A travel memoir
c. 2022
குவைத்து வாழ்க்கைக் காலத்து ஒரு பயண நினைவு. திருப்பதியானைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற பானுரவியின் நெடுநாள் கனவு நிறைவேறுகிறது — மலையிறங்கும் வழியில் காரின் கதவு திறந்து, கணவர் ரவியையும் இரட்டைக் குழந்தை ஒன்றையும் சாலையில் வீழ்த்துகிறது. இருவருக்கும் சிராய்ப்பு மட்டுமே. பயணம் முழுதும் அனந்தாழ்வாரின் கடப்பாரை, நீளாதேவியின் கூந்தல் காணிக்கை போன்ற தலபுராணங்களும், தன் பக்தனைக் காக்க ஓடிவரும் ஏழுமலையானின் பேரருளும் பின்னிக் கிடக்கின்றன.
எண்பதுகளின் இறுதி நாட்களில் எனக்கு ஏற்பட்ட இந்த இனிய பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்….
நாங்கள் குவைத்தில் வாழ்ந்து வந்த காலகட்டம் அது. அங்குள்ள கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுளையாக நாற்பத்தைந்து நாட்கள் விடுப்பும், அதற்குண்டான பயணச்சீட்டும் கிடைக்கும். அந்த முறையும் நாங்கள் இந்தியா சென்றுவரத் திட்டமிட்டோம்.
என் கணவர் ரவி, பயணத்திட்டம் போடுவதில் படு சமர்த்தர். எப்படிப் போவது, எங்கு சாப்பிடுவது, எங்கு தங்குவது போன்ற விஷயங்களில் மிகவும் தரமாகவும், அதி ஜாக்கிரதையாகவும் தீர்மனிப்பார். இண்டர் நெட், கைத்தொலைபேசி போன்றவை இல்லாத அந்த நாட்களில், வரைபடத்தை வைத்துக் கொண்டு, போக்குவரத்து அட்டவணையைச் சரிபார்த்து மிகப் பக்காவாக, எல்லாவற்றையும் புக் செய்து விடுவார்.
எழுபதில் இருந்த எனது மாமியாரும் எங்களோடு குவைத்தில் இருந்தபடியால், அவருக்கு எந்த இடமாவது சென்றுவர விருப்பமா என்பதைக் கேட்டுக்கொண்டார். எனது மாமியாரும், தனது சிறுவயதில் மதுரைப்பக்கம் வசித்தபோது, அருகாமையிலிருந்த கொடைக்கானலுக்குப் போனதில்லை என்றும், முடிந்தால் போகலாமென்றும் கூறவே அவ்வாறே முடிவு செய்தோம். பொதுவாக எனக்குப் பயணம் செய்வது என்பது ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மாதிரி….சதா ஊர்சுற்றிக் கொண்டிருக்க எனக்கு என்றுமே அலுக்காது…குவைத்திலிருந்து இந்தியா வந்தவுடன், உறவினர்களைப் பார்ப்பதிலும், (சென்னை, திருச்சி, பெங்களூர், டெல்லி, பாம்பே…என்று எங்கள் குடும்பத்து உறவுச் சங்கிலி சற்றே நீண்டது!) ஷாப்பிங் பண்ணுவதிலும் நாட்கள் நகர்ந்தன.
அதுசமயம், குலதெய்வம் கோவிலுக்கு ஒரு நடை போய் வரலாமென்று பேச்சு ஆரம்பித்தது. நான் சற்று ஆர்வமானேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்துக் குலதெய்வம் (கிராம தேவதை) எதுவென்று உறுதியாகத் தெரியாதபடியால், திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கருதி வழிபாடு செய்து கொண்டிருந்தோம்.
இந்தத் திருப்பதிக்குப் போக வேண்டுமென்ற கனவு எனக்கு அவ்வப்போது வந்துபோகும். கலியுக தெய்வமென்றும், நினைத்ததை நிறைவேற்றும் பெருமாள் என்றும், அற்புதங்களை நிகழ்த்தும் கடவுள் என்றும், பணக்கார சாமி என்றும்…அனைவராலும் மிகவும் பக்தியோடு வணங்கப்படும் அந்தத் தெய்வத்தைக் கண்ணாரக் காண மிகவும் ஆவல் கொண்டிருந்தேன்..அந்தக் கருணைத் தெய்வத்திற்கு எனது உள்ளக் கிடக்கை தெரிந்து விட்டதா? எனது கனவு மெய்ப்படப் போகிறதா?... எனது மாமியார் அந்த ஐடியாவைச் சொன்னபோது, நெஞ்சுக்குள் மாமழை பெய்யத் துவங்கியது. *"சரி அம்மா! இந்த முறை திருப்பதிக்குப் போகலாம். குழந்தைகள் பிறந்ததிலிருந்து போய்வரச் சந்தர்ப்பம் கிடைக்கல…"* இந்த ரவி இருக்கிறாரே….அம்மா கிழித்த கோட்டைத் தாண்டாத ஒரு சத்புத்திரர்! தாயார் எது சொன்னாலும் ரவிக்கு வேத வாக்குத்தான்…
இரண்டே நாட்களில் திருப்பதிக்கு இரயிலில் பயணம் செய்தோம்……சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து ஒரு வாடகைக்காரில் திருப்பதி சென்றதாக நினைவு…எங்களுடன் எனது நாத்தனார், அவரது கணவர், உடன் வந்தனர்.
திருப்பதி மலையை அணுகிக் கொண்டிருந்தோம்…3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். ஒரு விடுதியில் தங்கிக் கொண்டோம். நானும் ரவியும் விஸ்வரூப தரிசனம் முதலில் பார்த்துவிட்டு வந்த பின், மற்றவர்களை ஸ்பெஷல் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக முடிவு செய்தோம்.
எனவே அதிகாலை இரண்டு மணிக்கே குளித்துவிட்டுப் புறப்பட்டோம். அந்த நேரத்திலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது…*கோவிந்தா கோவிந்தா* என்ற அபயக்குரல்… கூட்டம் சிறிது சிறிதாக முன்னேறியது. இதோ சன்னிதானத்தை அடைந்து விட்டோம்… நான் காண்பது என்ன? …. என் முன்னால் அந்தப் பிரத்யட்ச தெய்வம் அல்லவா காட்சி தருகிறார்? கடவுளே! உண்மையிலேயே, என் அப்பன் வெங்கடேசப் பெருமாளைப் பார்க்கப் போகிறேனா? அசையாமல் நிற்கும் வடிவம்! இந்த அதிசயச் சிலையை வடித்த சிற்பி யார்? சுமார் பத்தடியில் கம்பீரத்துடன்..ஒன்றரை அடி உயர மேடை மீது ஸ்திரமாக நிற்கிறார்..தீர்க்கமான முகம்! அருள்வீசும் கண்களுக்கிடையே கூர்த்த நாசி! அழகிய பிரகாசமான முகம்…
ஆனால் அந்த முகத்தில் கசியும் ஈரம்…அது என்ன? 110 டிகிரி வெப்பத்தில் தென்படும் வியர்வை!! குளிர்ந்த மலையில் அவருக்கு ஏன் இப்படி வேர்க்கிறது? அவ்வப்போது பூசாரிகள் பட்டு வஸ்திரம் கொண்டு துடைத்து விடுகிறார்கள்..இது என்ன விந்தை?
பொதுவாக கற்பூரம் கலந்த எதைப் பூசினாலும், சாதாரணக் கற்சிலைகள் விரிசல் அடையும்…ஆனால் இவர் ஒரு சுயம்பு அல்லவா? எனவே தான் அந்த வியர்வைக் கசிவும்…விரிசல் அடையாத உறுதிப்பாடும்!
