ஈரமான களிமண் மேடு. அப்பாவின் மர பலகை. ஒரு கிண்ணம் தண்ணீர். சுகுணாக்காவின் விரல்கள் — ஒன்றுமே இல்லாத இடத்திலிருந்து, ஒரு சின்னக் கடவுள் உருவாகிறார்.
ஒரு பெரிய தாம்பாளத்தில் களிமண் இருக்கு. அப்பா செய்து வைத்த பெரிய மரப்பலகையும், சிறு வாளியில் தண்ணீரும் மட்டுமே...முற்றத்தில் சுகந்தராஜித் தொட்டிக்கு அருகே உடகார்ந்து கொண்டு சுகுணாக்கா என்ன செய்கிறார்? எனக்குள் ஒரு curiosity எட்டிப் பார்க்கிறது....ஆர்வமோடு நானும் அங்கே அமர்ந்து கொள்ளுகிறேன்.
களிமண்ணைக் கற்கள் நீக்கிச் சுத்தம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு நல்ல வெண்ணை போலப் பிசைந்து கொள்ளுகிறார் அக்கா. ஒரு பெரிய சைஸ் உருண்டை, அடுத்த சைஸ், அப்புறம் சிறு சிறு உருண்டைகள் என நாலைந்து என்று உருட்டி வைக்கிறார். ஒரு தேர்ந்த சிற்பியைப் போல அக்காவின் விரல்களில் அந்தக் களிமண் உருண்டைகள் மெதுவாக உருப் பெறுகின்றன...
அழகிய ஒரு ஆசனம் முதலில் உருவாகிறது. பின்னே வருவது பருத்த வயிறு, அதன் மீது தலை வைக்கப்படுகிறது.... நீண்டு வளைந்த துதிக்கை முகத்திலிருந்து புறப்படுகிறது...திடமான பின்புறமும், முதுகும், நான்கு கைகளும்.... இரு கால்கள்...அமர்ந்த நிலையில் பிள்ளையார் மெதுவாக உருவாகிறார்....சிறு மிளகு கண்களில் பொருத்தப்பட்டு அவரின் கனிவான பார்வையைக் கூட்டுகிறது...இரண்டு சிறு தீக்குச்சிகள் தந்தமாகின்றன. அதன் பிறகு சிறுசிறு மணிகளால் கிரீடமும், ஆபரணங்களும் கங்கணமும், பாதசரமுமாக..... முற்றத்தில் சூரியன் எட்டிப் பார்க்கிறான்...அவனுக்கும் பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹலோ" சொல்லணும் என்று ஆர்வம்...
அப்படியே தேவதச்சன் செய்தாற் போல் பிள்ளையார் ஐம்மென்று அவதாரம் செய்தாயிற்று....அப்படியே அலுங்காமல் எடுத்துக் கொண்டு போய்க் கூடத்துச் சுவாமி அலமாரியின் முன்பு வைத்து விடுவார் அக்கா....
விநாயகர் சதுர்த்தியன்று வீட்டு வாசலில் செம்மண் இட்ட அழகிய கோலம் பூத்திருக்கும்...ரமணி மாவிலைத் தோரணம் கட்டிக் கொண்டிருப்பான். பச்சை அருகம்புல்லும், மருக்கொழுந்தும், மல்லியும், இருவாட்சியும், தாமரையும், கதம்பமுமாக வீடு மணத்துக் கொண்டிருக்கும்...ஆயிரத்தெட்டு விநாயக அஷ்டோத்திரங்களைச் சொல்லிப் பூசை செய்ய அப்பாவும் ஆயத்தமாகிறார்.
சமையற்கட்டு அல்லோல கல்லோலப்படும்....எல்லா சகோதரிகளும் அங்கே பாந்தமாக உட்கார்ந்து கொண்டு அம்மா கிளறி வைத்த மாவில் மோதகமும் கொழுக்கட்டையும் செய்ய ஆரம்பிப்பார்கள். வெல்லம் சேர்த்த தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்பு பூரணம், எள்ளுப் பூரணம்... அடுத்ததாகப் பயத்தம் பருப்பும் உளுந்தும் தேங்காய் மற்றும் பச்சை மிளகாயோடு சேர்த்து அரைத்து வேகவைத்து உதிர்த்த பூரணம்....அது உப்புக் கொழுக்கட்டைக்காக!
...கிளறிய மாவில் அழகிய சொப்பு செய்து உள்ளே பூரணம் நிரப்பி அரைச் சந்திரன் போல மடித்து விளிம்புகளை முறுக்கி ஒரு வகை, மாவைக் கிண்ணம் போலச் செய்து பூரணத்தை வைத்து, உச்சியில் திருகிக் குடுமி மாதிரி ஒரு வகை, சொப்புக்குள் உளுத்தம் பூரணத்தை வைத்துச் சதுரமாக விளிம்பை நாலுபுறமும் திருகிவிட்டு கொஞ்சம் திறந்தாற்போல் செய்வது ஒருவகை என்று கொழுக்கட்டைகள் பல திணுசில் இருக்கும்...பிள்ளையார் ரொம்ப ரசனை உள்ளவர் தான்...பூரணமெல்லாம் முடிந்தபின் எஞ்சிய கொழுக்கட்டை மாவைச் சிறுசிறு உருண்டையாக உருட்டி அது வேறு மணிமணியாக இருக்கும். அதை எள்ளு மிளகாய்ப் பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து விஜயா அக்கா தயார் செய்வார்...இவை தவிரக் கொண்டைக் கடலைச் சுண்டல் வேறு கமகமக்கும்!
இது தவிர சுவிஸ் சாக்லேட்டு மாதிரிப் பளபளத்துக் கொண்டு நெய்யில் பொரித்தெடுத்த குண்டுகுண்டான அப்பம், பெரிது பெரிதான வடை, சுய்யம், அவல் சொஜ்ஜி...இத்தனையும் தயாராகிக் கொண்டிருக்கும். அது தவிரப் பயத்தம்பருப்பும் கடலைப்பருப்பும் சேர்த்து அரிசியும் தேங்காயும் அரைத்து வெல்லத்துடன் செய்த பாயசம், இட்டிலி வேறு... அடேங்கப்பா...
இத்தனையும் சாப்பிட்டால் பிள்ளையாருக்கு மட்டுமல்ல, சாப்பிடும் எல்லோருக்கும் பருத்த தொந்தி நிச்சயம் வந்துடும் இல்லையா? But who cares?... hehe....வழக்கம் போல எப்போ அப்பா பூஜை முடித்து மணி அடிக்கக் கூப்பிடுவார் என்று நான் பொறுமையிழந்த காத்துக் கொண்டிருப்பேன்...
" பிள்ளையாரே வாரும்! பிழை வராமல் காரும்! முக்கனியும் தேனும் முள்ளுடன் பலாக்காய் .. அப்பனே உனக்கு உவப்புடன் படைப்பேன்! முக்கலப் பச்சரிசி மூவாயிரம் செவ்விளநீர் முக்கியமாய்ப் பூஜை கொள்ளும் மூங்கிலடிப் பிள்ளையாரே! நாற்கலப் பச்சரிசி நாலாயிரம் செவ்விளநீர் நாணயமாய்ப் பூஜை கொள்ளும் நாவலடிப் பிள்ளையாரே!"
குள்ளக் குள்ளனே குண்டுவடிவனே வெள்ளைக் கொம்பனே விநாயகனே... வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்! வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்! ...........இப்படியெல்லாம் ஒரு புத்தகத்தில் படித்ததும் பாடியதும் நன்றாக நினைவிருக்கு...ராஜா, உனக்கு ஞாபகம் இருக்கா? அப்புறம் விநாயகர் புராணம் என்ற தடித்த புத்தகம் ஒன்று இருக்கும்...பிள்ளையாரின் லீலைகள்...மகிமைகள்...அவற்றில் விவரமாகக் கதைகளாக இருக்கும்!
செட்டிநாட்டில் எங்கு திரும்பினாலும் பிள்ளையார் தான்! முச்சந்திப் பிள்ளையார், மரத்தடிப் பிள்ளையார், குளத்தங்கரைப் பிள்ளையார், கோவில் பிள்ளையார் என்று எங்கெங்கு நோக்கினும் பிள்ளையார் தான்...நம் அம்மா அப்பாவுக்கு சுந்தரமூர்த்திப் பிள்ளையார் ரொம்பவே ஆதர்சனமானவர். அதே குளக்கரையில் அருணாசல விநாயகர் என்ற ஒரு கோவில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் நடந்தது நினைவிருக்கு...முதன்முதலாக வேப்பமரத்துக்கும் அரச மரத்துக்கும் விவாஹம் என்று பூஜை செய்ததுஎல்லாம் இப்போதும் நிழற்படமாகத் தெரிகிறது.
சிறு வயதில் வேடிக்கையான உருவமாக இருந்த பிள்ளையாரிடம் எனக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பக்தி ஏற்பட்டதில்லை. மாறாக ரொம்பவே அவரைப் பிடிக்கும்...அவரைப் பார்த்தாலே மனசுக்குள் ஒரு சந்தோஷம் பிரவகிக்கும்...அம்மா அப்பாவைச் சுற்றி வந்தாலே உலகத்தைச் சுற்றியது மாதிரி என்ற உயர்ந்த தத்துவத்தை எத்தனை எளிமையாகக் காட்டி இருக்கிறார்! Take it easy என்கிற பாணியில், போகிற போக்கில் just like that அவர் சொன்ன விதம்தான் என்னை அவர்பால் ஈர்த்த விஷயங்கள்...மேலும் ரொம்ப சிம்பிள்...பெரிசாப் பூமாலை வேண்டாம். பிடி அருகம்புல் போதும். பக்ஷணம் ஏதும் பெரிதாக வேண்டாம்...தேங்காயும் கரும்பும் போதும்...
எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளுவார்...ஒரு மரத்தடி போதும்...அல்லது குளக்கரை போதும். விமானம் கொண்ட விண்ணுயர்ந்த கோபுரமோ, கோவிலோ தேவை இல்லாதவர்.
எளிமையின் திருவுருவம்...ஏகதந்தம் கொண்டவன்...எல்லாம் வல்ல எம்பெருமான் நம் பிள்ளையார்! அவர் ஒரு குழந்தைச் சாமி! எந்தவொரு குழந்தையிடமும் நாம் ஏதேனும் கேட்டால், கையிலிருப்பதை யோஜிக்காமல் உடனே கொடுத்து விடும்! நம்ப பிள்ளையாரும் அப்படியே.....நம்பிக் கை தொழுதால் அந்தத் தும்பிக்கையான் நமது துயரங்களைப் போக்கி நல்லனவற்றை அருளுவான் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
வெறும் நாட்களில் அம்மா பட்சணம் செய்யும் போது ஒரு சின்ன பிரமிடு மாதிரி அந்த மாவில் சிறியதாக ஒரு பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டுத் தான் முறுக்கோ, தட்டையோ செய்வார் என்றால்...பெரிய காரியங்களில் அவரை எப்படி வேண்டிக் கொண்டிருந்திருப்பார்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதானவர் அல்லவா நம்ப பிள்ளையார்?
ஞாலமாகவும் ஞானமாகவும் இருக்கும் பிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது? நாம் போடும் ஒரு சிறு பிள்ளையார் சுழியில் வந்து இருந்து கொண்டு அனைத்திலும் வெற்றியைக் கொணர்ந்து சேர்த்து விடுகிறாரே? கர்நாடிக் சங்கீதம் பாடுபவர்கள் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடலைத் தான் முதலில் அநேகமாகப் பாடுவார்கள். இந்த வாதாபி கணபதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை என்னை உந்தித் தள்ளியது...வரலாறு கண்ட பிள்ளையார் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் திருவாரூரில் தியாகேசர் உறையும் திருக்கோவிலில் இருப்பவரைக் கண்டபோது, ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் உணர்ந்தேன்....
7-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னனாகிய இரண்டாம் புலிகேசியைக் கொன்று, சாளுக்கியத் தலைநகரமாகிய வாதாபியிலிருந்து (இன்றைய பாதாமி) தனது சேனாதிபதியான பரஞ்சோதி மூலம் நரசிம்ம பல்லவன் கொண்டு வந்த பிள்ளையார் அல்லவா? வெற்றிக் கொடி நாட்டிய பல்லவன் திருவாரூர் கோவிலில் இந்தப் பிள்ளையாரை ஸ்தாபித்தான் என்பது வரலாறு. ஆனால், திருச்செங்காட்டான்குடியில் (நரசிம்மனின் பிறந்த ஊர்) உத்ரபதீஸ்வர சுவாமி கோவிலில் இருப்பதுதான் வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது......இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் கடவுள் அருளால் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்...
உச்சிப் பிள்ளையார், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், சித்திவிநாயகர்(மும்பை) டகுடுசேத் பிள்ளையார் (புனே), ஈச்சனாரிப் பிள்ளையார், மணக்குள விநாயகர்(பாண்டிச்சேரி) காணிப்பாக்கம் பிள்ளையார்(சித்தூர்), புளியங்குளம் பிள்ளையார்(huge size) (கோயமுத்தூர்) இவை மட்டுமல்ல....இன்னமும் பல பிள்ளையார் கோவில்கள் தரிசனம் மட்டுமின்றி நியூயார்க்/.பிளஷிங் பிள்ளையார், ஜெனிவா பிள்ளையார், ஏன்.... ஸ்வீடன் பிள்ளையார் கூடப் போய் தரிசனம் கண்டு வந்தாயிற்று......பர்மாவில், ரங்கூனில், இந்தோனேஷியாவில், பாலியில்... ஏகப்பட்ட பிள்ளையார்கள்...ஸ்ரீலங்காவில் கணக்கில் அடங்காப் பிள்ளையார் கோவில்கள்...
