சிறுகதை

மாஜுலா சிங்கப்பூரா

c. 2017

சிங்கப்பூரின் ஐம்பத்திரண்டாவது சுதந்திர தினம். சென்டோசா தீவுத்திடலில், எண்பது வயது ஆசிரியர் மணிவாசகத்துக்கு 'நல்லாசிரியர்' விருது. அவரது மகன் விவேகானந்தனும் பேரன் செல்வமும் கூட. மணிவாசகத்தின் நினைவுகளில் 1943-ன் நேதாஜி உரை, விவேகானந்தரின் சிகாகோ உரை, பாரதி, ஔவை — அனைவரின் குரல்களும் எழுகின்றன. கடைசியில் விவேகானந்தனின் மனதில் எழும் தெளிவான முடிவு — எங்கு நம் இடம் என்பதை அந்த மாலை வேளை சொல்லி விடுகிறது.

மாஜுலா சிங்கப்பூரா "ஆலயமெங்கும் மணியொலி கொஞ்சின அகமது குளிர்ந்திடவே ஆயிரம் எழில்வகை அனைவரும் ஒற்றுமை அழகிய காட்சிகளே! போயின ஊர்வலம்! முகங்களும் பூத்தன! பேதங்கள் நீங்கியதே! வாயிதழ் போற்றிடும் வாழ்த்தொலி சூழ்ந்தன "வாழிய சிங்கப்பூர்!" கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் வகையில், செந்தோசாத் தீவுத்திடலில் அந்த அரங்கம் களைகட்டியிருந்தது. எங்கும் வண்ண மயம்! எதிலும் இன்பமயம்! சரிகைத் தோரணங்களும், மின்னும் சரவிளக்குகளும், பூக்களின் எழில்கோலமும், இனிய சங்கீதமும் இதமான தென்றலும் அந்தச்சூழலை இன்னமும் அழகாக்கிக் காட்டின. அணியணியாகத் திரண்டு கொண்டிருந்த மக்களை உள்வாங்கிக் கொண்டிருந்த அந்த அரங்கின் உட்புறங்களில் 'சிங்கப்பூர் ஐம்பத்திரண்டு' என்ற பொன்னெழுத்துக்கள் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. நீலவான் நித்திலப்பூம்பந்தலிலே, கோலவொளி கூட்டிக் கோத்திலங்கும் மின்னொளி போலத் தோன்றாத்தோன்றித் துறைபல முடித்த ஆன்றவிந்த சான்றோர்களில், ஐம்பத்திரண்டு பேரை முன்னிலைப்படுத்தி அன்றைய நாளில் கௌரவித்துப் பொற்கிழியும் நற்சான்றிதழும் அளித்துப் பெருமைப்படுத்தும் வகையில் அழைத்திருந்ததால், அச்சான்றோர் கூட்டம் ஆங்கே முன்வரிசையில் அமர்ந்திருந்தது! தண்ணீர் நிலநலத்தால், தக்கோர் குணக் கொடையால், கண்ணீர்மை மாறாக் கருணையால், கடல்சூழ்ந்த வையத்துள் அற்புதமாய், அழகுசிரிக்கின்ற ஆற்றல்மிகு சிங்கப்பூரின் ஐம்பத்திரண்டாவது சுதந்திரதினம் அல்லவா? அந்நாள் என்றென்றும் சரித்திரத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டு, அத்தனை பேருக்கும் அமுதமாய் இனிக்கும்படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! கலை நிகழ்ச்சிகளும், கருத்துப் பரிமாற்றங்களும், பிரதம மந்திரியின் அருமையான பேச்சுரையும், அயல்நாட்டுப் பெருந்தகையாளர்களின் முத்தாய்ப்பான அணிந்துரையும், என்றென்றும் நினைத்தாலே இனிக்கும்படி மிக்க கவனமாக நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தன. சிங்கையின் 96.8 வானொலி தேனொலியாகி நிகழ்வினை வர்ணனை செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்தது! ....'அதோ! நமது கதையின் நாயகன் மணிவாசகம் தனது மகன் விவேகானந்தனுடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்! எண்பது காணும் இளையவராக, எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் அவரை நாம் கண்ணுறும்போது, மாபெரும் இமயமொன்று கம்பீரமாக அமர்ந்திருப்பது போல் இருக்கிறது! அவரது நினைவுத்தாகத்தில் அன்றைய சிங்கப்பூரும், அவரது இளம்பிராயத்து நினைவுகளும் கண்ணெதிரே விரியக் காண்கிறோம்..... அப்போது அவருக்கு சுமார் பத்து வயதிருக்கலாம். இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலம்! ஜப்பானின் பிடியில் சிங்கப்பூர் துவண்டு கொண்டிருந்த காலம்! மணிவாசகத்தின் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த படியால், இயல்பாகவே நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒருசேர அவரது எண்ணத்தில் உரம் பாய்ச்சிக் கொண்டிருந்தது! இந்திய சுதந்திரத்திற்காக 1943-இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பான் வானொலியில் ஆற்றிய உரை சிங்கப்பூர் தமிழர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டது! தமிழர்களின் வீரத்தையும், தன்மானமுடன் போரிடும் குணத்தையும், அனைத்திற்கும் மேலாக நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர்கள் என்பதையும் அறிந்த சுபாஷ் அவர்கள், தனது ஆங்கில உரையைத் தமிழில் மொழியாக்கம் செய்து வானொலியில் ஒளிபரப்பச் செய்யும்படி செய்ததால் ஏற்பட்ட சிங்கப்பூர்த் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைக் கண்ட ஜப்பானின் பிரதம மந்திரியான ஜெனரல் டேஜோ, மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் பிடித்து வைத்திருந்த சுமார் 8,000 இந்தியர்களை இந்திய ராணுவத்தில் சேர அனுமதித்தார். டொராச்சி என்ற ஜப்பானின் முக்கிய அதிகாரியும், டேஜோவும் சுபாஷ் ஏக்குக்கும் புகழ்ந்து தள்ளினர். "தாய்நாட்டு விடுதலைக்காக உழைக்கும் ஒரு சுத்தமான, தைரியமான வீரனென்றும், தலைவனென்றும்" போற்றின. இந்தியாவின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த வீரர்களின் பேச்சும் செயலும், பாரதியின் உணர்வுமிக்கக் கவிதைகளும் ஒவ்வொரு மறத்தமிழனின் உடம்பிலும் புதுரத்தம் பாய்ச்சிக் கொண்டிருந்தன. "நீண்ட இரவு முடிவடைகிறது! கடும்துன்பம் விலகுகிறது! பிணம் போல் கிடந்த உடல் சிலிர்த்தெழுகிறது! மரபுகளும், வரலாறும் கூட அறுதியிட்டுப் பார்க்க முடியாத காலந்தொட்டுத் தோன்றிய நமது நாட்டின் குரல் சுநாதமாக எங்கும் ஒலிக்கிறது! தூங்கியவன் விழித்து எழுகிறான்! அந்த தேசத்தின் குரல், வலுவிழுந்த நிலையில் இருக்கும் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் ஒரு புதுசக்தியை ஊட்டுகின்றன! எந்தவிதப் புறசக்தியும், நமது தாய்நாட்டை இனி அடிமைப்படுத்தப் போவதில்லை! எனது இனிய சகோதரர்களே! விழிமின்! எழுமின்!! கருதிய கருமம் கைகூடும்வரை உழைமின்!!!.... ---சுவாமி விவேகானந்தர் 1897-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஆற்றிய அந்த உரை, ஒலிபரப்பப்பட்டபோதெல்லாம் மணிவாசகத்தின் நரம்புகள் முறுக்கேறிக் கொள்ளும்! மணிவாசகத்தின் தந்தையும், அவரது மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் கண்டு மகிழ்ந்து அவரை ஆசிரியப்பயிற்சிக்குப் பயிற்றுவித்தார். தன்னிடம் பயின்ற மாணவர்களுக்குச் சிங்கையின் தனித்துவத்தையும், இயற்கை ஏற்படுத்தித் தந்திருக்கும் வளங்களையும், போதித்தார். அவரிடம் கற்ற மாணவர்கள் மொழியிலும் பண்பிலும் சிறந்து விளங்கினார்கள். சிறந்த சமுதாயம் என்பது சிறந்த மக்களால் மட்டுமே ஏற்படும்! சிறந்த சிந்தனையும், ஒருமித்த மனமும், ஒழுக்கமும், படிய வேண்டுமானால், நல்லாசிரியன் வேண்டுமல்லவா? அதனால்தானே எழுத்தறிவித்தவனை இறைவன் என்கிறோம்! மணிவாசகத்தின் போதனையில், அறிவுரையில் சிந்திக்கும் நன்மக்கள் பிறந்தார்கள்! மனம்போன போக்கெல்லாம் போகாமல், மாற்றானைத் துணை என்று நம்பாமல், நிலையில்லாக் காரியத்தை நிகழ்த்தாமல், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லாமல், வஞ்சனை செய்வாரோடு இணங்காமல், குற்றமேதும் பாராட்டித் திரியாமல், செய்நன்றி எப்போதும் மறவாமல், சினம் தேடி அல்லலைத் தேடாமல், பெரியாரைப் புறந்தள்ளி ஒழுகாமல், மூத்தோர் சொல் வார்த்தைகளை அவமதிக்காமல்.....ஒரு எழுச்சிமிக்க மாணவ சமுதாயத்தை அவரால் உருவாக்க முடிந்தது! மடல்பெரிது வாழை என்பர்; மகிழ் இனிது கந்தம் என்பர்; கடல் பெரிது என்பர்; ஆனால், அம்மாபெருங்கடல் அருகில் ஒரு சிறு ஊற்று இருந்தால், சிறியதாக இருந்தாலும் அதன் நீர் அனைவருக்கும் பயன்படுதல் போலச், சிறு சிவப்புப் புள்ளியாக உலக வரைபடத்தில் காணப்படும் நமது சிங்கப்பூர், அனைத்து நாடுகளும் பயன்பெறும் வரையில் அற்புதமான துறைமுகத்தைப் பெற்றிருப்பதை அவர் பாங்குற விளக்கும்போது, சிங்கப்பூரின் மாண்பு அனைவரையும் வியக்கச் செய்யும்! மருவினிய சுற்றமும், வான்பொருளும், நல்லுருவும், இன்புறு மக்களும் கொண்ட சிங்கப்பூரின் வளமைக்கும், முன்னேற்றத்திற்கும் அடிக்கல் நாட்டிய அநேகப் பெருந்தகையாளருள் மணிவாசகமும் ஒருவராகிப் போனார்! "மாணிக்கம் வேண்டேன்; மடிநிறையப் பொன்வேண்டேன்! காணிக்கை நேர்ந்தேன்; கைநிறையப் பிள்ளையென்று! வாடிய நாளெல்லாம் வருந்தித் தவமிருந்து...தேடிய நாள்தன்னில் செல்வமாய் வந்த கண்ணே!'...என்று செட்டியார்கள் சிங்கப்பூரில் செய்துவைத்த தெண்டாயுதபாணித் தெய்வத்தை அவர் வணங்கிப் பெற்ற பிள்ளை தான் விவேகானந்தன். மாற்றுக்குறையாத தங்கமென அச்சிங்கம் வளர்ந்துவரும்போது, மேற்படிப்புக்கென உதவித்தொகை கிடைத்துக் கனடா செல்லும் காலம் வந்தது! தந்தையையும், தாயையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் விவேகானந்தன் தவித்தபோது, மணிவாசகம் நிறையவே எடுத்துரைத்தார். 'எந்தப் பறவை தனியாகப் பறந்தாலும் அதற்குத் தான் வலுவான சிறகுகள் இருக்கும்! எனவே துணிவுடன் சென்று படித்துவா. சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட மனிதர்களால்தான் சரித்திரமும், சாதனையும் படைக்க முடிந்துள்ளது! எத்தனை தூரம் பயணித்தாலும் உனது வேகம் சூறாவளியாய் இருக்கவேண்டும்! ...என்று உற்சாகப்படுத்தினார். நன்றாகப் படித்ததால், ஒரு நல்ல கம்பெனியில் உயர்ந்த வேலை கிடைத்தது. நாளடைவில் திருமணமும் ஆகிக் குடும்பமாக அந்த தேசத்தில் வாழத் துவங்கியபோதுதான், மணிவாசகத்தையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினான். ஆனால், மணிவாசகம் மறுத்துவிட்டார்...'மறைந்துவிட்ட உனது தாயாரின் நினைவுகள் அவ்வப்போது மலர்ந்து என்னைப் புதுமனிதனாக்குகின்றன. பேச்சும் மூச்சும் சிங்கப்பூர் என்றே இருந்துவிட்டேன்...பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தது அல்லவா?'என்று அவர் கூறியபோது, அவரின் நாட்டுப்பற்றினை அறிந்து விவேகானந்தனும் அதிகம் வற்புறுத்தவில்லை! வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும்கூட 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று நிறையப் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித்தந்து தனது பொன்னான நேரத்தைப் பிறர் பயனடையச் செய்துவரும் அவரது தொண்டை அவன் அறிவான்! ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப் பெருமைப்படுத்தி, அவர்களுக்கு வாழ்நாள் விருது வழங்க அரசாங்கம் முடிவெடுத்த போது, மணிவாசகமும் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்பட்டு சிங்கப்பூரின் இந்த ஐம்பத்திரண்டாவது சிறப்புவிழாவில் கௌரவிக்கப்படுகிறார் என்று அறிந்ததும், மனைவி மக்களோடு கிளம்பி வந்திருந்தான். எத்தனை மாணவர்களை மாணிக்கங்களாக அவர் உருவாக்கி இருக்கிறார்! விவேகானந்தனுக்கு ஆனந்தத்தில் நெஞ்சு விம்முகிறது! தனது பிள்ளை செல்வத்தை அணைத்துக் கொண்டு தனது தந்தையைப் பற்றி, அவரது தமிழ்மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் உயர்வாகச் சொன்னான். அதனால்தானோ என்னவோ வந்ததிலிருந்து அவனது மகன் செல்வம் அவனைத் துளைக்க ஆரம்பித்துவிட்டான். 'அப்பா! நாமும் இங்கேயே இருந்து விட்டால் என்ன?' ... மணிவாசகத்தின் அன்பும், அருமையாக அவர் சொல்லித்தந்த கதைகளும், செல்வத்திற்கு நிரம்பவே பிடித்துப் போயிற்று! பச்சைப்பசும்புல்வெளியும், மச்சுவீட்டினும் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களும், அதன் உச்சிக் கிளையில் பாடுகின்ற கருங்குயிலும், தணிக்க முடியா வியர்வை ஊற்றாய்ப் பெருகினாலும், உடனே மழைபெய்து குளிரூட்டும் கார்மேகமும்....அள்ளும் அழகுடைய சோலையும், வண்ண விளக்குகளால் மின்னித்தெறிக்கும் நீர்வீழ்ச்சிகளும்.....அந்தக் குட்டிப் பையனை ரொம்பவே கவர்ந்திழுத்தன. விவேகானந்தனும் மலைத்துப் போயிருந்தான். எத்தனை மாற்றங்கள்! ஒரு குட்டி 'காட்சிப்பெட்டி' போல் பசுமை கெடாமல், எத்தனை புதுமைகள் இந்நாட்டில் காணக் கிடக்கின்றன! நவீன முறைத் தொழில் நுட்பங்களும், விரல் நுனியில் தகவல்நுட்பமும், முதல்தரமான வாழ்க்கைத்தரமும், ஒழுங்கு சிதராத மக்களின் மேம்பாடும், அயல்நாட்டினரின் வருகைப்பெருக்கமும், தடைகள் வாராத மின்வண்டிப் போக்குவரத்தும்....ஆலயமும், பிரார்த்தனையும், கலையும், கொண்டாட்டமும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், கடினமான உழைப்பும்!.. ஒ!...இது சாத்தியமா?...அந்த மாமனிதர் லீகுவான்யூ, அவர்களின் கனவு தேசமல்லவா இது? அறிவார்ந்த அந்தச்சிற்பி செதுக்கிய அழகிய சிற்பமல்லவா இந்த அழகிய சிங்கப்பூர்? மக்கள் அனைவரும், மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு லீகுவான்யூ, என்ற மயன் செய்த சித்திரக் கூடமல்லவா இந்தச் சிங்கப்பூர்? கடுமையாக, நேர்மையாக, ஒழுக்கமாக, உழைப்பவர்களின் சுவர்க்க பூமியாகிய இந்தச் சிங்கப்பூரில் வாழ்வதற்கு நிச்சயமாகக் கொடுப்பினை இருத்தல் வேண்டும்! 'எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் எல்லா உரிமையும், உடைமையும்....எல்லோருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் சுதந்திரம்....இந்த இருபதாம் நூற்றாண்டில் உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப்பூரில் தானும் பிறந்ததை எண்ணி அவனுக்குப் பெருமையாக இருந்தது! சீனர்களும், மலாய்க்காரர்களும், தமிழர்களும், பிற தேசத்தவரும் அமைதியாக, அன்றாட வாழ்வில் எவ்வித இடையூறும் இல்லாத வாழ்வு வாழவேண்டுமென்றால், அதற்கு அரசாங்கம் எத்தனை தூரம் திட்டங்கள் வகுத்து அமலாக்கம் செய்திருக்க வேண்டும்! எத்தனை முகம் தெரியாத மனிதர்களும், கரங்களும் உழைத்து இந்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றனவோ! 'வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்! நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயரும்! கோன் உயரக் கொற்றம் உயரும்; கொற்றம் உயரக் குடிமக்கள் உயர்வர்'... எப்போதோ இளமையில் படித்த ஔவையின் மொழி சிங்கப்பூரில் நிதரிசனமாகத் தெரிந்தபோது அவனுக்கு மெய் சிலிர்த்துப் போயிற்று! ....'அன்பார்ந்த மக்களே! இதோ நமது பிரதம மந்திரி திரு.லீசியாங்லூங் அவர்கள் உரையாற்ற வருகிறார்.' அறிவிப்பைத் தொடர்ந்து அமைதி நிலவிற்று. கற்றவர்க்கு அழகு கசடற மொழிதலும், கற்றுணர்ந்து அடங்குதலும் என்பதற்கேற்ப சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர்களை நன்றியுடன் நினைத்தும், அறவழி காட்டிச் சென்ற அமரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், அவர் ஆற்றிய உரை மக்களிடையே பெருத்த கைத்தட்டலைப் பெற்றது. இன்னமும் சிங்கப்பூரின் தரம் உயர அனைவரும் நேசக்கரம் நீட்டவேண்டுமென்றும் கூறி, வருங்காலத்து முன்னேற்றத்துக்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் சிலவற்றையும் அவர் எடுத்துரைத்தார். அதன்பிறகு அனைத்து மந்திரிகளும் அவரவர் பங்குக்கு உரையாற்றி முடித்ததும், பரிசளிப்பு விழா தொடங்கிற்று. மணிவாசகத்தின் பெயர் அழைக்கப்பட்ட போது, 'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்' என்று சொன்ன கவியரசர் கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்து அவரது கண்களில் குளம் கட்டிற்று! அவரது பழைய மாணவர்களும், பழகிய தோழர்களும், அவரைப் பெரிதும் பாராட்டியபோது மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். ....விவேகானந்தனும் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் கரைந்து போயிருந்தான். 'அப்பா! தாத்தாவுக்கு அமைச்சர் பரிசு கொடுத்ததுபோல் உங்களுக்கு எப்போது கிடைக்கும்'? என்ற செல்வத்தின் யதார்த்தமான கேள்வி அவனை உலுக்கி எடுத்தது.... அதே சமயம் ஒலி 96.8-இலிருந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'இந்தத் தேசத்தின் குரல்...வெகுதூரத்தில் இதோ..உந்தன் செவியில் விழாதா? சொந்த வீடன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!' என்ற பாடல் ஒலித்தது....பிள்ளையின் கேள்வியும், தந்தையை கௌரவித்த இந்த அழகிய சிங்கை நாடும், சரியான சமயத்தில் ஒலித்த அந்தப் பாடலும் விவேகானந்தனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தன!. ஆம்...அவனது மனதில் தெளிந்த முடிவு தோன்றி இருந்தது! தனது அறிவுக்கண்ணைத் திறந்த தனது மகன் செல்வத்தை அணைத்துக் கொண்டு தனது தந்தையை எதிர்கொண்டவனின் கண்களில் வானவில்லின் வர்ணஜாலம் மின்னிற்று! தனது தந்தையைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு ...'அப்பா...இனிமேல் நாங்களும் உங்களுடனேயே சிங்கப்பூரில் வசிக்கப்போகிறோம்" என்று சொன்னபோது, சடசடவென்று சில்லென்று ஒரு மழை பெய்து எல்லோர் மனத்தையும் குளிர்வித்தது! அகமும் புறமும் குளிர்ந்து மணிவாசகம் தனது மகனைப் பற்றிக்கொண்டபோது 'மாஜுலா சிங்கப்பூரா' என்ற வாழ்த்துப்பாடல் தென்றலில் மிதந்து வந்தது!

பானுரவி / Banooravi

சிறுகதைகள்