Personal Reflections
c. 2021
ஜூராங்கின் வீவக வீட்டு பால்கனியில் ஒரு கொரோனா-கால இரவு. நிலவொளியில் ஒளிரும் சீனத் தோட்டத்துக் குளங்கள், காற்றில் இன்னும் ஒலிக்கும் முருகன் கோவில் மணி, பாம்பு போல் ஊர்ந்து செல்லும் எம் ஆர் டி ரயில். உள்ளே மூன்று தலைமுறை குடும்பத்தின் பரபரப்பு — மருமகள் வளர்மதியின் கண்-கண்டிப்பு, பேரன் மதிவண்ணனின் கிரிக்கெட், விடியற்காலைக் காணொளிக் கூட்டங்கள். பின் கீழ்த் தள சீனத் தம்பதியின் புகார் — இது இனப்பாகுபாடு என்று எரியத் தொடங்கியது, ஒரு சின்ன நாட்டில் ஒன்றாய் வாழ்வதென்றால் என்ன என்பதைப் பற்றிய அமைதியான சிந்தனையில் முடிகிறது.
என்ன சத்தம் இந்த நேரம்
வீவகக் குடியிருப்பில் - அதுவும் மேல் தளத்தில் குடியிருந்தீர்கள் என்றால் ஒரு சௌகரியம்.
காற்று சில மாலைகளில் பிய்த்துக் கொண்டு அடிக்கும். ஜுராங் பகுதியில் உள்ள என் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்தால் உலகம் பிறந்தது எனக்காக என்று சத்தம் போட்டுப் பாடத் தோன்றும். தூரத்தில் சைனீஸ் தோட்டத்து குளங்கள் நிலவொளி பட்டு ஜொலிக்கும். முருகன் கோவில் மணி அடித்து அதன் சத்தம் இன்னும் காற்றில் கலந்திருக்கும். எம் ஆர் டி ரயில் பெட்டிகள் பாம்பு போல் ஊர்ந்து செல்லும்.
இந்தக் கொரோனா காலத்து இரவில் ஊரே முடங்கி தெருக்கள் எல்லாம் ஓய்ந்து போன நேரத்தில் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு ஏ ஆர் ரகுமானின் இசையில் ஹரிகரன் குழைந்து குழைந்து உதயா உதயா என்று பாடும் போது கொரோனா மேல வரும் கோபமெல்லாம் ஒரு நிமிடம் மறைந்துவிடும்.
மெதுவா மெதுவா சீட்டி அடியுங்க.. குழந்தை முழித்துக் கொண்டு விடப்போகிறான் -வளர்மதி கண்களால் என்னை அதட்டினாள்.
"டோண்ட் ஒர்ரி பொண்டாட்டி... " என்று அவளை அணைத்தேன்.
கீழ்த் தள வீட்டில் விளக்கு டக்கென எரிந்து சீன மொழியில் அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது. ஏதோ குடும்பத்திற்குள் விவாதம் போல.
காலையில் நான்கு மணிக்கே எழுந்து விட்டேன். அமெரிக்க ஐரோப்பிய சக ஊழியர்களுடன் கான்பெரன்ஸ் கால் இருந்தது.
வளர்மதி அவசரமாகக் காபி போட்டுக் கொண்டு வருவதற்கும் காணொளிக் கூட்டம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
எனக்கொரு கெட்ட பழக்கம். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்னு சொல்வார்களே அது போல காணொளிக் கூட்டம் என்று வந்து விட்டால் என்னை மறந்து சத்தம் போட்டு பேசுவேன்.
வளர்மதி ஓரத்தில் நின்று மெதுவா மெதுவா என்று சாடை செய்வது கூட உரைக்காது. அவளுக்கு எப்போதுமே குழந்தை தூக்கம் பற்றியே கவலை.
ஒரு வழியாகக் காணொளிக் கூட்டம் முடிந்து வீட்டு ஹாலுக்கு வரும்போது குயில் கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய்ந்தது.
ரெண்டாவது டோஸ் காபி ரெடி. வளர்மதி அதற்குள் குளித்து விட்டு ஐ பாடில் சூல மங்களம் சகோதரிகளை காக்க காக்க எனக் கதற விட்டிருந்தாள்.
என் செல் போன் வேறு அலற "ஐ பாட் வால்யூம் குறை .." என்று கத்தினேன்.
"என்ன ராம்கி, நியூஸ் பாத்தியா.." ஜெயராமன் தான் அந்தப் பக்கம்.
"இன்னிக்கு என்ன விசேஷம் சொல்லு... திரும்ப கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வந்துட்டானா.."
"அத விட சீரியஸ் மேட்டர்.. என்னனு கேளு.."
கேட்காவிட்டாலும் சொல்லாமல் விட மாட்டான் ஜெயராமன்.
"ஆர்ச்சார்ட் ரோடுலே ஒரு வயதான சீனருக்கும் ஒரு இந்தியப் பையனுக்கும் பெரிய வாக்குவாதம்.. அந்த இளைஞன் கூட ஒரு சீனப் பெண் இருந்திருக்கிறாள். இந்த சீன மனிதர் நீ ஒரு இந்தியன். உன் இனத்துக்குள்ளேயே ஒரு பெண்ணை இணைத்துக் கொள்வது தானே.. ஏன் சீனப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு திரிகிறாய்.. அப்படி இப்படி என்று தடித்த வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அந்தப் பையன் இதையெல்லாம் ஃபேஸ் புக்கில் விலாவாரியாகப் போட்டு இது நியாயமா என்று கேட்டிருக்கான். இப்போ வலை நூலில் இது ட்ரெண்டாகிக் கிட்டிருக்கு ..."
இன்றைய பொழுதுக்கு அவன் வாய்க்கு அவல் கிடைத்து விட்டது.
என்ன என்ன என்று ஆவலாக ஓடி வந்த வளர்மதியிடம் இது இரு இனங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை என்று விளக்கினேன்.
"ஆமாங்க நம்ம கல்பனா பையன் கூட ஒரு சீனப் பெண்ணோட சுத்திகிட்டு இருக்கானாம்."
"வளர்மதி இந்தப் புரளிப் பேச்சை முதல்ல விடு... நான் சொல்ல வந்தது அந்தச் சீன ஆடவர் பேசின பேச்சைப் பத்தி தான்.. இந்தக் காலத்திலே அதுவும் நம்ம சிங்கப்பூர் நாட்டிலே இப்படியும் ஒருவரா என்று யோசிக்கிறேன்.."
வளர்மதியின் கண்கள் அவள் பையன் மதிவண்ணன் எங்காவது ஒரு சீனப் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து விடப் போகிறானே என்ற கவலையைக் காட்டியது.
"அவனுக்கு அந்தப் பருவம் வர இன்னும் இருபது ஆண்டுக்கு மேலே இருக்கு.. இப்பவே கவலைப் பட ஆரம்பிக்காதே.." என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன்.
மதிவண்ணன் முழித்துக் கொண்டுவிட்டான். படுக்கையிலிருந்து தட தடவென ஓடி வந்தான்.
"அப்பா இன்னிக்கு கிரிக்கெட் விளையாடனும்.. ஓகே?"
"ஷ்யூர்.. போய் பால் சாப்பிட்டு வா..."
அடுத்த காணொளிக் கூட்டத்திற்குத் தயாரானேன்.
மதிவண்ணன் பால் குடித்துக் கொண்டிருக்க வளர்மதி ஸ்கிப்பிங் ஆடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் தக் தக் என்று குதிப்பதே ஒரு நடனம் போல சீரான தாள கதியுடன் இருந்தது.
திரும்பவும் கீழ்த்தள வீட்டில் சலசலப்பு கேட்டது.
வாயிற் கதவை சாத்திவிட்டு வந்தேன்.
காணொளிக் கூட்டம் தொடங்க வழக்கம் போல என் குரல் ஓங்கியது.
கூட்டம் முடிவதற்குள் மதிவண்ணன் கிரிக்கெட் பாட் சகிதம் தயாராக இருந்தான்.
வீட்டுக் கூடத்தையே மைதானமாக்கி விளையாடினோம். கூடத்தில் மூலைக்கு மூலை மதிவண்ணன் ஓடுவது அழகாக இருந்தது.
சமையலறையில் மிக்சி அலறல், நடுவில் வளர்மதிக்கு லண்டனிலிருந்து ராஜாவிடமிருந்து ஃபோன், படுக்கை அறையில் நிற்காமல் கேட்கும் ஒலி 96.8, குளியறையில் மதிவண்ணன் அடிக்கும் லூட்டி, பூஜை அலமாரி அருகே வளர்மதியின் தேவாரம் ஓதுதல், மதிவண்ணனுக்கு ஆன் லைன் பியானோ வகுப்பு என ஒன்று மாற்றி ஒன்று நாள் அமளி துமளியாகப் போய்க் கொண்டிருந்தது.
இந்த சத்தத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடு நடுவே என் வேலை நிமித்த காணொளிக் கூட்டங்கள்.
கொரோனா காலம் எங்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாலும் நாங்கள் சளைப்பதாக இல்லை.
இரவு சாப்பாடு முடிந்து மதிவண்ணன் தூங்கியபின் வளர்மதி அருகில் வந்து அமர்ந்தாள்.
"எல்லா கூட்டங்களும் முடிஞ்சாச்சு தானே?"
விளக்கை அணைத்து ஐ பாடை முடுக்கினேன். யூ டியூபில் ஏ ஆர் ரகுமானைத் தேடினேன்.
"கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்த போது எப்படி வீட்டுக்குள்ளே எல்லோரையும் இருபத்தி நாலு மணி நேரமும் வச்சுக்குட்டு சமாளிப்போமோ என்று பயந்து கிட்டே இருந்தேன். ஆனா இந்தத் தனிமை கூட அழகாகத் தான் இருக்கில்லே..."
என்று வளர்மதி சொல்லி முடிக்கவில்லை..
வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
என்ன சத்தம் இந்த நேரம்?
வாசலில் ஒரு இளம் சீனத் தம்பதியினர் நின்றிருந்தனர். மாஸ்க் அணிந்த அவர்கள் முகம் முகமூடி போட்டவர்கள் போல ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
"ப்ளீஸ் கம் இன்.." - என் வரவேற்பை சட்டை செய்யாமல் பிடிவாதமாக இரண்டு அடி தள்ளி நின்றே பேசினார்கள்.
"நாங்கள் உங்கள் வீட்டு கீழ்த் தளத்தில் குடி வந்து ஒரு மாதமாகிறது. உங்கள் வீட்டில் ரொம்ப சத்தம் போடுகிறீர்கள். சில சமயம் காலை நாலு மணிக்குக் கூட சத்தம் ஆரம்பித்து விடுகிறது. அதுவும் உங்கள் குழந்தை நாள் முழுக்க தட தட என ஓடுவது சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்த கொரோனா காலத்திலே நாங்களும் வீட்டில் நாள் முழுவதும் கழிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் பற்றியும் நினையுங்கள். இனியும் சத்தம் தொடர்ந்தால் நாங்கள் அக்கம்பக்க போலிசை நாட வேண்டியிருக்கும்..."
படபடவென்று பேசிவிட்டு எங்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவர்கள் மறைந்தனர்.
ஒரு நிமிடத்தில் உலகமே ஒரு முழு சுற்று சுற்றி வந்தார் போல இருந்தது எனக்கு.
வளர்மதி அதிர்ந்து விட்டாள்.
