பெண் குழந்தைகளுக்கு "அழகாக இருக்க வேண்டும்" என்ற முதல் எண்ணத்தை விதைப்பவள் அம்மாதான். எனது அம்மா எங்கள் கண்மையை விடியலில் எரியும் விளக்கில் தயாரித்தார்.
அழகாக இருக்க வேண்டுமென்று எல்லோருக்கும் தோன்றுவது இயல்பிலேயே உள்ள ஒரு குணம். அழகாக இருந்தாலும், கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு, ஒப்பனையுடன் காட்சி தர வேண்டுமென்று நினைப்பதும் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு எண்ணம் தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு இம்மாதிரியான ஒரு எண்ணத்தை ஆரம்பத்திலேயே ஒரு தாயார் தான் அநேகமாக உண்டாக்கி வளர்த்து விடுகிறார் என்பதே உண்மை...
சிறு பெண் குழந்தைகளாக இருக்கும் போதே பூச்சூட்டி விடுவதும், கண்களுக்கு மை இடுவதும், விதவிதமான பொட்டுக்களை வைத்து விடுவதும், தினுசு தினுசான தலை அலங்காரங்களைச் செய்து விடுவதும், ஆபரணங்களைப் போட்டு அழகு பார்ப்பதும்...நாளடைவில் அந்தப் பெண்கள் வளரும்போது தன்னை அழகு படுத்திக் கொள்ளுவது, வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற அளவில் மனதில் பதிந்து போகிற விஷயமாகி விடுகிறது...
நான் சிறுமியாக இருந்த போது எனக்கும் நிறைய ஒப்பனைகள் நடந்திருக்கின்றன. பள்ளியில் நடைபெறும் விழாக்களிலும், பொங்கல் விழா, திருவள்ளுவர் விழா, போன்ற கலை விழாக்களிலும் நான் டான்ஸ் பண்ணும்படியாக இருந்தபடியால், பவுண்டேஷனும், ரோஸ் பவுடரும், கண்மையும், புருவம் தீட்டலும், சவுரி முடிப் பின்னலும், கொண்டையும், செயற்கைப் பூ அலங்காரமும் எனக்கு ரொம்பவே பரிச்சயமான ஒன்றாக இருந்தது...
வீட்டிலேயே அம்மா கண் மை தயாரிப்பார். உள் என்றழைக்கப்பட்ட அறையில், நாங்கள் எல்லோரும் பள்ளிக்குச் சென்ற பிறகு ஒரு நல்ல வெள்ளைக் காடாத் துணியைச் சுத்தமான விளக்கெண்ணையில் நனைத்து, அதை ஒரு வெண்கல விளக்கில் வைத்து ஏற்றி, அதன் மீது ஒரு பெரிய பித்தளை தாம்பாளத்தைக் கவிழ்த்து வைத்து விடுவார்.... அந்தக் காடாத் திரியானது முழுவதும் எரிந்து அதன் கரும்புகை, அந்தத் தாம்பாளத்தில் மெல்லிய பவுடராகப் படிந்திருக்கும். இதற்குக் குறைந்த பட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகும்.
அது முழுவதும் எரிந்தவுடன், மெதுவே அந்தக் கரிய பவுடரை எடுத்து விளக்கெண்ணை விட்டுக் குழைத்து, அதில் சிறிதே அளவில் கொஞ்சமாகப் பச்சக் கர்ப்பூரம் சேர்த்து (கண்ணுக்கு ஜில்லிப்பு கொடுப்பதற்காக) சின்னஞ்சிறு டப்பாக்களில் போட்டு வைத்து விடுவார். சாவித்ரிக்கா, பேபி, இந்திராணி அனைவரும் எனது கண்ணில் மையிட்டு, மீன் போலவும், வேல் போலவும் அழகு செய்திருக்கிறார்கள்.
அதே போல் சாந்துப் பொட்டும் அம்மா தயாரிப்பார். ஐவரிசியை இலுப்பச் சட்டியில் போட்டுக் கறுக்க வறுத்து விடுவார். பிறகு அதைக் குழவிக் கல்லால் உடைத்துப் பொடி செய்வார். வெழுமணாகச் சலிக்கணும்...பிறகு ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க விட்டு அதில் இந்தப் பவுடரைப் போட்டுக் கொழகொழ வென்று வந்தவுடன் எடுத்துக் கொட்டாங்கச்சியில் ஊற்றி வைத்து விடுவார். நெற்றிக்கு இட்டுக் கொள்ளும் போது, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் குழைத்துக் குச்சியில் எடுத்து இட்டுக்கொள்ளணும்!
அதே போல் தலைக்குத் தேங்காய் எண்ணை நிச்சயம் உண்டு. அதுவும் கேசப் பராமரிப்பு முக்கியமாகக் கருதப்பட்டதால், விதவிதமான தைலங்கள் வீட்டிலேயே தயார் செய்வார்கள். வேம்பாளம்பட்டை என்ற ஒன்று...அதை நன்றாக வெயிலில் காய வைத்துப் பொடியாக்கித் தேங்காய் எண்ணை பாட்டிலில் போட்டு விடுவார்கள். இரத்தச் சிவப்பாக அந்த எண்ணை மாறி விடும்...அப்புறம் கறிவேப்பிலையை அரைத்து, சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து அதையும் எண்ணெய் பாட்டிலில் போட்டு விடுவார்கள்.
அப்புறம் மருதாணி...அதே முறையில் அரைத்து உருண்டையாக்கி..நமது பக்கத்து வீட்டு .ஊமை ஆச்சி சொன்னபடி, முயல் இரத்தத்தில் (அந்த ஆச்சியே இதைச் செய்து கொண்டு வந்து கொடுத்தாள்...) வெள்ளைத் துணியை நனைத்துச் சிறுசிறு முடிச்சுகளாக வெயிலில் ஜாதிக்காயோடு சேர்த்துக் காய வைத்து எண்ணையில் போட்டு வைத்து அந்த மாதிரியும் தலைமுடி பராமரிப்பு நடந்திருக்கிறது...அப்புறம் வெறும் வெந்தியத்தைப் போட்டு அத்தோடு சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து எண்ணையில் போட்டு விடுவார்கள்.
இழைய இழைய எண்ணை போட்டு, ரிப்பன் வைத்து இரட்டைப் பின்னல் தான் எப்பவும். ராஜா, சேகருக்கு எல்லாமும் கோண வகிடு எடுத்து ஒரு சைடு பம்மென்று தூக்கி வாரிப் பின் சர்ரென்று அதை வழித்து வாரி விடுவாள் அக்கா. ரமணிக்கும் அப்படியே....சாயங்காலம் வரை தலை கலையவே கலையாது.
அப்புறம் மஞ்சள்....குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அலாதியான ஒன்றாக இருந்தது....ஒரு சதுரமான மஞ்சள் உரைக்கும் கல் கிணற்றடியில் இருக்கும். சுகுணாக்கா அப்படி அதில் மஞ்சளை அரைத்துப் பூசிக் கொள்ளுவாள். உடம்புக்கு நிறம் கொடுக்கவும், ரோமம் முளைக்காமல் இருக்கவும் அந்தக் காலத்தில் மஞ்சளை இப்படி உபயோகப் படுத்தினார்கள். நான் இப்பவும் கூட கஸ்தூரி மஞ்சளைப் பூசிக் கொள்ளுவேன்...
அதன் பிறகு வருவது, எண்ணைக் குளியல். சுகுணாக்கா தான் அநேகமாக இதற்குப் பொறுப்பு. தலையில் எண்ணையை வைத்துச் சொரிந்து சொரிந்து அப்படியே இதமாகத் தேய்த்து விடுவார்....கை கால்களுக்கும், முதுகுக்கும் அப்படியே மஸாஜ் செய்வார். உடனே குளிக்கப் போகக் கூடாது...ஒரு பத்து நிமிஷமாவது ஊறணும் என்பார்கள். அந்த எண்ணை உடம்பில், நாம் பல்வேறு உருவங்களை விரலால் வரைந்து கொண்டிருப்போம்...
கரிய வெந்நீர்த் தவலையிலிருந்து பக்கெட்டில் வெந்நீர் எடுத்துக் கிணற்று நீரில் விளாவி இதமான சூட்டில் குளியல் நடக்கும்...முதலில் பசங்கள் குளிக்கணும்....அவர்கள் குளித்தவுடன் பெண்கள்....ஏனென்றால் தலைமுடி நீளமாய் இருக்கும்...அலச நேரமாகும். இந்தக் காலம் போல ஷாம்பூ எல்லாம் கிடையாது...சீயக்காய்ப் பொடியில், உசிலந்தழைச் சாறும், வடித்த கஞ்சியும் சேர்த்துக் குளிப்பாட்டுவார்கள். அதன் பிறகு தலைக்கு வாசனைப் பொடி போட்டு அலசுவார்கள்... குளித்து முடித்த பிறகு, காசித்துண்டில் தலையை ஓட்டத் துடைத்து விடுவார்கள். பிறகு வருவது சாம்பிராணிப் புகை...தூபக் காலில் பால் சாம்பிராணியைப் போட்டு அதன் மீது ஒரு பிரம்புக் கூடையைக் கவிழ்த்து விடுவார்கள். எல்லோரும் தலையை அந்தப் புகை வரும்படி காட்டிக் கொண்டு உட்காருவோம்...தலைக்குள் நீர் புகாமலும், ஜலதோஷம் பிடிக்காமலும் இருக்கவே இது போலச் செய்வார்கள்...தலை முடி சும்மா சில்க் மாதிரிப் பளபளவென்றும் ஜம்மென்று வாசனையோடும் இருக்கும்...
விஜயாக்கா தனக்கென்று மைசூர் சந்தன சோப்பும், பியர்ஸ் சோப்பும் உபயோகிப்பார். அதே போல் கோகுல் சந்தனப் பவுடரும் அவர் மட்டுமே உபயோகிப்பார். எங்களுக்கெல்லாம் ரெமி பவுடரும்...லைப்பாய் சோப்பும் தான்.
ஒரு தடவை ராதைச் சித்தி வந்திருந்த போது வீட்டிலேயே முற்றத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டே குங்குமம் தயாரித்தது நினைவில் இருக்கு. நல்ல மஞ்சள் கிழங்கை வெய்யிலில் உலர்த்தி அதை நன்றாகப் பொடித்து, நைசாக சலித்து எடுத்துக் கொண்டு, படிக்காரமும், எலுமிச்சை சாறும் விட்டுக் கலந்தவுடன் நல்ல அரக்கு வண்ணத்தில் குங்குமம் கிடைக்கும். அது ஈரப் பதமாக இருக்கும்...எனவே நிழலில் உலர்த்தி அத்தோடு கொஞ்சம் ஜவ்வாதுப் பவுடரைச் சேர்த்து எடுத்தால், குங்குமம் ரெடி....அப்படி வாசனையாக அரக்கு வண்ணத்தில் மினுக்கும்...கடைக் குங்குமம் அம்மாவுக்கு நெற்றியில் பொறிப்பொறியாக வந்து தழும்பாகி விட்டது...அதனால் இந்த வீட்டுக் குங்குமம் அம்மாவுக்கு ஏற்றதான வகையில் எந்தவொரு அலர்ஜியும் உண்டு பண்ணாமல் இருந்ததால், குங்குமம் பண்ணுவது தொடங்கியது...
அது மட்டுமல்ல....பால் காய்ச்சும் போது படியும் பாலேட்டை முகத்தில் தடவிக் கொள்ளுவதும், கடலை மாவில் எலுமிச்சை சாறு விட்டு முகத்தில் அப்பிக் கொள்ளுவதும், அக்காக்கள் அவ்வப்போது செய்து கொள்ளும் முகப் பராமரிப்புகள். சுகுணாக்கா மணச்சையிலிருந்து அவ்வப்போது கொண்டு வரும் மருதாணியை அரைத்துக் கை, கால்களில் இட்டுக் கொள்ளுவது (உடம்புக்குக் குளிர்ச்சி என்று சொல்லி) உண்டு...
அது தவிரக் கோடை காலத்தில் வேர்க்குரு வந்து அவதிப் பட்டால், சந்தனத்தை அரைத்து உடம்பெல்லாம் தடவி விடுவார்கள். இளநீரும், நுங்கும்...தடங்கலின்றி தின்னக் கிடைக்கும். சாத்தீர்த்தம் என்ற ஒன்று...இரண்டு நாள் புளித்த பழைய சாதத்தின் தெளிந்த நீரில் கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுக் கரைத்துத் தருவார்கள்...வயிறு அப்படியே குளிர்ந்து போய் விடும்.
கோபால்ரத்னம் என்று நமக்கு ஒரு ஒன்றுவிட்ட மாமா இருந்தார். அவரும் பர்மா போனவர் தான். அவருக்கு நம் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். இரண்டொரு தடவை வந்திருக்கார். அவர் வரும்போது, ஏதேனும் தொங்கட்டான், பழுக்காத் தட்டு, என்று பரிசுகள் கொண்டு வருவார். சாவித்திரி அக்காவை (இளையது..) அப்படிப் புகழந்து தள்ளுவார்....கன்னத்துல என்னடி? ரெண்டு கொய்யாப் பழமா அடக்கிண்டிருக்கே? அப்படின்னு கலாட்டா பண்ணிக் கொண்டிருப்பார்.
அம்மாவுக்குக் கொண்டை வலையும், சனக்காக் கட்டை என்ற முகப் பவுடர் ஸ்டிக்கும் கொண்டு வருவார். (நான் இரண்டு வருஷங்களுக்கு முன் மியன்மார் போன போது இதை நினைவில் கொண்டு சனக்கா கட்டை வாங்கிண்டு வந்தேன்!) அந்தச் சனக்காக் கட்டையை உரசினால் பவுடர் மாதிரி வரும். அதைத் தான் அம்மா போட்டுப்பார்... ராஜாவுக்கும் ரமணிக்கும் பர்மாச் சட்டை கொண்டு வந்ததாக எனக்கு நினைவு...உத்தேசமாக அவர் கொண்டு வந்த பரிசுகள் தான் அவை...ஏனெனில் நமது குடும்பத்தைப் பற்றிய அப்டேட் எல்லாம் அவருக்குத் தெரியாதென்றாலும், இந்தியா வரும்போது, அம்மாவை வந்து பார்க்கத் தவறியதில்லை...
திடும்திடுமென்றுதான் இந்த மாதிரி சொந்தங்கள் எல்லாம் வருவதும் போவதும்...எனக்கு ஒரு வயலட் கலரில் பிளாஸ்டிக் தொங்கட்டானும், அதே நிறத்தில் மணி மாலையும்...ரொம்ப நாள் நான் அவற்றைப் போட்டுக் கொண்டு எல்லோரிடமும் பீற்றிக் கொண்டு இருந்திருக்கிறேன்...வீரபாண்டியக் கட்டபொம்மனில் S.வரலட்சுமி பாடிய "சிங்காரக் கண்ணே..உன் தேனூறும் சொல்லாலே" பாட்டுக்கு என்னை டான்ஸ் ஆடும்படி சொல்லுவார்....கன்னத்தைப் போட்டு இழைத்து விடுவார்..."என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? தினம் ஒரு தொங்கட்டான் வாங்கித் தருவேன் என்று" கலாட்டா செய்வார்...
அம்மாவின் சமையலை வானளாவப் புகழ்வார்...ஒரு நாள் மட்டுமே தங்குவார்...ஆனால் பர்மாவை பற்றியும், அங்குள்ளவர்களின் வாழ்க்கை பற்றியும் கதை போலச் சொல்லுவார்...மாயா என்ற ஓவியர் வரையும் ஒரு வழுக்கைத் தலைச் செல்வந்தர் மாதிரித் தானிருப்பார்...பயங்கர சென்ட் வாசனையுடன் வரிசையான பல் வரிசையுடன் அவர் வந்து போனது இன்னமும் நிழலாடுகிறது!
இப்படியாக உடல் நலம் மட்டுமின்றி, உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் இயற்கையான முறையில், முக்கியமாக எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் காப்பாற்றித் தந்திருக்கார் நம் அம்மா. இந்த உடம்பும், உயிரும், அவர் நமக்கு உண்டாக்கித் தந்தவை அல்லவா? அவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த சீதனம் அல்லவா, ஆரோக்கியம் என்பதும்?
இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதென்பது ஒருவருக்கு எப்போதும் அடிப்படை சரியாக இருந்தால் மட்டுமே அமையக் கூடிய பெரிய வரப்ரசாதம் என்றே தோன்றுகிறது......அதற்குப் பெற்றோர் கற்றுத் தந்த ஒழுக்கமும், உணவுக் கட்டுப் பாடும் கூடத் துணை நிற்கும்... தலைமுடி நரைப்பதும், வழுக்கை விழுதலும், கண் கீழ்க் குழி விழுவதும் கூட, நமது உடம்பை நாம் கையாளும் விதத்தில் தானே ஏற்படுகிறது?
எங்கு சுற்றியும் ரங்கனைச் சேவிப்பது என்பது போல், இந்த முறையும் அம்மாவைப் பற்றித் தான் எனது சிந்தனை போகிறது...அம்மாவின், அப்பாவின் திசுக்களால் உண்டான உடம்பல்லவா? எனவே எதுவொன்றுக்கும் அவர்களே முன்னோடி என்று சொல்வதில் என்ன வியப்பு இருக்கிறது?
கற்பும் கருணையும் நற்பால் ஒழுக்கமும் மெல்லிய பொறையும் நிறைந்திடு குணமும் விருந்து புறத்தலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன பெண்டிர் மாண்பே! இப்படித்தான் தமிழ் இலக்கியமான தொல்காப்பியம் கூடச் சொல்கிறது...... அன்புடன் பானுரவி/22nd July 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi