❋Paarthen Ezhuthugiren
c. 2019
தமிழ் இலக்கியத்தின் அத்தனை வளமான கவிதைகளும், காவியங்களும் எழுதப்பட்டது இந்தப் பனை ஓலையில்தான். பனை வெறும் விருட்சமா? இல்லை — ஒரு காலத்தில் அநேகம்பேருக்கு வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது.
எங்கள் வீட்டுத்தோட்டத்தின் முன்புறமும் பின்புறமும் உள்ள பனைமரங்களைப் பார்க்கிறேன். லிப்ஸ்டிக் பாம் ட்ரீஸ் என்ற வகையைச் சார்ந்த பனைமரங்களாதலால், தண்டுப்பகுதி சிவந்தும் மேற்புறக் கிளைகள் பச்சையாகவும் இருப்பவை. எங்கள் வீட்டைச் சீரமைக்கும்போது, இப்படிப் பனை மரங்களை வைக்க வேண்டுமென்று நான் கூறியபோது, எனது கணவர் வியந்தார்…”வாழை, மா, லோ என்றுதான்.வைப்பார்கள்..இது என்ன புதுசாய்ப் பனைமர மோகம்?” ….
வாழையடி வாழையாக வாழை வளரும்தான்! ஆனால் குலை தள்ளிய பின் அதை வெட்டும்படி இருக்கும்! லோ வேர் ஆழமாக வேரூன்றி வீட்டின் அஸ்திவாரத்தை அசைக்கும்! மாமரம் எனில், வௌவாலும், மற்றைய பட்சிகளும் வந்து பழங்களைக் கடித்துக் குதறிப்போடும்…அத்தோடு அந்தக் கட்டிட வல்லுநரும் எங்களுக்கு ஒரு புதிய தகவலைச் சொன்னார். ஒருபனைமரம் வைக்கும்போது அதனடியில் பல கிளைகள் தோன்றுமென்றும் சீனர்களுக்கு இம்மரம் ஒரு செழிப்பின் அடையாளம் என்றும் கூறியபோது அந்தப் பனைமரங்கள் எங்கள் வீட்டில் இடம்பிடித்தன!
ஒவ்வொரு எழுத்தாளனும் மானசீகமாக நன்றி தெரிவிக்க வேண்டிய மரம் இந்தப்பனைமரம் என்றால் அது மிகையில்லை. ஏன்? அந்நாட்களில், இந்தப் பனைமரத்து ஓலைகளில் தானே, தமிழ் இலக்கியத்தின் அத்தனை வளமான கவிதைகளும், காவியங்களும் எழுதப்பட்டன! சிந்தித்துப் பாருங்கள்…இந்தப் பனை ஓலையும், கூரான எழுத்தாணியும், தீராத வறுமையும்தானே அந்த நாளைய எழுத்தாளனின் ஆஸ்தியாக இருந்திருக்கின்றன!
பனை வெறும் விருட்சம் மட்டும்தானா? பனை ஒருகாலத்தில் அநேகம்பேருக்கு வாழ்வாதாரமாக இருந்தது என்றே கொள்ளவேண்டும். பனையோடு அவர்களின் வாழ்வு பிணைந்து கிடந்தது. பனையேறிகளின் மார்பைப் பார்த்தால், பனைமரத்தின் செதில்கள் ஏற்படுத்திய வடுக்கள், தங்கப்பதக்கம் போல் பதிந்திருக்கும்! பனை நமது தமிழ் நிலத்தின் அடையாளம் என்பேன். பனைமரத்தின் கம்பீரம் அலாதியானது. பனையின் கூந்தல் மிக அழகானது…அது, சதா அசைந்து கொண்டே இருக்கும். தனது வாழ்வின் கதையை நமக்குச் சொல்லுகிறதோ? அதுவும் காற்று வீசுகையில் அந்த மடல்களின் சரசர ஒலி, சங்கீ தத்தின் சரளிவரிசை போல் அத்தனை இனிமையாக இருக்கும்!
இந்தப் பனைமரத்துக்கு இலக்கியத்தில் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. போந்தை, நீலம், தாலம், ஓடகம்,தாளி …இப்படிப் பல. போந்தை என்பது, இளம்பனையைக் குறிப்பது. பனையின் இலையை ஓலை என்பார்கள். பசுமையான ஓலைக்குச் ‘சாரோலை’ என்றும், முற்றிய காய்ந்த ஓலைக்குக் ‘காவோலை’ என்றும் பெயர். நமது தமிழ்நாட்டில் முப்பது வகைப் பனைகள் இருந்ததாகவும், இப்போது ‘தாளிப்பனை’, ‘கூந்தப்பனை’, நாட்டுப்பனை’ மட்டுமே வளர்வதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.
பனைமரத்தின் தண்டை, நீளவாக்கில் அறுத்துக் கழி செய்யப்படுகிறது. அந்தக்காலத்தில், ஓட்டுவீடு கட்டும்போது, இந்தக்கழிகள் மேற்கூரையில் பொருத்தப்பட்டு, அவற்றின் மீ து குறுக்குவாட்டில் மூங்கில் கழிகளை வைத்து, அதன்மீ து, நாட்டுச் செங்கற்களை அடுக்கிக் கூரையை வலுவாக்குவார்கள். இந்தப் பனங்கழிகள் சற்று வளையுமேயன்றி, உடையாது.
பனை ஓலையின் உபயோகம் எழுதி மாளாது. அரிசி,பருப்பு போன்றவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ள கொள்கலம், குடுவை, கொட்டான் போன்றவை செய்கிறார்கள். பனை ஓலை, கைப்பை, தொப்பி, முக்காட்டுப்போர்வை போன்றவை செய்யப் பயன்படுகின்றன. இந்த ஓலைகளின் நிலைப்பாடு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி இருப்பதால், தீபாவளியன்று பேரொலி எழுப்பும் ஓலைப்பட்டாசுகளைக் கூடத் தயாரிக்கிறார்கள்.
இந்தப்பனை மரத்தின் வடிவங்கள், பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனின் கொடியிலும், பலராமனின் கொடியிலும் பொறிக்கப் பட்டிருந்ததாம், இலக்கியத்திலும் இதன் பங்கு பெரிது. “உத்தமர் ஓங்கு பனை போல்வர் “ என்று நீதிநெறி வெண்பா சொல்லுகிறது. “தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாய்க் கொள்வர் பயன் தெரிவார்”...செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் இப்படிக் குறிப்பிடுகிறார். மேலும், குற்றங்கடிதல் என்கிற ஒரு அதிகாரத்தில், “தினைத்துணையாங் குற்றம்வரினும் ..பனைத்துணையாய்க் கொள்வர் பழிநாணுவார்”....இந்தப் பனையால் அல்லவா நாம் உலகப்பொதுமறையான வள்ளுவம் கிடைக்கப் பெற்றோம்!
இப்போது ஒரு சுவாரசியமான கதை சொல்லுகிறேன், கேளுங்கள். திருவத்திபுரம் அல்லது திருவோத்தூர் (இன்றைய செய்யாறு) என்ற ஊரில் ஒரு சிவன் கோவில் உள்ளது; அங்கு பனையே தல விருட்சமாகும். சமணர்களின் காலம் ஓங்கியிருந்த சமயம். அந்தச் சிவாலயத்துக்குச் சைவசமய அடியார்கள் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தப்பெருமான் வருகை புரிகிறார். சமணர்கள், அவரிடம் ஒரு சவால் விடுத்தனர். “இந்தக் கோவிலிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் காயாத ஆண்பனைமரங்கள் அநேகம் உள்ளன. அந்த ஆண்பனைகளைக், கனி ஈயும் பெண்பனைகளாக மாற்றும் பட்சத்தில், சமணத்தை விடுத்துச் சைவ மதத்திற்கு மாறுவதாகச் சமணர்கள் கொக்கரித்தனர். இறை நம்பிக்கை கொண்ட நமது சம்பந்தர், அந்தச் சவாலை ஏற்றுக் கீழ்வரும் பதிகத்தைப் பாடினார்..
“குரும்பை ஆண்பனை ஈங்குலை ஒத்தூர் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம்பந்தன்சொல் விரும்புவார் வினை வடே!'
எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் அக்கோவிலுள் இருந்த ஆண்பனைகளும் குலைதள்ளிப் பெண்பனைகளாக மாறின. இன்றைக்கும் அந்தக் குலையீன்ற பனைகளை அங்கே காணலாம்.
மற்றொரு சுவாரசியமான நிகழ்வைப் பழந்தமிழர்கள் அந்நாளில் கடைப்பிடித்த வாழ்வுமுறையில் காணலாம். ‘மடலேறுதல்’ என்பது அக்கால வழக்கம், ஒரு தலைவன், தான் விரும்பிய தலைவியை அடையும் பொருட்டு மேற்கொள்ளும் செயலே மடலேறுதல் என்பதாகும். அவனது காதலை ஊரறியச் செய்வதே இதன் நோக்கம். எப்படி? ஒரு அகன்ற பனைமரத்தின் மடல்களால் ஆன ஒரு குதிரையைச் செய்து, அத்தலைவன், அதில் ஏறிச் சாம்பலைப் பூசிக்கொண்டு,யாரும் சூடாத எருக்கம்பூ மாலையைச் சூடிக்கொண்டு, தனது தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்வான். பெண்ணின் பெற்றோர்கள் அந்தத் தலைவனை ஏற்றுக்கொள்ளாவிடில் மட்டுமே இந்த மடலேறுதல் நடைபெறும். அத்தலைவனின் மனவுறுதியைப் பாராட்டி, ஊரார் முன்பாக அவர்களின் திருமணம் நடைபெறும். ஆக, இந்தப் பொல்லாத பனைமரம் ஒரு காதல் விடு தூதுவாகவும் பயன்பட்டிருக்கிறது!!
பனை ஒரு விருட்சம் மட்டுமா? இல்லை..அந்தக் காலத்தில் அநேகம்பேருக்கு ஒரு வாழ்வாதாரமாகவும் இருந்திருக்கிறது. பனையோடு அவர்களின் வாழ்வு ரொம்பவே பிணைந்து போயிருந்தது என்றால் மிகையில்லை. எங்கள் ஊர் செட்டிநாட்டில் நிறைய பனைமரங்கள் உண்டு….நிறையப் பனையேறிகளும் உண்டு. அந்தப் பனையேறிகளின் மார்பில், பனைமரத்தின் செதில்கள் ஏற்படுத்திய வடுக்கள், ஒரு தங்கப்பதக்கம் போல் பதிந்திருக்கும். அந்தக் கம்பீரமான பனைகள், நமது தமிழகத்தின் அடையாளம் என்பேன். பனைகளின் ஊடாகச் செல்லும் பாதை, ஒரு மலைப்பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும்….
பனை ஓலையைச் சீவிப் பதப்படுத்தி, கூரிய எழுத்தாணியால் கீ றி எழுதுவதற்குத் தேர்ந்த பயிற்சியும், வலுவும் தேவை. ஒரு பனை நறுக்கில் அதிகபட்சம், ஆறு அல்லது ஏழு சொற்றொடர்களை மட்டுமே எழுத இயலும். அந்த எழுத்தாணியைப் பற்றி ஓலையில் வைத்து அழுத்தமாய் எழுதும்போது விரல்களின் ரேகைகள் அழிந்து விடுமாம்! அப்படியெனில், சிலப்பதிகாரமும், திருக்குறளும், கம்ப இராமாயணமும், இன்ன பிற இலக்கியங்களும் எழுதிய பெருமக்களின் கைகளின் ரேகைகள் எவ்வளவு தேய்மானம் அடைந்திருக்கும்!
தமிழ்ப் பழமொழிகளில் கூட இந்தப் பனையின் சிறப்பு தெரிகிறது…”காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற் போல்”... ‘பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது’...’பனைமட்டையில் மழை பெய்தாற்போல்’...’பனை நிழலும் ஒருநிழலோ? பகைவர் உறவும் ஓர் உறவோ?’...’பனை நட்டு ஆயிரம்; பனை துட்டு ஆயிரம்’ ....இப்படியாகப் பலவிதப் பழமொழிகள்…. நான் சிறுமியாக இருந்த காலத்தே பனையைப்பற்றிய ஒரு பாடலைப் பாடிவந்தது இப்போது நினைவுக்கு வருகிறது…
‘பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?’...
…’நான் வளர்ந்த காரணத்தை நான் உரைப்பேன் கேளுங்கள்! படுத்திடப் பாய் நானாவேன்; பாய்முடையத் தோப்பாவேன்! வெட்டநல் விறகாவேன்; வீடுகட்டும் பொருளாவேன்! பசித்து வருவோர்க்குப் பனம்பழமும் நான்தருவேன்! பலரும் இளைப்பாறப் பதநீரும் தந்திடுவேன்! சித்திரைக் கோடையிலே சிறந்த நுங்கு நான்தருவேன்! காளையர்க்கும் கன்னியர்க்கும் காதலிலே தூதாவேன்! வியர்வை போக்கிடவே விசிறியாய் நான் வருவேன்! துயரம்போக்கி நல்ல செல்வங்கள் ஈட்டிடுவேன்’
இப்போது ஒப்புக்கொள்ளுகிறீர்களா, பனை எத்தனை சிறந்தது என்று! மொத்தத்தில், அனைத்து மரங்களுமே நம் அனைவருக்கும் பூ, பிஞ்சு, காய், பழம், வேர், கிளை, இலை....என்று எல்லாவிதத்திலும் பயனுள்ளதாகவே இருக்கிறது…ஆனால், மனிதர்களாகிய நாம், எந்த வகையில் இந்த மரங்களை வெட்டாமல் ஆதரிக்கிறோம் என்ற கேள்வியை உங்களிடம் முன் வைத்து, இந்தத் தொகுப்பை முடிக்கிறேன்…..
அன்புடன் பானுரவி (சிங்கப்பூர்)
பானுரவி / Banooravi
கட்டுரைகள் →