எந்த ஒரு தெய்வத்துக்கும் இல்லாத ஒரு புகழும் பிரபலமும் இந்தப் பிள்ளையாருக்கு அனைத்து நாடுகளிலும் இருக்கிறதே......சிங்கப்பூரில் சீனர்கள் பிள்ளையார் கோவிலுக்கு வந்து பக்தியோடு வணங்கிச் செல்வதைப் பார்க்கையில் நமது நம்பிக்கையும் பரிபூரண பக்தியும் இன்னமும் ஒரு பெரிய வீச்சில் அதிகரிக்கிறது என்பதே உண்மை!
ஜெயந்தைக் கருவில் சுமந்திருந்த சமயம்...தினமும் சதாசர்வ காலமும் வேண்டிக் கொண்டே இருப்பேன்....ஆண்பிள்ளையாகப் பிறக்கணும் என்பதே என் சிந்தையில் இருந்தது.....வீட்டில் அப்பாவும்...சாவிக்காவும் தான். அவ்வப்போது வந்து தைரியம் சொல்லிச் செல்லும் விஜயாக்கா....பாறையடித் தெரு வீட்டின் நமது பக்கத்து வீடு பிச்சைக் குருக்கள் வீடு...சங்கரி மாமியின் கணவர். தினமும் எனக்கு உச்சிப் பிள்ளையாரிடமிருந்து ஒரு கிள்ளுப் பூவும், ஒரு மலை வாழைப் பழமும் கொண்டு வந்து தருவதோடு..."பானு! கட்டாயம் பிள்ளைதான்...கவலையே படாதே" என்று சொல்லுவார்... இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது...பிராமணர்கள் வாக்கு பலிக்குமென்பார்கள்....ஜயந்த் பிறந்தபோது நிஜமாலுமே எனது கனவு மெய்ப்பட்டது....பிள்ளையாரை அன்றிலிருந்து எனது உற்ற தோழனாகக் கொண்டேன்....இன்றளவும் அந்த சங்கரி மாமி குடும்பத்தை எண்ணிப் பிரார்த்தனை செய்கிறேன்....
யாருக்குமே மனது சஞ்சலமடையும் போதும், குழப்பத்தில் இருக்கும் போதும், பிறர் கூறும் ஒரு நல்ல வார்த்தை என்பது யானைபலம் தருவதாகும்! இது போல் நிறைய அனுபவங்கள் இருந்தாலும், பிள்ளையாரிடம் ஏற்பட்ட எனது பற்றுதலுக்குப் பிள்ளையார்சுழி போடப்பட்டது அப்போதுதான்...
இந்த வருடம் கூடப், பத்து வருஷங்களாக புரோகிதர்கள் வந்து பூஜை செய்து நமது வீட்டில் நடக்கும் விநாயக சதுர்த்தி ஆராதனை இந்தக் கொரோனா வைரஸால் தடை படுமோ என்று சற்றுக் கவலைப் பட்டேன். என்ன ஆச்சரியம்! அவர்களை அணுகிப் பேசக்கூட இயலாமல் தவிப்போடு இருந்தேன்.
சிங்கப்பூர் தக்ஷிண பாரத பிராமணர்கள் சங்கத்திலிருந்து கமிட்டியாளர்களே அழைத்து பூஜை செய்ய வருவதாகச் சொன்ன போது என் கண்ணில் நீர் வழிந்தது. அப்படி என்றால், இந்த எளியோரின் பூசையை அந்த விக்னேஷ்வரக் கடவுள் மனதார ஏற்றுக் கொள்வதாகத் தானே அர்த்தம்? மனது ரொம்பவும் உற்சாகமாகிப் போனது....இது போதும்...என்ன...இந்தக் கொரோனாவால் நிறையப் பேர் கலந்து கொள்ள இயலாது...அவ்வளவு தானே தவிர அந்த விநாயகப் பெருமான் விருப்புடன் அவதரித்து சகல மங்களங்களையும் எல்லோருக்கும் தருவதற்குத் தயாராக இருக்கிறான் என்பதே பெரிய சந்தோஷத்தைத் தருகிறது...
அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பெரியபுராணம் சொல்வது போல் கடவுளின் ஆங்ஞை கிடைத்து விட்டது.... கடவுளுக்கு நன்றி! விநாயகனே வெவ்வினையை வேறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாத் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து! அல்லல்போம்! வல்வினைபோம்! அன்னைவயிற்றில் பிறந்த தொல்லை போம்! போகாத் துயரம்போம்! நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்! வரும் சனிக்கிழமையன்று (22nd August 2020) விநாயகர் சதுர்த்தி வருகிறது...எல்லோரும் பிள்ளையாரை மனதார வணங்கி அவனது அனுக்ரகத்தை வேண்டுவோம்.... அன்புடன் பானுரவி/17th August 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi