வாழ்நாள் முழுவதும் சூரியனை நேசித்திருக்கிறேன். நான் வைகாசியில் பிறந்ததால் இருக்கலாம். அல்லது பாரதி என்ற ஒரு கவிஞரின் காரணமாய் இருக்கலாம்.
எனக்கு எதனாலோ வெயில் ரொம்பப் பிடிக்கும். ஒருவேளை சித்திரையைத் தொடர்ந்து வரும் வைகாசியில் பிறந்ததாலா? கண்ணுக்கு ஒரு பிரகாசமான ஒளியுருவமாகத் தன்னைக் கடவுள் தினமும் அனைவரும் காணும்படி காட்சி தருவதாலா? அல்லது பானுமதி என்ற எனது பெயரில் முதல்பாதியாக இருந்து கொண்டு எனக்கு ஒரு வெளிச்சப் பாதையைக் காட்டுவதாலா... தெரியவில்லை.
அதுவும் கடும் கோடைகால வெயில், முற்றிய தானியம் எங்கிலும் வெடித்துச் சிதறினாற் போல நன்கு பரவி அசாத்தியமான வெம்மையை வெளிப்படுத்துகிறது..இல்லையா? உலகிலேயே வெகு நீளமானது என்று கேட்டால், எதைச் சொல்லுவோம்? நைல் நதி? அல்லது சீனத்துப் பெருஞ்சுவர்? இல்லவே இல்லை....மிக மெதுவாக நத்தையைப் போலக் கடந்து போகும் கோடை வெயில் தான் எனக்கு ரொம்பவே நீளமாகத் தெரிகிறது...இந்தச் சூரியனின் சூடும், வெளிச்சமும் தானே, கருணையுடன் மனிதர்களையும், உயிரினங்களையும், ஏன், தாவரங்களையும் வாழ வைக்கிறது! வெயிலைப் போல ஒரு அழகிய பதார்த்தம் வேறு எதுவுமில்லை என்று தனது ஜகத்சித்திரம் என்ற கவிதையில் பாரதியார் கூட ஒரு வரியை எழுதி இருக்கிறான்....
"மந்தை மந்தையாய் மேகம்—பல வண்ணமுறு கொடையென மழைவந்து பெய்யும் முந்தவே சூரியனுண்டு.... அதன் முகத்தொளி கூறுதற்கோர் மொழியில்லை கண்டீர்"
ஓ! பாரதி என்றதும் இப்போது என் மனம் அவனிடம் போய்விட்டதே? எங்கே ஆரம்பித்தது இந்த அபிமானமும் பற்றும்? அநேகமாகப் பள்ளிகளில் தான் என்றாலும், இயல்பிலேயே எனக்குள் இருந்த தமிழ்ப்பற்றும் கூடக் காரணம் என்றே தோன்றுகிறது. முசிதமு. ஆரம்பப் பள்ளியில் பாரதியார் கவிதைப் போட்டியில் பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடி (சாவித்திரி அக்கா சொல்லித் தந்தார்) பரிசு வாங்கியிருக்கேன்...ஆனால் அப்போது சிறு பெண் என்பதாலோ என்னவோ அத்தனை ஈடுபாடு ஏற்படவில்லை...
கோட்டையூர் பள்ளிக்குப் போன பிறகு...எனது நெஞ்சாங்கூட்டுக்குள் வந்து விட்டான் இந்தப் பொல்லாத பாரதி. இங்கும் பாட்டுப் போட்டி....நானும் பெயர் கொடுத்தேன் என்றாலும், ஒருவித தவிப்பும் கலக்கமும் இருந்தது...ஏனெனில் முறையாகச் சங்கீதம் பயின்ற பெண்கள் நிறையப் பேர் இருந்தனர்...ஆனால் போட்டி என்பது எனக்குப் பிடித்த ஒன்று ஆயிற்றே! சுகுணாக்கா எனக்குச் சின்னஞ்சிறு கிளியே என்ற ராகமாலிகை பாடலைச் சொல்லித் தந்தார். ஆனால் வசந்தா என்ற ஒரு பெண்ணும் அதே பாடலைப் படப் போவதாகச் சொன்னதும் எனக்குள் நிஜமாகவே கவலை படர்ந்தது...அக்காவிடம் சொன்ன போது, "அந்தப் பொண்ணு எந்த அடியில் பாட்டை நிறுத்துகிறாள் என்று கேட்டுண்டு வா" என்றார். கன்னத்தில் முத்தமிட்டால் என்பதே அந்தப் பெண்ணின் கடைசி அடியாக இருந்தது. உடனே அக்கா..."பானு. ரொம்ப நல்லதாப் போச்சு. உனக்கு இறுதி அடியாக இன்னொரு stanza சொல்லித் தரேன்...உனக்குத் தான் நிச்சயமாகப் ப்ரைஸ் கிடைக்கும் என்றார்.
"இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?.... அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?" ...... இதுதான் அந்தப் பாடலின் இறுதி அடி. நிஜமாலுமே அக்காவின் ஆரூடம் பலித்தது...எனக்குத்தான் முதல் பரிசு. பாரதி என மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்....இப்படித்தான் பாரதியுடன் எனது இனிய பயணம் தொடங்கிற்று. நிறையத் தெரிந்து கொள்ளணும் போல இருந்தது....பாரதியின் கவிதைத் தொகுப்பு என்னை அணுஅணுவாக ஆக்கிரமித்துக் கொண்டது.
தனது டீச்சர் ட்ரெயினிங் விடுமுறையில் வந்த இந்திராணி, பாரதியின் குயில்பாட்டை எனக்கு அறிமுகம் செய்தாள். அவர்களது பள்ளி ஆண்டுவிழாவுக்கு அந்தக் குயில்பாட்டு டான்ஸ் டிராமா ஆக நடைபெற்றது. அந்த வசனங்களும், கவிதையும் எனக்குள் பெரிய நெகிழ்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.......இப்படி எல்லாம் பலவிதப் பாடல்களைப் பாடிய அந்த பாரதி என்னத்தைச் சாதித்தான்?
அவனது தவிப்பும், வீரமும், நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், ஆங்காரமும், கோபமும்,.... எதைச் சொல்ல? விடுதலை கிடைக்கு முன்னே ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே..ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று....கூத்தாடுகிறான். கவிஞர்கள் நினைப்பதும், கூறுவதும் அன்றிலிருந்து இன்று தொட்டு பலிப்பதாகவே இருக்கிறது. அவன் நினைத்து நடந்தது தான்...ஆனால் அவன் அவையெல்லாம் நடக்கும் முன்பே தீர்க்கதரிசியாகி அனைத்தையும் அகத்தில் கண்டு நிறைவு கொண்டதல்லவா ஆச்சர்யம்? சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் பெறுவதும் பாரினில் பெண்கள் நிகழ்த்தவேண்டியது நடக்கிறதே! ஆயுதம் செய்வது சாத்தியமாகி இருக்கே!
நிலா முற்றத்து விளையாட்டு நேர்முக வர்ணனையாகக் கவிதை நிலவிய போது, நமது பாமர மக்களின் பசி விண்ணப்பத்திற்கும், விடுதலை வேட்கைக்கும், தமிழைக் கவிதையாகப் பொழிந்தவன் பாரதி! தமிழகம், ஒரு தகுந்த உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவம் இருந்த காலத்தே வந்து உதித்த கதிரவனைப் போலத்தான் எனக்குப் பாரதி தெரிகிறான். அவன் ஒரு பைந்தமிழ்த் தேம்பா என்பேன். குதிக்கும் கவிதைக் குயில் என்பேன். சூழ்ந்த பகையைக் கவிழ்த்த கொட்டுமுரசு என்பேன். கற்பனை ஊற்றாக வந்த கதைப் புதையல்...நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, திறம் பாடிய கவிஞன், அறம் பாடிய அறிஞன், அயலாரை விரட்ட வந்த அணையா விளக்கு...இப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.
பிறிதொரு சமயம் சொல்லுகிறான்..."காலா. உன்னை நான் சிறுபுல்லென நினைக்கிறேன்; வாடா உன்னைக் காலால் மிதிக்கிறேன்"...எமனுக்குப் பயமில்லாமல் எப்படிக் கொக்கரிக்கிறான்? அத்தனை ஏன்? தனது மனைவி செல்லம்மா குழந்தைகளை வைத்துக் கொண்டு அப்படி சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தும் போது, அவனுக்கு அது உறுத்தவில்லை....மாறாகப் பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் என்று அவளைக் கொண்டாடுகிறான். இந்த உலகம் இனிமையானது என்கிறான்..வாழ்க்கை வறுமையில் சுழன்றாலும் அது அவனைப் பாதிக்கவில்லை...தெள்ளெனவே தமிழமுதச் சுவையைக் கண்டார்-இங்கு அனைவரும் சிறப்புக் கண்டார்" என்கிறான்.
மண் பயனுற வேண்டும்..வானகம் இங்கு தென்பட வேண்டும் என்கிறான். பித்தனைப் போல் அவன் சொன்னாலும், அறம் பிறழாத, அன்பான வாழ்க்கை பூலோக சுவர்க்கம் என்பதைத்தானே அவன் கவிதை சொல்கிறது? வேதங்களின், உபநிஷதங்களின் மொத்த சாரமும் அன்பைத் தானே வலியுறுத்துகின்றன? ஹூம்...விட்டால் நான் விடாமல் பாரதியைப் பற்றி எழுதிக் கொண்டே போவேன்...உண்மையிலேயே கவிதை எழுதத் தூண்டுவது எது?
அருவியும் குருவியும் அளித்தன கவிதை! காடும் மலையும் கவிமலர் கொய்தேன்! கொய்த மரினைக் கோர்த்துக் கோர்த்துச் சுத்த சக்திக்கே சூட்டி மகிழ்ந்தேன்"...இப்படித்தான் அவன் சொல்லுகிறான். மேலும் சற்றே அங்கலாய்ப்புடன் வருத்தமுற்றுப் பாடுகிறான்....
வானமெங்கும் பரிதியின் ஜோதி! மலைகள் முகட்டிலும் பரிதியின் ஜோதி! தானைநீர்க் கடல் மீதிலும் ஆங்கே தருக்களின் மீதும் தரையின் மீதும் கானகம் மீதும் பற்பல ஆற்றிடைக் கரையின் மீதும் பரிதியின் ஜோதி! மானிடன்தன் உள்ளத்தில் மட்டும் வந்து படர்ந்திடும் இருளிது என்னே???? சூரியனில் ஆரம்பித்துச் சூரியனிலேயே முடித்து விட்டேன்.... அன்புடன் பானுரவி/9th July 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi