c. 2023
அங்கயற்கண்ணியின் முதல் நாள் பெண்கள் கல்லூரி விடுதியில். சீனியர் பெண்கள் — தலைவி பிரேமியைப் போல் — அவளது பெயரைக் கிண்டல் செய்து, சல்யூட் வைக்கச் சொல்லி, பயமுறுத்துகிறார்கள். அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது: "நெருப்பைத் தண்ணீரால் தான் அணைக்கணும்." மறு நாள் காலையில் ஒரு கரண்ட் கட், குளியலறையில் ஒரு விழுச்சி, உதவிக்கான அலறல் — அங்கயற்கண்ணி எடுக்கும் தேர்வு, வானத்தையே அவளுக்கு வசப்படுத்துகிறது.
'ஏய், உன் பேரென்ன?'
'அங்கயற்கண்ணி'..
ஹ ஹ ஹா...உன் பேரைக் கேட்டா உன் பாட்டி பேரைச் சொல்றியே? முழுசா உன் பேரை ஸ்ர்நேமோட சேர்த்துச் சொல்லு..
அங்கயற்கண்ணி மீனாட்சிசுந்தரம்...
ஓஹோஹோ....அந்த சீனியர் கல்லூரி மாணவர்களின் சிரிப்பு ஓய வெகு நேரமாயிற்று.
'ஏய்....உன் பேரை ஒரு தரம் சொன்னாப் பத்தாது....சர்நேமோட சேர்த்து, அம்பது தரம் சொல்லணும்...எங்கே சொல்லு..
கோ-எட் கல்லூரி கூடாது...பெண்கள் கல்லூரி, அதுவும் புகழ் பெற்ற இந்தக் கல்லூரியில் படிக்கணும் என்பது தாத்தாவின் ஆசை... நிறையப் பிரபலங்க்கள் படித்த கல்லூரியாம்......
முதல் நாள் ஹாஸ்டல் அனுபவம்...அவளைப் போலவே நிறைய ஜுனியர் பெண்கள் இந்த ராகிங்கில், படாத பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.
சீனியர் பெண்களை எப்போது, எங்கு பார்த்தாலும் மிலிட்டரி ஸ்டைலில் சல்யூட் வைக்கணும்...அவர்கள் ஏவும் வேலைகளை உடனே செய்யணும்...சீனியர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது?
அங்கயற்கண்ணி, தன்னைத் திடமாக வைத்துக் கொள்ள முயன்றாள்.
'ஏய் ..அனா மீனா...கூப்பிடறது காதுல விழல? வந்து என்னோட ரிகார்ட் புக்ல நோட்ஸ் எழுது....
புசுபுசுவென்று இருந்த சீனியர்ப் பெண்களின் லீடர் பிரேமியின் கட்டளை இந்த ரீதியில் இருந்தது.....பல்லைக் கடித்துக் கொண்டு எழுதினாள் அங்கயற்கண்ணி.
'அது யாரு....உன் பக்கத்துல பாச்சக்குஞ்சு மாதிரி ஒட்டிக்கொண்டு.....இங்க முன்னால வந்து ஒரு பாட்டுப் பாடு'
அந்தப் பெண் சுமதி நடுங்கிக் கொண்டே 'எனக்குப் பாட்டு வராது'....
'ஏய்..என்ன பதில் பேச்சு பேசறே? இப்போ அனாமீனா நாங்க சொல்றதக் கேக்கல....ஒரு பாட்டுப் பாடு....பாடலைனா என்ன நடக்கும் தெரியுமா? கம்ப்ளீட்ட உன்னை ஸ்ட்ரிப் பண்ணி, டான்ஸ் பண்ணச் சொல்லுவோம்...ஹி ஹி ஹி...
அங்கயற்கண்ணி, கிசுகிசுப்புடன் சுமதியிடம் சொன்னாள்...'டியர்ஸ் வோன்ட் ஹெல்ப். ஜஸ்ட் டூ வாட் தே ஸே'..
அந்தப்பெண் சுமதி வரண்ட குரலில் 'கணேச சரணம்' என்ற போது, திரும்பவும் ஹோஹோ என்ற கோரஸ் சிரிப்பு...
'ஏய் அனாமீனா, வாசல்ல கழுதை வந்திருக்கா பாரு......நீதான் நல்ல பொண்ணு....வசீகரா பாடு..
தேய்ந்து போன குரலில் வசீகரா படிய போது, திரும்பவும் எல்லோரும் கை கொட்டிச் சிரித்து.....ஹூம்! அங்கயற்கண்ணிக்குக் கண்களில் நீர் பூத்தது.....அவ்வளவுதான்....'ஐ! இதப்பார்றா...கண்ணுல தண்ணி....ஸோ, யூ ஆர் அ க்ரை பேபி! எங்கே பேபி குளிக்கப் போலாமா? ...பாய்ந்து வந்து அவள் சல்வாரைப் பிடித்து இழுத்த போது, நிலை தடுமாறி விழுந்தாள் அங்கயற்கண்ணி.....
'ப்ளீஸ்...என்னை விட்டுடுங்க...நான் வேற ஏதானும் செய்யறேன்....
'சரி....அப்படீனா ஈனு சிரிச்சபடியே ஒரு அஞ்ச்சு நிமிஷம் எங்க முன்னாடி நில்லு'...
அப்படியே செய்தாள்....உடனே அடுத்த ஆர்டர் 'ஏய் அனாமீனா...எங்க எல்லருக்கும் ஹாஸ்டல் சாப்பாடு போரடிக்குது...நீ என்ன பண்றே...எங்க எல்லாருக்கும் பீட்ஸாவும், கோக்கும் ஆர்டர் பண்றே சரியா?'...
அங்கயற்கண்ணிக்கு மனம் பாரமாகப் போனது...ராகிங்க் இருக்கும் என்று எதிர்பார்தது தான்.....ஆனால் இப்படியா? ஸ்டிரிப் செய்து விடுவதாகச் சொன்னது அவளை ரொம்பவே பதித்தது...ஹூம்! வீட்டில் சொல்லக்கூட முடியாது! நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக அல்லவா அவளை வளர்த்திருக்கிறார்கள்! அதுவும் தாத்தாவிடம் எதுவும் பிரச்சனை என்று போனால், 'இதுவும் கடந்து போம்'! என்று சொல்பவர்...
மறு நாள் எழுந்த போது, சீனியர் மாணவிகள் ஓரிருவரைத் தவிர,ஏற்கனவே கல்லூரிக்குப் போய் விட்டது தெரிந்தது. அன்று அவளுக்குப் பதினொரு மணிக்குத் தான் வகுப்பு என்பதால், படிக்க உட்கார்ந்தாள்.
அப்போது, தொபீர் என்ற சப்தத்தோடு.....'ஆ! அம்மா.....விழுந்துட்டேனே...ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்ற அலறலும் கேட்டது.
அங்கயற்கண்ணி குளியலறைக்கு விரைந்த போது, சீனியர்ப் பெண்களின் லீடர் ப்ரேமிதான் விழுந்து கிடந்தாள். கரண்ட் கட் என்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல் தடுமாறி வழுக்கி விழுந்திருந்தாள்! சோப்பு நுரையோடு அலங்க மலங்கக் கிடந்த்வளின் மேல் ஒரு டவலைப் போர்த்தி, அவளைக் கஷ்டப்பட்டுத் தூக்கி நிறுத்தினாள். அதற்குள் இன்னொரு சீனியர் பெண்ணும், உதவிக்கு வரவே மெதுவாக அவளைப் படுக்க வத்து முத்லுதவி செய்தார்கள். முழங்காலில் முறிவு ஏற்பட்டு ப் பெரிய கட்டோடு மருத்துவமனையிலிருந்து வந்த போது, பிரேமியின் கண்களில் சமுத்திரமே பொங்கியது.....'அங்க்கயற்கண்ணி! யூ ஆர் க்ரேட்! நான் உன்னை எத்தனை மட்டமா நடத்தினேன்? ஆனால், எதுவும் மனசுல வச்சுக்காம, எனக்கு ஹெல்ப் பண்ணிருக்கே! ஐ'ம் வெரி சாரி! வெரி சாரி!!'.....
அங்கயற்கண்ணிக்கு அம்மா சொன்ன அறிவுரை மனதுக்குள் வந்து போனது....'நெருப்பைத் தண்ணிர் கொண்டு தான் அணைக்கணும்! பொறுமைக்கு என்றும் பலனுண்டு.....ஒரு பெரிய யானையை அடக்கச் சின்ன அங்குசம் போதுமே?'
'ஐ'ம் ஸாரி .... இனிமேல், நான் மட்டுமில்லை...எந்த சீனியரும் இது போல் நடக்க மாட்டாங்க'....ப்ரேமி அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்ன போது, அங்கயற்கண்ணிக்கு வானம் வசப்பட்டது போல் இருந்தது!
************
எழுதியவர்: பானுரவி
பானுரவி / Banooravi
சிறுகதைகள் →