சுற்றியுள்ள உலகை விட, புத்தகங்கள் எனக்கு அதிகம் கற்பித்தன. ஒவ்வொரு புத்தகமும் ஒரு மரம் — அதன் வேர்களை யாராலும் தொட்டறிய முடியாது.
புத்தகங்கள் கற்றுத் தந்தவை, நம்மைச் சுற்றியுள்ள நிஜ உலகம் கற்றுத் தந்ததை விடவும் அதிகமானது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதையும், அல்லது புத்தகமும் ஒரு விருட்சத்தைப் போன்றது... ஏனெனில் அதனுடைய வேர்களை எங்கென்று யாராலும் கண்டறிய முடியாது. கல்வெட்டுக்கள் சரித்திரத்தை வெளிப்படுத்துவது போல், வாழ்க்கையின் சாரத்தை, இந்தப்புத்தகங்கள் வரிவரியாக நமது மனதில் பதித்து விடுவது நிஜம் தானே?
படிக்கும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை....அந்த நாட்களில் வீட்டில் அப்பா நிறையப் புத்தகம் சேகரித்து வைத்திருந்தார். சிகப்புத் துணி அட்டையில் நிறைய இலக்கியப் புத்தகங்களும், ஜோதிடப் புத்தகங்களும், நிகண்டும், திருவிளையாடல் புராணமும், பெரிய புராணமும்...தூக்க முடியாதபடி கனமாக இருந்தாலும், நான் நிறையத்தடவை படித்தது அந்தப் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை தான். அந்த ஓவியங்களே மிகவும் வித்தியாசமாக இருக்கும். பழுப்பேறிய காகித மணம் இப்போதும் நெடி அடிக்கிறது.
அது தவிர அம்மாவின் கலெக்ஷனும் வீட்டில் இருக்கும். வை.மு.கோதைநாயகியின் நாவல், சௌதாமினியின் கதை, உதயணன் கதை, லட்சுமியின் மிதிலாவிலாஸ்,...இன்னும் பல. இன்னும் சில வங்காள எழுத்தாளர்களின் கதைகள் கூட இருந்ததாக நினைவு.
பின்னாட்களில் அக்காவுடன் வேலை பார்த்த சோலைச்சி டீச்சரின் வீட்டில் நிறையப் புத்தகங்கள் வாங்குவார்கள். பேசும்படம், பொம்மை, விகடன், கல்கி என்ற வகையில் அந்தப் புத்தகங்களும் வந்துவிடும். அம்மாவுக்குக் கல்கியின் சரித்திரக்கதைகளில் ரொம்பவே விருப்பம். சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் அப்போதே ஏக டிமாண்டில் இருந்த வாராந்திரக் கதைகள்! விஜியாக்கா பற்றிச் சொல்லவே வேண்டாம். சாண்டில்யனின் யவனராணியை விழுந்தடித்துக் கொண்டு படிப்பாள். கடல்புறாவை உடனுக்குடன் படிக்கவில்லை என்றால் தூக்கமே வராது.
அப்பா ஆபீசிலிருந்து சுதேசமித்திரன் கொண்டு வருவார். அதன் அசிரியர் ராஜாஜி என்று நினைவு. ஆனால், வீட்டில் குமுதம் மட்டும் வாங்குவார்கள். குமுதத்தின் மீது ஏனோ தனி அபிமானம். அப்போதைய குமுதத்தில் வெளிவந்த தொடர்கதைகளை "அவன்அவள்அவர், அடிமையின் காதல், எனக்கென்று ஓர் இதயம்" என்று பேபி சொல்லிக் கொண்டு படித்தது நினைவில் இருக்கு. ஜாவர் சீதாராமனின் கதை மின்னல் மழை மோகினி....அது த்ரில்லர் கதை என்பதால் அம்மாவும் ஆர்வம் காட்டிப் படிப்பாள். மாருதியின், வினுவின் ஓவியங்களை சிலாகித்துப் பேசிக்கொண்டே இரவுச் சாப்பாடு நடக்கும். வினுவின் ஓவியத்தை சுகுணாக்கா அச்சு அசலாகப் பென்சிலில் வரைந்து வைத்திருந்தாள்.
புத்தகங்களின் மீது ஆர்வம் ஏற்பட இவை மட்டும் போதாதென்று சுகுணாக்கா, மணச்சை பள்ளிக்கூட லைபரரிப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவார். நீதி நூல்களும், சுவாரஸ்யமான கதைப் புத்தகங்களுமாக வீடு முழுக்கக் கலைவாணியின் ஆக்கிரமிப்புத்தான். போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். இந்திராணி, அப்பா செய்திருந்த பெரிய மர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாயில் புழுங்கல் அரிசியை அடக்கிக் கொண்டு அத்தனை தீவிரமாகப்படிப்பாள். அவளது பாடத்திட்டத்தில் இருந்த Non-detailed stories வேறு எனக்குச் சொல்லுவாள். அப்படி அவள் சொன்னதில் இன்னமும் மறக்காமல் இருப்பது Robert the Bruce & the Spider என்ற கதை. இவை தவிரச் சில ஆங்கிலப் புத்தகங்களும் இருந்தன. ஒன்றிரண்டு புத்தகங்களில் S.Ramanathan என்று பேனாவால் எழுதப் பட்டிருக்கும். நமது (ஞாபகமில்லாத) மாமாவின் பெயர் தான் அது.
இவை தவிர விஜயாக்காவிடம் ட்யூஷனுக்கு வந்து கொண்டிருந்த வசந்தி என்ற பெண், சிறுவர்கள் புத்தகமான கண்ணன், அம்புலி மாமா என்று படிக்கக் கொண்டு வந்து கொடுப்பாள். படு சுவாரஸ்யமாக இருக்கும்.
இதெல்லாவற்றையும் விடச் சுவாரஸ்யம், பெரிய லிப்கோ டிக்ஷனரி தான். இந்திராணியும் நானும் அதை வைத்துக் கொண்டு தினமும் பத்துப் புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதன் தமிழ் அர்த்தத்தையும் கற்றுக் கொள்ளுவது என்று ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தோம். சாவித்ரிக்கா தான் டிக்டேஷன்....
சாவித்ரிக்காவின் சினேகிதி துளசி என்று ஒரு பெண்மணி. முகத்தில் கண்ணுக்கு அருகே பெரிய மரு இருக்கும். பள்ளிக்கூடம் போகும்போது வரும் காம்பவுண்டுக்குள் உள்ள வீட்டுத் தொகுதியில் இருந்தாள். அங்கே தான் வேதமணி டீச்சரும், சவரிராஜ வாத்யாரும் குடிரிந்தார்கள். அந்தத் துளசியிடமிருந்து கல்கண்டு புத்தகம் வாங்கி வருவது என்னுடைய வேலை...
சுப்பம்மா, பாஞ்சாலி வீட்டில் தினத்தந்தி பேப்பர் வாங்குவார்கள். அந்தப் பேப்பரெல்லாம் படிக்கக் கூடாதென்று அப்பா சொல்லுவார்...ஆனால், சாயங்கால வேளையில் பாஞ்சாலி கொண்டு வந்து முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைப் பேப்பரை அக்காவுக்குப் படிக்கத் தருவதுண்டு....
சாவியின் வாஹினடனில் திருமணம் வந்த நாட்கள் அவை...கோபுலுவின் கேலிச் சித்திரங்களைப் பார்த்து நாங்கள் சிரிப்போம். "செர்ரி மரத்தில் வேட்டியைக் கட்டி" "போடா மக்கு நதி" (Potamac River in Washington) போன்ற comments நகைச்சுவையாக இருக்கும். மேலும் மணியனின் இதயம் பேசுகிறது பயணக்கட்டுரை அத்தனை அருமையாக இருக்கும். அவையெல்லாம் எனது பயண ஆர்வத்துக்கு உரமூட்டிய கட்டுரைகள் என்றால் மிகை இல்லை....
அதன் பிறகு திருச்சி வந்த பின், ரமணி அனேகமாக எல்லாப் புத்தகமும் வாங்கி வருவான். அக்காவின் லாலா ஸ்டோரில் புக் சிஸ்டம் வைத்து எல்லாப் புத்தகமும் கிடைத்து அக்கா படித்து விடுவாள். அத்திம்பேர், மதர் இந்தியா (பாபுராவ் படேல்), இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பழைய புத்தகக் கடையிலிருந்து வாங்கி வருவார்.
இப்போது....கணினியும், செல்போனும் எத்தனையோ விஷயங்களை அள்ளித் தருகிறதுதான்...ஆனாலும் புத்தகத்துக்கே உரிய ரம்மியமான வாசனையோடு எந்தச் சூழலும் பாதிக்காமல், நம்மை மறந்து ஆழ்ந்து போய்ப் படித்த காலங்கள் இவற்றுக்கு இணையாகாது. இப்போதும் கூட இந்தியா போகும் சமயங்களில், புத்தகக்கடைகளுக்குப் போகும் போது அத்தனை உற்சாகம் கரை கடந்து ஓடும்...நிறையப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து எப்படி எடுத்து வருவது என்று முழிப்பேன்...ஒரு லைப்ரரி வைத்து எனது அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பொக்கிஷம் போல் அடுக்கி வைத்திருக்கிறேன்...தி.ஜா, எஸ்ரா, சிவசங்கரி, சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், பெருமாள்முருகன், புதுமைப்பித்தன், என்று....அவர்களின் கதைகளைப் படிக்கும்போது, அந்தந்த ஆசிரியர்களோடு உரையாடுவது போல் உணர்வேன். உண்மையிலேயே இந்த..பாஷை தரும் மயக்கம் அலாதிதான்.. .கதைகளும், கவிதைகளும் மொழிக்குச் சிறகு முளைத்தது போல் அல்லவா இருக்கிறது?
பாரதியின் ஈரமான கவிதைகள் நெஞ்சுக்குள் மாமழையாக அல்லவா பொழிகிறது! அதனால்தானோ என்னவோ, அடுத்த வீட்டுப் பெண்ணை விட அவனது கண்ணம்மா மனசுக்கு அத்தனை இதமாக இருக்கிறாள்? இதுதான் புத்தகங்கள் செய்யும் விந்தையா? இருக்கலாம்... *******************
அன்புடன், பானுரவி
With love, Banooravi