கவிதை

வாழ்க்கை வாழ்வதற்கே!!

Singapore

மூத்த மகள், ஒவ்வொரு முறையும் வேறொரு துயருடன் தாய் வீட்டுக்கு வருகிறாள் — கசப்புடனே, அழுதபடி, சினத்துடனே, வெறுப்புடனே. ஒவ்வொரு வருகையிலும் தந்தை கலங்குகிறார். ஆனால் தாய் — ஒன்றுமே பேசவில்லை. ஆறாவது வருகையில், "வாழ்ந்து தினமும் இறப்பதை விட, நிஜமாய் இறப்பது மேல்" என்று மகள் சொல்லும் போதுதான் — அந்தத் தாய் வாய் திறக்கிறாள். ஐந்து உருவகங்களில் — ரோஜா வனம், பெருங்கடல், சக்கரம், கோபுரம், புனல்-விளக்கு — மகளுக்கு வாழ்வைத் திரும்பவும் கொடுக்கிறாள். "அம்மா, நீ ஒரு போதிமரம்!" என்று முடிக்கிறாள் மகள். தாய்மொழியின் அமைதியின் ஞானம், சரியான நேரத்திலே வாய் திறக்கும் தாயின் ஞானம் — அதைப் பற்றிய கவிதை.

"வாழ்க்கை என்பது பாகற்காய்!" அக்கா வந்தாள் கசப்புடனே… வாழ்க்கைப்பட்டுப் புகுந்த இடம் ஆட்டிப் படைக்கும் அவலத்தைத் தழைந்த குரலில் தழுதழுத்துக் கண்ணீர் வழியச் சொல்லுகிறாள்! தளர்ந்து போனார் தந்தையுமே! தாயோ எதுவும் பேசவில்லை!! "வாழ்க்கை என்பது போர்க்களமே!" அக்கா வந்தாள் அழுதபடி… வாழ்க்கைத் துணைவர் வசைபாடிக் கழுத்தைப் பிடித்து நெரிக்கின்றார்! "பாழாய்ப் போனது என் வாழ்க்கை!" பதறியே பலமுறை விம்முகின்றாள்! ஆழப் புதைந்தார் தந்தையுமே! தாயோ எதுவும் பேசவில்லை!! "வாழ்க்கை என்பது சிறைக்கூடம்!" அக்கா வந்தாள் சினத்துடனே… "ஆழ்ந்த அன்பு அங்கில்லை; அனைவரும் நாடகம் ஆடுகின்றார்!" சோர்ந்த குரலில் சோகங்களைச் சிந்திய மூக்குடன் சொல்லுகின்றார்! வீழ்ந்தே போனார் தந்தையுமே! தாயோ எதுவும் பேசவில்லை!! "வாழ்க்கை என்பது வியாபாரம்!" அக்கா வந்தாள் வெறுப்புடனே… "வாழ்வில் வந்திடும் வசதிகளை வகுத்துப் பார்த்துக் கணக்கிடுவார்!" தேய்ந்து தேகம் மிக மெலிந்து தேம்பியே அக்கா கூறுகின்றாள்! ஒடிந்து விழுந்தார் தந்தையுமே! தாயோ எதுவும் பேசவில்லை!! "மாமன் மாமி மைத்துனரும் மதர்த்துப் போன நாத்தியரும் வீம்பாய்ச் சண்டை போட்டிடுவார்! வெட்டிப் பழியைச் சுமத்திடுவார்! அனலில் விழுந்த புழுவானேன்!" அரற்றியே அக்கா அழுகின்றாள்! முனகியே தந்தையும் முணுமுணுத்தார்! தாயோ எதுவும் பேசவில்லை!! "எதற்கும் எல்லை ஒன்றுண்டு!" அக்கா வந்தாள் முடிவுடனே… "இதமாய்ச் சொல்ல எவருமில்லை… இனிமேல் வாழ்ந்தொரு பயனுமில்லை… நிதமும் வாழ்ந்து மடிவதற்கு நிஜமாய் இறப்பது மேல்!" என்றாள்… பதறியே தந்தை துடிதுடித்தார்! பரிவொடு தாயும் வாய்திறந்தாள்!! "அருமைப் பெண்ணே! ஆருயிரே!! அவசரம் வேண்டாம் பொன்மகளே! பொறுமை காத்து நான்கூறும் புத்தி மதிகளைக் கேட்டிடுவாய்! புறத்தே குத்தும் முள்விலக்கிப் பூக்களைப் பாங்காய்ப் பறிப்பதுபோல் உறவைப் பெருக்கும் இல்லறமோர் உயர்ந்த ரோஜா வனமென்பேன்!" "வாழ்க்கை என்பது பெருங்கடலாம்! அலைகளோ அங்கே ஏராளம்! ஆழ்ந்து முங்கினால் முத்துவரும்! ஆத்திரம் கொண்டால் அலைக்கழிக்கும்! வீழ்ந்து மடிந்திட எண்ணாமல் வெற்றிப் பாதையை வகுத்துவிடு! தாழ்ந்து சென்றால் வாழ்வுண்டு! தணிவில் நிச்சயம் பேருண்டு!!" "வாழ்க்கை என்பது சக்கரமாம்! மேடும் பள்ளமும் சுற்றிவரும்! காழ்ப்பும் இனிப்பும் கலந்திருக்கும்! கனியும் காயும் சேர்ந்திருக்கும்! சதையும் நகமும் போலிருந்தால் சச்சரவுக்கு இடமில்லை! எதையும் அன்புடன் எதிர்கொண்டால் ஏமாற்றங்கள் விளைவதில்லை!!" "கூட்டைச் சுற்றித் தேனீக்கள் துரத்திப் பிடித்தே கொட்டவரும்! வீட்டைக் காத்திடும் மகராசி விட்டுப் பிடித்தால் தேன்சொரியும்! வாட்டம் போக்கி வானுயர்ந்த கோபுரம் போலவே நீயெழுந்தால் ஆட்டம் போட்டு ஆர்ப்பரிக்கும் அத்தனை பேரும் அடங்கிடுவார்!" "மணலைக் கயிறாய்த் திரிப்பவர்கள் மண்ணில் சிறந்து வாழ்வதில்லை! குணத்தைப் போற்றும் குலமகளால் குடும்பம் குலைந்து போவதில்லை! அனலை அணைத்திடப் புனலுண்டு! அந்தியை விரட்டிட விளக்குண்டு! புனலாய்க் குளிர்ந்து சினம்தவிர்ப்பாய்! சிந்திய கண்ணீர் நீ துடைப்பாய்!" திருத்தி எழுதிய சித்திரம்போல் சிரித்தே அக்கா பேசுகின்றாள்! "வருத்தம் என்பது இனியில்லை… வாழும் வழிமுறை கண்டுகொண்டேன்! புரிந்து கொண்டேன் வாழ்வதற்குத் தேவை 'அன்பு, பொறுமை' என்றே.. அறிவுக்கண்ணைத் திறந்து விட்டாய்! அம்மா! நீயொரு போதிமரம்!!" — பானுரவி / சிங்கப்பூர்

பானுரவி / Banooravi

கவிதைகள்