சிறுகதை

அம்மா... பயம்!

c. 2016

திருமணமான இருபத்தைந்து ஆண்டுகளில் முதன்முறை லலிதா தனியே அமெரிக்காவுக்குப் பயணிக்கிறாள் — வர்ஜீனியாவில் மகன் பரத்தைப் பார்க்க. ஒரு இரவு நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து எதிர்பாராமல் அம்மாவின் பயம் பெருமையாக மாறுகிறது.

'பயணிகள் கவனத்திற்கு.....வாிங்டன் D.C. செல்லும் UA937 விமானம் இன்னும் அரை மணியில் கிளம்ப ஆயத்தம் செய்யப்படுகிறது'..... அறிவிப்பைக் கேட்ட லலிதா, ஏழாவது தடவையாகத் தனது கைப்பையைச் சரி பார்த்துக் கொண்டாள்; அவளது பாபோர்ட்டும், ஏர்டிக்கெட்டும், போர்டிங் பாஸும் அதது வைத்த இடத்தில்தான் இருந்தன. கூடவே சுந்தரும் வந்திருந்தால், இது பற்றியெல்லாம் இப்படி அடிக்கொருதரம் கவலைப்பட்டுக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டாம்.....கம்பெனியில் நெருக்கடியான நேரம் என்பதோடு, தன் அண்ணா பெண்ணின் கல்யாணத்துக்கு வேறு நிறைய லீவு எடுத்து விட்டதால், சுந்தரால் வர முடியாத நிலைமை.... லலிதாவுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. வாழ்நாளில் இப்படித் தன்னந்தனியே அமெரிக்காவுக்குப் போவோம் என்று கனவுகூடக் கண்டதில்லை. அவளும் சுந்தரும் எப்பவும் ஜாடிப் புறாக்கள்தான்...கச்சேரியாகட்டும், கல்யாணமாகட்டும் எதுவானாலும், ரெட்டை மாடு பூட்டிய வண்டிப்பயணமாகத் தான் போய்வருவார்கள்....திருமணமான இந்த இருபத்தைந்து வருங்களில் தனிப் பயணம் என்பது ஏற்பட்டதே இல்லை... போன மாதம் திடும்மென்று பரத் போன் செய்து சொன்ன சேதியைக் கேட்டு இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். 'அப்பா! எனக்கு வர்ஜீனியால வேலை கிடைச்சிருக்கு; அமெரிக்காவிலேயே, ரெண்டாவது பெரிய கம்பெனி....சம்பளம் நிறையக் கொடுத்து, காரும் கூடவே அபார்ட்- மெண்ட்டும் தருகிறார்கள்....' பீக்கர் போனில் அவன் பேசுவதைக் கேட்டு லலிதா சந்தோத்தில் அப்படியே கரைந்து போயிருந்தாள். 'ஓ! அப்படியா! வெல்டன் மை பாய்! வெரிகுட்! வெரிகுட்!...சுவாமியை வேண்டிண்டு, ஒரு நல்ல நாளில் ஜாய்ன் பண்ணிடு'....சுந்தரின் குரல் கிட்டத் தட்ட எட்டுக் கட்டையை எட்டியிருந்தது. முத்தாய்ப்பாக பரத்,'அப்பா, நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு சீக்கிரமே இங்க வரப் பாருங்கோ....டிலே பண்ணினால், குளிர்காலம் வந்துடும்...அம்மாவுக்குத் தாங்காது'....கரிசனமாக பரத் சொன்னபோது, கண்களில் நீர் திரையிட்டது. அப்புறம் ஜட் வேகத்தில் அமெரிக்காவுக்கு விசா வாங்கி, டிக்கெட் வாங்கி இதோ புறப்பட்டும் வந்தாயிற்று. 'இதோ பாரு லலிதா, அமெரிக்காவுல 9/11க்கு அப்புறமா ரொம்பவும் கெடுபிடி பண்றா; அதனால சாப்பாட்டு ஐட்டமெல்லாம் எடுத்துண்டு போய் அவதைப்படாதே'...மாடிப் போர்ன் வாசந்திகா மாமி வந்து மிரட்டிவிட்டுப் போயிருந்தாலும், லலிதாவின் அஞ்ஞானம் விடவில்லை. ஹாண்ட் லக்கேஜில், பரத்துக்குப் பிடித்த சீடை அப்பம், புளிக்காய்ச்சல், ஊறுகாய் என்று நறுவிசாகப் பார்சல் செய்தாயிற்று. 'கடவுளே, ஆசை ஆசையா நான் என் குழந்தைக்குக் கொண்டு போறேன்.. ஏதும் பிரச்னை பண்ணி விடாதே'....மனது இடையறாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. தன் இருக்கையில் லலிதா அமர்ந்து கொண்டபோது, மெழுகு பொம்மை போலிருந்த விமானப்பணிப்பெண், புன்சிரிப்போடு அவளது லக்கேஜ மேலேற்றி வைத்தாள். சீட்பெல்ட்டைப் போட்டுக் கொண்ட நாழிகையில், விமானம் மெள்ள மேலேறிப் பறந்த போது, லலிதாவின் மனதும் கடந்த காலத்துக்குப் பயணப்பட்டது. 'லலிதா, இன்னிக்குச் சாயங்காலம் வர்றச்ச நாலு.:ப்ரெண்ட்சோட வருவேன்; ஏதாவது சாப்பிடப் பண்ணி வை'...சுந்தர் எப்பவும் இப்படித்தான். சற்று முன் கூட்டியே சொல்லுவோம்; கொஞ்சம் ஏற்பாடாகச் செய்வோம் என்பதெல்லாம் கிடையாது. அன்றைக்கென்று பார்த்து அரிசியும், பருப்பும் 'நிறைந்து' இருந்தது. ஃப்ரிஜில் இரண்டு வாழைக்காயும், நாலு கத்தரிக்காயுமே கண்சிமிட்டின. கடைக்குப் போய்வரக் குறைந்தது நாற்பது நிமிங்களாகும் என்று யோஜித்தவள் தாமதிக்காமல் கிளம்பினாள். சமர்த்தாக ஹோம்வொர்க் செய்து கொண்டு இருந்த பரத்தைப் பார்த்தவள்....'பரத் கண்ணா, ஹோம்வொர்க் பண்ணப்புறம் டிவிலே சமர்த்தா கார்ட்டூன் பார்த்துண்டு இருப்பியாம்...அம்மா உனக்கு மைலோ சாக்லட்மில்க் வாங்கிண்டு ஓடி வந்துடுவேனாம்....உனக்குச் சாப்பிட கேக் பிகட், ஜு எல்லாம் வச்சிட்டுப் போறேன்...சரியா?'...ாம்வொர்க் செய்யும் மும்முரத்தில் தலையாட்டினான் பரத். படி இறங்கி ஒரு பத்தடிகூடத் தாண்டி இருக்க மாட்டாள்...'அம்மா! பயம் அம்மா! பயம்'.....பரத்தின் கதறல் அவளைக் கிடுகிடுங்க வைத்தது. அரக்கப் பரக்க ஓடி வந்தவளை இறுகக் கட்டிக் கொண்டான் பரத். தனியே இருக்கப் பயந்து அவன் போட்ட சத்தத்தில், அண்டைவீடுகளில் எல்லாம் மிரட்சியுடன் தென்பட்ட முகங்கள்! ஏகக் கடுப்பாகிப் போனாள் லலிதா...சுள்ளென்று அவன் முதுகில் ஒன்று வைத்தவள்....'வந்து தொலை...சீக்கிரம் நடக்கணும்....மொள்ள வந்தியானா மொத்துத் தான்'.....சுந்தர் வருவதற்குள் சமைத்து முடித்து வீட்டை நேராக்கணுமே என்ற கவலை மேலிட நடந்தாள். அதன்பிறகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரத்தை விட்டுப் போனதே இல்லை. கங்காரு தன் குட்டியை வயத்தில் கட்டிக் கொண்டு போவது மாதிரித்தான், எல்லா இடங்களுக்கும் பரத்தோடுதான்.... நாலு வருங்களுக்கு முன், நல்ல யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்து பரத் கிளம்பத் தயாரான போது, லலிதாதான் ரொம்பத் தவித்துப் போனாள். 'அம்மா, என்னம்மா குழந்தை மாதிரி அழுதுண்டு...நான் தான் வெகேன்ல ஒவ்வொரு வருமும் வரப்போறேனே'.....அதன்பிறகு பரத் ஒவ்வொரு வரும் வருவதும் போவதும் பழகிவிட்டாலும், இப்படிப் பிள்ளையைப் பிரிந்திருப்பதில் சற்றும் உடன்பாடு இல்லாமல் தான் இருந்து வருகிறாள். எனவேதான் 'லலிதா, நான் வர முடியாத பட்சத்துல, உன்னால தனியா போக முடியுமா? இல்லாட்டா, இன்னொரு சமயம் பார்த்துக்கலாமா' என்று சுந்தர் சற்றே இழுத்தாற்போல் சொன்னபோது, 'அதெல்லாம் இல்லை...உடனே பரத்தைப் பார்த்தாகணும்' என்று கிளம்பி வந்துவிட்டாள். பரத் அவளை வரவேற்க வந்திருந்தான். சொகுசான ஃபோர்ட் கார் பளபளத்துக் கொண்டிருந்தது. முகத்தில் சற்று சதை போட்டு, பளீர் சிரிப்பும் பரவசமுமாக இருந்த பரத், சுந்தரை அப்படியே அச்சில் வார்த்தது போலிருந்தான். சகலமும் வெள்ளையாக அவனது அபார்ட்மெண்டும் ஏகப் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அவனது அலுவலகம் பற்றியும், வேலையைப் பற்றியும் தினமும் ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். அனாயசமாக அவன் டிரைவ் செய்வதும், கை சொடுக்கும் நேரத்தில் மேப்பை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்துக்குப் போவதும் லலிதாவை வியப்பில் ஆழ்த்தியது. வாிங்டனின் வெள்ளை மாளிகையையும், ஞாபகார்த்தத் தூணையும் பார்த்தபோது, அமெரிக்க ஜனாதிபதி புச் சந்தித்தாற் போலிருந்தது. பொடாமக் நதியைப் பார்த்த போது, சாவி எழுதிய 'வாிங்டனில் திருமணம்' மனதில் வந்து போனது. சுந்தரைப் போலவே பரத்தும் திட்டமிட்டு, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடமென்று சுற்றிவந்ததில் நாட்கள் பறந்து கொண்டிருந்தன. இன்னும் பத்து நாட்களில் இந்தியாவுக்குக் கிளம்பணும் என்ற எண்ணமே அவளுக்கு வேதனை தருவதாக இருந்தது. 'அம்மா, ரெடியா இரு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே...உன்னை பாரத்வாணி ஹிந்து சென்டரில் இருக்கிற ஒரு கோவிலுக்குக் கூட்டிண்டு போறேன்'..... இரண்டரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகு அந்தக் கோயிலை அடைந்த போது மனது ரொம்பவும் பரவசப்பட்டுப் போனது. பளிங்குப் பிள்ளையாரும் துர்க்கையும், தியானம் செய்து கொண்டிருந்த சிவபெருமானும், விணுவும் பெரிய பிரார்த்தனை மண்டபமுமாக அந்தக் கோவில் மிக அழகாக இருந்தது. அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்த போது,....'அம்மாடி! இத்தனை பேரு நம்மூர்க்காரா இருக்காளா?' என்று மனது வியந்து போயிற்று. வரும்வழியில், பழங்கதைகளைச் சொல்லிக் கொண்டும், பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 'அம்மா, இன்னிக்கு நியூயார்க்லேருந்து கண்ணன் பேசினான்; உன்னைக் கூப்பிடறான்.... ஒரு ரெண்டு நாள் போய்ட்டு வர்றியா?'....லலிதாவின் நாத்தனார் பிள்ளை தான் கண்ணன்...முடிந்தால் போய்வரும்படி நாத்தனாரும் சொல்லியிருந்தாள். லலிதாவுக்கு என்னவோ, பரத்தை விட்டு எங்கும் நகரப் பிடிக்கவில்லை. அவளோட அண்ணா சிக்காகோவிலிருந்து வரும்படி சொன்ன போது கூட அடுத்த தடவை வருவதாகச் சொல்லி விட்டாள்....'இல்ல பரத்...இன்னும் பத்துநாள்தான் இருக்கு....அடுத்த தரம் வர்றதாச் சொல்லிடு'...... அந்தநெடுஞ்சாலையில் இருட்டைக் கிழித்துக் கொண்டு கார் போய்க்கொண் டிருந்தது. ரெஃப்லக்டர்களின் வெளிச்சமும், சாலையோரத்துக் காட்டுப் பகுதியின் இருட்டும், சர்சர்ரென்று போய்க்கொண்டிருக்கும் வாகனங்களும் ஒருவித அமானுய அமைதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மணியும் இரவு பதினொன்றைத் தாண்டிய படியால், அயர்ச்சி மேலிட லலிதா சற்றுக் கண்ணயர்ந்தாள். ....கிரீச்..என்ற சப்தத்தோடு கார் நிற்கவும்தான், அதிர்ச்சி மேலிட விழித்துக் கொண்டாள் லலிதா. 'பரத்...என்னாச்சு? ஏன் இங்க வழிலே கார் நிக்கறது'?.... 'அம்மா....அங்க பாரு...' கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து கிடப்பதையும், இரண்டொருவர் நிற்பதையும் பார்த்த போது கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. 'என்னடா பரத், இது? உனக்கு ஒண்ணும் இல்லையே?....அந்தக் காரோட மோதிட்டியா, என்ன?'.... 'ஐயோ அம்மா! கொஞ்சம் பேசாம இரு. நாம்ப எங்கே இந்த ரோட்ல வந்தோம்? நானா யூடர்ன் எடுத்து என்னவாச்சுனு பாக்க வந்தேன்...நீ கொஞ்சம் கார்லயே வெயிட் பண்ணு...நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்; பயங்கர ஆக்சிடண்ட்னு தெரியறது..'.....விபத்து நடந்த இடத்துக்கு நடந்து செல்லவே சற்றுநேரமாகும் போலிருந்தது. லலிதாவுக்கு அந்த ஏசி காரிலும் வியர்த்துக் கொட்டியது. 'கடவுளே! யாரோட உசிருக்கும் ஆபத்து வரப்படாது....பாவம்....என்ன கடத்துல இருக்காளோ?....'மனது பிரார்த்தனையில் ஈடுபட்டாலும், ஒருவித நடுக்கம் உடம்புக்குள் வந்துபோனது. அந்த விரைவுச் சாலையை ஒட்டிக் காட்டுப் பகுதி என்பதால், நிறைய மான்களும், கரடிகளும், காட்டு அணில்களும் நேரங்கெட்ட நேரத்தில் வாகனங்களுக்குக் குறுக்கே வந்து அநியாயமாய் உயிரை விடும் பரிதாபத்தைப் பற்றி, நேற்றுதான் பரத் சொல்லி இருந்தபடியால், அந்தப்பக்கம் பார்க்கவே பயமாக இருந்தது. தனியே இப்படி உட்கார்ந்திருப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பரத் இன்னும் வந்த பாடில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்தில், விபத்து நடந்த இடமும் ஒரு வெளிச்சப் புள்ளியாகத்தான் தெரிந்ததே தவிர எந்தக் காட்சியும் தெளிவாகப் புலப்படவில்லை. நேரம் செல்லச் செல்ல, லலிதாவின் நடுக்கம் அதிகமானது. 'என்ன பிள்ளை இவன்? இத்தனை நாழி பண்றானே?'....காரைவிட்டு இறங்கி நடக்கவும் அச்சமாக இருந்தது. பரத்தின் ஆபீ ஃபைல்கள், டிஜிட்டல் காமிரா, பணப்பை என்று எல்லாவற்றையும் காரில் எப்படி விட்டுச் செல்வது? தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான், ஒரு போலீ கார் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பரத்....'ஜட்...ஒன் மினிட்' என்றவன் 'அம்மா, இங்க வா....இந்தப் போலீ காரில் ஏறி, நீ நம்ப அபார்ட்மென்ட் டுக்குப் போ...பயப்படாதே...இங்கெல்லாம் நம்மூர் மாதிரி இல்ல. நான் போய் அந்த ஆக்சிடெண்ட்ல சீரியசாக இருக்கிற பொண்ணை ஹாஸ்பிடல்ல சேர்க்க ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்....' என்றான். கலங்கிய முகத்தோடு இருந்தவளை....'அம்மா, ப்ளீ...சும்மா தைர்யமா இவாளோட கிளம்பு...நான் சீக்கிரம் வந்துடுவேன்'.... அபார்ட்மென்ட் வந்து சேர்ந்தவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மணி விடி காலை 4-30 ஆகியிருந்தது. பரத்திடமிருந்து ஃபோன் கூட வரவில்லையே என்றிருந்தது. கணக்கு வழக்கின்றி மனம் ராமஜபம் செய்யத் தொடங் கியபோது, பரத் வந்து சேர்ந்தான். 'என்னம்மா...ரொம்ப பயந்துட்டியா?'.... 'என்னாச்சு தெரியுமா? ஆக்ஸிடண்ட்ல அந்த அமெரிக்கப் பொண்ணுக்கு ரொம்ப ரத்த சேதம் ஆயிடுத்தும்மா...பாவம். சின்னப் பொண்ணு; பத்து வயசுதான் இருக்கும். ப்ளட்க்ரூப் வேற ரொம்ப ரேர்....0 பாஸிட்டிவ். நல்லவேளை...என்னோடதும் அதானே....அதுனால எல்லாம் ஈஸியா முடிஞ்சுது....இப்போ that girl is out of danger'.... பரத் சொல்லிக் கொண்டே போக, லலிதாவுக்கு உணர்ச்சி வயப்பட்டதில் வார்த்தைகள் கரகரப்பாகிப் போனது. 'பரத் கண்ணா! எத்தனை நல்ல கார்யம் பண்ணிட்டு வந்திருக்கேடா? ஆபத்துல உதவி பண்றதுக்கு இணை எதுவுமே இல்லை தெரியுமா? நாம்ப வர்றச்சே, எத்தனை கார் போயிண்டிருந்தது....ஒரு கார் கூட அங்க நிக்கலையே? நீ அங்க போனதோட இல்லாம, ஒரு உயிரையும் காப்பாத்திருக்கியே.....நீ நன்னா இருப்பேடா குழந்தே' தனியாக இருக்கப் பயந்து 'அம்மா...பயம்' என்று தன்னைக் கட்டிக் கொண்ட பிள்ளை, வாமனன் விவரூபம் எடுத்தாற் போல, குணத்திலும் தைர்யத்திலும் உயர்ந்து நிற்பதைப் பார்த்த போது லலிதாவின் கண்களில் நீர் பூத்தது. ************

பானுரவி / Banooravi

சிறுகதைகள்