கதை 5

சகோதரர்கள்

அம்மா நாற்பத்தியிரண்டு வயதில் சேகரை சுமந்தபோது, அந்த அவமானப் பாரத்தை விஜயக்கா தாங்கினார்.

அம்மா, தனது நாற்பதுகளில் சேகரைச் சுமந்த போது ரொம்பவே வெட்கப்பட்டிருக்கிறாள். அடிக்கடி வெந்நீர் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துத் தின்ற காட்சி நிழல் படலமாகத் தெரிகிறது. ரொம்பவும் கூச்சத்தோடு தன்னை மிகவும் நொந்து கொண்டு இருந்த சமயங்களில் விஜயாக்கா ஒரு யானைபலமாக இருந்து அவ்வப்போது ஆதரவாகவும் அன்பாகவும் பேசி அம்மாவைத் திடம் கொள்ளச் செய்தாள். திருமணத்துக்குத் தயாராகப் பெண்களை வைத்துக் கொண்டு இப்படிக் கருவைச் சுமந்து கொண்டிருக்கோமே என்று சதா குமைந்து கொண்டிருந்த அம்மாவை விஜயாக்காதான் கையில் வைத்துத் தாங்கி இருக்காள். (பின்னொரு நாளில் விஜயாக்கா என்னிடம் சொன்னவை இவை!)

அம்மாவுக்கு ஆறு கஜம் புடவை கட்டி (மாம்பழப்புடவை என்பார்கள்) ஐந்து அல்லது ஆறு மாதமாக இருந்த போது காரைக்குடிக்குப் போய் புகைப்படமும் எடுத்து விட்டாள். மைசூர் சில்க்கில் (சிகப்பில் கறுப்பு பார்டர் வைத்தது) மடிசார் புடவை கட்டி அதிலும் ஒரு போட்டோ. (அந்தப் புகைப்படம் தான் இப்போது நம்மிடம் இருப்பது) விஜயாக்கவும் அம்மாவுமாக நின்று கொண்டிருக்கும் ஒரு போட்டோ கூட இருந்தது...

கானாடுகாத்தான் ஆஸ்பத்திரியில் சேகர் பிறந்தபோது, நானும் ராஜாவும் உறசாகப் பந்தாகப் போய்ப் பார்த்தோம்...எனக்கும் ராஜாவுக்கும் அம்மா தனக்குக் கொடுத்திருந்த பன் ரொட்டியைக் கொடுத்தார். பஞ்சு போல் மென்மையாக வெள்ளையாக இருந்த அந்த பன்ரொட்டியை அப்போதுதான் முதலில் ருசித்ததாக நினைவு...இன்னும் கொஞ்சம் வேண்டும் போல் இருந்ததுதான்...ஆனால் மொசுக்மொசுக்கென்று, அம்மா பக்கத்தில் குட்டியாக நெளிந்து கொண்டிருந்த சேகரிடம் எனது கவனம் போய் விட்டதால் பன்ரொட்டியை மறந்தே போனேன்.

சேகரின் புண்ணியாஜனம் லேசாக நினைவிருக்கு....எனக்குத் தான் இந்தத் தீனி, சாப்பாடு எல்லாம் ரொம்பப் பிரியமாச்சே...அமிர்தச் சித்தியும், ராதைச்சித்தியும் வந்திருந்தார்கள், பெரிது பெரிதான ஜீரா போளி பண்ணினார்கள்.. அப்புறம் காப்பரிசி. .அப்பாவின் நண்பர் பாபு டாக்டர், ஒரு கிளிப்பைச்சைப் பட்டுத்துண்டு கொடுத்தார்.

சாயங்காலம் நெல் பரப்பி, ஆகிவந்த தொட்டில் போட்டு, அம்மாவின் பட்டுப்புடவையை விரித்துக் கூடத்தில் பேர் சூட்டும் விழா....பெரியசாமி என்று அப்பா அந்த நெல்லில் எழுதினாலும் சந்திரசேகர் என்று பேரிட்டார்கள். அது சமயம் காஞ்சிப் பெரியவா இளையாத்தங்குடிக்கு வந்திருந்தார்...விஜயாக்கா இவன் டாக்டர் சேகரா வருவான் பாரு என்று ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தினமும் பசும்பால் சேகருக்கு...பசு மாடு கட்டித்...

'அன்பில் மலர்ந்த நல்ரோஜா' என்ற பாட்டை அக்காவும், "சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் அழகே ஆராரோ...வண்ணத்தமிழ்ச் சோலையே..மாணிக்க மாலையே ஆராரோ" என்று இந்திராணியும் நானும் தொட்டிலிட்டபோது பாடினோம். சேகருக்கும் ராஜாவுக்கும் ஒரே மாதிரியான பட்டன் கடுக்கன். மொழுக்கென்று இருக்கும்...(இந்தக் கடுக்கனைத் தான் தெப்பக்குளத்து உற்சவத்தின் போது ரொம்ப சமர்த்தாக யாரோ ஒருவனிடம் சமர்த்தாகக் கழற்றிக் கொடுத்து விட்டு, அவன் கொடுத்த கற்கள் அடங்கிய பொட்டலத்தைக் கொண்டு வந்தான்....ஆனால் யாரும் சேகரைத் திட்டவில்லை....நல்லவேளை அவனைக் கடத்திக் கொண்டு போகாமல் இருந்தானே என்றுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்).

விஜயாக்காவிலிருந்து என் வரையில் சேகர் ஒரு விளையாட்டுப் பொம்மை தான்...அம்மா சேகரைச் செல்லமாகக் 'கறுத்த பாண்டியா...பருத்த கோவிந்தா' என்று கூப்பிடுவார்....உருண்டை முகமும், நிறைந்த முடியும், கொழுத்த உடம்புமாக இருப்பான்...படு அமைதி...ரொம்ப சமர்த்து...விஷமமா...ஊஹூம்...அப்படி எல்லாம் ஏதுமில்லை.. ஒருமுறை அவனைக் குளிப்பாட்டி அம்மா என் மடியில் வைத்துகொண்டு கொஞ்ச நாழி பார்த்துக்கச் சொன்னார்.

வாசலில் கணகணவென்று மணியோசையும், பாட்டுமாக சினமா வண்டி நோட்டீஸ் போட்டுக் கொண்டு வந்தது. அந்தக் கலர்கலரான நோட்டீஸ் பொறுக்குவது எனக்குப் பிடித்த ஒன்று...அவ்வளவுதான்...சத்தத்தைக் கேட்டேனோ இல்லையோ...தடால் என்று என்று சேகரைத் தரையில் கிடாசி விட்டுப் பறந்து விட்டேன்....ஒரே வீல் சத்தம்...கை நிறைய பச்சை/பிங்க் வண்ண நோட்டீஸ் பொறுக்கிக் கொண்டு உள்ளே வந்தால், என் தலையில் ணங்கென்று அம்மா வைத்தாள் குட்டு... இன்னமும் வலிக்கிறது...

சந்திரசேகர்ChandrasekarவானாVaana

சேகரின் வளர்ப்பில் சாவித்திரிக்காவுக்குப் பெரும் பங்குண்டு, நிறையச் சடை போட்டிருந்தது. அவ்வப்போது உதிர்ந்து போனதை எடுத்து சேகரித்து வைத்தார்கள், அச்சமயங்களில் அப்பாவால் , ஏனோ குலதெய்வம் கோவிலுக்குப் போக இயலாமல் இருந்தது..சேகரின் சடைகளைத் திரட்டித் தொண்டிப் பெரியப்பா பெரியநாயகி கோவிலுக்குப் போன போது காணிக்கை செலுத்தி வரும்படி அப்பா சொன்னார். சாவித்திரிக்கா போனிடெயில் போட்டும், இரட்டைப் பின்னலிட்டும் ஒரு சிகப்பு நிற டிவிங்கிளின் நைலான் ஜட்டியைப் போட்டு உட்கார்த்தி வைப்பாள். அந்த ஜட்டியில் உள்ளே லைனிங் கூட இல்லை...பாவம் உறுத்தி இருக்கும்.

சமயங்களில் "வந்துடுத்து...வந்துடுத்து' என்று கூக்குரல் எழுப்புவான்...உடனே சாவித்திரிக்காதான் பக்கத்து சந்துக்குக் கூட்டிக் கொண்டு போகணும்....நின்று கொண்டு வேறு போவான்...சாமானியமாக உட்கார மாட்டான். கட்டெறும்பு கடிக்கும்னு ஒரே பயம்...அவசரம் அவசரமா ஓடி வந்துடுவான்....அதுவும் ஒரு மாதிரி இருட்டியும் இருட்டாத சாயங்கால வேளைதான் அவனுக்கு சிலாக்கியம். அப்போது வேலை முடிந்தும், கல்லூரி முடிந்தும் தெருவில் நடப்பவர்கள் அதிகம்...அதெல்லாம் சாவித்ரிக்காவுக்குப் பெரும் வெட்கமாக இருக்கும்...நம்ப சேகருக்கு அதெல்லாம் தெரியுமா என்ன? ஹாஹா....

ஒரு தடவை அவனுக்கு சாதம் ஊட்டும்போது, 'தம்மத்தைக்காகக்கும்" பாடினால்தான் சாப்பிடுவேன் என்று ஒரே அழுகை....யாருக்கும் என்ன பாட்டுன்னு எதுவும் தெரியலை...மற்ற பாட்டைப் பாடினால் வேண்டாம்னு அழுகை...கடைசியில் தர்மம் தலைகாக்கும் என்ற பாட்டை அக்கா பாடினதும், மளமளன்னு சாதம் உள்ளே போச்சு... .

கரூர் சித்தப்பா ஒரு தடவை வந்த போது, வெள்ளைக்கலர் ஆடுகுதிரை கொண்டு வந்தார். சேகரைச் சாக்கிட்டுக் கொண்டு நானும் ராஜாவும் அதில் ஆடிக் கொண்டிருப்போம். அந்த ஆடு குதிரையில் அவனை வைத்து போட்டோ கூட எடுத்து மாட்டியிருந்தது. கரூர் ராஜப்பா விடுமுறைக்கு வந்த போது "சின்னச் சின்னச் சேகுக்குட்டியாம்! செகப்பு நிறச் சேகுக்குட்டியாம்! கண்ணே ராஜா சேகுக்குட்டியாம்! கறுப்பு நிறச் சேகுக்குட்டியாம்!" என்று பாடுவான்...

நமது வீட்டின் எதிரே பெருமாள் ஐயாவின் பெட்டிக்கடை. அவரது மனைவி அம்மாக்கண்ணு, அவர்கள் வீட்டில் பசு மாடும் எருமை மாடும் வளர்த்துப் பால் வியாபாரமும், தயிர் வியாபாரமும் செய்து வந்தார்கள். இந்தப் பெருமாள் ஐயா வீட்டுக்குச் சாப்பிடப் போனாலோ, வெளி வேலையாகப் போனாலோ, நம்ப சேகரைத்தான் கடைக்குக் காவலுக்கு வைத்து விட்டுப் போவார். சேகர் மீது அத்தனை நம்பிக்கை. இவன் குட்டியா இருந்தாலும் கெட்டி...யாரையும் அண்ட விட மாட்டான். அரை இன்ச் கூடச் சிரிக்க மாட்டான்...கச்சிதமாக அந்த ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு அழகாகவும், பொறுப்போடும் கடையைப் பார்த்துக் கொள்ளுவான். அங்கிருந்த மிட்டாயோ, பிஸ்கட்டோ...எதையும் எடுக்க மாட்டான்...அப்போதே சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்.....

அவன் வீட்டில் கூட எங்களுக்கு பிஸ்கட் தருவதில் எத்தனை கறார் பேர்வழி என்று ராஜா எழுதிவிட்டதால் அதை விட்டுவிடுகிறேன். சேகருக்குப் பேசும்போது ரொம்ப நாள் ரி,ரு எல்லாம் வராது..அயிசி, பஹுப்பு, முஹுக்கு என்றுதான் சொல்லுவான்...அவனை எனது தோழிகள் பொன்னழகி, சுந்தரி என்ற இரண்டு பேரும் அந்த வார்த்தைகளைச் சொல்லும்படி செய்து (பழையூர்) விளையாடுவார்கள். லங்குலகாடி லக்கிலகாடி என்று பாடிக் கொண்டு அவனை விரட்டுவார்கள். அந்த நாட்களில் வீட்டுக்கு வந்து போகும் கிருஷ்ணன், சேகரை ரொம்ப உயரத்துக்குத் தூக்கிப் போட்டு 'லவ்வா,,,லவ்வண்டே' என்று சொல்லிக்கொண்டே பிடித்ததும் எல்லோரும் போறும்!போறும்! என்று அலறியதும் நினைவுக்கு வருகிறது...

விஜயாக்கா கல்யாணத்தின் போது சேகருக்கு இரண்டு வயசுன்னு ஞாபகம்,,,வெள்ளை சாட்டின் சட்டை அவனுக்கு...அம்மாவை விட்டு சேகர் நகரலை...விஜயாக்காவை விட்டு ராஜா நகரலை. அந்த மாட்டா ஊரணி திருமண மண்டபத்தை இப்போது கூடச் சென்று பார்த்தேன்...அந்த ஏழுவண்ண கண்ணாடி ஜன்னல் இன்னமும் இருக்கு....ஆனால் பூட்டிக் கிடக்கு...

சேகரைப் பள்ளியில் (MCTM School) சேர்த்த அன்று நானும் ராஜாவும் ஆளுக்கு ஒரு தட்டு எடுத்து, அதில் நாட்டுச்சக்கரை/பொரிகடலை எல்லாம் வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் விநியோகம் செய்தோம்... கோவிலில், அல்லது திருமணத்தில் சேகர் திடுமென்று காணாமல் போய்விடுவான்...எங்கே என்று பார்த்தால், மேளம் அடிப்பவரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பான்...அப்போதே ராகம்/தாளம் ரசிக்கத் தெரிந்தவனாகி விட்டான்.

ஒருமுறை ராஜாவுக்குப் பல்லு விழுந்து ரொம்ப நாட்கள் பல முளைக்கவே இல்லை. அம்மா, நெல்மணியைக் கொண்டு மேல் எகிறுக்குள் ரெண்டு கீத்து கீத்தினாள்...இரத்தம் பொங்கிக் கொண்டு வரவே...ராஜா கத்த, அதை விட சேகர் கத்த ஒரே அம்ளிதுமளிதான்..

இந்திராணி டீச்சர் ட்ரெயினிங் தேர்வு முடிந்து விடுமுறைக்கு வந்த போது எங்களுக்கு நிறையப் பாட்டு சொல்லிக் கொடுத்தாள். அதில் ஒன்று தான்..'ஏய் பக்கம்மா..பக்கம்மா பக்கம்மா..எக்கட போத்தாறு? இக்கட இக்கட ரா....ஒ! என்கண்ணே என்கண்ணே என்கண்ணே இக்கட ஒஸ்தாரு..இக்கட இக்கட ரா" இந்தப்பாட்டை உச்சஸ்தாயில் பாடி அண்டை வீட்டுத் தெலுங்கு மாமியை ரொம்பவே வயிற்றெரிச்சல் கொட்டிப்போம்...

எனது சகோதரிகளை விட எனக்கு மிகவும் அணுக்கமானவர்கள் ரமணி, ராஜா & சேகர் தான். ஒரு கட்டத்தில் ரமணிக்கு அவனது தோழர்களின் influence ஜாஸ்தி ஆகி விட்டதால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது உண்மை... சகோதரர்களுக்கிடையே பிறந்ததாலோ என்னவோ இந்திராணியைத் தவிர மற்ற சகோதரிகளிடம் எனக்கு ஒரு இடைவெளி இருந்தது....அது நாளாவட்டத்தில் சரியாகிப் போனாலும், ராஜாவும் சேகரும் எப்போதும் இரு கண்களைப் போலத்தான் எனக்கு இருக்கிறார்கள் என்பதை இங்கே பகிர்வதில் ரொம்பவே மகிழ்வாக இருக்கு.

அன்புடன், பானுரவி

With love, Banooravi