Singapore
பொருளைப் பெரிதென்றெண்ணாள்! தனை மணந்தோனின் அருளையே உயிரெனக் கொள்ளும் உயர் அன்பினாள். அவள் மனையாள் — வீட்டின் இசையும், விளக்கின் ஒளியும், நெஞ்ச ஏட்டின் அறிவும் ஆனவள். மூன்று செய்யுட்களில், சங்கப் பாணியில் அமைந்த ஒரு சிறு கவிதை.
பொருளைப் பெரிதென்றெண்ணாள்! மற்றும்
பூண்வேண்டாள் தனை மணந்தோன்
அருளையே உயிரென்றெண்ணும் - உயர்
அன்பினாள்! வறுத்திறக்கும்
உருளைநற் கிழங்கில் தனது…
உடையானுக்கிருக்கும் ஆசை
அறிந்தவள் உடனே சுவையாய்ச்
செய்திட விருப்பம் கொள்வாள்!!
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்
குழந்தைகள் உடன் இருந்து…
கொஞ்சியே உண்ணுகின்றார்!
ஒழுங்குறு சுவைப் பண்டங்கள்
அவரவர் உள்ளமறிந்து
வழங்குவாள் அள்ளி அள்ளி
வழிந்திடும் அன்புள்ளத் தாள்!
வீடெல்லாம் இசையே! ஏற்றும்
விளக்கெல்லாம் ஒளியே! நெஞ்ச
ஏடெல்லாம் அறிவே!...ஏட்டின்
எழுத்தெல்லாம் களிப்பே!! அந்தக்
காடெல்லாம் ஆடும் கூத்தே!
காகங்கள் குருவி மற்றும்
மாடெல்லாம் இவ்வாறானால்
மனையாளின் மாண்பு என்னே!!
— பானுரவி / சிங்கப்பூர்
பானுரவி / Banooravi
கவிதைகள் →