பெருமாளின் திருமேனி நடுவாக இருப்பது போலிருந்தாலும், அவர் வலப் புறத்திலிருந்து நம்மை நோக்கி வருவது போல் நிற்கிறார். அவரது கால்கள், சற்றே மடங்கி முன்னுக்கு வருவது போல் தெரியும்…நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவருக்கு முன்னால் ஏற்றப்பட்டிருக்கும் தீபத்தை…. யார், எந்த யுகத்தில் ஏற்றினார்கள் என்பது புதிர்! ஆனால் சதா எரிந்து கொண்டே அல்லவா இருக்கிறது? அந்தச் சன்னிதியின் ஓரத்தில் ஒரு சிறு கடப்பாரை..அந்தக் கடப்பாரைக்குச் சுமார் ஆயிரம் வயது எனலாம்…இங்கே நான் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்,
திருமலையில் உள்ள பூந்தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அனந்தாழ்வார் எனும் பக்தர் ஏற்றிருந்தார். அந்த நந்தவனத்திலேயே அவர் இருந்துகொண்டு தொண்டு செய்து வருகிறார். அந்த வேலையை அவர் தனது மனைவியுடன் மிகவும் பக்தி ஶ்ரத்தையோடு செய்து வருகிறார்…
ஒரு நாள், அங்கே ஒரு சிறுவன் வருகிறான். அவர் செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது, அந்தச் சிறுவன் தானும் உதவுவதாகக் கூறி நிற்கிறான். அனந்தாழ்வாருக்கு அந்தச் சிறுவனின் உதவி தேவையில்லை என்று சொல்லிப் போய்விடுமாறு சொல்கிறார். அந்தச் சிறுவன் விடுவதாயில்லை..அதனால், அவனைப் பயமுறுத்த நினைத்த அனந்தாழ்வார், தனது கடப்பாரையை அவன் மீது வீச முற்படுகிறார். ஆனால், அந்தக் கடப்பாரை, அந்தச் சிறுவனின் தாடையில் பட்டு இரத்தம் வழிகிறது. இதை எதிர்பாராத அனந்தாழ்வார் திகைத்துப் போய் நிற்கும்போதே, அந்தச் சிறுவன் அங்கிருந்து சென்று விடுகிறான்….
இப்போது அடுத்த காட்சிக்கு உங்களை இட்டுச் செல்கிறேன். திருப்பதிப் பெருமான் சிலையிலிருந்து குருதி வடிகிறது. அதை நிறுத்துவதற்காகப் பச்சைக் கற்பூரம் வைத்துப் பார்க்கிறார்கள்…ஓரளவிற்கு இரத்தம் கட்டுப்பாட்டிற்கு வருகிறது…இப்போது புரிந்திருக்கும், அந்தச் சிறுவன் யாரென்று! அந்த நிகழ்ச்சியின் அடையாளமே இன்றும் நாம் வெண்மையாகக் காணும் பெருமாளின் தாடை….
அடுத்த ஒரு சுவாரசியமான நிகழ்வும் என் நினைவுக்கு வருகிறது. திருப்பதிக்கு வருபவர்கள் ஏன் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்? விசித்திரமாக இல்லை?
….நிதி கொடுக்கலாம்; பொன் கொடுக்கலாம்; தானியங்கள் தரலாம்; பசு மாடுகள், யானை போன்றவற்றைத் தரலாம்; நிலம், மனை போன்றவற்றை அளிக்கலாம்….…ஆனால், இது என்ன முடி காணிக்கை? ஒரு பெளராணிகர் உபன்யாசம் செய்யும்போது இந்தக் கதையைக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்… *'......நீளாத்ரி மலையின் இளவரசி நீளாதேவி, பெருமாளின் தீவிர பக்தை. தினமும் தவறாமல் தரிசனம் செய்து வருபவள். ஒரு நாள், பெருமாள் சயன கோலத்தில் இருக்கும் போது, அவருடைய கேசம் காற்றில் அலைகிறது…அப்போது, முடி கலைந்த பகுதி வெளீரென்று தெரிய, உடனே நீளாதேவி தனது கூந்தலைப் பிடுங்கி அவ்விடத்தில் வைக்கிறாள்.
