சிறுகதை

வெள்ளை நிறத்தொரு பூனை

Singapore

மும்பையில் வேலை செய்த நந்துவின் ஜெனிவாவைச் சேர்ந்த மனைவி சாரா, பிரசவத்திற்கு ஆறு வாரங்கள் இருக்கையில், எண்பது வயது சாமித் தாத்தாவை ஜெனிவாவுக்கு அழைக்கச் சொல்லி கேட்கிறாள். ஆச்சாரமான தாத்தா, ஒருகாலத்தில் வெள்ளைக்காரப் பெண்ணை மருமகளாக ஏற்க உறவினர்களைச் சமாதானப்படுத்தியவர். ஜெனிவா ஏரியோரம் சாராவுடன் நடக்கிறார்; அவளுக்குப் பிடித்த சமையலை அறிந்து, தனது பழைய ஃப்ரெஞ்சில் ஆதரவாகப் பேசுகிறார். குழந்தை பிறந்த போது, தாத்தாவின் கைகளில் வைத்து சாரா சொல்கிறாள்: "பப்பீ, இது உங்கள் கொள்ளுப் பேரன்... நாங்கள் இவனுக்குப் பேர் வைத்துவிட்டோம் — சாம்சன், எங்கள் சாமி." தாத்தாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த சாராவைப் பார்க்கையில், எனக்கு ஐயோ பாவம் என்றிருந்தது. டெலிவரிக்கு இன்னும் ஆறு வாரங்களே இருந்தன. தினமும் அம்மா போன் செய்து கேட்டுக் கொண்டிருந்தாள். 'ஏய் நந்து! பிள்ளைத் தாய்ச்சிப் பொண்ணு... அவளுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடு; ஏதானும் ஆசைப்பட்டுக் கேட்டா வாங்கிக் கொடு... சந்தோஷமா வச்சுக்கோ... மன அழுத்தம் இல்லாமப் பார்த்துக்கோ' — இப்படி அம்மா சொன்னதாகச் சொல்லி ஏதானும் இருக்கா என்று கேட்டதுதான் தாமதம்... 'யெஸ் நந்து! ஐ வாண்ட் யுவர் க்ராண்ட்பா டு பீ ஹியர். ஷல் வீ இன்வைட் ஹிம்?' .....படு சீரியஸாக சாரா கேட்ட போது, இது எப்படி சாத்தியம் என்று புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன. எண்பது வயசு சாமித் தாத்தாவிடம் சாராவுக்கு வாஞ்சை ஏற்பட்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அவரால் தானே எங்கள் திருமணம் விமரிசையாக நடந்தது! மும்பை நரிமன்பாய்ண்டில் இருந்த ரஹேஜா சாம்பர்சில் இருந்தது எனது ஆபீஸ். ஜெனிவாவிலிருந்து, ஒரு ப்ராஜக்டுக்காக வந்திருந்த சாராவை எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. நாளடைவில், எங்கள் பழக்கம் நெருக்கமாகவே, சாராவை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். முற்போக்கு எண்ணம் கொண்ட எனது பெற்றோர்கள் சரி சொல்லி விட்டாலும், ஆச்சாரமான சாமித் தாத்தா என்ன சொல்லுவாரோ என்ற பயம் என்னைக் கலங்கடித்தது. தினமும், காயத்ரியும், ஜபதபங்களும், பூஜையுமாக இருப்பவர் தாத்தா. பாட்டி சென்ற வருஷம் காலமான பிறகு, அவரது நித்திய அனுஷ்டானங்கள் கூடிப் போயிருந்தன. 'இதோ பாரு நந்து! நீ அந்தப் பொண்ணோட பழகி இப்போ கமிட் பண்ணிண்டாச்சு இல்லயா? இனிமேல் சொன்ன வார்த்தையைக் காப்பாத்தி, வாழ்ந்து காட்றதுதான் உனக்கு அழகு. மனசும் மனசும் ஒண்ணாயிப் போச்சுனா மகேஸ்வரன் கூடத் தடுக்க முடியாது. என்னோட ஆசீர்வாதம் உனக்கு நிச்சயம் உண்டு' என்ற போது பனிக்கட்டி தன்மேல் விழுந்தது போல் குளிர்ந்து போனான் நந்து. …'அது எப்படி வெள்ளைக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்? நம்ம குடும்பம் என்ன குலம் என்ன என்று கணேசன் மாமா கத்திக் கலாட்டா செய்த போது, தாத்தாவின் குரல் உயர்ந்தது. 'தோ பாரு கணேசா... ஜாதி, சாஸ்திரம், சம்ப்ரதாயம் எல்லாம் மலையேறிப் போயிடுத்து. இப்போவெல்லாம், கறுப்பு வெள்ளை இல்ல, மொழி பேதமில்ல, கலாச்சார பேதமில்ல....பரஸ்பர அன்போடும், ஆதரவோடும் வாழ்நாள் முழுவதும் ஒரு அர்ப்பணிப்போட, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தாலே பெரிசு! கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். நீயோ நானோ நடுவுல புகுந்து களை எடுக்கவோ, அறுவடை செய்யவோ முடியாது'...; சாமித் தாத்தாவின் சம்மதம் என்பது நூறு பேரின் ஒப்புதலுக்குச் சமம் என்பதால், சொந்தங்கள் அனைவரும் அன்போடும், ஆசையோடும் வந்திருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். இதை எல்லாம் நான் சாராவிடம் சொன்ன போது அவளுக்குத் தாத்தாவிடம் அலாதிப் ப்ரியம் ஏற்பட்டது நிஜம்! சாராவின் பெற்றோர்கள் ப்ரான்சில் இருந்தார்கள். கிட்டத்தட்ட நண்பர்கள், உறவினர்கள் என்று எண்பது பேருக்கு மேல் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். பொட்டு வைத்துக் கொண்டும், பூ வைத்துக் கொண்டும், புடவை கட்டிக் கொண்டும், காரசாரமான இந்திய உணவை ரசித்துக் கொண்டும் கலகலப்பாகக் களை கட்டி இருந்தது. பெரிய சமுத்திரங்கள் கடலில் சங்கமித்து ஒன்றாவது போல், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வந்திருந்த அனைவரும் எங்களை வாழ்த்தினார்கள்! …சாராவின் ஆசை நியாயமாகப் பட்டது என்றாலும், தாத்தாவின் வயது, உடல் நிலை, நெடுந்தூர விமானப் பயணம் என்று நிறைய முரண்பாடுகள் தெரியவே, அப்பாவைக் கூப்பிட்டுப் பேசினேன். தாத்தாவைக் கேட்டுவிட்டுப் பேசினார் அப்பா. 'டோண்ட் வொர்ரி நந்து. தாத்தாவுக்கு உங்களை வந்து பார்க்கணும்னு இருக்கு. நான் டாக்டர் கிட்ட மெடிக்கல் பிட்னெஸ் சர்ட்டிபிகேட்டும் ட்ராவல் இன்ஷூரன்ஸும் வாங்கிடறேன். அப்புறம் முதல் வகுப்பில் அனுப்பி வைக்கிறேன்'. மளமளவென்று ஏற்பாடுகள் செய்து, இதோ இன்று மாலை சாமித் தாத்தா வரப் போகிறார். ஜெனிவா ஏர்ப்போர்ட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் வீடு. வரும் வழியில் தெரிந்த ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களையும், டாலியா மலர்களின் அழகையும் சித்திரம் போன்ற வீடுகளையும், பசுமையான வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களையும் ரசித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் வந்தார். 'போன்ஷ்ர் பப்பீ.....கொம்மோ சவா?' (ஹலோ தாத்தா, எப்படி இருக்கிறீர்கள்?)—:ப்ரெஞ் வழக்கப்படி சாமித் தாத்தாவின் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு வரவேற்றாள் சாரா. 'கொம்மோ வா ஓத்ரு சாந்த்தே?' (உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது?) 'போன்ஷ்ர் சாரா, சவ்வா சவ்வா' என்றார் சாமித் தாத்தா. (ஹலோ சாரா, சௌக்யம்தான்!) ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தாத்தா கலெக்டர் ஆபீசில் வேலை செய்திருந்தார்; மேலும் ஸ்பானிஷும், :ப்ரெஞ்சும் அவருக்குத் தெரிந்திருந்தது. வீடும் தோட்டமும் படு நேர்த்தியாக இருந்தது. திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்திருந்த வெள்ளிப் பிள்ளையாரும் வீணை சரஸ்வதியும் ஒரு டேபிளில் வைக்கப்பட்டு இருந்தன. புதிதான பூக்கள் மிதந்த நீர்த்தாம்பாளம்...ஐம்மென்ற ஊதுபத்தி வாசனை! ஹாலின் நடு நாயகமாக பெரிய பியானோ. அதன் அருகில் பெரிய திண்டுடன் கூடிய இருக்கை. அருகில் இருந்த சிறு டேபிளில் மத்தளம் வாசிக்கும் நந்தி! நந்துவின் தபேலாக்களும், அருகில் இருந்த இயற்கைக் காட்சி வண்ணப் படமாக மாட்டி இருந்தது. பெரிய நீர்வீழ்ச்சியுடன் இருந்தது. தக்காளி சூப், வெண்ணை தடவிய ரொட்டி, ஆனியன் டார்ட், வெஜிடபிள் ஸாலட், பைனாப்பிள் புட்டிங் என்று டின்னர் முடிந்தது. படகில் அழகான ஜெனிவா ஏரிப்பக்கம் தாத்தாவும் சாராவும் தினமும் நடப்பார்கள். கடைத்தெருக்களைக் காட்டியும், பார்க்கில் நடந்தும் நாட்கள் நகர்ந்தன. ஜெனிவாவின் நகர அமைப்பு ஏரியைச் சுற்றியே சென்றதால் தானாகவே சாமித்தாத்தா நடந்து போய் வருவார். சாரா சொலும் வெண்ணை, பால், இதர பொருட்களை மேனோர் என்ற சூப்பர் மார்க்கெட்டில் சென்று வாங்கி வருவார். ட்ராமில் சென்று பாலக்ஸர் என்ற இடத்தில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று வந்ததில், அவரது சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் நல்ல கட்டுப்பாடுகள் வந்தது. மறந்து விடாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்படி நினைவு படுத்தியும் சமயங்களில் சிதார், வயலின் இசையைக் கேட்கச் செய்தும், பழய ஆங்கிலப் படங்களை டிவிடியில் போட்டும் அவர் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாள் சாரா. மெலிதான மொறுமொறுப்பான பீட்ஸாவும், வெள்ளைக்ரீமில் செய்த பாஸ்தாவும், அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. சில சமயம், சாராவை உட்கார வைத்து மிளகு ரசமும், ஏதேனும் காய்கறி செய்யும் பெருங்காயம் தட்டிப் போட்டு நீர்மோரும் செய்து கொடுப்பார். 'ஓ குஸீனே ட்ரெபியான்' என்பாள் சாரா. (தாத்தா சமையலில் கெட்டிக்காரராம்!)...சாரா தன் மேல் காட்டும் அன்பும் அக்கறையும் அவரை நிரம்பவே நெகிழச் செய்தன. இந்தப்பெண் நல்லபடி பிரசவிக்கணும் என்று மனமுருகி வேண்டிக் கொண்டார். 'எட்டே ஓ பியான் இஸி, பப்பீ?' (இன்று எப்படி இருக்கிறீர்கள் தாத்தா?)....கேட்டுக் கொண்டு வந்த சாராவிடம் நிறைய தளர்ச்சி தெரிந்தது. 'நந்து, சாராவுக்குப் பேறுகாலம் நெருங்கிடுத்துனு நினைக்கிறேன். ரொம்பவும் அயர்ச்சியா இருக்கா பாரு...டாக்டர் கிட்ட கூட்டிண்டு போ. கவலைப்படாதே. தாயுமானவர் பார்த்துப்பார்' என்றவர் மதுரை மீனாட்சி குங்குமத்தை சாராவின் நெற்றியில் இட்டு விட்டார். சாமித் தாத்தாவின் தோளில் சாய்ந்து கொண்ட சாரா, 'எஸ்க்யூ மாப்ரஸ் பப்பீ? மெர்ஸி பூ தூ!' (என்னைப் பிடித்திருக்கா தாத்தா?..எல்லாவற்றுக்கும் நன்றி!) என்ற போது 'தங்கெட்பா சாரா' (கவலைப்படாதே) என்றார் தாத்தா. எங்கள் அன்பில் விளைந்த ரோஜாவின் வருகைக்கு மனசு பரபரத்தது. அவஸ்தையிலும், வலியிலும் சாரா துடித்த போது நானும் துடித்தேன். ஒரு உயிரின் ஜனனம் எத்தனை உயர்வானது என்பதை உணர்ந்த போது மெய் சிலிர்த்தது. வலி, அவஸ்தை, சகிப்பு, பொறுமை என்று எல்லாவற்றையும் கடந்த சந்தோஷம் அல்லவா ஜனனம்? நிச்சயம் தாய்மை என்பது போற்றப்பட வேண்டிய ஒன்றுதான்! சாராவைப் பார்த்த போது....'ஓ! என் குழந்தையைச் சுமந்து எனக்குத் தரப் போகும் தாய் இவள்!' என்ற உணர்வு தாக்க, உலகின் எல்லாக் கடவுள்களையும் வேண்டினேன். ..க்வா க்வா...ஓ! இட்ஸ் எ பாய்! ....டாக்டரின் குரல் என்னைச் சிலிர்க்க வைத்தது. வெளியே சாராவின் பெற்றோர்களும், சாமித்தாத்தாவும் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 'நூ ஸோம் கன்டன்ட் கூசுவாயே வெனு நுவா'....(தங்கள் வருகைக்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்) என்றார்கள். அனைவரும் மகிழ்ச்சியோடு அறைக்குள் நுழைந்தனர். 'பெலிசி தாஸ்யூம்!' (கங்கிராசுலேஷன்ஸ்) என்ற தாத்தாவின் கையில் குழந்தையைக் கொடுத்தாள் சாரா. 'பப்பீ, இது உங்கள் கொள்ளுப் பேரன்....நானும் நந்துவும் இவனுக்குப் பேர் வைத்து விட்டோம் தெரியுமா? யெஸ்....எங்க செல்லப் பையன் பேரு சாம்சன் என்கிற சாமி' என்ற போது சாமித்தாத்தாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது! — பானுரவி

பானுரவி / Banooravi

சிறுகதைகள்