கவிதை

ஆண்டுகள் கோடி வாழ்க!

2011 · SPH-NAC Golden Nib Prize Collection, 2011

கங்கையும் பாயவில்லை; காவேரிப் பெருக்கம் இல்லை. மதுரையின் சங்கம் இல்லை; மாகவி கம்பன் இல்லை. ஆண்டவன் உறையும் சிங்கை! ஆண்டுகள் கோடி வாழ்க!

ஆண்டுகள் கோடி வாழ்க! கங்கையும் பாய வில்லை! காவேரிப் பெருக்கம் இல்லை! எங்கிலும் பசுமை கண்டேன்! இயற்கையின் எழிலைக் கண்டேன்! குற்றால அருவி இல்லை! குளிர்கொடைக் கானல் இல்லை! வற்றாத மழையைக் கண்டேன்! வாசனைத் தென்றல் கண்டேன்! மதுரையின் சங்கம் இல்லை! மாகவி கம்பன் இல்லை! மதுரமாய்த் தமிழைக் கண்டேன்! மாசிலா ஒழுக்கம் கண்டேன்! தங்கவயல் கோலார் இல்லை! தஞ்சையின் மண்ணும் இல்லை! அங்காடி வரிசை கண்டேன்! அத்தனை பொருளும் கண்டேன்! அகத்தியர் போற்ற வில்லை! ஒளவையும் பாட வில்லை! அகமகிழ் மக்கள் கண்டேன்! அறவழி நடக்கக் கண்டேன்! மெய்ஞ்ஞான அடியார் இல்லை! முனிவனின் வேள்வி இல்லை! விஞ்ஞானம் வளரக் கண்டேன்! வர்த்தகம் செழிக்கக் கண்டேன்! இந்திர உலகம் இல்லை! இயலாமை எதிலும் இல்லை! வந்தவர் வாழ்த்தக் கண்டேன்! வையத்துச் சுவர்கம் கண்டேன்! புத்தனும் பிறக்க வில்லை! புகழ்மிகு காந்தி இல்லை! உத்தமர் லீ குவான்யூ உயர்த்திய சிங்கை கண்டேன்! கண்டவை மாயம் இல்லை! கற்பனைக் கவிதை இல்லை! எண்டிசை போற்றக் கண்டேன்! ஏற்றமாய்ச் சிங்கை கண்டேன்! விண்டவர் கண்ட தில்லை! கண்டவர் விண்ட தில்லை! ஆண்டவன் உறையும் சிங்கை! ஆண்டுகள் கோடி வாழ்க!

பானுரவி / Banooravi

கவிதைகள்