சிறுகதை

பொம்மைகள்

September 2013 · Tamil Murasu · Singapore · 1 September 2013

சென்னையிலிருந்து மெல்பர்னுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் ஒரே மகன் முகுந்தை விட்டுப் பிரிய கமலாவின் மனம் தயங்குகிறது. நாலு மாதங்கள் கழித்து அவனைப் பார்க்க ஆஸ்திரேலியாவுக்குப் பயணம். அங்கே — தனது சோப்பை எடுத்து வாங்காத பிள்ளை, இப்போது தனது சமையல், சலவை, தோழமை, படிப்பு என அனைத்தையும் அழகாகச் சமாளிக்கும் இளைஞனாக மாறி இருக்கிறான். கமலாவுக்குத் தான் அங்கு அநாவசியமாகப்படுகிறது. டாண்டினங் சிவா–விஷ்ணு கோயிலில் பேச்சாளர் சுகி சிவம் கோபுரப் பொம்மைகளை — பெற்றோர்களை — பற்றிய ஒரு உருவகத்தைச் சொல்லும் போது, கமலாவின் மனத்தின் அழுக்கான எண்ணங்கள் கழன்று அங்கே பிரகாசம் குடி கொள்கிறது. அவள் நெஞ்சம் நெகிழ்கிறது.

இன்று நாளை என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பதைத் தீர்மானித்தபின் முகுந்துடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெரிய பொக்கிஷமாகப் பட்டது கமலாவுக்கு. கணேஷ்–கமலாவின் அருந்தவப் புதல்வன் முகுந்த் என்றால் ரொம்பவே சரியாக இருக்கும். திருமணமாகி வெகு நாட்களுக்குப் பிறகு முகுந்த் பிறந்ததில் கமலாவை விடக் கணேஷுக்குத் தான் அதீத சந்தோஷம். சிறு வயதிலிருந்தே பணிவோடும் பக்தியோடும் அவனைப் பார்த்தவர்கள், கமலாவுக்குக் 'கிரெடிட்' கொடுத்தபோது சிறகுகள் இல்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். அனைவரின் உயிர்நாடியாக வளர்ந்து வந்தான் முகுந்த். வெளியில் சென்றவன் வீட்டுக்குள் நுழைந்தாலே ம்யூசிக் சிஸ்டமும் டெலிவிஷனும் உயிர் பெற்றது போல் ஒருவித உற்சாகம் ஏற்பட்டுவிடும்! இப்போது, அவனை விட்டுப் பிரியணுமே என்ற கவலை எல்லோரையும் விட கமலாவையே அதிகமாக ஆட்கொண்டிருந்தது. அப்படி ஒன்றும் முகுந்த் தொட்டுக்கெல்லாம் அம்மாவைத் தேடிவரும் பிள்ளை இல்லை. இருந்தாலும் அவனை விட்டுப் பிரிவதில் சற்றும் உடன்பாடு இல்லாமல் இருந்தாள். "ஹாய் அம்மா! ஏர் டிக்கெட் வந்தாச்சு. குவாண்டஸில், நெக்ஸ்ட் வீக் கிளம்பணும் அம்மா! பாஸ்போர்ட் மற்ற டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கணும்," பரபரப்படி வந்தான் முகுந்த். "இதோ ரெண்டே நாளில் எல்லாம் ரெடி பண்ணிடறேன் பார்," என்றவாறே ஒவ்வொன்றையும் சரி பார்த்து வைக்கலானாள் கமலா. இரண்டு பெட்டிகள் நிறைய அவனுக்குத் தேவையான உல்லன் உடுப்புகள், ஜாக்கெட், சிறிய சைஸ் ரைஸ்குக்கர், கார்ட்லெஸ் கெட்டில், மீனாட்சியம்மாள் சமையல் புத்தகம், இன்ஸ்டண்ட் சமாச்சாரங்கள் என்று பார்த்துப் பார்த்து வைத்தாயிற்று. அவனுக்குப் பிடித்த ரிப்பன் பக்கோடாவையும், திரட்டுப் பாலையும் அழகாய் 'பாக்' பண்ணி வைத்தாள். இதுவரையில் ஒரு சோப் வாங்கவோ பால்பாக்கெட் வாங்கவோ கூட முகுந்த் கடைக்குப் போனதில்லை. இனிமேல் அவன் என்ன