கட்டுரை

வலிகள்

2026 · Banooravi · Singapore

சில வலிகள் எதனோடும் ஒப்பிட முடியாதவை. ஒரு குரல், ஒரு சிரிப்பு, ஒரு பாடல் — நினைவுகளில் தேடியும் கிடைக்காத பொழுதில் எழும் வலி; எப்போதும் திறந்தே இருந்த கதவு இனி திறக்காது என்னும் தெளிவில் எழும் வலி; ஒரு தொலைபேசியின் மறுமுனையில் இனி யாரும் இல்லை என்னும் அறிதலின் வலி. கம்பனின் தசரதன், பாஞ்சாலி, தமயந்தி, சீதை, கண்ணகி, சித்தார்த்தன், மண்டேலா, காந்தி — பின்னர் ஒரே பளிங்கிலிருந்து உருவான சிலையும் தரையும் கொண்ட சிறுகதை. வலியே பொறுமையின் ஆசான், என்று முடிக்கிறார்.

சில வலிகள் எதனோடும் ஒப்பிட முடியாதவை. …நமது நினைவுகளில் ஒரு குரலைத் தேடி, ஒரு சிரிப்பைத் தேடி, ஒரு பாடலைத் தேடி, .அவை உண்மையிலேயே கிடைக்காமல் போகும்போது நமக்குள் வரும் ஏக்கம், நமக்குள் உண்டாகும் பெருமூச்சு, கண்ணில் சுரக்கும் நீர், மனதுள் வரும் துக்கம்….ஒரு பெரிய வலியை, நிவாரணமற்ற பெருவலியை ஏற்படுத்தும் என்பதை நாம் எல்லொரும் உணர்ந்திருப்போம்…. ஆம்! எப்போதும் திறந்தே இருந்த ஒரு கதவின் முன் நாட்கணக்கில் நின்று, அந்தக் கதவு, இனி எப்போதும் திறக்காது என்பதை நாம் உணரும்போது ஏற்படும் வலியின் தீவிரம் ரொம்பவே கொடுமையானது. ஒரு தொலைபேசியை எடுத்துப் பேச நினைக்கையில், மறுமுனையில் நமக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை என்று நினைக்கும் அந்தக்கணம் ஏற்படும் வலியின் ஆழம் மிகவும் தீவிரமானது. ஒரு மகிழ்ச்சியான செய்தியை, ஒரு துயரமான சம்பவத்தை, ஒரு உத்தரவாதமான ஆலோசனையை, ஒரு ஆணித்தரமான ஆதரவை நாம் தேடும்போது, அது அந்த முக்கியப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப் போவதில்லை என்று தெரியவரும்போது ஏற்படும் வலியானது, மரணவலியை விடப் பெரிதாகத் தெரிகிறது…. விழியோரம் கசியும் நீர் தரும் மெளன வலிகள், சிரிப்பினை மறந்து உறைந்து போய்விட்ட உதடுகளின் இறுக்கம், இதயத்தின் இடைவிடாத துடிப்பு, சொல்லில் மறைந்திருக்கும் சோகம், தூங்கா விழிகளில் நிறைந்திருக்கும் துக்கம், மெளனத்தில் குடிகொண்ட துயரம், உள்மனக் குமுறல், உந்துதல் இல்லா மன நிலை, தடங்கல்களால் எழும் சஞ்சலங்கள், அச்சுறுத்தல் கொண்ட எதிர்காலம்….இப்படிப் பலவிதமாக நமக்கு ஏற்படும் அனுபவங்கள், வலியால் மட்டுமே ஏற்படுகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை….வலியின் தாக்கம் என்பது உண்மையிலேயே அப்படிப்பட்டது. எத்தனை விதமான வலிகள்…எத்தனை விதமான ரணங்கள். இந்த வலி எங்கிருந்து துவங்குகிறது? என்னைப் பொறுத்தமட்டில் வலி என்பது பிரிவிலிருந்து தொடங்குகிறது என்பேன்…சுகமாக ஒரு தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் தங்கியிருக்கும் ஒரு சிசு, அம்மாவை விட்டுப் பிரிந்து, வெளியுலகில் தன்னைக் கொணரும்போது, ஆரம்பிக்கிறது வலி! …சிசுவுக்கும், தாய்க்குமான ஒரு போராட்டம் மிக்க வலியாக அது இருக்கிறது….அதன் பிறகு, நாளாவட்டத்தில் அந்தக்குழந்தை வளர்கையில் பலவித வலிகள் தொடருகின்றன…ஏமாற்றம், கண்டிப்பு, கோபம், தோல்வி, பிடிவாதம்,முரட்டுத்தனம் முதலிய இயற்கையான குணங்களால் அந்தக் குழந்தை மெள்ளமெள்ள வலியின் பரிணாமத்தை உணர்கிறது. கம்பன் இதனை மிகவும் உணர்ச்சியுடன் குறிப்பிடுகிறான். தன் மகன் இராமனை, விஸ்வாமித்திரர் வேள்வியின் பொருட்டுத் தன்னோடு அனுப்புமாறு கேட்கையில் தசரதனின் மனவலி வார்த்தைக்குள் அடங்காததாக இருக்கிறது. “எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த பண்ணில் ஆம்பெரும் புழையில் கனல்நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் உள்நிலாவிய துயர வலிபிடித்து உந்த ஆருயிர் நின்று ஊசலாட கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம் கால வேலான்… மனவலி மிகுந்து துயருற்றானாம் தசரதன். இதனை விடவும் அவனது உள்ளம் வலியால் மரண அவஸ்தை அடைகிறது, கைகேயி அவனிடம் இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று வரம் கேட்கும்போது… சரி…இப்படி இந்த வலியினூடே வாழ்வதுதான் நமது விதியா? நிச்சயம் இல்லை….எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கிறது. வலியிலிருந்து மீளவும் நிறைய மார்க்கங்கள் உள்ளன. எப்படி? வலி என்றால் துன்பமா? இல்லை என்பேன். வலி என்பது உடலும் மனமும் கற்றுக் கொடுக்கும் ஒரு உன்னதமான அனுபவம் அல்லது பாடம். வலி என்பது யாவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. நமது புராணங்களை எடுத்துக்கொண்டால், அதில் உலவும் கதாபாத்திரங்களுக்குத் தான் எத்தனை விதமான வலி ஏற்பட்டிருக்கிறது! மகாபாரதத்துப் பாஞ்சாலி, நளனின் தமயந்தி, இராமாயணத்து ராமர்/சீதை, சிலப்பதிகாரத்துக் கண்ணகி, இப்படி மன வலியாலும், அவமான வலியாலும், துயருற்ற நாயகர்/நாயகிகளைப் பார்க்கிறோம். சித்தார்த்தன் என்ற இளவரசன், பிணி, மூப்பு, சாக்காடு போன்றவற்றை உணரும்போது ஏற்பட்ட ஆழ்மன வலியானது அவரை ஒரு கெளதம புத்தராக்கியது. இன்னமும் சமீப காலத்தில் நெல்ஸன் மண்டேலா, மகாத்மா காந்தி, போன்ற மாமானிதர்களுக்கு ஏற்பட்ட வலி அவர்களை ம்காத்மாவாக அல்லவா ஆக்கியிருக்கிறது! இந்த வலி நமக்குப் பொறுமையையும் அமைதியையும் கற்றுத் தரும் ஆசானாகத்தான் நான் பார்க்கிறேன்! ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு உயிரின் வலி, ஒரு மனத்தின் வலி…இந்த வகையான வலிகளை நாம் உணரும்பட்சத்தில் நிச்சயமாக நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. ஏனெனில் இந்த வலி என்பது வாழ்வின் கட்டாயம்…பாரபட்சமின்றி அனைவருக்கும் ஏற்படுவது. இந்த வலியின் அவஸ்தையை நாம் துரத்த முடிந்தால், துயரமில்லை என்று ஆணித் தரமாகச் சொல்லுவேன். வலி என்பது ஒரு எச்சரிக்கை. வெளிச்சூழ்நிலைகள் நிவாரணமில்லா வலியை ஏற்படுத்தலாம். ஆனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு இணக்கமாக நாம் வலியை உணராமல் இருக்கப் பழக வேண்டும். வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்களிலிருந்து நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோம்? துன்பத்தையா? அல்லது