"ஏய் தொம்பச்சி... உள்ள வா" என்ற அம்மாவின் குரல் கேட்கிறது. வீட்டு வெளி வாசலில் ரமணி, மூக்கன், முருகப்பன், வெள்ளையன், கண்ணன் என்ற பசங்களோடு கிட்டிப் பிள்ளை விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஊஹூம்! அம்மா கரடியாய்க் கத்தியும் வீட்டுக்குள் போகவில்லை.
புலர்ந்தும் புலராத காலைப்போழுது...தலையில் ஈரத்துண்டோடு, அம்மா இதமாக எழுப்புவது சங்கீதமாக இருக்கும்...அதட்டல் இல்லாத மிரட்டல் இல்லாத அந்தக் குரல்தான் நான் கேட்ட முதல் மந்திரம்...டக்கென்று எழுந்துவிடுவோம். கூடவே சுகுணாக்காவும் குரல் கொடுப்பாள். குழம்பும் கூட்டும் அம்மா அன்றாடம் சொல்லும் ஆதித்யஹ்ருதயத்தோடும், மற்றைய ஸ்லோகங்களோடும் பக்தி மணத்தோடு பரிமளிக்கும்.
தண்ணீர்...அன்றைய கால கட்டத்தில் தண்ணீருக்கு அலைந்த தவிப்பு இருக்கே...தாமிரக்குடம், பித்தளைக்குடம், தோண்டி என்று எல்லாவற்றையும் புளி போட்டுத் தேய்த்து, மாட்டா ஊரணி, வயிரவன் சேட்டி ஊரணி என்று அக்காக்களோடு போய்த் தண்ணீர் எடுத்து வந்த நாட்கள்.
விட்டுவிட முடியாதபடி சமையற்கட்டு என்னை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது...எத்தனை பேர் வந்தாலும் மலைக்காமல் சமைக்கும் திறமை கைவந்திருக்கிறது...நித்தியச் சமையல் மட்டுமின்றி, அனைத்து வகை இனிப்புகளும், பட்சணங்களும் பண்ணத் தெரிந்திருக்கிறது.....அன்றாடம் அனைவரையும் நினைத்து நினைத்து இந்த வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை அசைபோடுகிறேன்...நிறைய அனுபவங்கள்...அவை மனம் நிறைந்த அனுபவங்கள் கூட...அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம் போல்... வாழ்க்கை அழகானதுதான்!
அன்புடன், பானுரவி
With love, Banooravi