May 2003 · Mangai Magazine · May 2003
பஹ்ரைனில் வசதியான வாழ்க்கை. ரேணுவும் கணவன் பாஸ்கரும் மகன் ரகுவுடன் நிறைவாக இருக்கிறார்கள். எதிர்பாராமல் இரண்டாவது குழந்தை வந்த போது, "பெண் என்றால் லயபிலிட்டி" என்ற பாஸ்கர், கருக்கலைப்புக்கு ரேணுவை நெருக்குகிறான். தாயை இழந்த ரேணு, மலைக்கோட்டைப் பிள்ளையாரையும், சமயபுரத் தாயையும் வேண்டுகிறாள். எகிப்தியப் பெண்மணியின் அன்பு ஒரு சாளரத்தைத் திறக்கிறது. குழந்தை பிறந்த போது, பாஸ்கர் அவனது அம்மா ராஜம்மாள் பெயரைச் சுருக்கி ராஜஶ்ரீ என்று பதிவு செய்கிறான். ஆனால் ரேணு தனது தாய் அமிர்தவல்லியின் நினைவாக, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை மெல்ல, தனக்குள்ளேயே, *அம்முலு* என்று அழைக்கிறாள்.
ரகுவை அவசர அவசரமாகக் குளிப்பாட்டினாள் ரேணு. மணி எட்டு ஆகப் பத்து நிமிடங்களே இருந்தன. மூன்றரை வயது கூட ஆகாத ரகுவை, பஹ்ரைனில் உள்ள இந்தியன் ஸ்கூலில் சேர்க்கும் முன்பாக, ப்ரீ-நர்ஸரி பள்ளியில் சேர்த்து, நாலு குழந்தைகளுடன் பழகவிடப் பிளான் பண்ணியிருந்தார்கள் ரேணுவும், பாஸ்கரும். நல்ல வேளையாக அவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்திலேயே இருந்தது மிஸஸ் செளத்ரியின் நர்ஸரி ஸ்கூல். மிகவும் ஃப்ரெண்ட்லியாகப் பேசி, முதல் நாளே ரகுவுக்குப் பிடிக்கும் விதத்தில் அவளும் நடந்து கொண்டு விட்டதால், ஏதும் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் எட்டு மணிக்கு 'டாண்' என்று ரகுவை ஆஜர்ப்படுத்த வேண்டும். நேரம் தவறாமையைச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டுமென்று ரொம்பவே மிஸஸ் செளத்ரி மெனக்கெடுவாள்.
லேசாகத் தலையை ப்ரஷ் பண்ணிக்கொண்டு, "ரகுக்குட்டி…கெட் ரெடி கண்ணா' என்று ரேணு கிளம்பியபோதுதான் குமட்டிக் கொண்டு வந்தது. அடக்க முடியாமல் பாத் ரூமுக்குப் போனவளுக்குத் தலை சுற்றியது. மனசு அதற்குள் நாள்கணக்குப் போட்டது. இன்று எத்தனையாவது நாள்? ஓ! முப்பத்திரண்டு நாட்களாகி விட்டனவா? இப்படி ஒரு தடவை கூடத் தள்ளிப் போனது இல்லையே! கரெக்டாக இருபத்தேழு நாட்களில் உட்கார்ந்துடுவோமே! ஒரு வேளை…அப்படி ஏதானும் …ரேணுவின் மனத்தில் ஒருசேரப் படபடப்பும், மகிழ்ச்சியும் ஊடுருவிச் சென்றன…முத்துமுத்தாக வேர்வை பூக்க, மெல்ல முகத்தைக் கழுவிக்கொண்டாள்.
இன்று மிஸஸ் செளத்ரியிடம் 'ஸாரி' சொல்லிக்க வேண்டியதுதான் என்று நினைத்தவளுக்குத் தாகம் எடுக்கவே, ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகினாள். ரகுவுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுத்து ஒரு கார்ட்டூனைப் போட்டவள், பாஸ்கரைக் கைபேசியில் அழைத்தாள். சற்றே குழப்பமாக இருந்தவளுக்கு அவனுடன் உடனே பேசினால் தேவலை என்று தோன்றியது.
மறுமுனையில் குறுக்கே பேசாமல் அவள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த பாஸ்கர் 'தோ பாரு ரேணு! எதையாவது கோட்டை கட்டிண்டு இருக்காதே. ஈவ்னிங் ரெடியா இரு…மவ்ஸாத் ஹாஸ்பிடலுக்குப் போய் டாக்டர் இந்துமதியைக் கன்ஸல்ட் பண்ணலாம். இப்போ நான் ரே:.பாக்ஸ்லியோட ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன். திருப்பிக் கூப்பிடாதே…'...டக். போனை வைத்தாயிற்று.
ரேணுவும் பாஸ்கரும் பஹ்ரைனுக்கு வந்து மூன்று வருஷங்களாகி விட்டன. நாலு மாசக் குழந்தை ரகுவோடு இங்கே வந்தபோது, அவளுக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. பளிச்சென்ற தெருக்களும், பளபளத்த கார்களும், மலைப்பை ஏற்படுத்தின. நெகுநெகுவென்று வளர்ந்திருந்த அரேபியர்களின் கம்பீரமும், அரபியப் பெண்களின் மூடிவைத்த செளந்தர்யமும் மனதைக் கொள்ளை கொண்டன. கூப்பிடு தூரத்தில் இருந்த முருகன் இந்தியன் மளிகைக் கடையும், காஸாப்ளாங்கா என்ற பெரிய மாலும், அப்ஸரா என்ற ஜுவல்லரிக் கடையும், அடையாறு கிராண்ட் ஸ்வீட்ஸ் பக்ஷ்ணங்களை விற்கும் மங்கள விலாஸ் கடையும் இருந்ததால் இந்தியாவை அவ்வளவாக மிஸ் பண்ணவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாளாவட்டத்தில் கப்பூஸ் எனப்படும் அரேபிய ரொட்டியுடன் ஏதேனும் ஒரு ஸப்ஜி செய்து சாப்பிடவும் பழகிக் கொண்டுவிட்டார்கள். ஃபிலாபில் என்ற சாண்ட்விச்சுக்கு பாஸ்கர் ஏறத்தாழ அடிமை ஆகி இருந்தான் என்றே சொல்ல வேண்டும்…
கார்ப்பெட்டுடன் கூடிய வீடு, இத்தாலியன் ஃபர்னிச்சர், ப்ராண்டட் எலக்ட்ரானிக் சாதனங்கள், மைக்ரோவேவ் அவன், ஏர் ஃப்ரையர், வாஷிங் மெஷின்/ட்ரையர், ரொபாட்டிக் க்ளீனர், காபி மேக்கர் என்று அமர்க்களமாக அமைந்த வீடு ஒரு பூலோக சுவர்க்கமாகவே தெரிந்தது. பாஸ்கருக்கு அவனது கம்பெனியில் லெக்ஸஸ் கார் தந்திருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயண விடுப்பும், அதற்குண்டான தொகையையும் வேறு தந்துவிடுவதால், உறவினர்களுக்குப் பரிசுப் பொருட்களோ, தங்க நகையோ, உயர்ந்த உடுப்புக்களோ வாங்கிக் கொடுத்து மகிழ்விக்க முடிந்தது.
பாஸ்கருக்குப் பிடித்த விதத்தில், கறிகாயும், ஸ்வீட்டும் விதவிதமாகச் செய்து போட்டு அசத்தினாள் ரேணு. மனசுக்கு இசைந்த வாழ்வு அமைந்ததற்கு நித்தமும் இறைவனுக்கு நன்றி சொல்லுவாள்.
திருமணத்துக்கு முன், சென்னை கூடப் பார்த்திராத தனக்குக் கடல் கடந்து வாழ்க்கை நடத்தும் அதிருஷ்டம் அமைந்ததை எண்ணி நெகிழ்ந்து போவாள். தலைவாரிப் பின்னிவிட்டுக் கொண்டே அவளது அம்மா, 'என் குழந்தைகள் ஸ்ரமப்படாமல் வாழணும் பகவானே! கஷ்டமெல்லாம் என்னோடயே போய்டணும்…மாணிக்க வினாயகா! க்ருபை செய்' என்று வேண்டியது வீணே போகவில்லை…'வாட் அ க்ரேட் அம்மா! என் கண்ணுல ஒரு தூசி விழாமப் பாத்துண்டாளே! அந்த ஏழ்மையிலும் என்னை ஒரு ராணி மாதிரி வளர்த்தாளே! படக்கென்று ஒரு நாள், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஹார்ட் அட்டாக் வந்து அம்மா கண்ணை மூடியபோது, உலகமே இருண்டாற் போலிருந்தது ரேணுவுக்கு.
தாயுமானவர் போல் அப்பா தன்னை ஆசையோடும் அன்போடும் வளர்த்ததும், உடன்பிறந்தவர்கள் ஆதரவோடு பாசம் காட்டி வளர்த்ததும் அம்மா இல்லாத குறையைப் போக்கடித்தன. கண்ணுக்கு நிறைவான பாஸ்கர் வந்து, எந்தவித டிமாண்டும் செய்யாமல், திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்த போது, வானமே வசப்பட்டது போல் உணர்ந்தாள் ரேணு.
தினமும் பார்க், சினிமா, ஹோட்டல் என்று உல்லாசமாக இருந்தாலும் கூட குழந்தை பெற்றுக் கொள்ளுவதில் மட்டும் பாஸ்கர் அத்தனை ஆர்வம் காட்டவில்லை! முதன்முதலில், இப்படி 'நாள்' தள்ளிப்போன போது கூட …"அதுக்குள் இது நமக்கு அவசரமா கண்ணம்மா? லைஃபை நாம் துளியும் எஞ்சாய் பண்ண முடியாது கண்ணம்மா….புரிஞ்சுக்கோ ப்ளீஸ். வா…நாம டாக்டரைப் போய்ப் பாக்கலாம்" என்று கருக்கலைப்பு பற்றி மிகவும் சீரியஸாக ஆலோசித்தான்.
அவனை மேலும் கீழும் பார்த்த அந்த டாக்டர், "மிஸ்டர் பாஸ்கர், முதல் தடவை…முதல் குழந்தை…யூ ஹாவ் டு பி அ ப்ரவுட் ஃபாதர்! ஏன் கலைக்கணும்? ரேணுவோட ஹெல்துல எந்தக் காம்ப்ளிகேஷனும் இல்ல…நன்றாக யோஜித்து ஒரு முடிவெடுங்கள்…ஆல் த பெஸ்ட்" என்றார்.
ரேணு, மெதுவாக மாமியாரிடம் போய், இதுமாதிரி என்றபோது, அவருமே சற்று ஆதங்கப்பட்டார். …."என்னடா பாஸ்கர்! ரேணு முதன்முதலா உண்டாயிருக்கா! கொஞ்சமாவது பொறுப்போடு நடந்துக்கோப்பா. நல்ல டானிக், வைட்டமின், பழங்கள் என்று வாங்கிக்கொடுத்து அவளை போஷாக்கா கவனிச்சுக்கோ. பகவானை வேண்டிண்டு சொச்ச காலமும் நல்லபடியாப் போகணும்னு வேண்டிக்கிறேன்"....
அம்மா இப்படிச் சொன்ன பிறகு பாஸ்கருக்கு வேறு வழியில்லாது போயிற்று. இருந்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் "இதோ பாரு ரேணு! எங்கம்மா பத்துப் பொண்ணைப் பெத்து ஏகக் கஷ்டப்பட்டுட்டா. என்னைப் பொறுத்தமட்டில், பொண் என்றாலே லயபிலிட்டி தான்…ஸோ, நான் என்ன சொல்ல வரேங்கிறது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். எஸ்! பொண்ணூ, பொண்ணுனு மனசுல அலை பாயாமச், சமத்தா ஒரு பிள்ளையைப் பெத்துண்டு வரப்பாரு. இந்த ஒன்றோடு "ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணு'னு நாம இருப்போம்." என்று முழங்கிய போது ரேணுவுக்கு அவனின் இன்னொரு முகமும் தெரிந்தது!
பிரசவம் ஆகும் வரையில் ரேணு வேண்டாத தெய்வம் இல்லை… தினமும் மலைக்கோட்டைப் பிள்ளையாரை கிரிவலம் செய்து பிரார்த்தனை பண்ணிக் கொண்டாள். "கடவுளே! பிள்ளையாரே! எனது வயிற்றில் நீ வந்து அமர்ந்து கொள்! நான் பிள்ளையும் கையுமா அவர்கிட்டப் போகணும்! சமயபுரத் தாயே! சமயத்தில் வந்து என்னைக் காப்பாத்து! உன்னோட கோவிலுக்கு நான் நடந்தே வரேன்" …இப்படி அவள் சதா சர்வகாலமும் வேண்டிக் கொண்டது வீணே போகவில்லை!
அவளை வாழ வைத்த தெய்வமாக ரகு வந்து பிறந்தபோது, அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை! அவன் பிறந்த யோகம், பாஸ்கருக்கும் வெளி நாட்டு வேலை கிடைத்து அமோகமாக வாழ்க்கை ஓடுகிறது!
முதல் தடவை உண்டானபோதே அத்தனை ரகளை செய்தவன், இப்போ மட்டும் மகிழ்ந்திடவா போகிறான்? சினிமாவிலும், கதைகளிலும் தான் கணவர்கள் இது விஷயத்தில் பெருமை கொள்வதும், மனைவியைச் சுற்றிச்சுற்றி வருவதும் நடக்கும் போலும்! ரேணுவுக்கு ஆயாசமாக இருந்தது.
"அம்மா! கார்ட்டூன் முடிஞ்சுடுத்தும்மா!" ரகுவின் மழலைக்குரல் அவளை நனவுலகிற்குக் கொண்டு வந்தது. 'ஓ! மணி பதினொன்றாயிடுத்தே!'... ரகுவிற்கு ரசம்சாதம் ஊட்டிப் படுக்கச் செய்தாள். வாய்க்கு ஏதும் வேண்டி இருக்கவில்லை…தண்ணீர் குடித்தால் கூட வாந்தி வரும்போல் இருந்தது. சொல்லத் தெரியாத வேதனையும், மன அழுத்தமும் சேர்ந்து கொள்ளவே, 'அராப் டைம்ஸ்' பத்திரிக்கைய எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தவள், பத்தே நிமிஷத்தில் கண் அயர்ந்து போனாள்.
மாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பாஸ்கர் வரும் நேரம். ஸ்விஸ் காட்டன் புடவையை உடுத்திக் கொண்டு ரெடியானவள், டாக்டரிடம் சென்றுவர எத்தனை நேரமாகுமோ என்று ரகுவிற்கு பிஸ்கட்டும், டானிஷ்டைரி மில்க்கும் எடுத்துக் கொண்டாள். அவளது இஷ்ட தெய்வமான அகிலாண்டேஸ்வரியிடம் போய் நின்று ஒரு நிமிஷம் தியானித்தாள்.
"ஏய் ரேணு! கெட் ரெடி…ஃபோனிலேயே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு. மசமசனு நிக்காமச் சீக்கிரம் கிளம்பு"...டக்கென்று குழந்தை ரகுவைத் தூக்கிக் கொண்டவன் விடுவிடுவென்று காரை நோக்கி நடந்தான்.
பாஸ்கரின் மூட் சரியில்லை என்பது, அவன் காரை ஓட்டிய விதத்திலிருந்து தெரிந்தது…ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை… என்னவாகப் போகிறதோ என்ற விசனத்தில் ரேணுவும் மெளனித்தாள்.
"கங்கிராட்ஸ் மிஸ்டர் பாஸ்கர்! இட்ஸ் பாசிட்டிவ் அண்ட் கன்ஃபர்ம்டு" என்ற போது, பாஸ்கரின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவன், "வெல் டாக்டர்! அடுத்த செக்கப் எப்போது?" என்ற போது அவன் குரல், கிணற்றிலிருந்து பேசுவது போல் இருந்தது. அநியாயத்துக்கு முகம் இருண்டு போயிருந்தது…
மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ரேணு வந்தபோது, "ஏய் ரேணூ! இதெல்லாத்தையும் தலையைச் சுத்தித் தூக்கி எறி! ஏதேனும் ஸ்வீட் சாப்பிட்டோ, பப்பாளிப்பழம் சாப்பிட்டோ, இல்லாட்டா வெல்லம் சேர்த்த எள்ளுருண்டை சாப்பிட்டோ, மொதல்ல இதைக் கலைக்கிற வழியைப் பாரு! அராப் கண்ட்ரிங்கிறதால, இங்கெல்லாம் டாக்டர்ஸ் ஏதும் பண்ண மாட்டா. எது சட்டத்துக்குப் புறம்பாப் பண்ணினாலும், கையையும் காலையும் எல்லொருக்கும் முன்னாலே வெட்டி சாச்சுடுவாங்க…ஸோ..பீ அ குட் கேர்ள்" என்று கர்ஜித்த போது, ரேணுவின் கண்களுக்கு பாஸ்கர் ஒரு கொலைகாரனாகத் தான் தெரிந்தான்….
பேசிய கையோடு, அலி பக்காலாவிலிருந்து ஒரு பப்பாளிப் பழத்தையும் வாங்கி வந்தான். வருவது வரட்டும் என்று ரேணுவும் முழுங்கி வைத்தாள். ஒரு வாரமாயிற்று. குமட்டலும் வாந்தியும் நின்ற பாடில்லை…உடம்பு மிகவும் சோர்ந்து போயிற்று. பாஸ்கரின் பிபி எகிறியது.
"ஏய் ரேணு! வாட்ஸ் கோயிங் ஆன்? நீ என்ன அந்த டாக்டர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிடறியா என்ன? ரொம்பக் கூலா இருக்கே! ஒரு ரிஸல்டும் தெரியல…"என்று அவன் வெடித்தபோது அழக்கூடத் தோன்றவில்லை ரேணுவுக்கு. "கடவுளே! இது எங்க போய் முடியும்னு தெரியலையே! என்று மனசுக்குள் தவித்தாள். இந்தியா சென்று இவன் சொல்கிறார்போல் இதைக் கலைத்துவிட்டு வரலாமென்றால் அதுவும் சரிப்பட்டு வராது….
இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் நாற்பது நாட்கள் விடுமுறையில், மாமியாரையும், ஒரு நாத்தனார் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு டெல்லி, காசி, ஹரித்வார், திருப்பதி என்று ஒரு புனிதப் பயணமே சென்று வந்திருந்தார்கள். அப்படியே ரகுவிற்குக் குலதெய்வக் கோவிலில் மொட்டை அடித்துக் காதுகுத்தும் விழாவையும் நடத்தியாயிற்று. மீண்டும் கிளம்புவதானால், இன்னும் இரு வருஷங்களுக்குச் செலவுகளைத் தாக்குப் பிடித்தால்தான் முடியும். மேலும் ரகுவின் பள்ளி அட்மிஷன் வேறு…
பாஸ்கரும் கூட மேற்படியாகத்தான் யோஜித்துக் கொண்டிருந்தான்…"ஸ்டுப்பிட் கேர்ள்! கொஞ்சம் கூட கேர்ஃபுல்லாக இல்லாமல் இப்படிப் பண்ணிண்டு இருக்கா பாரு…ஒவ்வொரு பொம்மனாட்டிகள் எவ்வளவு சம்ர்த்தாகவும், சாமர்த்தியமாகவும் இருக்கிறார்கள்…இந்த ரேணு கொஞ்சம் கூட ஸ்மார்ட் கிடையாது…எல்லாத்திலயும் பூஜ்யம் தான்".....எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது பாஸ்கருக்கு. தினமும் ரேணுவிடம் எள்ளும் கொள்ளுமாக வெடித்தான்.
அடுத்து வந்த வாரத்தில் மெடிக்கல் செக்கப்புக்குப் போன போது, குழந்தையின் ஹார்ட்பீட்டும், வளர்ச்சியும் சீராக இருப்பதாக டாக்டர் சொன்னபோது, அவனது எரிச்சல் இன்னமும் அதிகமாகிப் போனது. அன்றிலிருந்து குழந்தை ரகுவின் மீதும் அனாவசியமாக எரிந்து விழுந்தான்.
"இதோ பார்! ஜஸ்ட் மூணுமாசம்தான் ஆறது. இன்னும் டயம் இருக்கு….எதையாவது ஹெவியாத் தூக்கி…என்னமாவது பண்ணித் தொலை…எப்படியாவது கலைகிறதானு பார்ப்போம்...என்னோட கம்பெனில எனக்கு ப்ரமோஷன் வரும்போல இருக்கு…அதுக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டயம் ஒர்க் பண்ணனும்னு இருக்கேன்…அதுக்கு நீ இப்போ சரியான முட்டுக்கட்டை போடறே…சே!'....
ரேணுவின் மனது அமைதி இழந்தாலும், ரகுவின் பேச்சும், விளையாட்டும் அவளை இலேசாக்கியது. பள்ளிக்கு அவனைக் கொண்டு விட்டு வரும்போது கிடைத்த சிலரின் தோழமையும் அவளுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
அவர்களது ஃப்ளாட்டின் கீழ்த்தளத்தில் இருந்த எகிப்தியப் பெண்மணி, தனது பெண்குழந்தை ஸைமாவைத் தினமும் ரகுவோடு விளையாடச் செய்வாள். அவ்வப்போது புதிய பழங்களைப் போட்டு, நல்ல பழச்சாறு செய்து ரேணுவுக்குக் கொணர்ந்து கொடுப்பாள். வாரா வாரம், அவள் பக்கத்துக் கடையிலிருந்து காய்கறிகள் வாங்கி வந்து தருவாள். யாராய் இருந்தால் என்ன? ஒரு பெண்ணின் கஷ்டத்தை மற்றொரு பெண் புரிந்து கொண்டு, சமயத்தில் உதவ முன்வரும்போது, மனிதாபிமானம் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்றே தோன்றியது. கடவுள் எல்லாக் கதவுகளையும் அடைத்துவிடுவதில்லை…ஏதேனும் ஒரு சாளரத்தின் வழியே ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை காட்டுவார்….
அன்று செக்கப் தினம். ரேணுவைப் பரிசோதித்த டாக்டர், "ரேணு! இட்ஸ் எ கேர்ல்! அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையிலே ரொம்பவே கிளியராத் தெரியறது. டெலிவரிக்கு இந்தியா போகலயே? இங்க தானே வச்சுப்பே?" என்றார். "ஆமாம் டாக்டர்…இந்தியா போகப் போறதில்ல..இங்க தான்" என்றாள் ரேணு.
டாக்டர் "பெண்" என்று சொன்னபோது ரேணுவுக்கு ஏற்பட்ட உற்சாகம் பாஸ்கரின் கடுகடுப்பில் அமுங்கிப் போனது.
"எனக்கு அப்போவே தெரியும்…சும்மா இருக்காமல், ரகுவுக்குப் பொண் வேஷம் போட்டதும், புடவை கட்டி அழகு பார்த்ததும், பூவச்சுப் பின்னி போட்டோ எடுத்ததும்….ஹூம். பொண்ணய்ப் பிறந்து, பொண்ணாய்ப் பெற்று, எங்கம்மா பட்ட கஷ்ட்ம் போறாதா? எதற்காகப் பெண் பெண் என்று பறந்தாயோ?" பொரிந்து தள்ளினான்.
ரேணுவுக்கு அந்த மனநிலையிலும் சிரிப்பாக வந்தது…இப்பவும் கூடத் தன் அம்மாவின் கஷ்டத்தைத்தான் சொல்லுகிறானே தவிர, இவனது பேச்சாலும், செய்கையாலும் அவஸ்தைப்படும் தன்னுடைய கஷ்டத்தை உணர்ந்தான் இல்லையே! கொஞ்சம் கூட அனுசரணை கிடையாது…கண்களில் குளம் கட்டியது அவளுக்கு.
"ஏய் ரேணு! என்னோட சிகப்பு டை எங்கே போச்சு?"...பாஸ்கரின் கத்தலில் ரேணுவின் எண்ண ஓட்டம் அறுந்தது. 'இதோ வந்துட்டேன்…டை ஹாங்கரில் இருந்ததே"...ஓடிப்போய்ப் பார்த்த போது, அது அங்கேதான் இருந்தது. …இருந்தாலும் தன்னை இப்படி அலைக்கழிக்கக்கூடாது என்று பொருமியபடி எடுத்துத் தந்தாள். ஒரு 'பை' கூடச் சொல்லாமல் தடதடவென்று வெளியேறினான் பாஸ்கர்.
டெலிவரிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. எனிடைம் வலி எடுக்கும் என்பதால் ஒருவாரம் முன்கூட்டியே அட்மிட் ஆகும்படி இருக்கும் என்று பாஸ்கர் சொல்லிவிட்டான். மனசுக்குள் படபடப்பு கூடியது. பெண் குழந்தை என்று தெரிந்து விட்டது….. என்ன பேர் வைக்கலாம்?
ரேணுவுக்குத் தன்னுடைய அம்மாவின் பேரை வைக்கணும் என்றிருந்தது. அருமை பெருமையாகத் தன்னை வளர்த்த தாய்க்கு, எத்தனை மரியாதை செய்த போதும், எப்படி அன்பு காட்டினாலும், அம்மாவின் பெயரைத் தனது பெண்ணுக்கு வைத்துக் கூப்பிடுவதில் அலாதி உயர்வு இருப்பதாகப்பட்டது ரேணுவுக்கு.
'அம்ருதவல்லி' என்ற தனது தாயின் பெயரை வைத்துக் கூப்பிடும் பெயராக 'அம்முலு' என்று அழைக்கலாம்….. இந்த எண்ண ஓட்டத்தில் அவளது மனசு கொஞ்சம் பரவசப்பட்டது. தனது பருத்த வயிற்றைத் தடவியவள்…'அம்முலு! அம்முலுக்குட்டி!' என்று சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
அக்டோபர் பதினாலு….இன்றுதான் அட்மிட் ஆகணும். ரகுவை மிஸஸ் பிரபுவிடம் விடணும்…ரொம்பவும் நல்ல மாதிரி. தான் குட்டிப் பாப்பாவோடு வரும்வரையில் ரகு அவர்களொடு சமர்த்தாக இருக்கணும் என்று படித்துப்படித்துச் சொல்லியாயிற்று. ரகுவும் சமர்த்தாக இருப்பேன் என்று சொல்லிவிட்டான்…இருந்தாலும் தான் இல்லாமல் குழந்தை ஏங்குவானே என்றிருந்தது. அவனை மடியை விட்டு இறக்காமல் கொஞ்சியபடியே இருந்தாள். அன்றைய தினம் பாஸ்கரின் பிறந்த நாளாக இருந்தபடியால், அவனுக்குப் பிடித்த அக்கரவடிசல் செய்து நிவேதனம் செய்தாள்.
பாஸ்கருக்குப் பிடித்த வற்றல்குழம்பு, மிளகு குழம்பு, பருப்புப் பொடி, எல்லாம் ரெடி பண்ணி வைத்தாள். வடகமும், அப்பளமும் பொரித்து டப்பர்வேரில் போட்டு வைத்தாள். குட்டிக் குட்டி கண்டெய்னரில் தயிர் தோய்த்து வைத்தாள். எலக்ட்ரிக் குக்கரில் சாதம் வைத்துக்கொண்டால் ஆயிற்று…
தனக்குத் தேவையான உடுப்பு, சோப், டவல், ப்ரஷ், பொட்டு..ஒரு சின்ன பிள்ளையார் முதலியவற்றை பாக் செய்து கொண்டாள். சுவாமியை நமஸ்கரித்து எழுந்தவளுக்கு அடக்க மாட்டாமல் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
"என்னை நல்லபடி அனுப்பி வை தாயே! உடல் ஊனமில்லாமல், எந்தக் குறைபாடும் இல்லாமல், நல்லபடி பெற்றுப் பிழைத்து வர அனுக்ரஹம் பண்ணு தாயே!' என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.
ரேணுவை மருத்துவ மனையில் அட்மிட் செய்த பாஸ்கர்…"சரி..நான் கிளம்பறேன்…நீ தைர்யமாக இரு. நான் திரும்பவும் நாளை வருகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டான்.
சற்றுக் கண் அயரலாமென்று ரேணு படுக்கையில் சாய்ந்த போது பயங்கரமாக வலி எடுத்தது. 'சிஸ்டர்…சிஸ்டர்!.....தாங்க முடியல…"என்று அரற்றினாள். சிறிதும் தாமதிக்காமல், உடனடியாக அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தன. ரேணுவின் அருகில் குவித்து வைத்த ரோஜாப் பூவாக இருந்தது குழந்தை…. கண்கள் கருந்திராட்சை போல் பளபளவென்று….
பாஸ்கர் உடனே திரும்பியிருந்தான். "ஹை ஸ்வீட்டி ரேணு! குட்டிப் பொண்ணைப் பார்த்தாயா? அப்படியே லட்டு மாதிரி!"....என்றவன் ரேணுவின் கன்னத்தைத் தட்டி, அவளது கைகளைத் தனது கைக்குள் புதைத்துக் கொண்டான்…
"ஆபீஸில் எல்லோருக்கும் ட்ரீட் தரணும் கண்ணம்மா! போகும்போது, நிறைய சாக்லட், கேக் எல்லாம் வாங்கிண்டு போகணும். அப்புறம் பெர்ஸனல் டிபார்ட்மெண்ட்ல, குழந்தையோட பர்த் ஸர்ட்டிபிகேட்டுக்காக பேர் கேட்டார்கள். என்னோட அம்மா பேரு குழந்தைக்கு இருக்கட்டுமேனு ராஜம்மா என்ற பேரைச் சுருக்கி ராஜஶ்ரீ அப்படீனு குடுத்திருக்கேன்".....பேசிக் கொண்டே போனவனைப் பார்க்கப் பிடிக்காமல் தன் கைகளை விடுவித்துக் கொண்டாள் ரேணு.
"உங்கம்மா பேரை வைத்து உங்கம்மா மாதிரியே நம்ம பொண்ணும் கஷ்டப்படணுமா என்ன?"....என்று நினைத்துக் கொண்டவள் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், "இது என்னோட அம்முலுக் குட்டி' என்று சொல்லியபடியே அந்தப் பிஞ்சுக் குழந்தையை நெஞ்சாரக் கட்டிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்தக் குட்டிப் பெண் அம்முலுவும் அம்மாவை ஆறுதல் படுத்தும் வகையில் "ங்கா" என்று குரல் கொடுத்தது.
— பானுரவி / சிங்கப்பூர்
பானுரவி / Banooravi
சிறுகதைகள் →