விவேகத்தையா? அந்தத் தேர்வு முழுமையாக நம்மிடமே உள்ளது. வலி, துயரம், கோபம் வருத்தம் வரும் சமயமெல்லாம், நாம் நம்மைச் சுற்றிப் பார்க்கும் நேரமல்ல…மாறாக, நமக்குள் உள்ளார்ந்து நம்மை நாமே கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம்! அறியாமையின் வலிதான் நம்மை, மகத்தான உண்மை நிலையைத் தேடும்படி செய்கிறது. வலி, துன்பம், இன்பம்…இப்படி எல்லாமே எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் எதை அனுபவிக்க வேண்டும், எதை விட்டுவிட வேண்டுமென்பதை நாம் அறிந்து செயல்பட வேண்டும். ஒரு சிறுகதை சொல்லட்டுமா? ஒரு அழகிய அருங்காட்சியகத்தில் மிக அழகிய பளிங்குச் சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் தரையும் அதே பளிங்கால் ஆனதே ஆகும். அந்தப் பளிங்குத் தரை, சிற்பத்தைப் பார்த்துக் குமுறியபடி பேசியது. “அழகிய சிற்பமே! என்ன ஒரு பாரபட்சம் பார்த்தாயா? நீயும் நானும் ஒரே பளிங்குக் கல்லில் இருந்துதான் உருவானோம்!.. ஆனால், உன்னை வியந்து பாராட்டிப் புகைப்படம் எடுத்துச் செல்பவர்கள், என்னை மிதித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தாயா? இது என்னுள் ஆழ்ந்த வலியை ஏற்படுத்துகிறது” என்றது. பளிங்குச் சிற்பம் பதில் சொன்னது….”வலியா? உனக்கா? நீ என்ன சொல்லுகிறாய்? உன்னை உருவாக்கும்போது, நீ வலியைப் பொறுக்காது சிதறிப் போய்விட்டாய்! அதனால் அனவரும் மிதிக்கும்படியாக, தரையில் உன்னைப் பொருத்தி விட்டார்கள்….. உனது அவசரத் தன்மையும் பொறுமையின்மையும்தான் இதர்Kஉக் காரணம்….. ……ஆனால், என்னை வெட்டி, தட்டி, கூர் ஆயுதத்தால் செதுக்கி ஒரு வடிவமாக என்னை மாற்றும்வரை நான் அனுபவித்த வலிகள் கொஞ்ச நஞ்சமல்ல….அத்தனை வலிகள். பொறுமையாக நான் இருந்தேன்…எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? இறுதியில் அவர்கள் அழகிய சிற்பமாக என்னை உருவாக்கியபோது எனது வலிகள் மாயமாகி இருந்தன. சகித்துக் கொள்ளுவதும், பொறுமை காப்பதும் வலி கற்றுத்தந்த பாடங்கள்”....சிலை சொல்வது உண்மை தானே? கேள்வி இருந்தால் ஒரு பதில் கிடைக்கும்; பள்ளம் இருந்தால் ஒரு மேடு இருக்கும்; பிரிவு இருந்தால் ஒரு உறவு கிடைக்கும்; குற்றம் இருந்தால் ஒரு குணமும் இருக்கும்; தீமை என்றால் நன்மை விளையும்; இப்படி ஒன்றுக்கு மாற்றாக ஒன்று இருக்கும்போது, வலிக்கு மட்டும் நிவாரணமோ, ஒரு வழியோ இல்லாமல் போய்விடுமா, என்ன? இந்த வலிகளில் இருந்து நாம் எப்படி மீள்வது? விடாமுற்சி, தன்னம்பிக்கை, அன்பு,மன்னிக்கும் தன்மை முதலியவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மறை எண்ணங்களை நாம் மேற்கொள்ள் வேண்டும். இது மிக முக்கியம்…இதனால் இன்று நம்மை ஆக்கிரமிக்கும் வலிகள், நாளைய வாழ்வில் அசைவற்ற ஒரு வலிமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை…வலியில் அமிழ்ந்து துடித்துப் போகாமல், வலியை வலிமையுடன் எதிர்கொள்வோம்! ஆக்கம்: பானுரவி/சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கட்டுரைகள்