கட்டுரை

கல்

Paarthen Ezhuthugiren

c. 2018

சோழர்கள் காலத்துக் கோவில்களைப் பார்த்த போது எனக்குள் கல்லைப்பற்றி ஒரு புது ருசி ஏற்பட்டது. எரிந்தால் ஆயுதம்; கட்டினால் இருப்பிடம்; வடித்தால் சிற்பம்; வைத்தால் இறைவன்.

இது என்ன? கல்லைப் பற்றி என்ன இருக்கு தெரிந்து கொள்ள என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கல்லுக்கு ஒரு ருசி உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? பழங்காலத்திலிருந்தே நமது முன்னோர்கள் கல்லை ஆயுதமாகவும், கதவுகளாகவும், மதில்களாகவும், இன்னும் பல வியத்தகு பொருட்களாகவும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். நிறையக் கோவில்களுக்கு, அதுவும் சோழர்கள் காலத்துக் கோவில்களைப் பார்வையுற்ற போதுதான், எனக்குள் கல்லைப்பற்றிய ஒரு புது ருசி ஏற்பட்டது. கங்கை கொண்ட சோழபுரமும், பட்டீஸ்வரமும், தாராசுரமும், தஞ்சைப் பெரியகோவிலும், கர்நாடகத்துக் கோவில்களும்…அடடா, இந்தக் கல்லுக்குள் தான் எத்தனை ரகசியங்கள்? புதையல்கள், சரித்திரங்கள்? கல்லிலே கலைவண்ணம் கண்ட அந்தச் சரித்திர புருஷர்களை, மாமன்னர்களை நினைக்கையில் நெஞ்சம் விம்முகிறது…பின்னே? ஒவ்வொரு கல்லும் மலையிலிருந்து சிதறிக் கீ ழே விழும்போது, அவை நான்கு, எட்டு, என்று பெருகி உடைந்து கொண்டு போகுமே தவிர, கல்லின் உட்புறத்தை எவராலும் பார்க்கவே முடியாது, இல்லையா? கற்கள் புதிரானவையா? தெரியவில்லை…சிறுசிறு கற்களை வைத்துக் கொண்டு நான் கல்லாட்டம் ஆடும்போது, அந்தக்கற்கள் தரையில் வசப்படும்போது, அவற்றுக்கு வலிக்குமே என்று ரொம்பவே கவலைப்பட்டிருக்கேன்…பாதையில் நடக்கையில் தென்படும் பலவித வடிவ, வண்ணக் கற்களை எடுத்துப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்… நிறையப் பயணங்களை மேற்கொண்டபோது, மத்தியதரைக்கடல், அரேபிய பாலைவனங்கள், அமெரிக்காவின் க்ராண்ட் கான்யேன், எஸோமெட் பார்க், எகிப்து, அப்பிரிக்கப் பாலைவனங்கள்,, கனடாவின் நயாகரா ஏரி, இஸ்ரேலின் டெட் ஸீ, ஜெரூசலததின் மசூதி,ஏசு பிறந்த பெத்லகேம் நகரின் மசூதி,இந்தியாவின் புனித நதியோராக கற்கள், திபெத் மலையடிவாரம், சீனப் பெருஞ்சுவர், இப்படிப் பல இடங்களில் இருந்து கற்களை பொறுக்கிக் கொண்டு வந்து நிறையச் சேர்த்திருக்கேன்….அப்படி இந்தக் கற்களில் என்ன தான் இருக்கிறது? இந்தக் கற்களின் பகிரப்படாத பக்கங்கள் என்று ஏதானும் இருக்கிறதா? மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் கொடியைப் பறக்க விட்டு, அங்கிருந்த கனகன், விஜயன் என்ற குறுநில மன்னர்களின் தலையின் மீ து கண்ணகி சிலைக்கான கற்களைக் கொண்டுவந்தான் என்பது சிலப்பதிகாரச் செய்தி! அது சரி…எத்தனையோ அரிய பொருட்கள் இருக்க, கற்களை ஏன் சுமக்க வைத்தான்? அந்த அளவுக்கு இந்தக் கற்களுக்கு மகத்துவம் இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய விஷயம்…. கற்கள் பலவகை…எரிமலைக் கற்கள், படிவுப்பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்று பலவகை உண்டு. கற்கள் ஒரு உறைந்து போன கவிதைகள் என்று சொல்லுவேன். மேலும் வரலாற்றின் அழியாத பக்கங்கள். இன்னமும் கோவில்களில் கற்களில் செதுக்கி வைத்த எழுத்துக்கள் அன்றைய காலகட்டத்தின் சரித்திரத்தைச் சொல்லுகின்றனவே! பிரமிடுகள், மதில்கள, கோ ட்டைகள், கோவில்கள்,என்று எல்லாவற்றிலும் கற்கள் கவி சொல்லும் திறனை வியக்காமல் இருக்க முடியாது. கோவிலின் கற்கள், காலத்தின் சாட்சிகள்; மலைகளின் கற்கள், வானத்தை நோக்கிய வலிமையைக் காட்டுபவை; கடலுள் ஆழ்ந்து கிடக்கும் கூழாங்கற்கள் புதையுண்ட சரித்திரங்கள்; உருண்டு விழும் கற்கள், இயற்கையின் உயர்ந்த கம்பீரம்; பாறாங்கற்கள் தேர்ந்த சிற்பியின் கைவண்ணம்; மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட கற்கள், கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் தெய்வம்….இப்படிக் கற்களின் தன்மையை எழுதிக் கொண்டே போகலாம்…. நான் சிறிது காலம், காவேரி செங்கல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அன்பில் என்ற நகரத்தில் இருந்த செங்கல் சூளைக்கு அவ்வப்போது போவது உண்டு. சூளையில் செங்கற்கள் பக்குவப்படுவது என்பது, ஒரு சிலிர்க்க வைக்கும் பயணம்! களிமண் தனது மிருதுவான தன்மையைத் துறந்து, தீயின் சூட்டைத் தாங்கி, ஒரு வலுவான செங்கல்லாக மாறும்போது அதனுடைய உறுதி என்னை மலைப்படைய வைத்தது. களிமண் தனது மௌனத்தைத் துறந்து, சூளையில் தகிப்பில் உயிர்த்தெழுகிறது. அது, ஒவ்வொரு துகளிலும், சகிப்புத்தன்மையைப் பதித்து, வலிமையின் ரகசியத்தை உணர்த்துகிறது, இல்லையா? கோவில்களின் கருவறைச் சுவர்கள், அரண்கள், கட்டிடங்கள், கல்விச்சாலைகள், தொழிற்கூடங்கள்,இப்படி எங்கும் எதிலும் செங்கற்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது அல்லவா? ஒவ்வொரு செங்கல்லும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியையும், கலாச்சாரத்தின் வலிமையையும் பறை சாற்றுகிறது என்றால், அது மிகையில்லை அல்லவா? வளர்ந்து இளமை ததும்பும் ஒரு மென்மையான பெண்ணும் அப்படித்தானே? மணமாகிப் போகும்போது, சிறிது சிறிதாக அனுபவப்பாட்டு, மனதில் வலுப்பெற்று, பின் உடம்பில் ஒரு குழந்தையைச் சுமக்கும் வலுவைப்பெற்று, பிறகு ஒரு குடும்பத்தைக் கட்டிக்க காக்கும் அளவுக்கு வலிமையைப் பெற்றுவிடுகிறாளே! கற்கள் தாங்கும் வலிமை, உறுதி, மற்றும் காலத்தால் அழியாத தன்மை ஆகியவற்றை, ஒரு பெண்ணின் பொறுமை, தியாகம், மனோதிடத்துடன் ஒப்பிட முடியும் …ஒரு குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் பெண்ணின் பங்கு, ஆழப் புதைந்து பூமிக்குள் அழுந்திக் கிடக்கும் அஸ்திவாரக் கற்களுக்குச் சமமானது அல்லவா? இப்படி,இந்தக் கற்கள்… மழை வெயில் தாங்கி மனதுள் மௌனம் காத்து, சிலையாக மாற ஒரு சிற்பியின் கவலையை ஏற்கும்! மண்ணின் ஆழத்தில் மறைந்து நின்று உயரத்தை வெளிக்காட்டுமபவை! காலத்தின் காலடித் தடத்தைத் தனது மீ து வெட்டிக்கொண்டு காயங்களைச் சுமப்பவை! ஆற்றிலே உருண்டு, அலையிலே புரண்டு, ஒன்றோடு ஒன்று மோதிச் சிரிப்பவை! கற்கள்….? ஆம்! அவை ஒரு அற்புதம்! வலியைத் தாங்கி நிலைத்து நிற்கும் சுமைதாங்கிகள்! எரிந்தால் கல் ஒரு ஆயுதம்! கட்டினால் இருப்பிடம்! வடித்தால் சிற்பம்! உடைத்தால் மணல்துகள்! வைத்தால் இறைவன்! ஒப்புக்கொள்ளுகிறீர்களா? அன்புடன்….. பானுரவி /சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கட்டுரைகள்