அவளது பக்தியால் மெய்சிலிர்த்துப் போன பெருமாள் அவள் வேண்டும் வரங்களைக் கேட்கிறார்…
அப்போது, "திருப்பதிப் பெருமானே! இந்தக் கலியுகம் முடியும் வரையில் உங்களைத் தரிசிக்க வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்கள் முடியைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். அவர்கள் வேண்டும் வரத்தைத் தந்து அருளல் வேண்டும்" என்று வேண்டுகிறாள். சுய நலமற்ற நீளாதேவியின் பக்தி பகவானைப் பரவசப் படுத்துகிறது…மனம் குளிர்ந்த பெருமாளும் அவ்வாறே அருள் பாலிக்கிறார்….*இதுவே பக்தர்கள் 'மொட்டை' போடுவதன் காரணம்…
பெருமாளின் உடுப்பு என்பது மேல்சாத்து வஸ்திரம் என்றழைக்கப்படும். ஒரு முழம் நீளம்; ஆறு கிலோ கொண்ட பட்டுப் புடவையே இவரது பீதாம்பரம் ஆகும்… இங்குள்ள மடப்பள்ளியில் லட்டு, பொங்கல், ஜிலெபி, முறுக்கு, வடை போன்றவை அத்தனை ருசியாக இருக்கும்…மேலும் குலசேகரப் படி என்பது கர்ப்பகிரகத்தின் முன்னால் இருப்பது. பெருமாளின் நிவேதனம் என்பது மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர் சாதம் மட்டுமே! இந்தப் பிரசாதம் குலசேகரப்படியைத் தாண்டக் கூடாது…
…..ஓ! இத்தனையும் நான் க்யூவில் நிற்கும்போது திருப்பதியைப் பற்றி நான் தெரிந்து வைத்திருந்த அத்தனையும் எனது நினைவில் வந்து போயின, நான் காண்பது அந்தத் திருமலையானையா? வெங்கடேசப் பெருமானையா? மனம் குளிர்ந்து, உள்ளம் சிலிர்த்துக், கண்களில் ஆனந்தக் கண்ணீர்……இது நிஜம்…இது உண்மை…இது சத்தியம்…நான் நிற்பது அந்த அருள்ஜோதி வள்ளலின் திருப்பதியில்….
ரவியும் அப்படியே நெக்குருகிப் போயிருந்தார். அந்த ஒரு நிமிஷம் பெரிய உன்னத நிலைக்கு எங்களைக் கொண்டு போயிருந்தது…*"ஜருகண்டி! ஜருகண்டி!"* என்ற குரலில் தெரிந்த நிர்ப்பந்தத்தை உணர்ந்து, பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்…
அதன் பிறகு மற்றவர்களுடன் ஒரு சிறப்புத் தரிசனத்தையும் முடித்துக் கொண்டு மிகுந்த மனத்திருப்தியோடு கிளம்பினோம். மறு நாள் காலை, ஒரு வாடகை வண்டியைப் பேசிக்கொண்டு கீழத் திருப்பதி போகத் திட்டம். காரின் முன் இருக்கையில் டிரைவருக்குப் பக்கத்தில் எனது கணவர் ரவி..அவரது மடியில் எனது பெண் ப்ரீதி. (எனது இரட்டைக் குழந்தைகளுள் ஒருவர்). பின் சீட்டில் என் மாமியார்…அவர் மடியில் பரத் (இரட்டைக் குழந்தைகளில் மற்றொருவர்), எனது மடியில் எங்கள் பெரிய பிள்ளை ஜெயந்த் மற்றும் எனது நாத்தனார், அவரது கணவர்...
எல்லோரும் ஒரே காரில் இருந்ததால், மேலும் நெருக்கித் தள்ளிக்கொண்டு அமர்ந்திருந்ததால், நிறையவே அசெளகர்யம்…இருந்தாலும் யாரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை…
ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு…தடால்! இது என்ன சத்தம்? கடவுளே! ஓ! என்னவாயிற்று? வண்டியின் முன்கதவு, படாரென்று திறந்தது…ஒரு பெரிய குலுக்கலுடன் எனது கணவரையும், குழந்தையையும் ரோட்டில் உருட்டி விட்டு, சடன் பிரேக் போட்டும் நிற்காமல் வண்டி ஓடியது. யாருக்கும் எதுவும் புரியவில்லை..எனது மாமியார் வாய்விட்டு அழலானார்…
எங்களின் அரற்றலும், அலறலும்… அங்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை எச்சரிக்கைப் படுத்தி, டமடமவென்று உடனே மக்கள் எங்கள் வண்டியைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அங்கே ஒரு பெரிய பதட்டம் ஏற்பட்டது..கூட்டம் கூடியது. பயமும் பதட்டமும் …கூச்சலும் குழப்பமும்…சர்சர்ரென்று முன்னேறிக் கொண்டிருந்த வாகனங்கள் சற்றே நிதானித்தன…எங்களுக்கு உதவும் வகையில் மக்கள் திரண்டனர்…
நான் பயந்து விட்டேன். ரவி எங்கே? குழந்தை எங்கே? பின்னால் யாரோ இருவர் அவர்களை அழைத்து வந்தனர். எனது கணவர் கையில், நெற்றியில் சிராய்ப்பு…குழந்தையை நெஞ்சோடு அவர் அணைத்துக் கொண்டதால், குழந்தையின் உதட்டருகே சிறு காயம்…
எல்லோரும் பதட்டத்தில் இருந்தார்கள். நான் உடனே அந்தப் பெருமாளை நினைத்து நெகிழ்ந்து போனேன்…மலை உச்சியிலிருந்து, இரண்ய கசிபு,,,தனது மகன் பிரலாதனைத் தள்ளிவிட்டுக் கொல்ல முயன்றபோது, இந்த நாராயணன் அல்லவா எந்தவொரு காயமும் ஏற்படாமல் அவனைக் காப்பாற்றினான்! தனது பக்தனைக் காப்பாற்ற உடனடியாக ஓடி வந்தவன் அல்லவா இந்த மாயக் கிருஷ்ணன்?
இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது? பின்னே! மலைப்பாதையின் இருபுறமும் புதரும்..காடும்! எனது குழந்தையும், ரவியும் அங்கே உருண்டு விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?...நான் காட்டிய எளிய பக்திக்கு அந்த இறைவன் காட்டிய பேரருள் அல்லவா இது? மெய் சிலிர்த்தேன்..கண்களில் கண்ணீர் பெருகிற்று.. எனக்குப் பேச்சும் மூச்சும் சீராவதற்குச் சற்று நேரம் பிடித்தது. குழந்தைகள் பயத்தில் அழுது கொண்டிருந்தார்கள்.
ரவியின் கைகளைப் பிடித்தபடி…*"ரவி! இது ஒரு பெரிய ஆச்சரியம்…கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றி இருக்கிறார்?"*....எனக்கு மூச்சு வாங்கியது.
….ஆமாம் ரவி! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது…வயதான அம்மா, சகோதரியும் கணவரும், …ஏதேனும் விபரீதமாக நடந்திருந்தால், என்னாவாகி இருக்கும்? நிச்சயம் இந்தத் திருப்பதியில் உறையும் தெய்வம் ஒரு கண்கண்ட தெய்வம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…இனி நாம் எப்பொழுதெல்லாம் திருப்பதி வந்தாலும் கட்டாயம் அங்கப் பிரதக்ஷிணம் செய்வோம்…"
என்னைப் புரிந்து கொண்ட எனது கணவர் ரவியும் அந்தப் பரமாத்மாவை, பிரபஞ்சத்து ஆண்டவனைப், பொல்லாத திருப்பதி மலையானை நோக்கிக் கைகளைக் குவித்து வணங்கினார்!!
*"பானு! நிச்சயமாகக் கடவுள் நம்மைப் பெரிய இக்கட்டிலிருந்து காப்பாற்றி இருக்கிறார். நாம் இப்போதுதான் முதன் முறையாகத் திருப்பதிக்கு வந்திருக்கிறோம்… இந்தப் பெருமாளின் கருணையை என்னவென்று சொல்வது? மனம் சிலிர்த்துப் போகிறது! நமது குழந்தைகளின் வருங்காலம் நிச்சயமாக ஒளி மிக்கதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை…நீ சொன்னது போல் எப்போது வந்தாலும் அங்கப்பிரதக்ஷிணம் நிச்சயம் செய்வோம்!"*....
ரவியின் குரல் தழுதழுத்தது. அந்தக் குளிரிலும் அவரது உடல் வியர்த்துப் போயிருந்தது…
ஆமாம்…அன்பர்களே! இதுவரையில் ஐந்து அல்லது ஆறு முறையாவது நாங்கள் திருப்பதி சென்று அங்கப் பிரதக்ஷிணம் செய்திருப்போம். ஒரு முறை கீழிருந்து மொத்தக் குடும்பமாக அனைவரும் நடந்தே அந்தப் பெருமானைத் தரிசித்தோம். என்றும் அந்தப் பெருமாளை நினைக்காத நேரமில்லை…ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் வாழ்வில் முன்னேற்றமும், நல்ல செய்தியுமே அந்தப் பெருமாள் தந்தருளி இருக்கிறார்….திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேர்கிறது! நம் விருப்பமும் கை கூடுகிறது என்பது முற்றிலும் உண்மை!....
*"நாகத்தின் அணையானை நன்னுதலால் நயந்துரைசெய் மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே!"*
அன்புடன் பானுரவி / சிங்கப்பூர்
பானுரவி / Banooravi
சிறுகதைகள் →