c. 2011
ஒன்றுபத்து நூறாகிப் பன்னெடுங் காலம் ஒளிர்கின்ற உயர்தமிழில் செய்தி தரும் தென்றல் வாழி! பாரதியின் கனவு மெய்ப்பட, திசைகள் எட்டும் அறவழியில் சேதி தரும் தமிழ்த்தென்றல் வாழி!
ஒன்றுபத்து நூறாகிப் பன்னெடுங் காலம்
தொன்று தொட்டு ஒளிர்கின்ற உயர்தமிழில்
இன்றுநேற்று நாளையென வையம் எங்கும்
சென்றுவந்து சேதிதரும் தென்றல் வாழி!
கற்றபல தமிழரெல்லாம் கடல் கடந்து
வெற்றியுடன் பணியாற்றும் அமெரிக் காவில்
அற்புதமாய் இனிக்கின்ற அமுதம் சிந்தக்
கற்கண்டாய்ச் சேதிதரும் தென்றல் வாழி!
ஆலயத்துத் தெய்வங்கள் அருள் பெருக்கும்
சீலமிகு சான்றோரின் புகழ் மணக்கும்
நாலுவித விளம்பரமோ நன்மை சேர்க்கும்
ஓலையிலே சேதிதரும் தென்றல் வாழி!
பாரெல்லாம் தமிழ்முழக்கம் செய்யச் சொன்ன
பாரதியின் கனவுமெய்ப் படுதல் வேண்டித்
தரத்தினிலே முன்னின்று திசைகள் எட்டும்
அறவழியில் சேதிதரும் தென்றல் வாழி!
எண்ணற்ற தமிழிதயப் பூங்கா தன்னில்
வண்ணத்துப் பூமணக்கும் தென்றல் வாழி!
மென்மேலும் தமிழுக்குப் பெருமை சேர்த்துத்
தொண்டாற்றும் தமிழ்த் தென்றல் வாழி!வாழி!!
பானுரவி
பானுரவி / Banooravi
கவிதைகள் →