கவிதை

அன்னை என் தெய்வம்

c. 2011

அன்னை என்றால் அன்பெனும் வெள்ளம்! அன்னை என்றால் கருணையின் வடிவம்! வையகம் போற்றிடும் ஆதியாம் சக்தியின் அருள்வடிவே என் தெய்வம்.

அன்னை என் தெய்வம்! அன்னை என்றால் அன்பெனும் வெள்ளம் அகமும் புறமும் பெருகியே ஓடும்! அன்னை என்றால் கருணையின் வடிவம் கனிவைச் சிந்திடும் கார்முகிலாகும்! அன்னை என்றால் அருள்ஒளி பரப்பும் ஆதவன் போலொரு ஒளிவிளக்காகும்! அன்னை என்றால் அனைத்து உயிர்களும் உணர்ந்தே அழைக்கும் ஒலியென்றாகும்! அன்னை என்றால் பசித்திடும் வேளையில் பால்நினைந்தூட்டும் சுரபியென்றாகும்! அன்னை என்றால் உடல்நலம் காக்கும் மருத்துவர் போலொரு கடவுளென்றாகும்! அன்னை என்றால் அழுதிடும் பொழுது ஆறுதல் தந்திடும் தோழமையாகும்! அன்னை என்றால் அறிவைப் புகட்டி உயரே வைத்திடும் ஏணியென்றாகும்! அன்னை என்றால் அனைத்தையும் தாங்கும் பூமியைப் போலப் பொறுமையென்றாகும்! அன்னை என்றால் இதமோடு அணைத்து என்றும் காத்திடும் எளிமையென்றாகும்! அன்னை என்றால் தன்னுயிர் பொருளுடன் எதையும் தந்திடும் தியாகமென்றாகும்! அன்னை என்றால் வையகம் போற்றிடும் ஆதியாம் சக்தியின் அருள்வடிவாகும்!

பானுரவி / Banooravi

கவிதைகள்