c. 2018
செல்வம் ஹார்வர்டிலும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும் ஒரே நேரத்தில் அனுமதி பெறுகிறான். பக்கவாதத்தில் தளர்ந்துபோன ராமுத்தாத்தா தலையணையின் கீழிருந்து எடுத்துக் கொடுக்கும் கடிதம், செல்வத்தின் முடிவை மாற்றுகிறது.
செல்வம் மிகவும் பரவசத்தில் இருந்தான். பின்னே?... இருக்காதா? அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்தில் இருந்து அவனது மேற்படிப்புக்கான அனுமதிக் கடிதம், மின்னஞ்சலிலும், அஞ்சல் வழியிலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. அடுத்ததாக, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் அவன் விரும்பிய துறையில் மேற்படிப்பு படிக்க அனுமதியும், அத்தோடு உதவித்தொகையும் தருவதாக உறுதிசெய்யப்பட்ட கடிதமும் வந்திருந்தது.
இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் விழுந்திருந்தபடியால் செல்வத்தின் உற்சாகம் கரை புரண்டு ஓடியதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லையே! கல்வியும் ஒழுக்கமும் செல்வத்திடம் சிறப்பாகப் படிந்திருந்தபடியால், வெளிநாட்டில் சென்று மேற்படிப்பைத் தொடரும் இலட்சியமும் அவனிடம் இருந்தது! அந்தக்கனவு இப்போது மெய்ப்படப் போவதை எண்ணி அந்த எட்டாத வானமே கை வசப்பட்டது போல் மகிழ்ந்தான்.
தனது மகிழ்ச்சியை ராமுத்தாத்தாவிடம் தெரிவிக்க விரைந்தான். செல்வத்தின் கை பிடித்து, நடை பழக்கி, அவனது மழலையில் மனங்குளிர்ந்து, அவனுக்குக் கசடறத் தமிழ் பயிற்றுவித்து, கடந்துவந்த தனது வாழ்க்கை அனுபவங்களை நயம்பட எடுத்துச் சொல்லி...மொத்தத்தில் அவனைச் சிறப்புற வளர்த்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. ராமுத்தாத்தா ஒரு அற்புத மனிதர். கதையும் கவிதையுமாக அவரது அனுபவங்களை நயம்பட விவரிக்கையில், செல்வத்துக்கு சுவாரசியமாக இருக்கும்.
...”காலமே எழுந்திருப்போம்! கால்கைகள் சுத்தம்செய்து, கோலமாய் நீறுபூசிப், பழையதில் பசியையாற்றிப், பள்ளிக்குச் சென்றுவந்தோம்! பாடங்கள் கற்றுவந்தோம்!....... கள்ளமே இல்லாநட்பில் காலங்கள் கடந்துவந்தோம்! சந்தியில் வீடு செல்வோம்! ...ஆனாலும் அலுப்பில்லாமல், சுந்தரவிளக்கின் முன்னே சுவடிகள் அவிழ்த்துப் பார்ப்போம்!....வந்தது வாராதெல்லாம் வடிவாக மனனம்செய்வோம்! இந்திரன்சேவல்கூவத் தாய்தந்தை வணக்கம் செய்வோம்!”...
தனது பள்ளிப்பருவத்தை அத்தனை கவித்துவத்தோடு செல்வத்திடம் பகிருவார்! தனது தந்தையார் தமிழ்நாட்டில் செய்துவந்த மரவியாபாரத்தில் நட்டப்பட்டுப் பொருளாதார இழப்பு ஏற்பட்டதால், கப்பலேறி முதலில் மலேயாவுக்குச் சென்று, பிறகு சிங்கப்பூர் வந்து வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை பார்த்ததையும், நாளாவட்டத்தில், அவசியம் இருந்தால் மட்டுமே தமிழகம் சென்று வந்ததாகவும் கூறுவார்.
சமீபகாலமாக ராமுத்தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை. பேச்சு பிறழ்ந்து, கண்பார்வை மங்கலாகிச், செவி மடுப்பதும் குறைந்து, நாளுக்குநாள் பொலிவிழந்து, தேய்பிறையாகிக் கொண்டிருந்தார்.
நன்றாகப்படித்துப்பேர்சொல்லும்படியாக வீடும்நாடும் போற்ற, செல்வம் படிப்படியாக வளரவேண்டுமென்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். செல்வத்தின் பெற்றோர்களும், செல்வத்தின் படிப்பு, முன்னேற்றம், என்று அவ்வப்போது அவரிடம் சொல்லுவதுண்டு!
“தாத்தா! செல்வம் வந்திருக்கேன் தாத்தா!” இன்னிக்கு எப்படி இருக்கீங்க?”....செல்வத்தின் அன்பான குரலில் அத்தனை குழைவு! அவனது கைகளை எடுத்துத் தனது கன்னத்தில் வைத்துக் கொண்டார் ராமுத்தாத்தா. கைகளில் நடுக்கம் தெரிந்தாலும், அவரது மங்கிய பார்வையில் பாசமும், கனிவும் பொங்கியது.
ராமுத்தாத்தாவின் உதடுகள் துடித்தன. பேச்சு சரியாக வராமல், பரிதாபமான குரல் மட்டுமே ஒருவித ஓலமாக எழும்பியது. தட்டுத் தடுமாறி, தலையணையைத் துழாவி ஒரு கடித உறையை எடுத்தார். தெளிவாக இல்லாமல் சற்றே கிறுக்கலாக “ எனது கண்மணிசெல்வத்திற்கு” .......... ....என்று எழுதியிருந்தது. அவர் எப்போது எழுதி வைத்ததுவோ? தக்க தருணத்தில் தருவதற்காகக் காத்திருந்தாரோ? நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக, வெகு கம்பீரமாக இருந்த ராமுத்தாத்தா, இப்போது, சுருக்கம் விழுந்து, கிழிந்த நாராகக் கட்டிலில் கிடப்பது அவனது மனதை மிகவும் வாட்டியது...
செல்வம் தன்னை ஒருவாறு ஒருநிலைப்படுத்திக் கொண்டு ராமுத்தாத்தா கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். ..... செல்வம் தேசிய சேவை செய்வதற்குச் சென்றிருந்த சமயம் அவர் எழுதி வைத்த கடிதமாக இருக்கலாம்.....
“கண்மணி செல்வத்திற்கு........சிங்கப்பூரின் தேசிய சேவையை முடித்துக்கொண்டு நீ வீடு திரும்பும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
....உன்னை எதிர்கொண்டு வரவேற்க எனது மனம் துடிக்கிறது. ஆனால்....இந்த முதுமை என்னை ரொம்பவும் அழுத்திக் கையாலாகாத தன்மைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது! அதன் முதற்கட்டமாக, என்னால் தெளிவாகப் பேச முடியாமல் சுகவீனமாகி விட்டேன். இந்த முதுமை எப்படியெல்லாம் ஒருவரின் வாழ்வில் பரிமாணம் கொள்ளுகிறது பார்த்தாயா?
ஒரு மனிதன் என்பவன், பூவாகிப், பிஞ்சாகிக், காயாகிக், கனியாகி...அந்தியில் ஒரு முற்றிய விதையாகிப் போவதுதான் முதுமையா, என்ன?....சிறிது சிறிதாக, உலகிலிருந்தும், உறவிலிருந்தும், மெள்ளமெள்ள விடைபெறத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளுவதுதான் முதுமையா? தெரியவில்லையே செல்வம்!
உண்மையில், பூத்துக் தழைக்கும் மரங்களில் தெரியும் பிரம்மாண்டம், அந்த முற்றிய விதைகளில் அல்லவா மறைந்து கிடக்கிறது? ஒவ்வொரு பழுத்த மனிதனுக்குள்ளும், அவனது அனுபவம் அல்லவா விதையாகக் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது?
அன்புச் செல்வமே, என்னவோ தெரியவில்லை ..வேண்டியதும், வேண்டாததுமாக எனது நெஞ்சக் கூட்டுக்குள் முன்னும் பின்னுமாக எத்தனையோ நினைவுகள் வலை பின்னுகின்றன. தென்னை மரத்துக் குயிலும், வயல்வெளி நண்டும், அருவியின் ஓசையும்,ஆற்றின் சலசலப்பும், திருவிழா முழக்கமும், பண்டிகைக் காலமும், மழைச் சாரலும், மண்வாசனையும், வருடும் தென்றலும், கிராமத்து அத்தியாயங்களும், எனக்குள் மாறி மாறி ஒரு காட்சிப் படமாக வந்து போகின்றது .....
அடடா! செல்வா...கடந்த காலத்து நிழல் படியாத மனிதர்கள் என்று நிச்சயமாக யாருமே இருக்க முடியாது....அத்தனை எளிதாகச் சொந்த ஊரையோ, வளர்ந்த வீட்டையோ, பிறந்த நாட்டையோ .... யாரிடமிருந்தும் பிரித்துவிட முடியாது.
ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு நாடும், கட்டாயமாக எல்லோரிடமும் ஒரு அழுத்தமான பதிவேட்டைக் கொண்டிருக்கும்! இல்லையா?
உண்மையில் ..... நாம் வளர்ந்த ஊரின் அல்லது நாட்டின் வழிவழிவந்த கருணையே ஒவ்வொருவரையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்று நம்புவன் நான்.
செல்வா...நமது மண்ணில், நமது வாழ்விடத்தில், நாம் அறிந்தோ, அறியாமலோ நிறையப் படிமங்களை நாம் விட்டுச்செல்கிறோம் என்று உனக்குப் புரியுமா? அந்தப் படிமங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டும் அகராதியாகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதையும் நீ அறிவாயா?
உன்னிடம் நான் அடிக்கடி எனது கடந்த நாட்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன்....வீட்டுப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே நான் என் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் சிங்கப்பூர் வந்தேன்....என் தந்தையார் அவரது வியாபாரத்தில் நொடித்துப் போனதைச் சரி செய்யமுடியும் என்ற எனது நம்பிக்கை சிங்கப்பூர் வந்ததும் மிகவும் வலுவடைந்தது.
சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம், கடின உழைப்பு, நேரத்தின் மதிப்பு, பொறுப்பான அரசாங்கம் என்று வந்தாரை வாழவைக்கும் திருநாடான சிங்கப்பூர், என்னை மிகவும் பிரமிக்கச் செய்தது!
கட்டாயச் சேமநிதியும், மலிவான மருத்துவக் கட்டணமும், எளிதான போக்குவரத்தும், கற்றவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பும் கொடுத்து, எல்லோருக்கும் உகந்த வாழ்வைத் தந்த சிங்கப்பூர், நான் வாழச் சரியான இடம் என்பதைத் தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே, உழைப்பிற்குத் தக்க மரியாதையும், ஊக்கமும், சம்பளமும் தரும் நாடாக சிங்கப்பூர் இருந்ததால் நானும் கடினமாக உழைத்தேன். தந்தையின் பொருளாதார நெருக்கடியைச் சீராக்கினேன்.
ஆனாலும் செல்வா....எனது மனதுக்குள் ஒருவிதக் குற்ற உணர்வு கனன்று கொண்டே இருந்தது. நான் ஈட்டிய பொருளாலும், பணத்தாலும் எனது பெற்றோர்களுக்கு நான் செய்திருந்தாலும், அவர்களின் அந்திம காலத்தில் உடனிருந்து கவனிக்கத் தவறி விட்டேன். இதற்கு நான் எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம்.
அவை நியாயமாக இருந்தாலும்கூட, ஒருவித சுயநலம் மட்டுமே என்னை அந்த சமயத்தில் ஆட்கொண்டதாலேயே, அவ்வாறு என்னால் செய்ய இயலாமல் போயிற்று என்பதே கசக்கும் உண்மையாக எனக்குள் தேங்கிக் கிடக்கிறது. “குதலைமை தந்தைகட் தோன்றில் தான்பெற்ற புதல்வர் மறைப்பக் கேடும்” என்பதைப் படித்ததோடு சரி…பயன்பாட்டுக்கு மேற்கொள்ளாத பாவியாகி விட்டேனே என்று இன்றுவரை அந்த ஆற்றாமை என்னைச் சுட்டெரிக்கிறது செல்வா.....
எனது செல்லப் பேரனே! உனக்கும் அந்த நிலைமை வரக்கூடாது என்றுதான் இதை எழுதினேன். உன்னைப் பொறுத்தவரையில், இந்தச் சிங்கப்பூர் உனது தாய்நாடு அல்லவா? பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தது அல்லவா?
உனக்கு இந்தத் தாத்தாவின் அன்பான வேண்டுகோள் இதுதான்....நான் கேட்டுக் கொள்ளுவதற்காக மட்டுமின்றி, உனது சுய சிந்தனையின்படியும் நீ முடிவெடுப்பாய் என்று நம்புகிறேன். நான் வளர்த்த பேரன் அல்லவா நீ?
செல்வா....ஒரு பட்டம் எந்தத் திசையில் பறக்கும், எவ்வளவு தூரம் பறக்கும்? ...எப்போது அறுந்துவிழும்? என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், ஒன்று நிச்சயம்! பட்டத்தின் கயிறு நமது கைகளில் இருக்கும் வரை, பறக்கும் பட்டத்துக்கு எந்தவொரு சேதமும் வருவதற்கு வாய்ப்பில்லை...உன்னுடைய மேற்படிப்பு ஆசை வெளிநாட்டில் தொடர வேண்டுமென்பது, உன்னைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான ஆசைதான்...மறுப்பதற்கில்லை! ஆனால், சற்றே சிந்தித்துப் பார் செல்வா! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? சிறுகுழந்தையிலிருந்து, முதியோர் வரை, ரொம்பவும் பாதுகாப்புடனும், மரியாதையுடனும் அல்லவா இங்கே வாழ்ந்து வருகிறார்கள்?
சற்றே எண்ணிப்பார்! நமது தாய்மொழியைத், தமிழுக்கும் அமுதென்றுபேர் எனப் புகழ்ந்து அரசாங்க மொழிகளுள் ஒன்றாக வைத்துப் போற்றும் அரசாங்கம் வேறு எங்கே இருக்கிறது? எத்தனை பெருமிதம் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இது?
இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட சிங்கப்பூர் நாட்டின் பல்கலைக்கழகத்தில் படிப்பது என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்? சிந்தித்துப்பார் செல்வா. தளரா வளர் தென்னைகூடத் தானுண்ட நீரைத் தலையாலே தருகிறதே?
செல்வா, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்தான்! ஆனாலும், நமது சிங்கையில் மல்லிகை மட்டுமல்ல, முல்லையும், செண்பகமும், ரோஜாவும், இன்னபிற வண்ணமலர்களும் மணக்கும் நந்தவனங்கள் உள்ளனவே? இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையே!
....செல்வா, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பார்கள். முடிவு உன்கையில்! எனவே நீ நன்றாகச் சிந்திப்பாய்! சிறப்பாகச் ...செயல்படுவாய்! உனக்கு வெற்றி உண்டாக இந்த ராமுத்தாத்தாவின் அன்பான நல்வாழ்த்துக்கள்!”.......
செல்வம் கடிதத்தைப் படித்து முடிக்கையில், அவனது மனத்தில் கோடி சூரியப் பிரகாசம் போல் ஒரு தெளிவு ஏற்பட்டது.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஒளவையின் பொன்மொழி அல்லவா? ராமுத்தாத்தாவின் கடிதத்தின் சாராம்சம் அவனது பிரகாசமான வருங்காலத்துக்கு ஊற்றுக்காலாகத் தெரிந்தது.
ராமுத்தாத்தாவின் நடுங்கிய கரங்களை அன்போடு பற்றியவனின் கைகளில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கடிதம் மட்டுமே இருந்தது.
செல்வம், அக்கடிதத்தை உயரே பிடித்துத் தூக்கிக் காட்டியபோது, ராமுத்தாத்தாவின் பஞ்சடைந்திருந்த கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது....தனது அன்புப்பேரன் செல்வத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
.....தாய் அவள்போல் ஒரு ஜீவனில்லை --- அவள் காலடிபோல் சொர்க்கம் வேறு இல்லை ...தாய் மண்ணைப்போல் ஒரு பூமியில்லை..... தாய் மண்ணே வணக்கம்! தாய்மண்ணே வணக்கம்!!
ஒலி 96.8வானொலி, இசைமையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் உணர்ச்சிமிக்க பாடலை அதுசமயம் ஒலியேற்றம் செய்தது, அவனது தீர்மானத்துக்குக் கட்டியம் கூறுவது போல் இருந்தது...
செல்வத்தின் மனதிலிருந்த குழப்பம் நீங்கி மிகவும் தெளிந்த நிலையில் இருந்தான்...
“உங்கள் எண்ணம்போலவே நடந்து, உங்களது எதிர்பார்ப்பை மெய்யாக்குவேன் தாத்தா” என்றபோது, ராமுத்தாத்தா பனித்த கண்களோடு, அவனது தலையைக் கோதிவிட்டுத் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை, அந்த அன்பான, அருமைப்பேரன் செல்வத்துக்குத் தெரியப்படுத்தினார்!
எழுதியவர்: பானுரவி
பானுரவி / Banooravi
சிறுகதைகள் →