கம்பன்தமிழ்

கட்டுரை

கம்பனும் நானும்

August 2026

கம்ப ராமாயணத்தில் தன் நெஞ்சில் நிலைத்துப் போனவற்றைப் பானுரவி ஒவ்வொன்றாக அள்ளித் தருகிறார் — தடாகையின் அச்சுறுத்தும் வர்ணனை, நட்பிற்கு இலக்கணம் வகுத்த குகனின் உபசாரம், இராமனைத் தோளில் ஏற்றிய அனுமனும் பொறாமைப்படும் கருடனும், இராமனின் புகழ் உன்னால்தான் நிலைக்கும் என்று அனுமனிடம் சொல்லும் சீதை. இராமனைக் கொண்டாட ஒரு கடுகளவு பக்தி போதும்; ஆனால் கம்பன் தமிழ் முழுவதையும் கேட்கிறான் — இதுவே இக்கட்டுரையின் சாரம்.

நீராலும் பூவாலும் நினைவாலும் தமிழாலும் நித்தம் போற்றும் புகழ்பெற்ற இராம பிரானை, என் கண்ணுக்குள் வைத்துக் காவல் காப்பவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்றால் மிகையில்லை… தொட்டவுடன் அதிர்கின்ற யாழினைப் போல கம்பனைத் தொட்டாலே எனது நாடி நரம்புகள் எல்லாம் அதிர்கின்றன. அந்த நீல வானத்தைப் போலவும், ஆழ்ந்த பூமியைப் போலவும் ரொம்பவே வயதானது தான் நமது தமிழ்! அதே சமயம், வயது கடந்து, மூப்பு கடந்து, இளமை நிறைந்து, புதுமை மிகுந்து, நளினம் மிகுந்து பேசும்போதும் எழுதும்போதும் ஒருவிதமான சொல்லுக்கும் பொருளுக்கும் அடங்காத பூரிப்பைத் தருவதும் இந்தத் தமிழ்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது! சற்றே சிந்தித்துப் பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் நமது தமிழ்ப்புலவர்களும், கவிஞர்களும் என்பதை நாம் எக்காலும் மறந்து விடக்கூடாது!
வானவில்லுக்கு வண்ணம் தான் அழகு! வட்ட நிலவுக்குப் பெண்ணின் மதிமுகம் தான் அழகு! இலக்கியத்திற்கு எண்ணம் தான் அழகு! இன்பத் தமிழ் மொழிக்கு எது அழகாக இருக்க முடியும்? நிச்சயமாக கம்பனின் இராமாயணம், மாணிக்க வாசகரின் திருவாசகம், ஒன்றரை அடியில் உலகமகா நீதியை விளக்கும் திருக்குறள், வில்லி பாரதம், மனோன்மணியம்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தங்கத் தமிழ் பொங்கிவரும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் விழுந்து விட்டோமென்றால் நம்மால் எழவே முடியாது…. அதிலும் எந்த வாசத்தில் மூழ்கினாலும் சுதாரித்துக் கொண்டு எழுந்து விடலாம்… இந்தக் கம்ப வாசத்தில் விழுந்தால், கட்டாயம் எழுவதும் நிதானிப்பதும் மிகவும் கடினமே! இது உண்மை….
கம்பனைப் பற்றிப் பேசினால், நாக்கு தித்திக்கும்! பேசிக் கொண்டு இருக்கும் போதே, வாக்கியங்கள் தித்திக்கும்! பேசுவதைக் கேட்கத் துவங்கும் வேளையில், செவிகள் தித்திக்கும்! மனதுக்குள் அந்தப் பேச்சு உள்ளிறங்கி உள்ளம் தித்திக்கும்!
இப்படிச் சிந்தையில் தேனூறும் கம்பனின் காவியம் ஒரு இனிப்புச் சாகரம் என்பேன்…. அதில் முங்கிக் குளித்தால் மேனி இன்புறும்! மதியிலும் கள்ளூறும்! பேசும் மொழியில் தேன் சிந்தும்…. அனுபவிப்போர், அனைவரும் தேனில் ஊறிய பலாச்சுளை போல் இன்புறும் சிந்தனையில் திளைப்பார்கள் என்பது உறுதி!
ஒரு தாயானவள், சிசுவைப் பத்து மாதங்கள் மட்டுமே கருவில் சுமக்கிறாள். ஆனால், கம்பன் என்னும் மகாக்கவியை நமது தமிழன்னை பன்னெடுங்காலமாகச் சுமக்கிறாள். தமிழ் என்னும் தொட்டிலில் வைத்து தாலாட்டுகிறாள். கடுகளவு பக்தியிருந்தாலோ, ராம ராம என்ற இரண்டெழுத்தை உச்சரிப்பதாலோ அந்தப் பரந்தாமன் ராமபிரானைக் கொண்டாடிவிட முடியும்…. ஆனால் நமது கம்பனைக் கொண்டாட உலகியல் தெரிந்திருக்க வேண்டும்; உளவியல் தெரிந்திருக்க வேண்டும்; அழகியல் தெரிந்திருக்க வேண்டும்; அறிவியல் தெரிந்திருக்க வேண்டும்; மொத்தத்தில் தமிழியல் தெரிந்திருக்க வேண்டும்! ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
ஆம்! நமது கம்பன், வண்ணத் தமிழுக்கு வளைகாப்பு நடத்தியவன்! யாப்பு உடையழகும், தேர்ந்த சொலவடையும், அணியழகும், சந்தத் தனியழகும், பொருள் அழகும்…. நிச்சயமாக இராமகாதை போல் ஒரு நூலைப் பார்த்ததில்லை… ஒவ்வொரு செய்யுளும் உணர்த்துவதை வெறும் எழுத்துக்களால் அடக்கிவிட முடியாது…. இவ்வாறாகக் கம்பனின் கவி ஆளுமையில், அவனது காப்புகளில், கவிச்சிறப்புக்களை நாம் நயந்து வியந்து பார்க்கும் போது, நமது காலக் கவிஞர் கண்ணதாசன் கம்பன் புகழை மெச்சிப் பாடியதும் என்னுள் ஒரு கீற்றாக வந்து போகிறது,
*'காலமென்னும் ஆழியிலும் காற்றுமழை ஊழியிலும்…. சாகாது கம்பனவன் பாட்டு! ...அது தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!'*
கம்பன் ஒரு சக்கரவர்த்தி என்பதற்கு இதைவிட வேறு எப்படிக் கூற முடியும்? இந்த இராமர் காதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. கம்பன் ஒரு நல்ல கவி…. எப்படி என்றால், கவிதையை எழுதும் முன் அதை மிகவும் இரசிக்கிறான்…. அதே சமயம் அந்த ரசனையில் தான் மட்டும் அப்படியே கரைந்து விடாமல், படிக்கும் வாசகனையும் அந்தக் கவிதைக்குள் இழுத்துச் சென்று தான் எழுதிய வார்த்தைகளின் சொல் நயத்திலும், ஓசை நயத்திலும் மூழ்கடிக்கச் செய்கிறான்…. இது ஒரு அசாத்தியமான ஆற்றல்… காவியத்தலைவன் இராமனை வர்ணிக்கும் அதே வேளையில், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இராவணனையும் சிறப்பாக வர்ணிக்கிறான். கதாபாத்திரங்களின் இயல்பிற்கு ஏற்றவாறு இப்படி வர்ணிப்பது கம்பனுக்கே கைவந்த கலை என்பேன்.
உதாரணத்திற்கு கீழே வரும் பாடலைப் பாருங்கள்…
*"இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறென்னும் பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயள் மறக்கடை அரக்கி வடவைக்கனல் இரண்டாய் விறைக்கடல் முளைத்தென வெருப்பெழ விழித்தாள்!"*
புரிந்து கொண்டிருப்பீர்கள் இந்த வர்ணனை தடாகைக்கு எழுதப்பட்டது என்று…. ஆமாம்… இவளது பாத்திரம் இராமாயணத்தில் ஒரு சிறு கதாபாத்திரமே! ஆனாலும் இராமன் தாக்கக்கூடிய அரக்கியானவளைச் சாதாரணமாக எழுதிவிடமுடியாதே! இப்படிப்பட்ட அரக்கியை நோக்கி நம் இராமன் விட்ட பாணமானது, *"சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்"* என்கிறான் கம்பன். அதாவது, வாய் உதிர்ந்து சொல்லும் சொல்லுக்கு எத்தனை வேகம் உண்டோ, அதைப்போல மிக வேகமாகப் பயணித்த ராமனின் அம்பு, *'கல் ஒக்கும் அவள் நெஞ்சில் புகுந்து'* *'புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் போல'* அவளது உடம்பில் நுழைந்து வெளி வந்ததாகக் கம்பன் பாட்டில் விவரிக்கிறான்…
குகப் படலத்தில் குகன் நெக்குருகிப் பேசும் கவிதைகளைப் படித்தால் நட்பிற்கு இலக்கணம் வகுத்த கம்பனை அப்படியே அள்ளிக் கொள்ளத் தோன்றும்… எத்தனை நயம்… எத்தனை பணிவு… எத்தனை அன்பு! கம்பன் குகனை அறிமுகப்படுத்தும் விதத்திலேயே அவன் மீது நமக்கு அளவில்லாத நன்மதிப்பு ஏற்படுகிறது.
*"ஆய கலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க்குகன் என்னும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன் கற்றிரள் தோளினான்…*
*ஊற்றமேமிக ஊனோடு மீன் நுகர் நாற்றம்மேய நகை இல்முகத்தினான் சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்"*
இப்படியாக அவனது தோற்றம், குணம் ஆகியவற்றைச் சொல்லும் கம்பன் மேலும், அவன் இராமன்பால் கொண்ட அன்பினையும் அழகாகச் சொல்கிறான்.
*"கண்ணனைக் கனிந்து நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான்"*
அந்த வனத்தில் இராமனைத் தன்னுடன் வந்து தங்குமாறு பணிந்து கேட்கிறான் குகன்…
*"தேன் உள, தினை உண்டால்; தேவரும் நுகர்தற்காம் ஊன் உள, துணை நாயேம் உயிர் உள, விளையாடக் கான் உள, புனல் ஆடக் கங்கையும் உளதன்றோ? நான் உளதனையும் நீ இனிது இரு; நட! எம்பால்…"*
கள்ளம் கபடமற்ற குகனின் இந்த உபசாரப் பேச்சு எத்தனை உண்மையான உள்ளக்கிடக்கையை விவரிக்கிறது… குகனை இலக்குவன் யாரென்று வினவுகையில்,
*"தேவா! நின்கழல் சேவிக்க வந்தனன்! நாவாய் வேட்டுவன்; நாய் அடியேன் என்றான்"*
இப்படிக் குகப்படலப் பாடல்கள் மட்டுமின்றி மொத்தக் கம்ப ராமாயணமும் படிக்கப் படிக்கத் திகட்டாது என்பது உண்மை. அடுத்ததாக எனது மனதுக்கு மிகவும் இணக்கமான அனுமனைக் கம்பன் எப்படி ஏற்றுகிறான் என்று பார்ப்போமா?
கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமனைப் பற்றித் தெரிந்து கொள்ளுகிறோம். இராமனையும் இலக்குவனையும் மறைந்திருந்து பார்க்கிறான் அனுமன். வியந்து வியந்து மனசுக்குள் உற்சாகம் பீரிட அவர்களைப் பார்வையாலேயே விழுங்குகிறான்…
*"சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர்"*
அதாவது, இந்திரனும் அஞ்சும் தோற்றத்தை உடையவர்; தர்மதேவனும் அஞ்சும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; மன்மதனை விடவும் அழகில் விஞ்சுவர்; யமனின் வீரர்களும் இவர்களைக் கண்ணுற அஞ்சுவர்!... மெள்ள மரத்தின் பின்னாலிருந்து தன்னை வெளிப்படுத்திப் பணிகையில் இராமர் யாரென வினவுகிறான். உடன் பணிவோடு சொல்கிறான்…
*"யான் காற்றின் வேந்தற்கு (வாயு) அஞ்சனை வயிற்றில் வந்தேன்! நாமமும் அனுமன் என்பேன்!"*
அனுமனின் அறிவுத்திறன் அவனது அந்தப் பதிலிலேயே தெரிந்து விடுகிறது.. அனுமனின் பணிவும் தேர்ந்தெடுத்த சொற்களும் ராமனை மிகவும் ஈர்க்கின்றன…
*"இல்லாத உலகத்து எங்கும் இங்கிவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே! யார்கொல் இச் சொல்லின் செல்வன்?"*
இப்படி வியந்து போகிறான் ராமன்.
*"வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?"*
இவன் நான்முகனோ? அல்லது காளையை வாகனமாய்க் கொண்ட சிவபெருமானோ என்று பெரிதும் பாராட்டுகிறான். இப்படியாகக் கம்பனின் சொல் நயமும், காவியப் போக்கும் என்னவென்று சொல்லுவது? செதுக்கப்பட்ட காவியம் அல்லவா அவனது எழுத்து?
மேலும் யுத்த காண்டத்தைச் சற்றுத் தொட்டுப் பார்ப்போம். இராவணன் களம் புகுகிறான்…. தேரில் வெகு சீற்றத்தொடு வருகிறான். நமது இராமனோ தரையில் நிற்கிறான். உடனே அனுமன் சற்றும் தாமதியாது இராமனைத் தனது தோளில் ஏற்றிக் கொள்ளுகிறான். இதைப் படிக்கும் போது நமக்குச் சாதாரண நிகழ்வாகத் தோன்றும். ஆனால் உட்புகுந்து பார்த்தால் உள்ளடங்கி இருக்கும் மகத்துவம் புரிபடும்.
