கதை 14

கல்யாணமாம் கல்யாணம்

அந்தப் பெண் வேகமாக, பரபரப்பாக, எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் — அவளுக்கு ஒரு பன்னிரண்டு வயது. ஒரு அந்நியப் பெண் அவளைப் பார்த்து ஒரு முடிவு எடுத்தாள்.

அந்தப் பெண் துறுதுறுவென்று பரபரப்போடு அங்கும் இங்கும் பம்பரமாகச் சுற்றிக்கொண்டு அனைவரும் கவனிக்கும்படியாக இருந்தாள். கல்யாண வீடு என்பதால் இயல்பாகவே கூட்டமும் சந்தடியுமாக இருந்தது...ஆனாலும், எளிமையாகவும், அழகாகவும், புன்முறுவலுடனும் வளைய வந்த அந்தச் சிறுமிக்குச் சுமாராக பனிரெண்டு வயது இருக்கலாம்...வரிசையான பற்கள், நெளிநெளியான கூந்தல், நல்ல உயரம், உலகை முழுவதும் போட்டு அளக்கும் விதமாகப் பெரிய கண்கள்......அந்தப் பெண்மணிக்கு அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை நிரம்பவே பிடித்து விட்டது. கூர்ந்து கவனிக்கலானாள்.

அந்தப் பெண்ணின் குடும்பம், எந்த ஊரைச் சேர்ந்த பெண், என்பதெல்லாம் தெரிந்து கொண்டாள். விசாரித்த வரையில் மிகவும் திருப்தி ஏற்படவே மனதுக்குள் பெருத்த நிம்மதி ஏற்பட்டது! பொருத்தமான பெண்ணாகத்தான் இருப்பாள் என்ற ரீதியில் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள். அந்தப் பெண்மணியும் கல்யாண வீட்டாருக்குச் சொந்தம் என்ற வகையில் வந்திருந்தவர் தான்! மளமளவென்று இனி தாமதிக்காமல் காரியத்தில் இறங்க வேண்டுமென்ற தீர்மானத்தோடு கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டாள்!

தனது பிள்ளையிடம் கூறிய போது பிள்ளை மறுப்பு ஏதும் கூறவில்லை! அம்மாவின் சொல் வேதவாக்கு என்று கருதிய பிள்ளை! தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை என்றபடி அம்மாவின் மீது பக்தியும், மரியாதையும் நிறைந்த அன்பும் கொண்டிருந்த பிள்ளை! அந்தப் பிள்ளையின் முதல் மனைவி வைதூரி கண்டு பெரியவள் ஆகும் முன்பே கடவுளிடம் சென்றுவிட்ட படியால், அந்தப்பிள்ளைக்கு நல்ல பெண்ணாகத் திருமணம் செய்ய வேண்டுமென்று அந்தத் தாய் எண்ணியதில் நியாயம் இருந்தது!

காரைக்குடியில் கழனிவாசல் என்ற ஊரில், மிகவும் வசதியாக, ஒரு ஜவுளிக்கடை, ஒரு பச்சணக்கடை. ஒரு சாப்பாட்டுக் கடை என்று மூன்று விதமான வியாபாரத்தில் ஈடுபட்டு மிகவும் வசதியாக இருந்த குடும்பம். கௌரி அய்யர் என்றால் அந்த ஊரில் மிகவும் பிரசித்தம்! அவர்களுக்குச் செல்லம்மாள் என்ற பெண்ணும், மீனாட்சிசுந்தரம், ஆலாஸ்யசுந்தரம் என்ற இரு பிள்ளைகளும் இருந்தனர்..

கௌரி அய்யர் என்றால் அந்த ஊரில் மிகவும் பிரசித்தம்! அவர்களுக்குச் செல்லம்மாள் என்ற பெண்ணும், மீனாட்சிசுந்தரம், ஆலாஸ்யசுந்தரம் என்ற இரு பிள்ளைகளும் இருந்தனர்.. கௌரி அய்யர் நல்ல பிசினஸ் செய்து வந்தாலும் கொஞ்சம் குஷால் பேர்வழி! சங்கீதம், பஜனை, கதாகாலட்சேபம் என்று பொதுவில் பணத்தை வாரி இறைப்பவர். அந்த அம்மாள் பெயர் சாரதாம்பாள். படு கெட்டிக்காரி. நல்ல உயரமும், பருமனமாக இருப்பதோடு மட்டுமின்றி இந்த கௌரி அய்யரை நன்றாக ஆட்டுவிப்பதிலும் கில்லாடி! மனிதர்களோடு கௌரி அய்யர் அத்தனை ஒத்துப் போகாதவர்....அதனால் சாரதாம்பாள் அனைவருடனும் அனுசரித்துக் குடும்பத்தை அழகாகச், சாங்கோபாங்கமாகக் கொண்டு செலுத்திக் கொண்டிருந்தாள்....

ஆயினும் விதி யாரை விட்டது? மின்சாரம் வராத அந்த நாட்களில் காடா விளக்கும், சிம்னி விளக்கும் புழக்கத்தில் இருந்த சமயம்...பச்சணக் கடையில் உறங்கிக் கொண்டிருந்த வேலையாள் ஒருவரின் கைபட்டு விளக்கு கவிழ்ந்து ஒரு கடையில் மூண்ட நெருப்பு, அடுத்தடுத்து இருந்த மற்றைய கடைகளிலும் பரவி அத்தனையும் தீக்கு இரையாகிப் போனது! பெருத்த பண நஷ்டம்! அத்தோடு வியாபாரத்துக்குக் கடன் கொடுத்தவர்களின் தொந்தரவு, மனக் கஷ்டம் என்று எல்லாமாகச் சேர்ந்து கொள்ளவே, தீராத மன அழுத்தத்தில் இருந்த கௌரி அய்யர், ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டார்!

எப்படி இருந்திருக்கும் சாரதாம்பாளுக்கு? என்னதான் தைரியமான பெண்மணி என்றாலும், இது போன்ற விஷயத்தைச் சமாளிப்பது என்பது சுலபமா, என்ன? பதில் சொல்லவே திராணி வேண்டுமே? அதுவும் அந்தக் காலம்..... இருந்த நகை நட்டெல்லாம் விற்று, ஒரளவுக்குச் சமாளித்து விட்டாரென்றாலும், பிள்ளை மீனாக்ஷிசுந்தரத்திற்கு அம்மா படும் துயரம் தாளவில்லை! காரைக்குடியில் எஸ்.எம்.ஸ்கூலில் அது சமயம் பத்தாவது படித்துக் கொண்டிருந்த கெட்டிக்காரப் பிள்ளை, கணக்கில் சூரப்புலி! பாவம்! பாதியிலேயே படிப்பை விட்டுவிடும்படி ஆயிற்று! பொருளாதார நிலையைச் சீர் செய்யணும் என்ற நோக்கில் இளம் வயதிலேயே செட்டியார் வீடுகளுக்குக் கணக்கெழுதும் வேலையை மேற்கொண்டது அந்தப் பிள்ளை! தாயார் சாரதாம்பாள் அந்தப் பிள்ளையின் பொறுப்பில் பூரித்துப் போனாள்! "ஐயா" என்று அன்பொழுக அழைக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்!

பிரைவேட்டாகத் தமிழ் படித்து வித்வான் பட்டமும் கிடைத்தபிறகு, பள்ளியில் மீனாட்சிசுந்தரம் தமிழாசிரியராகப் பணி புரிய வேண்டிய காலம் வந்தது...அது சமயம்தான் திருமணமாகி, மீனாக்ஷி என்ற அந்த முதல் மனைவி காலமானதும்....அப்போதெல்லாம் பால்ய விவாகம் என்பதே நடைமுறையில் இருந்தது. (இடையில் கௌரி அய்யர் திரும்ப வந்து விட்டாலும்,) நிதி நிலைமை மட்டும் சீரடையவில்லை...திருமணம் செய்து கொடுத்த செல்லம்மா அத்தை, புக்ககத்தினரால் துன்புறுத்தப்பட்டு ஒரு பிள்ளையுடன் பிறந்த வீட்டுக்கே வந்திருந்தாள். எனவே குடும்பத்தை நல்லபடி நிர்வாகிக்கவும், அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும் ஒரு நல்ல மாட்டுப்பெண் வரவேண்டுமென்று சாரதாம்பாள் எண்ணியதில் நியாயம் இருந்தது!

......அம்மா சொற்படி மீனாட்சிசுந்தரம் நங்கவரம் என்ற ஊருக்கு வந்து சுப்பிரமணிய அய்யர், சுப்புலக்ஷ்மி அம்மாளின் இரண்டாவது பெண்ணான மீனாக்ஷியைப் பெண் கேட்டு வந்தார்கள். மீனாக்ஷி என்ற மீனம்மாவுக்கு எதுவும் புரியாத வயதென்றாலும் அப்பா/அம்மா சொல்வது நன்மைக்குத்தான் என்ற ரீதியில் கல்யாணம் செய்து கொள்ளும் சூழலில்தான் இருந்தாள். கந்தண்ணா என்ற தனது ஒன்றுவிட்ட சகோதரனின் திருமணத்துக்குச் சென்ற போது தான் இந்த வரன் குதிர்ந்தது....சாரதாம்பாளும் கலந்து கொள்ள வந்திருந்த திருமணம் ஆயிற்றே! பாவம்! பருவமடையாத சிறு பெண்....ரங்கூனுக்குச் சென்ற தனது அண்ணன் ராமநாதன் வராமலேயே திருமணம் நடந்ததுதான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. மீனாக்ஷி என்ற பெயரை, லலிதாம்பாள் என்று மாற்றி லக்கினப் பத்திரிகை எழுதி நிச்சயதார்த்தம் செய்தார்கள்! நங்கவரத்து மங்கை செட்டிநாட்டு மங்கை ஆனாள்! பெயர் மட்டுமா மாறியது? அவளது வாழ்க்கையும் அல்லவா மாறியது? பட்டாம்பூச்சியாகத் திரிந்த கள்ளங்கபடமற்ற ஒரு பெண், பளு சுமக்கும் உழைப்பாளியாக மாறிய தருணமல்லவா அது?

அந்தக் காலத்து வழக்கப்படி, வரதக்ஷிணை, சீர் செனத்தி என்று எதையும் சாரதாம்பாள் அவர்களைக் கேட்கவில்லை..மாறாகக் காப்பு, கெட்டிச் சங்கிலி, கழுத்தை ஒட்டிய பதக்கம் என்று தனது நகைகளைப் போட்டு, கூரைப்புடவை, திருமாங்கல்யம் என்று எல்லாமே போட்டுத் திருமணம் செய்து வைத்தாள்...

பெரியவள் ஆகும் வரையில் பிறந்த வீட்டில் இருந்துவிட்டுப் பிறிதொரு சமயம் நல்ல செய்தியோடு குடித்தனம் செய்யப் புறப்பட்டாள் மீனாக்ஷி! அப்போது அவர்களது குடித்தனம் பலவாங்குடியில் துவங்கியது என்று நினைக்கிறேன். பெரிய வீடு, மாடு..கன்றுமாகச் செழிப்போடு இருந்திருக்கிறார்கள். அப்பாவுக்குக் கட்டுக்குடுமி...கறுத்த உறதியான தேகம். கட்டுக்கட்டாக விபுதிப்பூச்சு...காதில் புஷ்பராகக் கடுக்கன்... அம்மாவின் அந்தக் கூறைப்புடவை மயில்கழுத்துக் கலரில் மெருன் பார்டர் வைத்து, நிறைய வெள்ளி ஜரிகையோடு ரொம்ப நாள் இருந்தது. அதே போல் அப்பாவின் வயலட் கலர் வெள்ளி சரிகை (கோட் மாதிரி) உடுப்பும் இருந்தது...பாட்டியின் வரலக்ஷ்மி வெள்ளிச் சொம்பை(ஏகக் கனம்) கடையில் போட்டு அக்காவுக்குக் கல்யாணத்துக்கு வெள்ளிச் சாமான்கள் வாங்கினார்கள். பாட்டியின் காப்பிக் கொட்டைச் சங்கிலி அக்காவின் இரட்டை வடமானது!

போற்றுதலுக்கும், வணங்குதற்கும் உரிய நமது அன்பான பெற்றோர்களின் திருமணம் தான் இந்த மாதிரி நடந்தது என்று இப்போது புரிந்திருக்கும்! சாரதாம்பாள் என்ற அந்த இரும்பு மனுஷி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை உற்ற துணையாக இருந்தார் என்பதை நமது சகோதரிகள் சொல்லக் கேட்டிருக்கேன். அம்மாவுக்கும் பாட்டியாகிய சாரதாம்பாளுக்கும் அத்தனை அன்பு இருந்தது....பாட்டி, நமது அப்பாவின் மீது உயிரையே வைத்திருந்தார்....அப்பாவின் ஆத்மபலம் பாட்டிதான் என்றால் மிகையில்லை! பாட்டி நமது அம்மாவையும் மிகவும் கனிவோடு நடத்தினார். தானே விரும்பித் தேர்வு செய்த மாட்டுப்பெண் என்பதால், அம்மாவிடம் காட்டிய அன்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது!

அதுவும் விஜயாக்காவுக்குப் பாட்டி என்றால் கொள்ளைப் பிரியம். சுகுணாக்காவின் அச்சுஅசல் தான் பாட்டி! எனக்கு லேசாக நினைவு இருக்கு....என்றுமே சோம்பி இருக்க மாட்டா பாட்டி. சாப்பிட வாதாம் மரத்து இலையைப் பொறுக்கி வருவதும், அதைத் தென்னங் குச்சியால் தைப்பதும்..அப்பளம் இடுவதும், ஒரு வண்டி பற்றுப் பாத்திரம் தேய்ப்பதும்...விறகு அடுக்கி வைப்பதுமாக....சீரான உடம்பு...வரிசையான கெட்டிப் பற்கள்...சாகும் வரை பல் மிகவும் உறுதியாக இருந்தது!

நமது கானாடுகாத்தான் வீட்டில் கூடத்தில் ஒரு பெரிய கறுப்பு வெள்ளை புகைப்படம் இருக்கும். பாட்டி, அத்தான், நம் விஜயாக்கா குட்டிப் பெண்ணாக....இருக்கும் புகைப்படம்! ஐயா ஐயா என்று அப்பாவிடம் அத்தனை வாஞ்சை....எண்பது வயசுக்கு மேல்...எந்த வயசு என்று சரியாக நினைவில்லை. பாட்டி இறந்து போன தினம் அப்பா கூட்டத்து அலமாரிக் கதவைப் பிடித்துக் கொண்டு விசும்பியது மட்டும் நினவிருக்கு. பாட்டி காலில் கொப்புளங்கலோடு வாசல் திண்ணையில் உடம்பைக் கிடத்தியதும் நினைவிருக்கு. ஆனால் விஜயாக்கா ரொம்பவும் அதிர்ந்து போயினாள்! பாட்டியின் செல்லப் பேத்தி!

எனக்கு நான் ஒன்பதாவது பெண் என்பதால் பானுமதி என்று பெயர் வைக்கும்படி சொன்னது பாட்டி தானாம்! ஒம்பதாவது பொண்ணு...உததரமெல்லாம் தங்கம் தொங்கும் என்பாராம்!

சாப்பிடும் வேளையில், ராஜா போய் "பாட்டி! சாப்பிட வா!" என்று சாப்பிட வரும்படி சைகை காட்டுவான். கொஞ்சம் காது மட்டும் பாட்டிக்குக் கேட்கவில்லை....தைத்த இலையில் காக்காவிற்கு ஒரு வாய் சாதம் வைத்து விட்டுச் சாப்பிடுவாள் பாட்டி. அம்மாவின் சமையலை வாயாரப் புகழ்வார். அம்மாவின் கைவேலையை, வீட்டு நிர்வாகத்தை, நிரம்பப் பாராட்டுவார். முறுக்கு, சீடை மட்டுமில்லை....வறுத்த புளியங் கொட்டைகளைக் கூடப் பாட்டி சாப்பிடுவார் என்றால் பற்கள் எத்தனை உறுதியாய் இருந்திருக்க வேண்டும்?

கருக்குப் போனால் உடனே அப்பாவிடம் வந்து விடுவாளாம் பாட்டி.. லலிதா கைமணம் யாருக்குமில்லை என்று சொல்லுவாளாம். சித்தப்பாவையும், அத்தை/அத்தான் இவர்களையும் நம் அம்மா எந்த ஒரு வேறுபாடுமின்றி, அருமையாகக் கவனித்துக் கொண்டதைப் பாட்டி ரொம்பவே மெச்சுவாராம்! அது மட்டுமல்ல...அப்பா வழிச் சொந்தங்கள் அத்தனை பேரும் கொண்டாடும் வகையில் தான் அம்மா இருந்திருக்கிறார்!

இதை எழுதுகையில், விவேகானந்தர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது... பசித்தவனுக்குச் சோறிடுவதையும், அறிவற்றவனுக்கு அறிவென்ற வெளிச்சத்தைக் காட்டுவதையும், நோயுற்றவனுக்கு மருத்துவம் செய்வதையும் செய்தாலே ஒரு சமூகம் முன்னேறும் என்றவர், மேற்கொண்டு ஒரு குடும்பம் நன்றாக வரவேண்டுமென்றால், இரண்டு விஷயங்களை மேற்கொள்ள வேண்டுமென்று ரொம்பவும் அழுத்தமாகச் சொல்கிறார்...

சூரியன்ஜோதி

அது என்னவென்றால், தொண்டு செய்வதையும், துறவு மேற்கொள்வதையும் தான் சொல்லுவார். இங்கே, தொண்டு என்பது சமூகத் தொண்டு என்பதையோ, துறவு என்பது சந்நியாசம் பெற்றுக் கொள்ளுவது என்பதையோ குறிப்பதல்ல. சக மனிதருக்கு உதவி செய்வதே இங்கே தொண்டுகிறது! சுயநலம் என்பதைத் துறப்பதே துறவாகிறது....அது போல்தான் நமது அம்மாவும் இருந்திருக்க வேண்டும்......

அம்மாவுக்குள்ளும் எத்தனையோ ஆசாபாசங்கள் இருந்திருக்கும்...சிறு சிறு இடைவெளியில் வரிசையாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, புகுந்த வீட்டின் பெரியவர்களை அனுசரித்துக் கொண்டு, எப்போதும் சிரிப்பு என்ற கவசத்தை மாட்டிக் கொண்டு, தனது தாபங்களை வெளியே சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம். அனைத்தையும் தாண்டி, இணங்கியும் பிணைந்தும் அன்பு பாராட்டி வாழ்வது என்பது ஒரு கலை... அந்தக் கலை கைவரப் பெற்ற மாதரசிகள் அத்தனை பேருக்கும் கிடைத்த வாழ்க்கை வரமாக இருக்கிறதா...இல்லை சாபமாக இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி! கதைகளை விட வாழ்க்கை புதிரானது அல்லவா?

மரத்தில், ஆணி அறையப்பட்ட இடத்திலிருந்து ஒருவிதமான பிசின் வழிந்து கொண்டிருப்பதைப் போல, மனதில் இனம் புரியாத வலியின் இழைகள் (அவ்வப்போது, இப்படி நினைவலைகள் வீசும்போது) கசிவதை மட்டும் யாராலும் தவிர்க்க முடிவதில்லை... எங்கோ படித்த ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது... "கால் இல்லாமல், கை இல்லாமல், உறுப்புகள் கோர்க்கப்பட்டு மனிதர்கள் இருப்பார்கள்....ஆனால், மனது இல்லாத மனிதன் மட்டும் இல்லவே இல்லை"!!! ஒப்புக்கொள்ளுகிறீர்களா??

அன்புடன், பானுரவி

With love, Banooravi