2011 · SPH-NAC Golden Nib Prize Collection, 2011
கடுந்தவம் புரிந்த பக்தனுக்கு இறைவன் தோன்றி வரம் கேட்கச் சொல்கிறான். பொன், பொருள், புகழ், நவநிதி — எல்லாவற்றையும் மறுத்த பக்தன், "என் அன்னை வேண்டும்!" என்கிறான்.
கடவுளைக் கண்டேன்!
கண்களை மூடிக் கருத்தொருமித்துக்
கடவுளை வேண்டிக் கடுந்தவம் புரிந்தேன்!
என்தவம் மெச்சியே இறைவனும் தோன்றினான்!
வேண்டிய வரங்களைத் தந்திட விழைந்தான்!
உலகம் படைத்த உத்தமன் முன்னே
உடம்பும் உயிரும் ஒடுங்கியே பணிந்தேன்!
அலையும் மனத்தை அடக்கியே வணங்கி
அகமது விரும்பும் வரமது கேட்டேன் —
"பொன்னும் வேண்டேன்! பொருளும் வேண்டேன்!
போதை ஏற்றிடும் புகழும் வேண்டேன்!
கண்ணுக் கினிய காட்சியும் வேண்டேன்!
கணக்கில் அடங்காச் செல்வமும் வேண்டேன்!
விண்ணை எட்டும் மாளிகை வேண்டேன்!
விலைமதிப்பில்லா நவநிதி வேண்டேன்!
வண்ணம் காட்டும் மலர்வனம் வேண்டேன்!
வளமை தந்திடும் வாணிபம் வேண்டேன்!
எண்ணற்கரிய ஏவலர் வேண்டேன்!
ஏற்றம் தந்திடும் வாகனம் வேண்டேன்!
உண்பதற்கறுசுவைப் பண்டமும் வேண்டேன்!
உவந்து பேசிடும் உறவுகள் வேண்டேன்!
பண்ணும் வேண்டேன்! பாடலும் வேண்டேன்!
பட்டும் பலவிதப் பகட்டும் வேண்டேன்!
புண்ணியம் வேண்டேன்! பொருளும் வேண்டேன்!
பிறப்பே இல்லா மோட்சமும் வேண்டேன்!"
பித்தனைப் போலவே வேண்டாம் என்றதும்
முத்தமிழ் போற்றும் முதல்வனும் திகைத்தே
'பக்தனே! உன்னால் பரவசம் அடைந்தேன்!
என்னதான் வேண்டும்? இயம்புக' என்றான்!
"என்னைப் படைத்து எனக்குயிர் அளித்து
ஏணியாய் இருந்து மண்ணில் மறைந்த
அன்னை வேண்டும்! அவள்மடி வேண்டும்!
அன்பைப் பொழியும் அவள்மொழி வேண்டும்!
அன்னை வேண்டும்! பசித்திடும் வேளையில்
பரிந்தே ஊட்டும் அமுதம் வேண்டும்!
அன்னை வேண்டும்! அழுதிடும் பொழுது
ஆறுதல் தந்திடும் வார்த்தைகள் வேண்டும்!
அன்னை வேண்டும்! என்றும் வேண்டும்!
நாளும் பிரியா அவள்துணை வேண்டும்!
அன்னை வேண்டும்! அள்ளி வழங்கிடும்
அன்பும் ஆசியும் அனுதினம் வேண்டும்!"
விலைமதிப்பில்லா அன்னையைக் கேட்டதும்
உலகத்து நாயகன் உயர்மொழி பகர்ந்தான்!
"நிற்பன பறப்பன ஊர்வன வென்றே
பற்பல உயிர்களைப் படைத்தேன்! களைத்தேன்!
அற்புத வாழ்வின் அருமையை உணரா
அற்ப மனிதரின் போக்கில் சலித்தேன்!
பற்றுதல் இல்லாப் பரம்பொருள் தேடிப்
பறந்து வந்தவுன் அன்னையைக் கண்டேன்!
எந்தன் திருவடிச் சேவைகள் செய்திட
அருட்கரம் நீட்டி அடைக்கலம் தந்தேன்!
அன்னையின் அன்பில் ஆறுதல் அடைந்தே
அலுப்பும் களைப்பும் அகன்றிடக் கண்டேன்!
இந்தப் பிறவியில் கொடுப்பினை இல்லை
இனியொரு பிறவி எடுத்திடும் பொழுது
எந்தன் அன்னையைத் தருவேன்" என்று
இனிதாய்ச் சொல்லி இறைவன் மறைந்தான்!
பானுரவி / Banooravi
கவிதைகள் →