சிறுகதை

வெற்றி நிச்சயம்

c. 2023

முப்பத்தியேழு ஆண்டு சேவைக்குப் பிறகு பேராசிரியர் நல்லகண்ணுவின் பிரிவுபசார விழா. மாவட்ட கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமை. பேராசிரியர், தொலைக்காட்சிப் பேட்டியில் — தமிழில் தோற்று மனம் வருந்திப் போன ஜயக்குமார் என்ற மறக்க முடியாத மாணவன் பற்றி பேசுகிறார். அன்று மாலை, கலெக்டரின் பரிசை விரிக்கிறார் — ஒரு புகைப்படம், ஒரு கடிதம், பழைய வகுப்பறையின் ஒரு பெயர்.

சாரதா கலைக் கல்லூரி களை கட்டி இருந்தது. பேராசிரியர் நல்லகண்ணுவின் முப்பத்தியேழு ஆண்டு சேவை நிறைவடைந்து பிரிவுபசார விழா! அத்தோடு, அரசாங்கம் 'நல்லாசிரியர்' விருது அளித்து அவரைப் பாராட்டி, கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமை ஏற்று உரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பேராசிரியரின் பேட்டி தொடங்கியது. 'சார்! தங்களின் அனுபவம்....விடைபெறும் இத்தருணத்தில், எப்படி உணர்கிறீர்கள்'? 'முதலில், இந்த எளியவனின் சிறிய சேவைக்கு இடமளித்த சாரதா கலைக்கல்லூரிக்கு எனது நன்றி! இக்கல்லூரியில் படித்தவர்கள் அனேகம் பேர், அயல் நாடுகளிலும், இந்தியாவிலும் உயர்பதவி வகிப்பதாகவும், எனது பணியைப் பாராட்டியும், கல்லூரியை வாழ்த்தியும் மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். த்மிழைப் புறந்தள்ளாது சென்றவிடமெல்லாம், நமது செம்மொழியான தமிழ்மொழி மேன்மை பெற அவர்கள் நிறைய வழிகளில் முயற்சிப்பதாகத் தெரிய வரும்போது மனதிற்கு மெத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' 'மறக்க முடியாத சம்பவம்...?' 'சில ஆண்டுகளுக்கு முன்....ஜயக்குமார் என்ற மாணவன், தமிழ்தானே என்ற அலட்சியத்தில், சரிவரப் படிக்காமல் தேர்ச்சி பெறவில்லை...தமிழ்மொழி நம் தாய் மொழி அல்லவா? தமிழைப் புறம் தள்ளுவது, தாயைப் புறம் தள்ளுவது போலத்தானே! ... அந்தப் பையன் மன வருத்தத்தோடு பள்ளியை விட்டுச் சென்றது, ஒரு மறக்க முடியாத சம்பவம்'..... ....அவருக்கும் கல்லூரிக்கும் இருந்த பந்தம் அவரது பேட்டியில் தெரிந்தது. கலெக்டர் வெற்றிஸ் செல்வன் அவருக்குப் பொன்னாடை போர்த்திப், பள்ளியின் சார்பாக வெள்ளிக் கேடயமும், பண முடிப்பும் தந்த போது கரவொலி விண்ணைப் பிளந்தது. 'பாராட்டுக்கள் சார்! இவ்விழாவில் கலந்து கொண்டதில் நான் பெருமை அடைகிறேன். எனது இந்தச் சிறிய பரிசை ஏற்றுக் கொண்டு, என்னையும் கெளரவப்படுத்துங்கள் சார்!'....கலெக்டர் தந்த பரிசுப் பார்சலை நல்லகண்ணு வாங்கிக் கொண்ட போது, கண்கள் பனித்தது. ஏகப்பட்ட மலர்க்கொத்துக்களுடனும், வாழ்த்து மடல்களுடனும், மகிழ்ச்சியில் பூரித்த நினைவுகளுடனும் வீடு திரும்பினார். கலெக்டர் அளித்த பார்சலைப் பிரித்தார். லாமினேட் செய்யப்பட்ட அவரது புகைப்படமும், கூடவே வாழ்த்துப்பாவுடன் ஒரு கடிதமும்..... 'மதிப்பிற்குரிய அய்யா! என்றாவது ஒரு நாள், உங்களைச் சந்தித்து ஆசி பெற வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். போன மாதம் இந்த ஊருக்குக் கலெக்டராக எனக்கு மாற்றல் கிடைத்த போது, மிகவும் மகிழ்வுற்றேன். என்னை விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்த போது, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் உணர்ந்தேன். சார், பேட்டியில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறினீர்களே? அந்த மாணவன் ஜயக்குமார் நான் தான். ....ஆமாம்....ஜயக்குமார் என்ற பெயரை வெற்றிச் செல்வன் என்று வைத்துக் கொண்டு, வேறு மாநிலப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். சக மாணவர்களின் முன்னால், 'பெரிய கலெக்டர் என்ற நினைப்போ? வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிந்து கொண்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு அலைந்தாயே? ....தமிழைச் சாகடிக்க வெளி மனிதர்கள் யாரும் வேண்டாம்...ஹும்....ஒன்றைப் புரிந்து கொள்....வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பொருட்படுத்தி அதற்குட்பட்டு வாழ்பவன் தான் முன்னேற முடியும்....எதையும் அலட்சியப்படுத்தி, சுரணை இல்லாமல் விட்டேற்றியாக இருப்பவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது.....' இப்படி நீங்கள் சொல்லி நிறுத்திய போது, நான் வீணாக்கிய ஒரு வருடம் என்னை ஏளனமாகப் பார்ப்பது போலிருந்தது. எனது அந்தத் தோல்வியை எனது வெற்றிக்கு முதல் படிக்கட்டாக வைத்துக் கொண்டேன்...பெரிய கலெக்டர்னு நினைப்போ என்ற உங்களது கேள்வி எனக்குள் ஒரு விதையை ஆழ ஊன்றியது.....ஆம். எனது இன்றைய பதவிக்கு உங்களின் போதனையே காரணம்! கலெக்டராகி விட்டேன்...ஆனால் தமிழ் பேசும் கலெக்டராக! ....' படித்து முடித்த நல்லசிவத்தைப் பார்த்து, வெற்றிச்செல்வன் அளித்த புகைப்படத்திலிருந்த நல்லசிவம் 'என்ன? இப்போ நிம்மதியா? தமிழ் யாரையும் புறம் தள்ளாது என்பது உண்மை ஆகிவிட்டது பார்த்தாயா?' என்று வினவுவது போல் இருந்தது. எழுதியவர்: பானுரவி

பானுரவி / Banooravi

சிறுகதைகள்