❋Paarthen Ezhuthugiren
April 2023
ஐந்து வயதில், கானாடுகாத்தான் 3/120 அரு.வீதியின் உட்புற அறை ஜன்னலைக் குனிந்து நிமிர்ந்து பார்க்கும்போது, இந்த உலகம் அவளுக்குத் திறந்துகொண்டது. அதற்குப் பிறகு வாழ்ந்த ஒவ்வொரு வீட்டிலும் — திருச்சி, கனடா, ஜெனிவா, சிங்கப்பூர் — ஜன்னல்தான் அவளுக்கு அனைத்தையும் நோக்கிய வாசல்.
பள்ளிக்கூடமும், பாடங்களும், புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத் தந்ததைவிட, இயற்கை மூலம் நாம் அதிகமாக அறிந்து கொள்கிறோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது! என்னைப் பொறுத்தவரையில் எனது வீட்டு ஜன்னல் வழியாகத்தான் ஒரு புதிய உலகம் என்பது எனக்குப் பரிச்சயமானது.
3/120 அரு. வீதியில் இருந்த கானாடுகாத்தான் வீடு, எனது பிறப்பிடம் மட்டுமல்ல, என்னை வழி நடத்திச் சென்ற ஒரு என்சைக்ளோபீடியா! நிறைய அர்த்தங்களைச் சொல்லித்தந்த ஒரு அகராதி! அந்த வீட்டில் இருந்த உள் என்ற அறையில் இருந்த ஜன்னல் எனக்கு ஒரு போதிமரம் என்றால் அது மிகையில்ல. கொஞ்சம் எக்கி நின்றால் மட்டுமே ஜன்னல் தெரியும் வயதில் நான் இருந்தபோது, உண்மையிலேயே அந்த ஜன்னல் எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது...ஆம்! இன்றளவில் எனது நெஞ்சில் பசுமை மாறாது இருப்பது அந்த ஜன்னல் மட்டுமே! அந்த ஜன்னலின் வழியாகவே வெளி உலகத்தோடு எனது உறவு மலரத் துவங்கியது என்பேன்!
அந்த ஜன்னலின் வெளியே என்ன தெரிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் என்னை ரொம்பவே ஆக்கிரமித்திருந்தது. ஒரு ஸ்டூலைப் போட்டு அதில் ஏறி அந்த ஜன்னல் வழியே பார்த்தால், எதிரும் புதிருமாக வருவோரும் போவோருமாகப் பலதரப்பட்ட மக்களும், எதிரே சிகப்பி ஆச்சி வீட்டுச் சுவரும் தெரியும். வீட்டின் ஜன்னலை ஒட்டி, ஒரு அகழி மாதிரி, மழைத்தண்ணீர் வடிந்து செல்லும்படியாக ஒன்று இருக்கும்...
அந்த வயதில் எனக்கும் ஆகாசத்துக்கும் இடையே இந்த ஜன்னல் மட்டுமே இருப்பதாகத் தோன்றும். இந்த ஜன்னலை எடுத்து விட்டால், காற்றில் மிதந்தபடி நானும் ஜன்னல் வழியே மேகங்களோடு கலந்து போவேனோ என்ற விசித்திரமான எண்ணகமெல்லாம் வந்திருக்கிறது. பகலில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி போல் சகலவிதக் காட்சிகளையும் காட்டும் அந்த ஜன்னலை இரவில் மூடி விடுவார்கள்.
நானும் ராஜாவும் அநேக நாட்கள் அந்த ஜன்னலின் அருகே அமர்ந்து உலக மகா விஷயங்களை அளவளாவுவோம். அம்மா செய்து தரும் ஓமப்பொடியைச் சிறு கிண்ணங்களில் போட்டுக்கொண்டு, அதில் கேள்விக்குறி இருக்கா, சுழி மாதிரி இருக்கா, எட்டு மாதிரி இருக்கா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்போம். ஜன்னலுக்கு அருகே, அப்பா செய்த பெரிய மரநாற்காலிதான், இந்திராணியின் ஆஸ்தான இருக்கை. தோதாக டின்னிலிருந்து ரப்பர்சம்பா புழுங்கலரிசியை வாயில் அடக்கிக்கொண்டு, புத்தகமோ, நாவலோ படித்துக் கொண்டிருப்பாள். அந்த உள்ளில் சுவற்றை ஒட்டி ஒரு ஊஞ்சல்பலகையில் உலகமகாப் பொக்கிஷங்கள் வீற்றிருக்கும். காப்பிக்கொட்டை அரைக்கும் மெஷின் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அம்மா அவ்வப்போது காபிப்பொடி அரைக்கச் சொல்லும்போது வெறுப்பாக இருக்கும்...வேண்டா வெறுப்பாகச் செய்வேன். பின்னே? நொறுநொறுவென்று இருக்கும் பொடியை நைசாக அரைக்கும்படி திரும்பத்திரும்பச் சொன்னால், எரிச்சல் வராதா? இதனால் ஜன்னல் காட்சிகள் தடைபட்டுப் போகிறதே என்று சிறுகோபம் எட்டிப்பார்க்கும்! அதே சமயம் அந்த உள்ளில் இருந்த கள்ளியம்பெட்டியை அம்மா திறக்க வந்தால், உடனே சூழ்ந்து கொள்வோம்! ஒரு கல்கண்டு, பிஸ்கட், அல்லது வேறு ஏதேனும் தின்பண்டம் கிடைக்காதா என்ற நப்பாசைதான்!
கானாடுகாத்தானிலிருந்து திருச்சிக்கு வந்த பிறகு 7A/9 கல்யாணிவிலாஸ் வீட்டு ஜன்னலும் எனக்கு மனசுக்குப் பிடித்த ஒன்றாகிப் போனது. கானாடுகாத்தானின் கிராமத்து மணம் மாறாத பருவத்திலிருந்த எனக்கு அந்த மலைக்கோட்டை வீடு சுவிட்சர்லாந்து போலத் தெரிந்தது. சிறிய வீடு...சிறிய ஜன்னல். தண்ணீர் கூட அளந்து அளந்து பக்கெட்டில்...ஆனாலும் அந்த வீட்டு ஜன்னல் எங்கள் அனைவருக்கும் ஒரு பயாஸ்கோப் மாதிரி இருந்தது. மலைக்கோட்டையைப் பார்க்க வரும் சுற்றுப்பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டவர்களை அந்த ஜன்னல் வழியே பார்ப்பது எனது பெரிய பொழுதுபோக்கு என்பேன். அந்த ஜன்னல் தந்த வெளிச்சத்தில் அப்பா ஒரு சாய்வுமேசையில் பிரபாத் டாக்கீஸின் லெட்ஜரை வைத்துக்கொண்டு கணக்கு எழுதுவார். அந்த வெளிச்சத்தில் எனது ஷார்ட்ஹான்ட் பயிற்சி நடக்கும். ராஜாவின் சேகரின் வீட்டுப் பாடங்கள் நடக்கும். பேபியின் உஷா தையல்மெஷின் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்!
மறக்க முடியாத எனது இளம்பருவத்து நாட்களின் ஆதார ஸ்ருதியாக இந்த ஜன்னல்கள் இருந்தன என்பது உண்மை! மரச்சட்டங்களால் சிறைப்பட்டுக் கிடந்தாலும், பசுமையான காட்சிகளை, சிதறுகின்ற தூறலைக், கொட்டுகின்ற மழையை, விளையாடும் சிறுவர்களை, விற்பனை செய்யும் மக்களை, மாட்டு வண்டியை, சைக்கிள் விடுபவரை, விறகு சுமந்து வருபவரை, ஐஸ்வண்டியை, வளையல் விற்பவரை, சினிமா நோட்டீஸ் போடும் வண்டியை, என்று வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறியதே இல்லை.
வாழ்க்கைப் பயணத்தில் எந்தனையோ இடங்களில் வசிக்கும்படி நேர்ந்த போதும், இந்த ஜன்னல்கள் காட்டும் வெளிச்சத்தையும், காட்சிகளையும் நான் எப்போதும் போற்றிக் கொண்டாடுவேன். இப்போதும் கூட கனடாவில் பரத் வீட்டு ஜன்னல் வழியே ரிஷியை வேடிக்கை காட்டும்போது பரவசமாக இருக்கும்...எதிர்வீட்டு ஜனங்களும், வீதியில் விளையாடும் குழந்தைகளும், நடைப்பயிற்சி செய்பவர்களும், அசைந்தாடும் மரங்களும், பூக்களும் ...காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. அதே போல் அம்முலுவின் ஜெனிவா வீட்டு ஜன்னலில் சின்னக்குருவிகள் காலை நேரத்தில் சப்தமிட்டு சங்கீதமாக அந்த நாளை ஆரம்பித்து வைத்தது நினைவுக்கு வருகிறது..
இந்தப் பதிவை ஜெயஸ்ரீயின் சிங்கப்பூர் வீட்டில் இருந்துதான் எழுதுகிறேன். இந்த அறையின் ஜன்னல் வழியே விஸ்தாரமான ஆகாயமும், உயர்ந்த மாடி வீடுகளும், பசேல் என்ற தோட்டங்களும் ஒருவித உற்சாகத்தைத் தருகிறது...ஜன்னல் என்பது வீட்டின் ஒரு அங்கம் மட்டுமல்ல...நமது மனதில் சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக உட்கார்ந்துகொள்ளும் ஒரு சிநேகமான பந்தம் என்பேன்!
நினைத்துப் பார்க்கிறேன்...உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. என்னைப் போலவே ஒவ்வொரு ஜன்னலின் பின்னாலும், ஒரு சிறுமியோ, சிறுவனோ இந்தப் புரியாத புதிரான வாழ்க்கைச் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் தானே?.....
அன்புடன் பானுரவி
பானுரவி / Banooravi
கட்டுரைகள் →