"என்னங்க இப்படிப் பேசராங்க... இதுக்குப் போய் போலிசு அது இதுன்னு சொல்றாங்க.."
எனக்குள் இருந்த அதிர்ச்சியை மறைத்து, சாதரணமாகப் பேசுவது போல் "அப்பப்ப கீழ்தள வீட்டிலே லைட்டைப் போட்டு ஏதோ பேசிப்பாங்கல.. அது நம்மைப் பத்தி தான் போல இருக்கு.." என்று ஏதோ சொன்னேன்,
ஹாலுக்குள் சென்று, முதலில் ஐ பாடை அமுத்தினேன்.
இந்த பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
"எப்படிங்க மதிவண்ணனை கமுக்கமா இருக்க செய்வது.. பாலர் பள்ளி கூட எப்ப திறப்பாங்களோ.."
அவளைக் கவலை பற்றிக் கொண்டது.
"இப்போ தூங்கு .. காலைலே யோசிக்கலாம்.. விடியற்காலை எனக்கு அலுவல் கூட்டம் இருக்கு"
விடிகாலைக் கூட்டத்தில் எனக்கே அதிசயமாக ரொம்ப அடக்கிப் பேசினேன்.
"என்ன ராம்கி.. உன் குரல் ரொம்ப அடங்கி இருக்கு இன்னிக்கு.. ஃபோன ஏதாவது மாத்தினயா..." என்று மார்க் கேட்ட போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவன் ஸ்காட்டிஷ்காரன். அவனுக்கு ஆசிய உணர்வுப் பிரச்சினைகள் புரியாது.
வழக்கம் போல ஏழு மணிக்கு ஜெயராமன் கூப்பிட்டு அன்றைய செய்திகளை அலச ஆரம்பித்தான். வளர்மதி ஃபோனைப் பிடுங்கி அவனிடம் புகார் அளிக்கிறாளா ஆலோசனை கேட்கிறாளா என்று புரியாத வண்ணம் நேற்று இரவு சம்பவத்தை விவரித்தாள்.
ஜெயராமனுக்கு இருப்பு கொள்ளுமா.. காரை ஒட்டிக் கொண்டு வீட்டுக்கே நேராக வந்து விட்டான்.
"என்னப்பா முழிக்கிறே.. ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு இரண்டு நபர்கள் வரலாம்னு அனுமதி இருக்கு தெரியும்லே.. வளர்மதி ரொம்ப பயந்து போயிருக்கு.. அதான் நேரவே பார்த்து பேசலாம்னு வந்துட்டேன்.. "
"மேடம்.. கொஞ்சம் சூடா காபி போட்டு இங்க வந்து உட்காருங்க.."
"ஏய் கொஞ்சம் மெதுவாப் பேசுடா.. " எனக்கும் அவனுக்கும் சின்ன வயதிலிருந்தே பழக்கம்.
"எதுக்குடா எல்லாத்துக்கும் பயப்படறே... இதப் பாரு.." என்று ஒரு செய்தித்தாளைத் தூக்கிப் போட்டான்.
வளர்மதியும் காஃபியுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.
"இது நிச்சயம் இனப் பாகுபாடு தான்.. அவங்க சீனக் குடும்பம் இல்ல.. அதான் நம்ம ஆளுங்களைப் பார்த்தாலே பிடிக்காது..."
"ஜெயராம் .. ப்ளீஸ். ரொம்ப அதீதமாப் பேசாதே.."
"இல்லே.. ரெண்டு நாள் முன்னாடி வந்த ஃபேஸ் புக் போஸ்டிங்கப் பாத்தியா.. ஒரு இந்தியர் அவர் வீட்டிலே பூஜை மணி அடிக்கற போது பக்கத்து வீட்டு சீன மாது அவர் வீட்டு வாசலுக்கே வந்து ஒரு மணிப் பலகையை பலமா அடிச்சிருக்காங்க.. அவருக்குப் போட்டியா.."