செய்வான்? தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளணுமே என்ற எண்ணம் வந்தபோது, கண்களில் நீர் முட்டியது! "வருபோது, அம்மா, பசிக்கிறது,' என்று பறந்து கொண்டு தான் வருவான். இனி யார் பார்த்துப் பார்த்துச் செய்யப் போகிறார்கள்? தானே சமாளித்துக் கொள்ளணுமே. நாலாவிதக் கவலைகளும் அவளை வாட்டி எடுத்தன. *** முகுந்த் ஆஸ்திரேலியா கிளம்பிப் போய் விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவனது பிறந்த நாள் வந்தபோது, யாரேனும் முகுந்தைப் பற்றி விசாரித்தாலே கண்களில் யமுனை பொங்கிறது. மீனாக்குட்டியோடு ஓடியாடிக் கொண்டு, பிற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி இயல்பாக இருக்கப் பிரயத்தனம் செய்தும், மனத்தை அடக்குவது பெரும் கஷ்டமாகவே இருந்தது கமலாவுக்கு. ஒரு 'அம்மாவாக' இருப்பதில் இத்தனை கஷ்டமா? தினமும் ஈமெயில் அனுப்பியும் ஸ்கைபில் பேசியும் நாட்கள் ஓடின. "அம்மா, இப்போல்லாம் அண்ணாவுக்குப் பிடிச்ச கேசரி ஏம்மா பண்ண மாட்டேங்கறே?," என்று கேட்டுக் கேட்டு மீனுக்குட்டியும் அலுத்துப் போய்விட்டது. அன்றைய தினம் கணேஷ் ஏக உற்சாகத்தோடு வந்தான். "ஹாய் கமலி! குவாண்டஸ்ல இப்போ ஒரு ஹாலிடே ஆஃபர் வந்திருக்கு. ஒரு ஏர்டிக்கெட் வாங்கினா ஒரு ஏர்டிக்கெட் ஃப்ரீ. எனக்கு இப்போ கம்பெனில ஆடிட்டிங். ரொம்ப டைட்டாயிருக்கும். நீயும் மீனுவும் வேணா ஆஸ்திரேலியா போய் வருகிறீர்களா?" கணேஷ் கேட்டுதுதான் தாமதம். "ப்ளீஸ் கணேஷ், மொதல்ல டிக்கெட்ட புக் பண்ணுங்க. இந்த நிமிஷமே எனக்கு முகுந்தைப் பார்க்கணும் போல இருக்கு," பரபரப்பு தொற்றிக் கொண்டது கமலாவுக்கு. *** பத்மா சேஷாத்ரியில் போய் டீச்சரைப் பார்த்து, மீனுக்குட்டிக்கு லீவு அப்ளை செய்து கொண்டாள். முகுந்துக்கு ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு டைடன் வாட்சும், க்ரிஸ்டியன்டயர் சண்கிளாஸும் வாங்கிக் கொண்டாள். அடையாறு ஆனந்தபவனில் முந்திரி கத்லியும் கை முறுக்கும் வாங்கிக் கொண்டாள். அவள் அக்கா சாவித்திரி செய்து கொடுத்த அரிசி வடகத்தையும் அப்பளத்தையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டாள். மெல்பர்ன் ஏர்போர்ட்டுக்கு முகுந்த் வந்திருந்தான். நாலுபேர் பார்க்கிறார்களே என்ற லஜ்ஜையே இல்லாமல், "முகுந்த் கண்ணா," என்று கட்டிக் கொண்ட போது, 'உஷ், என்னம்மா நீ' என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பிள்ளை ரொம்பவே கூச்சப்பட்டான். இந்த நாலைந்து மாதங்களில் ஹேர்கட் செய்யாததால் தலை காடாகக் கிடந்தது. அந்நாட்டுக் கைமேட்டில் முகமும் உடம்பும் நன்றாகச் சிவந்து லேசான சதைப் பற்றுடன், 'ஐம்' மென்றிருந்த பிள்ளையைப் பார்க்கையில், கமலாவிற்குத் தன் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. அவனது ரூமுக்குப் போனதும் கல் உப்பெடுத்துச் சுத்திப் போடணும் என்று நினைத்துக் கொண்டாள். மெல்பர்ன் யுனிவர்சிட்டி எப்படி, நண்பர்கள் எப்படி, வகுப்புக்கள் எப்படி, தினமும் அவனது ரொட்டன் என்ன, அவனது வயலின் ப்ராக்டிஸ் எப்படிப் போகிறது, என்று குடைந்து குடைந்து கேட்டுக் கொண்டு வந்தாள் கமலா. "அம்மா, ப்ளீஸ் சும்மா தொணத் தொணக்காதே யேன். மெல்பர்ன் எப்படி இருக்குனு பார்த்துக் கொண்டே வாயேன்," முகுந்த் சொன்னபோது பொங்கிய பாலில் சற்று நீர் தெளித்து அடகினாற் போல் உணர்ந்தாள் கமலா. முகுந்த் தங்கியிருந்த காலேஜ் ஸ்குவேர் அபார்ட்மெண்ட், மெல்பர்ன் யுனிவர்சிட்டியின் அருகாமையில் தான் இருந்தது. வெகு அழகாக, படு சுத்தமாக, ஓர் இளம் தம்பதியர் குடித்தனம் செய்யும் வகையில் கச்சிதமாக இருந்தது. புத்தக அலமாரி, படிக்கும் மேஜை, ஒரு கணினி, குளிர்சாதனக் கருவி, கிச்சன் காபினெட், மைக்ரோவேவ் அவன், குக்கிங் ரேஞ்ச் என்று ரொம்பவே செளகர்யமாக இருந்தது. கீழ்த்தளத்தில் ராட்சத டெலிவிஷன் வேறு. லைப்ரரி, விதவிதமான இன்டோர் கேம்ஸ் என்று மிகவும் தரமாக இருந்தது. குஷன் சோபாக்கள், மெகா சைஸ் அஜர்களையே காணாமல் செய்துவிடும் போலிருந்தது. அங்கிருந்த பெரிய வாஷிங் மெஷினில் வாரம் ஒரு முறை மூன்று டாலர் போட்டு துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்துக் கொள்ளலாம். உடனேயே பக்கத்திலிருக்கும் ட்ரையரில் ஒரு டாலர் போட்டு உலர்ந்தவுடன் எடுத்துச் சென்று விடலாம். கூப்பிடு தூரத்தில் இருந்த 'சேஃபவே' என்ற அமெரிக்க சூப்பர் மார்க்கெட் இருந்தது. பசேல் என்ற காய்கறிகளும் புதிய தினுசான பழங்களும் கேக் வகைகளும், மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் ரொட்டி வகைகளும், பாலடைக்கட்டியும் வெண்ணையும் விதவிதமான பழ ரசங்களும் கண்ணைக் கவரும் வண்ணப் பூங்கொத்துக்களும் வாசனைத் திரவியங்களும் அப்பப்பா! எல்லாமே ஒன்றையொன்று தரத்தில் மிஞ்சும்படி இருந்தன. வந்த இரண்டு நாட்களிலேயே கமலாவுக்கு மெல்பர்ன் மிகவும் பழகிப் போய்விட்டது. இரு வாரங்களுக்குரிய டிக்கெட் வாங்கிக் கொண்டு விக்டோரியா மார்க்கட், ரியால்டோ டவர்ஸ், சிட்டி, என்று டிராமில் போய் வந்தார்கள். மெல்பர்ன் நகரத்து லைகான் தெருவில் நடப்பது என்பதே சுகானுபவமாக இருந்தது. மாலை ஐந்து மணிக்குத் தொடங்கும் ரெஸ்டாரண்டுகளும், அதன் நுழைவாயிலில் போவோர் வருவோரை வரவேற்கத் துடிக்கும் பணியாளர்களும், எட்டு ஊருக்கு மணக்கும் பீட்சாவும் க்ரீமில் செய்து வைத்த பாஸ்தாவும் மென்மையான ரொட்டி வகைகளும் பிஸ்தாவிலும், ஸ்ட்ராபெரியிலும், சாக்லட்டிலும் இன்னும் பலவித சுவைகளிலும் மினுமினுக்கும் ஐஸ்க்ரீமும் நாக்கில் உமிழ் நீரைப் பெருக்கின. *** தினுசு தினுசாகச் சமைத்தாள் கமலா. ஆனாலும் முகுந்த் எதுவொன்றையும் அத்தனை ருசித்துச் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. யுனிவர்சிட்டியிலிருந்து வருபவனுக்கு அன்றைய பாடங்களை அவனது தோழர்களோடு டிஸ்கஸ் செய்யவும் ஒழிந்த நேரங்களில் இண்டர்நெட்டில் சாட் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது. மேலும் தனக்குத் தானே தேநீர் போட்டுக் கொள்வதும் தனது உடுப்புக்களைத் தானே எடுத்துச் சென்று துவைத்து அயரண் செய்து கொள்வதுமாக முகுந்த் இருந்ததால், கமலாவுக்கு அவனோடு ஆறவமரப் பேசக்கூட முடியாமல் இருந்தது. கமலாவுக்குத் தான் அங்கிருப்பதே அனாவசியமாகப் பட்டது. வீட்டில் இருந்த வரையில் ஷூ லேஸ் முதற்கொண்டு போட்டு விடுவாள். இப்போ எல்லாம் தலைகீழாக அல்லவா இருக்கு! அளந்து அளந்து பேசிக்கொண்டு எப்போதும் ஏதோ தீவிர சிந்தனையோடு இருந்த முகுந்த் அவளை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். உடனே கணேஷைப் பார்த்து ஒரு பாட்டம் சொல்லி அழணும் போலிருந்தது. தான் இல்லாமல் பிள்ளை என்ன பண்ணுவானோ, எப்படித் தவிப்பானோ என்று மருகி மருகித் தான் உருகியதை எண்ணிப் பார்த்தபோது எல்லாம் அர்த்த மற்றவையாகத் தெரிந்தது. இந்த நாலைந்து மாதங்களிலேயே முகுந்திடம் இத்தனை மாற்றங்கள் என்றால், இன்னும் போகப் போக எத்தனையோ? மனது வலித்தது. ஒரு வேளை, முகுந்தின் கவனம் வேறு எதிலாவது இருக்குமோ? *** மனதை எதுவோ சங்கடம் செய்யவே அவனது டேபிளைச் சிதறிக் கிடந்த பேப்பர்களையும் அவனது புத்தகங்களையும் நேர்த்தியாக ஒழுங்கு செய்தாள். கடந்த ஆண்டு பிறந்தநாளுக்குக் கணேஷ் பரிசாகக் கொடுத்திருந்த விவேகானந்தர் புத்தகமும் பள்ளியில் பரிசாகக் கிடைத்த பகவத் கீதையும் தான் கொடுத்த சிறு பிள்ளையார் விக்கிரகமும் அவனது டேபிள் லாம்புக்கு அருகில் இருத்ததைப் பார்த்த போது கமலாவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது! "அம்மா, உனக்குக் கோயில்னா போகப் பிடிக்குமே! இன்னிக்குப் போகலாம். சாயங்காலம் ரெடியா இரு," டாண்டினங்க என்ற இடத்தில் இருந்தது அந்தச் சிவா–விஷ்ணு கோயில். வெள்ளைப் பளிங்கில் விநாயகரும் புஷ்டியாக அம்பாளும் படு சுத்தமாகப் புல்வெளியும். அகன்ற பிராகாரமுமாக மிக அழகாக இருந்தது. கோயிலை ஒட்டிய மண்டபத்தில் கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் தன்முனைப்புப் பேச்சாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு தொடக்கம் என்பதால், ஏகப்பட்ட தமிழ் முகங்களைக் காண முடிந்தது. ஒரு குட்டித் தமிழ்நாடும் ஆந்திரமும் கேரளமும் கன்னடமுமாக அந்த இடம் கலகலவென்று பட்டும் பூவுமாக அமர்க்களமாக இருந்தது. ஒரு செளகர்யமான இருக்கையில் கமலாவும் அமர்ந்து கொண்டாள். சுகி சிவத்தின் உரை காந்தம் போல் அனைவரையும் இழுத்தது! *** "அன்பர்களே! நீங்கள் எல்லோரும் கோயிலுக்கு வருகிறீர்கள். கோபுர தரிசனமும் செய்திருப்பீர்கள். கோபுர தரிசனம் பாப விமோசனம் அல்லவா? அந்த கோபுரத்தைப் பார்த்தால், அதன் ஒவ்வொரு பக்கமும் ஏராளமான பொம்மைகள் விதவிதத் தோற்றங்களில், வண்ணங்களில் காட்சி தரும். இந்தப் பொம்மைகள் சற்றுக் கர்வமாக நினைத்துக் கொள்ளுமாம். 'நாம் மட்டும் இப்படித் தாங்கிக் கொள்ளவில்லை என்றால் இந்த உயர்ந்த கோபுரம் என்றோ விழுந்திருக்குமே,' என்று! வானம் தொட்டுவிடும் தூரம் தான் என்று உயர்ந்து நிற்கும் அந்தக் கோபுரம், மின்னல், இடி, புயல், மழை என்று எந்தவொரு இயற்கை சக்தியின் ஆக்ரோஷத்துக்கும் கட்டுப்படாமல், தாக்கப்படாமல் கம்பீரமாக உறுதியாகத் தலை நிமிர்ந்து நிற்கணும்னா அதோட அஸ்திவாரம் சரியாக ஆழமாக இருந்தாத்தானே சாத்தியம்? ஏன் இதை பத்திச் சொல்கிறேனென்றால் நம்ம குடும்ப அமைப்பும் பெற்றோர்களும் குழந்தைகளும் இந்தமாதிரி ஒரு அமைப்பிலும் சமன்பாட்டிலும் தான் இருக்கோம். குழந்தைகள் சிறு பிராயமா இருக்கும்போதே நல்லொழுக்கத்தையும் தெய்வ வழிபாட்டையும் கலாசார நெறிகளையும் நாம் ஊட்டும் உணவோடு சேர்த்துக் கொடுக்கணும். அதுவே அந்தக் குழந்தைகள் உயர்வாக ஓங்கி வளர்வதற்காக நாம் போடும் அஸ்திவாரம்! பண்பாடும் ஒழுக்கமும் இள வயதிலேயே பசுமரத்தாணியாகப் பதியப்பெற்ற நாம் பெற்ற செல்வங்கள் ஒரு நாளும் பெற்றோருக்கோ தமக்கோ அவமானத்தைத் தேடித் தரமாட்டார்கள். போகும் தேசம் எதுவாக இருந்தாலும் நாம் வாழும் வழிமுறைகளை அவர்கள் மனதில் ஒழுங்கு தவறாமல் பதியச் செய்ய வேண்டும். முன்னோடும் வாய்க்கால் தானே பின்னோடும் ஓடும்? எனவே நல்லவிதமாகப் பெற்றோர்கள் வாழ்ந்து காட்டி முன்மாதிரியாக இருந்து விட்டால் எந்த நாட்டில் வளர்ந்தாலும் படித்தாலும் நிச்சயம் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள்." *** கமலாவின் மனத்தை ரொம்பவே அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் வெடி வைக்கப்பட்ட பாறை போல் சிதறிக் கொண்டிருந்தன. அவள் மனத்தின் துயரங்களுக்கு ஒரு வடிகால் போல் அந்தச் சொற்பொழிவு இருந்தது. மனத்தின் அழுக்கான எண்ணங்கள் கழன்று அங்கே பிரகாசம் குடி கொண்டது! முகுந்தின் வளர்ச்சியையும் மன முதிர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் 'இது என்ன மாற்றம்?' என்று மருகிக் கொண்டு அசட்டுத்தனமாக அல்லவா இருந்து விட்டேன்? அவன் வளர்ந்து வருவதை ஆரோக்கியமாக நினைக்காமல், என்னை மிகவும் அலட்சியம் செய்வதாக அல்லவா நினைத்துக் கொண்டேன்? சாய்ந்து விழும் கொடிக்குத்தானே கொழுகொம்பு வேண்டும்? முகுந்த் இப்போ சாயாத உறுதியான விருட்சமாக அல்லவா மனதாலும் உடலாலும் வளர்ந்திருக்கிறான்! கமலாவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. மறுநாள் உற்சாகம் தொற்றிக் கொண்டவளாக, "முகுந்த் கண்ணா, நானும் மீனுக்குட்டியும் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பணும் பாரு. ஏர்டிக்கெட்டை இன்னிக்குக் கன்ஃபர்ம் செஞ்சுடு," என்றபோது கமலாவின் அத்தனை கவலைகளும் காணாமல் போயிருந்தன. — பானுரவி / சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

சிறுகதைகள்