*"மாணியாய் உலகளந்த நாள்; அவனுடை வடிவை ஆணியாய் உணர்மாருதி அதிசயம் உற்றான்! காணியாகப் பண்டு உடையனாம் ஒருதனிக் கலுழன் நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்!"*
அனுமன் சர்வ வல்லமையுடைய இராமனைத் தூக்கியதால் தனக்குத் தானே வியந்துபோகிறான்… ஆனால் திருமாலைத் தூக்கிச் சுமந்த கருடனுக்கோ பொறாமை பொங்குகிறது.. அந்த மாலோலனைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதி சேஷனுக்குத் தலை நடுக்கமே வந்து விட்டதாம்! இதைவிட அனுமனை யாரால் பெருமைப் படுத்தி இருக்க முடியும்?
சீதையைப் பற்றிச் சொல்லாவிட்டால், இந்தப் பதிவு முற்றுப் பெறாது. அசோக வனத்துப் பர்ண சாலையில், இருந்த சீதையைக் கண்ட அனுமன் அசோக வனத்தையே பெயர்த்தெடுத்துச் செல்லத் துடிக்கிறான். அத்தகைய ஆற்றல் தனக்குண்டு என்று சீதைக்குக் காட்ட விஸ்வரூபமும் எடுக்கிறான். அப்போது சீதையானவள் மிகவும் நெகிழ்ந்து போய் இப்படிச் சொல்வதாகக் கம்பன் எழுதுகிறான்…
*"ஆழி நெடுந்தகை ஆண்தகைதன் அருளும் புகழும் அழிவின்றி ஊழிபலவும் நிலை நிறுத்தற்கு ஒருவன் நீயே என்றானாய்!"*
சீதை என்ன சொல்கிறாள் என்றால், *'என்னைக் கண்டுபிடிக்க நீ ஒருவன் வந்தாய்! நீ ஒருவன் இல்லாது போயிருப்பின், எனது தலைவன் அந்த இராமனின் புகழை யார் அறிவார்கள்? ராமனுடைய புகழும், அருளும் உன்னால் அல்லவா இந்த உலகம் உள்ளளவும் நிலைக்கப் போகிறது!'*... எத்தனை சத்தியமான வார்த்தைகள்? இன்றளவும் இராமாயணக் கதை நிகழ்வுறும் போது அனுமன் எங்கேனும் ஒரு இடத்தில் அமர்ந்து அந்த ராம ஸ்மரணையில் லயித்துப் போகிறான் என்பது உண்மை அல்லவா?
கோசல நாட்டுச் சிறப்பைக் கூறும் வர்ணனைப் பகுதி மிகவும் அலாதியானது…. அதையே கம்பனின் ஒப்பற்ற நியாயமான வர்ணனைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறி இந்தப் பதிவை முடிக்க நினைக்கிறேன்….. இல்லையென்றால் பக்கங்கள் நீண்டு கொண்டே போகும் என்ற அச்சம் ஏற்படுகிறது!
*"வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லைபொய் உரை இலாமையால் ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்"*
கம்பரின் கற்பனைக்கும், எழுத்துத் திறமைக்கும் ஒவ்வொரு செய்யுளும் எடுத்துக்காட்டு. ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனால் கூட அதை விவரிக்க இயலாது என்றால், நான் எம்மாத்திரம்? தமிழ்மொழியின் பொருள் வளத்தையும், ஓசை நயத்தையும் அருமையாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவன் கம்பன்.
திரும்பவும் கண்ணதாசனின் பாடலை இங்கு எடுத்துரைத்து இந்தப் பகுதியை முடிக்கிறேன்.
*"பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லையென்று பாடு"*
ஆமாம். செம்பொருளும், சொற்பொருளும், தெளிந்த ஞானம் தேடுகின்ற இலக்கியமும் செறிந்ததாகும், நம் பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி, நானிலத்தின் கவிஞருக்குள் தலைவன் என்றே, அம்புவியின் பல மொழிகள் படித்தாராய்ந்த, அறிஞர்களில் பெரும்பாலோர் ஆமோதிக்கும் கம்பனுடைய காவியத்தைப் படிப்பீராகில், கட்டாயம் கடவுளர்தாம் காப்பார் நன்றே!
அன்புடன் பானுரவி / சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கட்டுரைகள் →