"ஆமாங்க அந்த லிங்கை கல்பனா கூட வாட்ஸ் அப்புலே அனுப்பிச்சு இருந்தாங்க.."
"சீனங்க எல்லாம் ஒரு ட்ரக்லே கூட்டமா வந்து சிங்க வேஷம் போட்டு அவ்வளவு சத்தமா தாளம் போட்டு வீதியிலே ஆட்டம் போடுவாங்க.. அப்ப நாம ஏதாவது புகார் செய்து இருக்கோமா.."
"ஜெயராம் எதையும் எதையும் இணைத்துப் பேசறே.. அது வருஷத்துக்கு ஒரு முறை நடக்கிற ஒரு சீனக் கொண்டாட்டம்.. நம்ம தைப்பூசம் மாதிரி.."
"சரி சரி நான் கொடுத்த ந்யூஸ் பேப்பரைப் படி.. கொஞ்சம் சத்தமாவே படி .. வளர்மதிக்கும் கேட்கட்டும்.."
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தச் செய்தி "வீவக வீட்டில் அனுமதிக்கப் படாத 14 செயல்கள்" என்று தலைப்பிட்டிருந்தது.
1. நீங்கள் நிர்வாணமாக வீட்டு ஜன்னல் அருகிலோ வாசல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டோ நிற்கவோ நடமாடவோ கூடாது. 2. ஈரமான நீர் சொட்டும் துணிகளை வீட்டுக்கு வெளியே காய்ப் போடக் கூடாது. 3. வீட்டுக்கு வெளியே புகை பிடிக்கக் கூடாது..
என்று 14 விதிகளைப் பட்டியலிட்டிருந்தது.
"எங்கயாவது.. குழந்தைங்க வீட்டுக்குள்ளே ஓடி விளையாடக் கூடாதுனு விதி இருக்கா.. சொல்லுங்க.." என்றாள் வளர்மதி.
"அப்படினு சொல்லலே.. ஆனா எட்டாவது விதி என்ன சொல்லுதுனா இரவு 10:30 மணியிலிருந்து காலை 7 மணி வரை உரக்க சத்தம் போடக் கூடாதுனு சொல்லுது.." என்று சுட்டிக் காட்டினேன்.
"அப்ப அது உங்களுக்குத் தான் பொருந்தும்.." என்றாள்.
"ஒப்புத்துக்கிறேன்.. சரி இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு.. " -ஜெயராமனைப் பார்த்தேன்.
ஜெயராமன் தீர்க்கமாகச் சொன்னான்.
"இது ஒரு இனப்பாகுபாடு பிரச்சினை.. சந்தேகமே இல்லை. இந்த ப்ளாக்கிலே வேற யாராவது நம்ம ஆளுங்க இருக்காங்களா.."
"அஞ்சாவது ஃப்ளொருலே ஒரு ஐயர் மாமி குடும்பம் இருக்காங்க.. இந்தியாவிலேருந்து வந்தவங்க போலத் தெரியுது.. நம்ம கூட கலந்துக்க மாட்டாங்க.."
"நமக்குள்ளேயே இப்படி ஒரு பிரச்சினை இருக்கிலே.." ஜெயராமன் அலுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரம் அமைதிக்குப் பின், ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவன் போல அறிவித்தான்.
"இது இண்டர்நெட் யுகம். இதை இப்படியே விடக் கூடாது.. நான் இப்பவே போய் ஒரு ஃபேஸ் புக் போஸ்டிங் போடறேன். ஒரு மணி நேரத்திலே எத்தனை லைக்ஸ் அள்ளுது பாரு.. "
அவசரமாகப் புறப்பட்டவனைத் தடுத்து நிறுத்தினேன்.
"நீ வேற .. எடுத்ததுக்கெல்லாம் ஃபேஸ் புக் வாட்ஸ் அப்புனு போயிண்டு. அமைதியா இருப்பா.. " என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். வளர்மதியையும் தான்.
