c. 2023
பத்தாண்டுகளுக்குப் பிறகு கல்லூரி சந்திப்பு நாள். வைதேகி, தமயந்தியைத் தேடுகிறாள் — காலேஜ் டேவில் ஒரு கவனமற்ற வார்த்தையால் அவள் இழந்த அருமையான தோழி. தமயந்திக்குப் பிடித்த நீலப் பட்டுச்சேலை — பத்தாண்டுகளாய்த் தயாரித்து வைத்த சமரசப் பரிசு — கையில் இருக்கிறது. தமயந்தியின் கணவர் மட்டும் தனியாக வருகிறார், ஒரு பரிசுடன்.
கல்லூரி வளாகத்தில் ஒவ்வொருவாராக வந்து பெயர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு பழைய மாண்வர்களின் சந்திப்பு தினம்! வைதேகியை அடையாளம் கண்டு ஓடி வந்தாள் மாலினி.....'ஏய்! எப்படி இருக்கே? நீ எங்கே இருக்கே? ... நான் அப்பால்லோல வொர்க் பண்றேன்'.....அதே குண்டு முகம்...சளசள பேச்சு கூட மாறவில்லை! நீலா, மஞ்சு, சீத்தா, கமலி, வந்தனா ... இந்த தமயந்தியைத் தான் இன்னும் காணவில்லை.... எல்லோரும் வர வர, வைதேகிக்குப் பத்து வருஷங்களுக்கு முன் படித்த காலம் மனதில் ஓடியது....
அவளும் தமயந்தியும் சேர்ந்து படித்த மகிழமரத்தடி....எத்தனையோ நினைவுகளைப் பகர்ந்து கொண்ட அந்த சிமெண்ட் பென்ச்...தமயந்தி டான்ஸ் ப்ராக்டீஸ் செய்த அந்தஸ் சின்ன ரிகார்ட் ரூம்!....இதோ இந்த லாபில்தான் இருவரும் கேஸ் ஸ்டடி செய்வார்கள்! வைதேகியை விட தமயந்தி படிப்பில் படு சுட்டி! படிப்பு மட்டுமா? கோலம், பாட்டு, நடனம்..என்று சகலத்திலும் முன்னால் நின்றவள்! காலேஜ் டே கொண்டாட்டங்கள், தமயந்தி இல்லாமல் நடைபெறாது! தமயந்திக்கு மட்டுமல்ல, அத்தனை பேருக்கும் பிடித்தவளாக, எளிமை நிறைந்த இனிமையானவள் தான் தமயந்தி!....அவர்கள் இருவரின் நட்பும் பசை போட்டு ஒட்டினாற்போல்....
'வெள்ளைக் கமலத்திலே'....விழாவில் தமயந்தி ஆடி முடித்த போது, கரவொலி விண்ணைப் பிளந்தது. வெண்பட்டு உடுப்பில், சகலமும் வெள்ளை காஸ்ட்யூமில் தேவதையாக ஜொலித்தாள் தமயந்தி. டைரக்டரின் ஸ்பெஷல் பரிசுக்கு அவளை அழைத்தபோது, அத்தனை பேருக்கும் உற்சாகம் கரை புரண்டது....வெள்ளிக் கோப்பையோடு வந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு பாராட்டினார்கள். 'ஏய்! வைதேகி! உன்னோட ட்ரெஸ் நகை எல்லாம் படு ஜோர்....உனக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது' என்று எல்லோரும் சொன்னபோது ..'பார்த்தியா தமயந்தி....என்னோட வெள்ளைப் பட்டையும், நகைகளையும் உனக்கு இரவல் கொடுத்ததால நீ ஜம்முனு ஆடிருக்கே! ஸோ, க்ரடிட் எனக்குத்தான்' என்று வைதேகி சொன்னது தான் தாமதம்.....விருட்டென்று எழுந்து கொண்ட தமயந்தியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது! ரூமுக்குப் போய் உடை மாற்றியவள், டான்ஸ் உடுப்புக்களை வைதேகியிடம் ஒப்படைத்தாள். 'வைதேகி! தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க்....இனிமேல் உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்ல...குட்பை' விருட்டென்று கிளம்பி விட்டாள்.
வைதேகிக்கு அப்போதுதான் தான் அப்படி எல்லோர் முன்னிலையிலும் பேசி இருக்கக் கூடாது என்று பட்டது....அதற்குப் பிறகு 'ஸாரி' சொல்லி எத்தனையோ தடவை பேச முயற்சித்தும், பலனில்லை. ஒரு அழகான நட்பு....இதோ இந்த இடத்தில்தான் முறிந்து போனது. யார் கண் பட்டதோ! உடைந்த கண்ணாடி போல் அந்த நிகழ்வு எளிதில் மறக்கமுடியாமல் போனது....
அதன் பிறகு தேர்வு...திருமணம் என்று திக்குக்கு ஒருவராகப் போனதில் ஒருசிலரைத் தவிர யாருக்கும் யாரைப் பற்றியும் தெரியவில்லை. வைதேகியும் திருமணமாகி அமெரிக்கா போனவள் தான்! மெனக்கெட்டு தமயந்தியைப் பார்த்து, தனது நட்பைப் புத்துப்பித்துக் கொள்ளக் காத்துக் கொண்டிருக்கிறாள். தமயந்திக்குப் பிடித்த நீலப் பட்டுச்சேலை கையில் கனத்தது....
நிகழ்ச்சி தொடங்கி விட்டது. பிரின்சிபால் உரையாற்றத் தொடங்கினார். 'மணமாகிப் போன பெண்கள், தாய் வீட்டுக்கு வந்தது போல் உணர்கிறேன். தலை சிறந்த மருத்துவர்களாக நீங்கள் அனவரும் பணியாற்றி, இந்தக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்துவருவதற்கு நன்றி....'... அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரைத் தேடி யாரோ வந்திருப்பதாக செக்ரட்டரி சொன்னதும் ஆபீஸ் ரூமுக்கு விரைந்தார்.
ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்த ப்ரின்சிபாலோடு 'ஹலோ! எவ்ரிபடி....குட் ஈவ்னிங்க்..தமயந்தியின் ஹஸ்பெண்ட்' என்றபடியே ஒருவர் வந்தார். குரல் கம்ம அவர் பேசத் துவங்கினார்....'இந்தப் பழைய மாணவர்கள் தின விழாவுக்கு வருவதற்கு தமயந்தி மிகவும் ஆசைப்பட்டாள். இந்தக் கல்லூரியைப் பற்றியும், பழைய நாட்களைப் பற்றியும் முக்கியமாக அவளது க்ளோஸ் ஃபிரண்ட் வைதேகியைப் பற்றியும் அடிக்கடி என்னோடு பேசுவாள்....விதி யாரை விட்டது? என்னுடைய தமயந்தி, பத்து நாட்களுக்கு முன், கோவையில் ஒரு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு காரில் வந்து கொண்டிருந்த போது,எதிரில் வந்த லாரி மோதி அந்த இடத்திலேயே ...... ' பேச முடியாமல் அவர் விம்மியபடியே தமயந்தியின் புகைப்படத்தை டேபிளில் வைத்த போது அரங்கமே அழுது தீர்த்தது...
மெளன அஞ்சலிக்குப் பிறகு, வைதேகியிடம் வந்தவர்.....'தமயந்தியை நீங்கள் மன்னித்து விடுங்கள்...ப்ளீஸ்....அறியாத பருவத்தில் உணர்ச்சிகள் மிகுந்து சில அவசர முடிவுகள் எடுத்து விடுகிறோம்...மனம் பக்குவம் அடையும் போது நடந்ததெல்லாம் ஒரு உப்புப் பெறாத விஷயமாகத் தெரிகிறது...உங்களிடம் கொடுப்பதற்காக அவள் வாங்கி வைத்த பரிசு இது'...என்று பரிசுப் பார்சலைக் கொடுத்தார். 'என்னுடைய வைதேகிக்கு' என்று முத்துமுத்தாக எழுதி வைதேகி வாங்கியிருந்த அதே நீல வண்ணத்தில் பட்டுப்புடவை இருந்தது......
'ஓ! நோ! என் தமயந்தி எங்கேயும் போகல...இப்போ வந்துடுவா....நான் காத்துக் கோன்டிருப்பேன்"...வெடித்துஸ் சிதறும் வைதேகியின் அழுகை எனக்குக் கேட்கிறது....உங்களுக்கு?.....
************
எழுதியவர்: பானுரவி
பானுரவி / Banooravi
சிறுகதைகள் →