2017 · 2017 Singapore National Poetry Festival · Winning Entry
நத்தை இருக்கும், நண்டுகள் பிறக்கும், முத்தும் கிடைக்கும் — அத்தனை மீன்கள் கடலுள்; ஆனால் இனமேதும் இல்லை! ஆதியில் மனிதருள் அன்பு இருந்தது; பாதியில் இனத்தினால் பாதகம் வந்தது.
நத்தை இருக்கும் நண்டுகள் பிறக்கும்
முத்தும் கிடைக்கும் முத்தையும் கிடைக்கும்
எத்தனை மீன்கள் எழில்மிகு கடலுள்
இத்தனை இருந்தும் இனமேதும் இல்லை!
தேங்குடன் பனைமரம் செந்தமிழ் கழனிகள்
தெங்கனி வாழை வெற்றிலை வாகை
மூங்கில் காடுகள் முளைத்திடும் கள்ளிகள்
எங்கும் எதிலும் இனமேதும் இல்லை!
சிங்கம் புலிகள் சிறுத்தை நரிகள்
எங்கும் புள்ளினம் எருமை ஆவினம்
தங்கும் காவினில் முயல்கள் மான்கள்
இங்கும் விலங்கினம் இனமேதும் இல்லை!
கருமுகில் பொழியும் கதிரவன் உதிக்கும்
சிறுசிறு பனித்துளி சிதறியே சிரிக்கும்
பெருவெளி சமவெளி பேதங்கள் இன்றித்
விரிந்திடும் தென்றலில் இனமேதும் இல்லை!
நுண்ணிய உயிரிலும் நுகர்ந்திடும் காற்றிலும்
வெண்ணிலா ஒளியிலும் வெங்கதிர் வெய்யிலிலும்
விண்ணிலும் மண்ணிலும் விரிநிலப் பரப்பிலும்
உண்மையில் எவற்றிலும் இனமேதும் இல்லை!
ஆதியில் மனிதருள் அன்புதான் இருந்தது!
பாதியில் இனத்தினால் பாதகம் வந்தது!
சாதிகள் இரண்டென சொல்லிய ஔவையின்
போதனை மறந்ததால் பகையுமே வளருது!
இனங்களுக்கு அப்பால்......
எத்தனை நாடுகள்! எத்தனை தேசங்கள்!
எத்தனை மனிதர்கள்! எத்தனை உறவுகள்!
இத்தனை பேர்களும் இனங்களைக் கடந்திடின்
சத்திய மாகவே சமத்துவம் தோன்றும்!
இனங்களுக்கு அப்பால் நிம்மதி என்பதை
உணர்த்தியே காட்டி உயரத்தை எட்டிடும்
சிங்கப்பூர் நாட்டிலே அனைவரும் ஓரினம்!
சங்கமம் சகலரும்! சரித்திரம் சொல்லிடும்!
இனங்களுக்கு அப்பால் இன்பங்கள் நிச்சயம்
என்பதே இயற்கையும் நவின்றிடும் ரகசியம்!
இனங்களுக் கப்பால் இயல்புடன் அனைவரும்
குணத்தையே உயர்த்துவோம்! குன்றின வாழ்வோம்!
பானுரவி / Banooravi
கவிதைகள் →