ஒன்பது இரவுகள், ஒன்பது தேவியர். ஏறும் படிகள். ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படக் காத்திருக்கும் பெட்டிகளில் உறங்கும் பொம்மைகள் விழித்தெழுகின்றன.
வண்ணப் பூக்களும், வாசனைத் திரவியங்களும், இனிப்புச் சுவையும், கலந்த சாதமும், சுண்டல் வகையும்....சரசரப் பட்டும், பெண்டிரின் இசையும், சிறுவர் சிறுமியரின் விதவிதத் தோற்றமும், பூஜையும், பாட்டும்,...... என்ன நடக்கிறது? படிகளும் அவை தாங்கி நிற்கும் பொம்மைகளும் செம்மண் பூச்சுடன் மிளிரும் கோலமும், ஒளிரும் விளக்குகளும்.....என்ன நடக்கிறது? மனதுக்குள் உற்சாகம் நிரம்பி வழிகிறது....சந்தோஷம் பிரவகிக்கிறது...குறையொன்றும் இல்லாத அந்தக் கோபுரத்து நாயகியை ஜோடித்து வைத்த பூஜை அறை பூலோக சுவர்க்கமாக தகதகவென்று விளங்குகிறது....என்ன நடக்கிறது?
ஆம்....இன்று நவராத்திரி...சுபராத்திரி! கண் முன்னே நமது அம்மாவும் அப்பாவும் சகோதரிகளும் நிறைந்த அந்தப் பண்டிகை நாட்கள் தெரிகின்றன. பரண் மீதிருந்து பெரிய பெரிய பெட்டிகள் இறக்கப்படுகின்றன.....ஒற்றை வரிசையில் மரப்படிகளை அப்பா கட்டமைத்துத் தருகிறார். அப்பாவின் பளிச் வேஷ்டிகள் அவற்றின் மீது அழகாகப் படியும்படி சகோதரிகள் கச்சிதமாக வேலை செய்கிறார்கள். ஜரிகைப் பூக்களும், வண்ணக் காகிதத் தோரணங்களும், மணி மாலைகளும் இணைக்கப்பட்டு படிக்கட்டு அழகாக உருவாகிறது.
சரசரவென்று ஒவ்வொரு பொம்மையும் பிரிக்கப்படுகிறது....அம்மாவின் பழைய புடவைக்குள் இருந்து மாம்பழக் கண்ணன் எட்டிப் பார்க்கிறான். மொழுமொழுவென்ற அந்தக் கண்ணன்தான் எத்தனை அழகு! ஒ! அது என்ன? கிருஷ்ணரும் ராதையும் ஊஞ்சல் ஆடும் ஆடும் நளினமான பொம்மை....இந்தப்புறம் கோபிகா ஸ்த்ரீகளுடன் ஜலக்ரீடை செய்யும் கிருஷ்ணன், உரலில் கட்டி மிரட்டும் யசோதையும் குறும்புக்கார கிருஷ்ணரும்....மகிஷனைக் கொன்ற தோற்றத்தில் துர்க்கை, நளினமான மீனாக்ஷி, அஷ்ட லக்ஷ்மிகள், ரிஷபத்தில் சிவனும் பார்வதியும்....கூடவே குட்டி கணபதியும் பால முருகனும்! காளிங்க நர்த்தனமிடும் கிருஷ்ணரும் கூடவே அவரது தோழர்களும், ஜம்மென்ற சிகப்புப் பிள்ளையார், நடராஜர், பள்ளி கொண்ட பெருமாள்,..... ஒ! ராமரும் சீதையும் மாலை மாற்றும் பொம்மை, மற்றொரு ராமர் சீதா தமது பரிவாரங்களுடன் தர்பார் நடத்தும் பொம்மை, ஸ்ரீமன் நாராயணன், தசாவதாரம்,..... ராமனும் குஹனும்....தோகை மயிலோடு சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான், மேனகை விஸ்வாமித்ரர், உக்கிர நரசிம்மர்.... கனிவான அன்னை பூரணி....தாமரையில் இலக்குமி, கையில் வீணையுடன் சரஸ்வதி....புலி மீது பவனி வரும் பவானி.....
செட்டியாரும் ஆச்சியும், அவர்களின் முன்னே விதவிதமான கிண்ணங்களில் அரிசி, பருப்பு, நவ தானியங்கள் என்று இருக்கும்...பழ வகைகளும், காய்கறிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்! அது தவிரக் கச்சேரி செய்யும் வயலும், மிருதங்கமென்று வாசிக்கும் மற்றவரும், பின்புலத்தில் நெடிதான கோபுரமும்,.....ஒரு பக்கம் நிறைய அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கும் மரப்பாச்சி ஜோடி பொம்மைகள், வெள்ளைக்காரப் பொம்மைகள், நரிக்குற இனத்துக் குட்டி பொம்மைகள், விதவிதமான மிருகங்கள், பறவைகள், பூ ஜாடிகள், பூங்கொத்துக்கள்,.... எதைச் சொல்ல? எதை விட?...
அத்தனையும் வரிசைக் கிரமப்படி அழகாகப் படிகளில் வைக்கப் படுகின்றன. அந்தப் பழைய துணிகளின் வசமும், மரப்பெட்டிகளின் வினோதமான மணமும் நாசியில் இன்னமும் என்னால் உணர முடிகிறது...பொம்மைகள் எல்லாம் அந்தக் காலத்து மனிதர்களின் வஞ்சமில்லா மனம் போலவே பெரிது பெரிதாக இருக்கும்! அதுவும் சுத்தமான மண் பொம்மைகள் தரமான சாயம் ஏற்றப்பட்டு திட காத்திரமாக இருக்கும்....தூக்க முடியாமல் கனக்கும். கூடத்தில் மண்ணால் மெழுகி மூடப் பட்டிருக்கும் தெப்பக் குளம் திறக்கப்படும். சிறிய கடப்பாரை கொண்டு அந்த வேலையை ரமணி செய்து விடுவான்......அத்தோடு அந்தத் தெப்பக் குளத்தில் நீர் நிரப்பி மீன்களை (நிஜ மீன்கள்) அதில் விடுவதும் அவனது வேலைதான்....நானும் ராஜாவும் அரிசிப் பொரி போடுவோம்....அந்த மீன்கள் நீந்துவது அத்தனை ஆனந்தமாக இருக்கும்!
அது தவிர குளத்துக்கரை மண்ணை எடுத்துப் பார் பண்ணுவோம். மரம், செடி, சிறிய குளம், குருவிகள், மான், கரடி என்று....இந்திராணியும் பேபியும் தான் இதற்கு இன்சார்ஜ். சேஷூ* என்று குண்டாக ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்தவர்....அவர் வந்து கலர் விளக்கு போட்டுக் கொடுப்பார்...(* இந்த சேஷூவுடன் தான் நானும் ராஜாவும் சுற்றிக் கொண்டு இருப்போம். பொன்னமழி அம்மன் தெப்பக்குளத்தில் என்னையும் ராஜா சேகரையும் உட்கார வைத்து விடுவதோடு மட்டுமல்ல....அந்தப் பிங்க் நிற மிட்டாய் வாங்கித் தருவதும் அவர்தான்..கணக்கு வழக்கும் இல்லாமல் வாங்கித் தருவார்...வெளுத்துக் கட்டுதான்!!)
அம்மா நித்தம் ஒரு தினுசில் விதவிதமாக ..ஒக்காரை, தேன்குழல், அம்மிணிக் கொழுக்கட்டை, அவல்/புளி போட்டது, வெல்லம் போட்டது, சுய்யம், அப்பம், முத்சரி, குணுக்கு... இவை தவிர நாள் ஒரு சுண்டல்....அது மட்டுமல்லாமல் நெய் வழியச் சர்க்கரைப் பொங்கல், பீட்ரூட் அல்வா, என்று பிரமாதப் படுத்துவார்.... "மிருகண்ட மகரிஷி மார்க்கண்டேய முனி யாகம் பண்ணுகின்ற காலத்திலே..." என்று தேவிபாதம் சொல்லுவார் அம்மா. கூடவே நம் சகோதரிகளும்....அது தவிர சகஸ்ர நாமம், அயிகிரி நந்தினி, காமாட்சியம்மன் விருதமென்று சகல ஸ்லோகங்களும் சொல்லப்படும்....அப்பா யாத்த பாடல்கள் மற்றும் அம்மாவின் ஸ்பெஷல் அம்மனின் பாடல்கள் பாடப்படும்....அம்மா பக்தி ஸ்வரூபியாக இருப்பார்...அந்த மஞ்சள் பூசிய முகமும் முத்து மூக்குத்தியும், மெலிசான புன்னகையும்,.... அம்மா அம்மா என்று மனசு அரற்றுகிறது....
தினமும் நானும் ராஜாவும் ஒரு வேஷம் போட்டுக் கொண்டு குங்குமச் சொப்பை எடுத்துக் கொண்டு போய் எல்லோரையும் அழைத்து விட்டு வருவோம்...பிரின்சிபால் மாமி, டாக்டர் அனந்த நாராயணன் வீடு, பாபு டாக்டர் மாமி....சோமசுந்தரம் ஹெட்மாஸ்டர் மாமி என்று பட்டியல் நீளும். தினமும் செட்டிநாடு கோவிலுக்குப் போவதுண்டு....சௌந்திர நாயகி அம்மனைப் பார்க்க ஆயிரம் கண் வேண்டும்....பாஸ்கர குருக்களின் கை வண்ணத்தில் அம்பாள் ஜிலுஜிலுவென்று இருப்பாள். அந்த பிரம்மாண்ட கொலு....அம்மாடி!....அது போல் ஒரு கொலு நான் எங்கும் இதுவரை கண்டதில்லை...அணைந்து அணைந்து எரியும் ரயில் எஞ்சின் பொம்மையும், மூடி மூடி விரியும் தாமரையும்...அதனுள் நிற்கும் இலக்குமியும்...வண்ணக் கோலங்கள் தான்....அங்கும் தொன்னையில் சர்க்கரைப் பொங்கலும், கொண்டைக் கடலைச் சுண்டலும் கூடவே விஷ்ணு சக்கரம் போலப் பெரிய உளுந்து வடையும்....திரும்பவும் வெளுத்துக் கட்டுதான்....சீர்காழியின் இசை, மதுரை சோமுவின் இசை, முசிறி சுப்பிரமணியம் பாட்டு....இப்படி இன்ன பிற கச்சேரிகள்....
இனிப்பும் களிப்புமாகக் கொண்டாடிய நாட்கள் அவை! எனக்கு எப்படியும் ஒரு புதுப் பாவாடை கிடைத்து விடும்! பனீர் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் கட்டுக்கட்டாய் விழுதியுமாக ஏதேனும் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அப்பா வளைய வருவார்....
அந்த நாட்கள் எண்ணும் தோறும் மிகவும் அழகிய நாட்கள்....அதன் படிமானம் நமக்குள் இருப்பதாலோ என்னவோ இந்தப் பண்டிகைகளை நாடு விட்டு நாடு வந்த போதும் கொண்டாட வேண்டுமென்கிற உத்வேகம் பிறக்கிறது....ப்ரீதி /பரத் பிறந்த மறு வருஷத்திலிருந்து இந்த நவராத்திரி கொண்டாடுகிறேன்...குவைத்தில் இருந்த சமயம்...எனது மாமியார், பெண் பிறந்திருக்கா... கொலு வைக்காட்டாலும்....வெற்றிலை பாக்கு/மஞ்சள் குங்குமம் கொடு என்றார்...இன்றளவும் இந்த நவராத்திரி சமயத்தில் எங்கும் பயணிக்காமல் வீட்டு தெய்வங்களை ஆராதிக்கணும்னு வேண்டிக் கொண்டே இருப்பேன்...அம்மா சொல்லுவார்..."பொம்மைகள் பெட்டிக்குள் குதித்துக் கொண்டே இருக்குமாம்...எப்போது நம்மைக் கொண்டாடுவார்கள் என்று. அதனால் கொலு வைப்பவர்கள் ரொம்ப இல்லாட்டாலும் சாஸ்திரத்துக்காவது ரெண்டு பொம்மை வைக்கணும்"...
ஆம்....அம்மாவின் குரல் கேட்கிறது.....இன்று வரை அது போல் கடவுள் அருளால் நவராத்திரி நல்லவிதமாக நடக்கிறது....மதுரை மீனாட்சியும், காமாட்சியும், அன்னபூரணியும், விசாலாட்சியும், துர்காபரமேச்வரியும், காளிகாம்பாளும், சமயபுரத்தாளும், பெரிய நாயகியும், வெக்காளியும் அகிலாண்டேச்வரியும், லலிதாம்பிகையும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை ரட்சிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...எல்லாம் வல்ல அந்த இறையைத் துதிப்போம்! வணங்குவோம்! நம்புவோம்! அவனருளாலே அவன் தாள் வணங்குவோம்! அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்! அன்புடன்/பானுரவி 17th Oct 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi