கவிதை

பெண்மை என்பது யாதெனில்

c. 2011

உயிர்தந்து ஊண்தந்து உவகைதந்து, ஓருயிராய் ஈருடலாய்ச் சங்கமித்து... கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும் சீதையும் போல எண்ணற்ற மங்கையரின் பாதையில் வாழ்வது — அதுதான் பெண்மை.

பெண்மை என்பது யாதெனில்...? உயிர்தந்து ஊண்தந்து உவகைதந்து ஓருயிராய் ஈருடலாய்ச் சங்கமித்து அயர்கின்ற போதெல்லாம் அன்புகாட்டி அரவணைத்துக் காப்பதுதான் பெண்மையாகும்! கண்ணின் மணியென்று கொஞ்சிப்பேசிக் கலையாத கனவென்று நெஞ்சில்பூட்டிப் பொன்னாக மணியாகக் கற்பைக்காக்கும் புதுவயிர அணிகலன்தான் பெண்மையாகும்! சுடுதணலாய்ச் சுடுகின்ற ஏச்சும் பேச்சும் சுற்றமெலாம் சுமத்துகின்ற குற்றச்சாட்டும் விடுக்கின்ற பெருமூச்சில் விரைந்தேயோடும்! வித்தையினைக் கொண்டதுதான் பெண்மையாகும்! சீறிவந்துளம்வாட்டும் துயரம்போகச் சீரிளமைத் திறங்கொண்ட சிந்தையோடு பேரிடர்கள் வந்தாலும் பொறுமைகாத்துப் புன்னகைத்து மணப்பதுதான் பெண்மையாகும்! நரைகண்டு மூப்புடனே நலனும்கெட்டு நாடியும் தளர்ந்துடல் நலிந்தபோதும் கரைகாணாப் பேரன்பால் கட்டிப்போட்டுக் காதலுடன் வாழ்வதுதான் பெண்மையாகும்! கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும் கற்புநெறி தவறாத சீதைபோலும் எண்ணற்ற மங்கையரின் பாதைசென்று ஏற்றமுடன் வாழ்வதுதான் பெண்மையாகும்! தமிழெந்தன் வேதமென்று தரணிஎங்கும் தாயவளைக் கொண்டாடித் தினமும்வாழ்த்தி அமிழ்தன்ன அறிஞர்களின் நூல்கள்காட்டும் அறவழியில் நடப்பதுதான் பெண்மையாகும்!

பானுரவி / Banooravi

கவிதைகள்