல்லது மூடக்கூடிய பெரிய வட்டவடிவக் கல் கதவுகள் இருந்தன…இத்தகைய குகை அமைப்புகள் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை…(Rolling Stone Doors) நமது நாட்டில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள வீடுகளின் வாயில்கள் அந்தப் பகுதியின் வளமையைப், பறை சாற்றுபவை…கேரளாவில், நாலுகேட்டு என்று ஒரு கட்டமைப்பு. நான்கு திசைகளிலும் கதவுகளும், அவற்றிலிருந்து வெளிப்புறத்துக்குச் செல்ல வராண்டா போன்ற பகுதியும் நீண்டு இருக்கும். அது போல் சீனர்களின் வீடுகளில் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் கதவுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சிவப்பு நிறம் ஒரு அதிருஷ்டத்தையும், மகிழ்ச்சியையும், வல்லமையையும், பாதுகாப்பையும் தரக்கூடிய வண்ணம். ஜப்பானியர்கள்,சூரிய வெளிச்சம் பிரதிபலிக்குமாறு வாஷி என்ற காகித்தையும், மூங்கில் போன்ற மரச் சட்டங்களையும் புகுத்திக் கதவுகளை உருவாக்குவர். ஐரோப்பியர்கள், திடமான வார்ப்பிரும்பால் உயர்ந்த கதவுகளைக் கட்டியிருப்பார்கள். அவற்றுள் மர வேலைப்பாடும் கண்ணாடியும் காணப்படும். உலகின் பழமையான நாகரீகம் என அறியப்படும் எகிப்தியர்கள் தான் இந்தக் கதவு என்ற அமைப்பினை உருவாக்கியவர்கள். அவர்களுக்கு இறந்தவர்கள், மீ ண்டும் ஆவியாகி அந்த வீட்டுக்கு வந்து போவார்கள் என்ற நம்பிக்கை இருந்த படியால் ஒருவிதமான சுழற்கதவுகள் அல்லது மாயக்கதவுகளைக் கட்டினார்கள் என்று அறிகிறோம். சில வருஷங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீடு முழுவதும் கலையம்சம் மிகுந்த ஓவியங்களும், அழகிய கலைப்பொருட்களும்..மிகுந்திருந்தன. அங்கிருந்த சென்டர் டேபிள் மிகவும் வித்தியாசமாக இருந்தது…கண்ணாடிச் சட்டத்தினுள் ஒரு செட்டிநாட்டுக் கதவு தெரிந்தது…அந்தத் தோழி, காரைக்குடியில் பொருளாதாரத்தில் நொந்து போன குடும்பத்தார், கதவுகளையும், அரிய கலைப்பொருட்களையும் விற்றபோது, அந்தக் கதவினை விலைக்கு வாங்கியதாகச் சொன்னார்…எனது மனது வலித்தது…அந்தக் கதவுக்கு அல்லவா தெரியும் அது பொருந்தி இருந்த வீட்டின் மாண்பும், வழ்ச்சியும்? உண்மை தானே? ஒரு வீட்டுக்குள் நாம் செல்கையில், நம்மை வரவேற்பதும்…செல்லும்போது, நம்மை வாழ்த்தி விடை கொடுப்பதும் இந்தக் கதவுகள் தானே? வீடுகளில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும், தோரணங்கள் கட்டப்படுவதும், மாவிலை கட்டப்படுவதும், வாழை மரங்களால் இணைத்துப் பந்தல் போடப்படுவதும் இந்தக் கதவுகளில் தானே? சற்றே சிந்தியுங்கள்..நமது உடம்புக்கு முதுகெலும்பு ஒரு பிரதானம் என்றால், ஒரு வீட்டுக்கு இந்தக் கதவுகள் பிரதானம் அல்லவா? தன்னைக் கடந்தே தான் அனைவரும் செல்ல வேண்டும் என்ற பிடிமானம் போற்றத் தக்கது அல்லவா? இந்தக் கதவுக்குள் அடங்கிய ரகசியங்களும், புதையுண்ட கதைகளும், ஏராளம், ஏராளம் அல்லவா? அவற்றைக் கண்டு பிடிக்க இதுவரை எந்த ஆராய்ச்சியாளரும் முன்வரவில்லை எனும்போது நான் மட்டும் எம்மாத்திரம்? அன்புடன் பானுரவி/சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கட்டுரைகள்