கவிதை

நல்லாசிரியன்

c. 2011

சட்டம் படிக்கப் போனேன் — தந்தை மறுத்தார். மருத்துவம் படிக்கப் போனேன் — அதையும் மறுத்தார். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்று தந்தை சொன்ன பின், நல்லாசிரியர் படிப்பை ஏற்றேன்.

நல்லாசிரியன் பட்டப் படிப்பைத் தொடர நினைத்துச் சட்டம் படிக்கத் தீர்மானித்தேன்! கிட்டவே சென்று துடிப்பாய்ச் சொன்னதும் சட்டென வேண்டாமென்றார் அப்பா! "கூட்டிக் கழித்துக் கூச்சல் போட்டு நீட்டி முழக்கி வாதம் செய்யும் சட்டம் படித்தால் சடுதியில் பணம்வரும்! பட்டவர் பழியுடன் பாவமும் உடன்வரும்!" முடிவை மாற்றி மக்களைக் காக்கும் படிப்பாம் மருத்துவம் பயின்றிட வேண்டித் திடமுடன் தந்தையின் அனுமதி கேட்டேன்! படபட வென்றே வேண்டாமென்றார்! "மருத்துவம் என்பது மனிதரைக் காக்கும் மகத்துவம் பெற்ற மாபெரும் நற்பணி! பெயரும் புகழும் அடைந்தால் மட்டுமே நயமுடன் நன்மையையும் பெயரும் சேரும்!" விரும்பிய படிப்பைத் தொடர்ந்திட இயலாதிருப்பதும் 'விதி'யென நெஞ்சம் கனத்துச் சுருங்கிய முகத்துடன் சோர்ந்தே போனேன்! அருமையாய் அறிவுரை அழகாய்ச் சொன்னார்: "உலகில் புகழும் பொருளும் தந்திடும் அளவிற்கரிய படிப்புகள் ஆயிரம்! விளங்கும் எதிலும் முதலாய் வருவது விளக்காய் அறிவைப் புகட்டும் கல்வியே! பல்வகைப் பாடமும் பயிற்சியும் அளித்துக் கல்வியும் பண்பும் ஒழுக்கமும் புகட்டி நல்லவை சொல்லி அல்லவை நீக்கும் நல்லாசிரியரின் நற்பணி சிறப்பே! கற்றுளி கொண்டு கருங்கல் செதுக்கி அற்புதச் சிலைகள் வடிப்பவன் சிற்பியே! கற்றிடச் செய்து கசடற விளக்கிப் பற்பல பயிற்றிடும் குருவும் சிற்பியே! எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றே அழுத்தம் திருத்தமாய் அப்பா சொன்னதும் விழிகளைப் பெற்ற அந்தகன் போல முழுமனதோடு முடிவுக்கு வந்தேன்! தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உடனே செவிமேற்கொண்டேன்! அன்புடன் அறிவைச் சிந்தையில் புகுத்தும் இன்புறு ஆசான் படிப்பினைத் தொடர்ந்தேன்!

பானுரவி / Banooravi

கவிதைகள்