கவிதை

வந்தனை செய்து வாழ்வீர்!

April 2014 · First Prize, Muthamizh Vizha · Singapore · 5 April 2014

அற்புதப் பெற்றோருண்டு! அன்பான மனையாளுண்டு! கற்கண்டு மழலைபேசும் கனிமுத்துப் பிள்ளையுண்டு! இத்தனை உண்டென்றாலும் இன்னமும் வேண்டுமென்று பித்தனைப் போலவேதான் புறப்பட்டு வந்ததென்ன? — 2014 சிங்கப்பூர் முத்தமிழ்விழாவில் முதல் பரிசு பெற்ற கவிதை.

அற்புதப் பெற்றோருண்டு! அன்பான மனையாளுண்டு! கற்கண்டு மழலைபேசும் கனிமுத்துப் பிள்ளையுண்டு! சுற்றத்தார் உறவுமுண்டு! சுந்தரத் தோட்டமுண்டு! நாற்றங்கால் வயலுமுண்டு! நான்மாட வீடுமுண்டு! ஊருணி அருவியுண்டு! ஊர்ந்திட ஊர்தியுண்டு! சீர்மிகு செல்வமுண்டு! சிந்திக்கும் அறவோருண்டு! பார்மிகு தமிழுமுண்டு! பண்பான நட்புமுண்டு! தேருண்டு! தெய்வமுண்டு! திருநாளும் நித்தமுண்டு! இத்தனை உண்டென்றாலும் இன்னமும் வேண்டுமென்று பித்தனைப் போலவேதான் புறப்பட்டு வந்ததென்ன? மொத்தமாய் நாட்டைவிட்டு பெருத்தநற் செல்வம்சேர்க்க நித்தமும் வெயில்மழையில் நெடுநேரம் உழைப்பதென்ன? கண்டதே காட்சியென்றும் கொண்டதே கோலமென்றும் தீண்டாத பழக்கமெல்லாம் தினமுமே தொடர்வதென்ன? எண்ணத்தில் போதையேற்றி எதிர்காலக் கவலையின்றிக் கண்ணியம் தவறிநல்ல வழிமாறிப் போவதென்ன? என்றுநீ வருவாயென்று பெற்றோரும் காத்திருக்க உன்மீது உயிரைவைத்து மனைவிகண் பூத்திருக்க இன்பமாய் வருங்காலத்தை உருவாக்க வந்தநீயும் துன்பத்தை விலைக்குவாங்கி நிலைமாறிப் போவதென்ன? அந்நிய தேசம்வந்தால் அடக்கமாய் இருத்தல்வேண்டும்! தன்னிலை கவனத்தோடு தற்காத்துக் கொள்ளவேண்டும்! எண்ணிய முடிதல்வேண்டும்! எதனிலும் ஒழுக்கம் வேண்டும்! பண்ணிடும் செயல்கள்யாவும் பழுதறத் துலங்கவேண்டும்! நன்றியே என்றும்வேண்டும்! நல்லுடற் பயிற்சிவேண்டும்! வன்முறை நீக்கவேண்டும்! வருங்காலம் நினைக்கவேண்டும்! உண்மையே பேசவேண்டும்! உறுதியாய் உழைக்க வேண்டும்! அன்புடன் சொல்லும்புத்தி அகத்தினுள் பதியவேண்டும்! தரணியில் தமிழர்க்கென்று தனிமரியாதையுண்டு! தரக்குறை வாகிப்போனால் தள்ளியே வைப்போருண்டு! உரத்துநான் குரல்கொடுத்தேன்! உத்தமத்தமிழா! கேளாய் "வரமது" மனிதவாழ்க்கை! வந்தனை செய்து வாழ்வீர்!!

பானுரவி / Banooravi

கவிதைகள்