c. 2018 · Banooravi · Singapore
விடியலெனச் சொன்னாலே மகிழ்ச்சி பொங்கும்! — விடியலின் பொருளைத் தேட பல இடங்களில் தேடிய கவிஞர், முடிவில் தனக்குள்ளேயே அதைக் கண்டறியும் கவிதை. நட்பு, ஈகை, உழைப்பு, அறம், அருள், உயர்ந்த உள்ளம் — இவை இருந்தாலே விடியல் தோன்றும்.
விடியலெனச் சொன்னாலே மகிழ்ச்சி பொங்கும்!
விழிநீரும் சிந்தாமல் நெஞ்சம் துள்ளும்!
அலைகடலும் ஆர்ப்பரித்து அன்பாய்ச் சொல்லும்!
அழகான தமிழ்மொழியே எங்கும் வெல்லும்!
விடியலுக்குப் பொருள்தேட வேண்டு மென்றே
விடைதேடிப் புறப்பட்டேன் நந்நாள் இன்றே!
வண்ணமிகு எண்ணத்தில் ஊர்ந்து சென்றேன்!
எண்ணற்ற கற்பனையில் அமிழ்ந்தே போனேன்!
அலங்கரித்த அரங்கத்தில் ஆய்ந்து பார்த்தேன்!
ஆன்றோர்கள் அவைதன்னில் நடந்து பார்த்தேன்!
சத்தமில்லாத் திருச்சபையில் தேடிப் பார்த்தேன்!
கத்துகின்ற கடலோசை அருகில் பார்த்தேன்!
காலமெலாம் உடனிருக்கும் துணையைக் கேட்டேன்!
கற்றறிந்த மேதைகளைக் கேட்டுப் பார்த்தேன்!
விதவிதமாய்ப் பலநூல்கள் படித்துப் பார்த்தேன்!
புதுவிதமாய்ச் சிந்தித்து அலுத்துப் போனேன்!
யாருக்கு விடியலென் இயற்கை கேட்டாள்!
எதற்காக விடியட்டும்? பூமியும் கேட்டள்!
இருப்பதையே சரியாக்க முடியா பட்சம்..
இன்னுமேன் விடியலெனக் காலமும் கேட்டாள்!
விரக்தியிலே என்னுள்ளே எட்டிப் பார்த்தேன்!
ஒருநொடியில் விடைகண்டு வியந்து போனேன்!
‘உன்’னிடமே உள்ளதென்று உள்ளம் சொல்ல
உண்மையிலே விடியலதன் வெளிச்சம் கண்டேன்!
மலர்கின்ற விடியலுமே வந்தால் போதும்..,
மலைத்தேனீ மதுக்குடமாய்த் தேனைச் சேர்க்கும்!
மகிழம்பூ மணம்வீசி மகிழ்ச்சி தூவும்!
மதுரமாய் மனந்தன்னில் விடியல் தோன்றும்!
இறுக்கத்தை விடுவிக்க நட்பு வேண்டும்!
இருப்பதை ஈவதற்கு உள்ளம் வேண்டும்!
இல்லாமை போக்கிட உழைத்தல் வேண்டும்!
இத்தனையும் இருந்தாலே விடியல் தோன்றும்!
அறம்பெருக அடிமனதுள் செம்மை வேண்டும்!
அருள்வளர அங்கேநல் லிரக்கம் வேண்டும்!
இருள்விலக இதயத்துள் உயர்வு வேண்டும்!
இத்தனையும் இருந்தாலே விடியல் தோன்றும்!
வெறுக்கின்ற குணந்தன்னை அறுக்க வேண்டும்!
வேண்டுமட்டும் அன்பதனைச் செலுத்த வேண்டும்!
தடையில்லா வழிமுறைகள் காண வேண்டும்!
முடையில்லா விடிதல்அங்கு முளைக்க வேண்டும்!
பகட்டில்லா வாழ்வினிலே விடியல் என்றும்
பளிங்காக ஒளிவீசும் எனத் தெளிந்தேன்!
அகத்தினிலே நான்மூழ்கி அறிந்து கொண்டேன்!
பகர்ந்திடவே முன்வந்தேன்! அறிவீர் நீரே!!
பானுரவி / Banooravi
கவிதைகள் →