மதிவண்ணன் அப்போ தான் முழித்தவனாக "மாமா.." என்று கூவியவாறே ஜெயராமனிடம் ஓடி வந்தான்.
வளர்மதி அவனுக்குப் பால் கொடுக்க எழுந்தாள்.
"ஜெயராம், யோசிச்சுப் பார்த்தா நம்ம பேரிலேயும் தப்பு இருக்கு. அவங்க வீட்டிலேயும் என்ன பிரச்சினையோ. நம்மைச் சுத்தி யார் இருக்காங்கனு நினைக்காம நாமளும் சுதந்திரமா பாடிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கோம்.. இந்த கொரோனா காலத்திலே எல்லோருமே வீட்டிலே அடைஞ்சிருக்கப்ப இந்தக் கூச்சல் அவங்களைப் பாதிச்சிருக்கும்லே.. அதையும் நம்ம யோசிக்கனும்லே.."
"அதுக்காக?"
"நம்ம சிங்கப்பூர்லே பத்து லட்சத்திற்கும் மேலான வீவக வீடுகள் இருக்கின்றன. என்பது சதவிகித மக்கள் இந்த வீடுகளில் தான் வசிக்கிறோம்னு போட்டிருக்கான் பார்த்தியா?"
"சீனர்கள் இந்தியர்கள் எல்லோருமே இந்த சின்ன சிங்கப்பூர் நாட்டிலே குடியேற வந்தவங்க.. நம்ம சொந்த மண்ணை விட்டு இந்த மண்ணை சொந்தமாக்கிக்கிட்டவங்க.. இது ரொம்ப சின்ன நாடுனு தெரிஞ்சு தான் நாம எல்லோருமே இந்த நாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஒரு வளமும் இல்லாத இந்த நாட்டை உலக அளவுலே ஒரு முன் மாதிரியாக ஆக்க முயன்று கிட்டே இருக்கோம்..."
"ஒரே உறவுக்குள்ளே எவ்வளவு சண்டை வருது.. வெளி ஆளுங்களோட அபிப்பிராய பேதம் வராமா இருக்குமா?"
"நாமளும் கொஞ்சம் அமைதியா நடமாடப் பழகிக்கணும் நாம செய்யற ஒவ்வொரு காரியத்திலேயும் அது மத்தவங்களை எப்படி பாதிக்கும்னு நினைச்சுப் பார்க்கணும் .. காலம் காலமா வர பழக்கத்தை மாத்திக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. முயன்றால் முடியும் தான். "
"இப்படியே அடங்கி அடங்கியே வாழ்ந்துகிட்டு இரு.. " ஜெயராமன் கோபத்துடன் வெளியேறினான்.
அவனுக்கு இன்றைய முக நூல் பதிவுக்கு ஒரு நல்ல தீனி பறி போய்விட்டதே என்ற ஆத்திரம் போலும்.
எனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவு ஏற்ப்பட்டது.
அடுத்த சில நாட்களில் எங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில் நிறைய மாற்றங்கள். ஐ பாடில் ஹெட் செட் போட்டுத் தான் வளர்மதி பாட்டு கேட்டாள். என் அலுவலகக் கூட்டங்களில் முடிந்த வரை குரலைத் தாழ்த்தியே பேச முயன்று கொண்டிருந்தேன். மதிவண்ணன் பேசும் போதும் நடக்கும் போதும் ஏன் ஓடும் போது கூட தன்னைக் கட்டுப்படுத்தி நடக்க முயன்றான். இரவில் பால்கனியில் அமர்ந்து பேசும் போது கிசுகிசுத்தோம். அது கூட ரொமாண்டிக்காக இருக்கிறது எனக் கிளுகிளுத்துக் கொண்டோம்.
ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த நெடுநாள் பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பதமாகின.
ஜெயராமன் கூட வருவதில்லை. கோபமாக இருக்கும். புரிந்து கொள்வான்.
அவ்வப்போது வாசலில் நிழல் போல் தெரியும். அந்தச் சீனத் தம்பதியர் தான் போலிசுடன் வந்து நிற்கிறார்களோ என்று வளர்மதி அச்சப்படுவாள்.
அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
அடுத்த சில நாட்களில், கொரோனா காலக் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டன.
நானும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை காய்கறி வாங்க எங்கள் ப்ளாக் பக்கம் உள்ள மார்க்கெட்டுக்குப் போக ஆரம்பித்தேன்.
ஒரு மாலைப் பொழுதில் மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்பும் போது எங்கள் ப்ளாக்கின் லிஃப்டில் ஏறினேன்.
லிஃப்ட் ஒன்பதாவது தளத்தில் நின்ற போது ஒரு சீன மூதாட்டி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க இந்தோனேசிய பணிப் பெண் அதைத் தள்ளிக் கொண்டு வந்தாள். பத்தாவது தளத்தில் நின்ற போது அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு ஒதுங்கி நின்றேன்.
லிஃபிடிலிருந்து வெளியே வந்ததும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அதன் எண்ணை உற்றுப் பார்த்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
நான் அவர்களை அவசரப்படுத்தக் கூடாது என்று சற்று தொலைவிலே காய்கறிப் பையை சரி பார்ப்பது போல மெதுவாகப் பின் தொடர்ந்தேன்.
வீட்டு வாசலில் போட்டிருந்த கோலத்தைப் பார்த்தோ கதவில் ஒட்டியிருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்தோ "இந்த வீடாகத் தான் இருக்கும்" என்று மலாய் மொழியில் சீன மூதாட்டிக்கு காதில் விழ வேண்டும் என்று சற்று உரக்கவே சொன்னாள் அந்தப் பணிப்பெண்.
மூதாட்டியின் கண்ணசைவில் அனுமதியைப் பெற்று அழைப்பு மணியை அழுத்தினாள். அது எங்கள் வீடு தான்.
சரி திரும்பவும் பிரச்சினை வந்து விட்டது. இது புகார் அளிக்க வந்திருக்கும் இன்னொரு குடும்பம் போல என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
வளர்மதி மெதுவாகவே கதவைத் திறந்தாள். பின்னாடியே மதிவண்ணன் ஓடி வந்து அவள் காலிடுக்கில் ஒளிந்து கொண்டான். அவர்கள் பின்னால் நான் நிற்பதைப் பார்த்து சற்று அமைதியானாள்.
உடைந்த ஆங்கிலத்தில் அந்த மூதாட்டி "ஹலோ" என்றாள்.
"உள்ளே வரலாமா..?" என்று அந்த மூதாட்டி கேட்பதற்குள், வளர்மதி கதவை முழுவதுமாகத் திறந்து இயற்கையாய் அவள் முகத்தில் குடியிருக்கும் புன்னகையுடன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.
"நாங்கள் தான் கீழ் தளத்து வீட்டில் இருக்கும் சீனக் குடும்பம். இரண்டு நாட்கள் முன்னால் என் மகனும் மருமகளும் வந்து உங்களுடன் பேசினார்களாம். உங்கள் வீட்டிலிருந்து ரொம்ப சத்தம் வருவதாகவும் குறிப்பாக உங்கள் குழந்தை கிடு கிடுவென ஓடுவதாகவும் உங்களிடம் கோபமாகப் பேசியதாகவும் அறிந்து கொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்பதற்காக வந்திருக்கிறேன். ஐ யம் சாரி"
இந்தோனேசியப் பெண் கையில் மறைத்து வைத்திருந்த வெள்ளை டவலால் மூதாட்டியின் கண்களை ஒத்தினாள்.
வியப்பிலிருந்து விடுபட முடியாமல் வளர்மதி ஓடிப் போய் ஒரு குவளையில் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தாள்.
"ஓ பாய்.. கிட்டே வா..." - மூதாட்டி வாஞ்சையுடன் அழைக்க அச்சத்துடன் மதிவண்ணன் அருகில் சென்றான். "பாட்டிடா..." வளர்மதியின் குரல் சற்றே தழு தழுத்தது.
மூதாட்டி மதிவண்ணனின் கன்னங்களைத் தடவினாள். மதிவண்ணன் இந்தோனேசியப் பெண்ணைப் பார்த்து மையமாகச் சிரித்தான்.
"இது கொரோனா காலம். எல்லோரும் வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்க வேண்டியிருக்கு. வீட்டு வேலையும் நடக்கணும் .. ஆபீஸ் வேலையும் ஆகணும்.. பள்ளிக் கூடம் கிடையாது.. விளையாட வெளியிலேயும் போக முடியாது.. குழந்தைகள் என்ன தான் செய்யும்? வீட்டிலே தான் ஓடும். சத்தம் போடும். அவங்களை எப்படி அடக்கி வைக்க முடியும்?"
"இன்னிக்கு தான் கொஞ்சம் விதிகளைத் தளர்த்தி இருக்காங்க.. அதான் நான் உன் வீட்டைத் தேடி வந்தேன்"
தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். பணிப் பெண் நீட்டிய டவலை நாதூக்காக மறுதளித்தாள்.
வளர்மதி என்ன சொல்வதென்று தெரியாமல் மவுனித்திருந்தாள். நான் கூடத் தான்.
"தெரியாம பேசிட்டாங்க என் மகனும் மருமகளும். அவங்களுக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆகி விட்டது. இன்னும் குழந்தை இல்லை. அதுனால அனுபவம் போத வில்லை. நான் வேற நடக்க முடியாமல் இந்த சக்கர நாற்காலியிலே முன்னே பின்னே போயிட்டிருக்கேனா.. அவங்களுக்கு இன்னும் கஷ்டமா இருக்கு போல இருக்கு.. அதுனால பேசிட்டாங்க.. "
"நீ ஒண்ணும் மனசுல வச்சுக்காத தாயீ... நான் அவங்க கிட்டே வெளக்கிச் சொல்றேன்... "
மதிவண்ணன் கையில் ஒரு சிகப்பு கவரைக் கொடுத்து "பாய் .. ஏதாவது ஒரு கிஃப்ட் வாங்கிக்க என்ன... நல்லா விளையாடு நல்லா படி.. என்ன"
வளர்மதி கொடுத்த குவளை நீரை முழுவதுமாகக் குடித்தாள். மதிவண்ணன் பணிப்பெண்ணுக்கு நீர் கொண்டு வந்தான்.
அவர்கள் மெதுவாகக் கிளம்ப யத்தனிக்க, மூதாட்டி வளர்மதியின் கைகளைப் பற்றி "என் இந்தியப் பெண்ணே.. நீ எனக்கு ஒரு உதவி பண்ண வேண்டும்.. அங்கே வைத்திருக்கிறாயே அந்த உன் கடவுள்களிடம் என் பிள்ளைக்காக வேண்டிக் கொள்... அடுத்த வருடமே அவனுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க வேண்டும் என்று. நம்ம அரசாங்கமோ பெத்துக்கோ பெத்துக்கோ என்று சொல்றாங்க.. நம்ம பசங்களோ அதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காங்க.. எனக்குப் புரியவே மாட்டேங்கிறது.. எனக்காக நீ வேண்டிக்க ..என்ன"
சக்கர நாற்காலி முணக முணக விலகிச் சென்றது.
வளர்மதி மதிவண்ணனை ஆரத் தழுவினாள்.
நான் மாஜுலா சிங்கப்பூரா என்று உரக்கக் கூவ எண்ணி முணுமுணுத்தேன்.
பானுரவி / Banooravi
கட்டுரைகள் →