c. 2010s
ஒவ்வொரு அடியின் கடைசியிலும் 'பிரதிபலிக்கும்!' என்ற ஒலி — தாயின் அன்பு, தந்தையின் வார்த்தை, ஆசிரியரின் ஆசி, பகல்-இரவின் சுழற்சி, கண்ணகியின் சீற்றம், காற்கருணை, சிங்கப்பூரின் ஆன்மா என்று அனைத்திலும் உண்மை எங்கெங்கு தெரிகிறது என்பதை ஒளிமிக்க கவிதையாய் பதிவு செய்கிறது.
பிரதிபலிப்புகள்
அங்கமெலாம் நொந்து ஐயிரு மாதம்தாங்கிப்
பொங்கிடும் அமுதமூட்டிப் போற்றியே வளர்க்குமன்னை
ஆயிரம் கடிந்திட்டாலும் அதட்டியே மிரட்டினாலும்
சேயிடம் காட்டும் அன்பில் தெய்வங்கள் பிரதிபலிக்கும்!
தெளிந்த நற் புத்திசொல்லிச் சிந்தையைச் செம்மையாக்கி
வலியதோர் இரும்புபோல உள்ளத்தில் உறுதியேற்றும்
தந்தையின் வார்த்தையென்றும் தாரக மந்திரம்போல்
மண்ணிலே மைந்தர்வாழ மகுடமாய்ப் பிரதிபலிக்கும்!
ஆங்கொரு பள்ளியில்தான் அறிவுக்கண் திறந்துவைத்துப்
பாங்குடன் கல்விகேள்வி பணிவன்பு ஒழுக்கத்தோடு
தீங்கிலா நட்புகாத்துத் திறனுடன் பயிற்றுவிக்கும்
ஓங்குயர் ஆசான்வாழ்த்து இமயத்தைப் பிரதிபலிக்கும்!
நண்பகல் இரவுபுவியின் சுழற்சியைப் பிரதிபலிக்கும்!
மண்கொண்ட வளமைபச்சைப் பயிரிலே பிரதிபலிக்கும்!
கன்னியர் கொள்ளும்காதல் கண்களில் பிரதிபலிக்கும்!
மன்னுயிர் வாழ்வுமாய மின்னலைப் பிரதிபலிக்கும்!
கண்ணகி கொண்டசீற்றம் சிலம்பிலே பிரதிபலிக்கும்!
உண்டுயிர் வாழ்வதாலே உணர்ச்சிகள் பிரதிபலிக்கும்!
வெண்மைக்குள் வண்ணம்வான வில்லினைப் பிரதிபலிக்கும்!
உண்மையைப் பேசும்போது ஒளியெங்கும் பிரதிபலிக்கும்!
எங்கெங்கு சென்றபோதும் ஏழ்மையில் தவித்தபோதும்
சங்கடம் வந்தபோதும் சரித்திரம் மாறும்போதும்
அங்கங்கே அந்தநாளின் அழியாத ஞாபகங்கள்
பொங்கிடும் அலையைப்போல பீறிட்டுப் பிரதிபலிக்கும்!
கார்மேகம் மழைபொழிந்து கர்ணனைப் பிரதிபலிக்கும்!
ஆர்வலர்சேவை தியாகம் மெழுகினைப் பிரதிபலிக்கும்!
சோர்விலா உழைப்புஊறும் எறும்பினைப் பிரதிபலிக்கும்!
பார்புகழ் சிங்கப்பூரில் பண்பாடு பிரதிபலிக்கும்!
மாபெரும் வையம்போற்றும் மாண்புறு சிங்கைநாட்டில்
மாந்தரின் வாழ்வில்நித்தம் மகிழ்ச்சியே பிரதிபலிக்கும்!
செல்வங்கள் நிறைந்தநாட்டில் செந்தமிழ் பிரதிபலிக்கும்!
உள்ளதைச் சொல்லும்கவிதை உண்மையைப் பிரதிபலிக்கும்!
பானுரவி / Banooravi
கவிதைகள் →