கதை 13

அம்மாவும் வரலக்ஷ்மியும்

எங்கள் ஹால் சுவரில் — பள்ளி முடிந்து வரும் ஒவ்வொரு நாளும், ஒரு சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் மாந்திரிகமாய்த் தோன்றும்.

வீட்டின் கூடத்துச் சுவர் வெள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. அடித்த சுண்ணாம்பு காய்ந்ததும், அச்சுவற்றில் காவியால் ஒரு அழகிய மண்டபம் outline-இல் அழகாக வரையப்பட்டிருக்கு....அதன் மறுநாள், அதற்கும் மறுநாள் என்று நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது, அந்தச் சுவற்றில் ஏதோ மந்திர ஜாலம் நிகழ்ந்தாற் போல் தினமும் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது....வெள்ளைச் சுவர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, அங்கே வான வில்லின் வர்ண ஜாலத்தை அல்லவா நாம் பார்க்கிறோம்? இது என்ன....விந்தையிலும் விந்தையாக இருக்கிறதே...வியந்துதான் போகிறோம்!

பின்னே? மயன் செய்த மாளிகை போல் அங்கே ஒரு மாளிகை அல்லவா காட்சி தருகிறது? கூடவே இந்திரனின் ஐராவதங்களும், தோகை விரித்தாடும் அழகு மயில்களும், பசுங்கிளிகளும், பழுத்துக் குலை தள்ளிய பசேலேன்ற செழித்த வாழை மரங்களும், வண்ணமலர்த் தோரணங்களும், இது என்ன....அட...அடா....அந்த மணி மண்டபம் மரகதத்தாலும், பவளத்தாலும், நீலம் பாரித்த முத்துக்களாலும், சிவந்த ரத்தினங்களாலும் ஆனது போல் அல்லவா தகதகக்கிறது! மண்டபத்தின் மேற்புறத்தே இருபுறத்திலும் இரு மலர் மாலைகளைத் தூக்கிக்கொண்டு இரு கந்தர்வர்கள் வேறு பறந்த வண்ணம் காட்சி தருகிறார்களே!

மண்டபத்தின் நடு மையமாக சிவந்த செந்தாமரைப் பூவானது, தனது அழகையெல்லாம் பூவிதழ்களில் காட்டி மலர்ந்து கொண்டிருக்கிறதே! மணம் வீசும் அந்தத் தாமரை மலரின் அழகுக்கு அழகு சேர்க்கும் அந்த முகமலர் மங்கையர்க்கரசி யார்? ஆஹா....விரைவில் வரப்போகும் வரலக்ஷ்மி விரதத்திற்கான வண்ணக் கோலங்களின் துவக்கமல்லவா இது? நம் அம்மாவின் கைகளில் இருப்பவை விரல்களா இல்லை...தூரிகைகளா?

அடேங்கப்பா....சிறு சிறு குப்பிகளில் நிறைந்து கிடந்த வண்ணப் பொடிகளில் விளைந்த தத்ரூப சௌந்தர்யமல்லவா அத்தனையும்! வியப்பு மட்டுமல்ல மலைத்தும் போகிறேன்....அம்மாவிற்குள் தான் எத்தனை ஆச்சரியங்கள்!

அந்த வரலக்ஷ்மி நோன்பு சமயத்தில் சர்வாபரண பூஷிதையான இலக்குமியை விட, ஆய கலைகளும் குடி கொண்ட சரஸ்வதியாகவே என் கண்களுக்கு அம்மா தெரிகிறார்! கைகளின் நளினம், அம்மாவின் நள பாகத்தில் மட்டுமல்ல....கோலத்திலும், கும்பிடுவதிலும், கலை நயம் மிளிர அத்தனை பண்டிகைகளையும் அப்பழுக்கு இல்லாமல் கொண்டாடியதிலும் அல்லவா இருந்தது? பிரமிப்பு இன்னும் கூட அடங்கவில்லை......

பின்னேயும் ஓரிரு நாட்களில்....அழகிய கிரீடம் தூடி, ஆபரணங்கள் மின்னக், கனிந்த செவ்வாயும், மையிட்ட கண்களும், செம்மை பூசிய மாம்பழக் கன்னங்களும், சுருள்சுருளான சிகை அலங்காரமும், காதுகளில் குண்டலமும், சந்திரப் பிரபை/சூர்யப் பிரபையுடன் நெற்றிச் சுட்டியும், மஞ்சளும் பொன்னும் கலந்த வடிவில் அம்மனின் அவதாரம் பூர்த்தியாகி இருக்கும்.

அக்காக்களின் உதவியும் கற்பனையும் கூடுதலான முறையில் இன்னமும் மிளிரும்படியாக அங்கே காண முடிந்தது......நம்மாத்தில் அமைந்தது போன்ற வண்ண மய மண்டபத்தை நான் எங்குமே கண்டதில்லை...அந்த வெள்ளை அடித்த சுவற்றுக்குள் நாரணன் வாசம் செய்யும் வைகுந்தம் அல்லவா எழும்பி இருந்தது! வரலக்ஷ்மி மட்டுமல்ல....அஷ்ட லக்ஷ்மிகளும் அல்லவா அவ்விடத்துக்கு ஆனந்தமுடன் எழுந்தருள்வார்கள்!

சுவற்றில் வரைதல் பூரணமான பிறகு, ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா பெரிய தாம்பரச் சொம்பிற்குச் சுண்ணம் அடித்து, முகம் வரைய ஆரம்பிப்பார். நேர் வகிடும், சிரிக்கும் முகமுமாக, இந்திரலோகத்துச் சுந்தரியாக வரலக்ஷ்மி அந்தச் சொம்பிலும் புகுந்து புறப்பட்டிருப்பாள். மஞ்சளை அரைத்து அம்மா மூக்கு வைப்பார். நத்தும் மூக்குத்தியும் பளபளக்க அந்த மூக்கு டாலடிக்கும். செங்கனி வாயைத் தொட்டுக் கொண்டு முத்து புல்லாக்கு. காதில் மாட்டலும் ஜிமிக்கியும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். கழுத்தில் அட்டிகையும், கண்டசரமும், முத்து மாலையும், கருகமணித் திருமாங்கல்யமும் போட்டு விட்டிருப்பார் அம்மா. பொன்னால் ஆன பொட்டுத் திருமாங்கல்யமும், அத்துடன் கோர்க்கப்பட்ட பவழங்களும் பளீரிடும். அம்மாவின் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட நம் வீட்டின் ஆஸ்தான சொத்தான அந்த மாங்காய் மாலை அம்மனின் கழுத்தில் ஜொலிக்கும். காதோலை, கருகமணி என்று சர்வ மங்களகரமாக அம்மன் அவதாரம் நேர்த்தியாக வளர்ந்து வரும்...

வீட்டில் கல்யாணக் களை கட்டி விடும்...அத்தனை சகோதரிகளும் இது போன்ற சமயங்களில் அம்மாவுக்கு அத்தனை ஒத்தாசையாக இருப்பார்கள். பூஜைப் பாத்திரங்கள் எல்லாம் அனேகமாக வெண்கலமும், தாமிரமும் தான்...ஆனால் எல்லாம் பளபளவென்று மின்னிக் கொண்டு இருக்கும். மிகவும் பக்தியோடும் ஈடுபாட்டோடும் எல்லோரும் இது போன்ற பண்டிகைகளைக் கொண்டாட முன் வந்ததிலிருந்தே அம்மா, நம் அனைவருக்கும் எத்தனை பக்தியை ஊட்டி வளர்த்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். சுகுணாக்காவைச் சொல்லணும்...மகராஜி! அத்தனை செந்தாமரைப்பூக்கள், தாழம்பூ என்று நிறைத்து விடுவார். அம்பாளின் ஜடை அலங்காரத்தில் தாழம்பூவை வைத்து...ஜடவில்லை திருகி,.... அடேங்கப்பா! மாக்கோலமும் செம்மண்ணுமாக நம் வீடு மங்களகரமாகக் காட்சி தரும்...

அப்பா மாவிலைத் தோரணம் கட்டி, நிறையப் பழங்களும், தேங்காயும் கொண்டு வருவார். விஜயாக்காவும் சாவித்ரிக்காவும் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் போய் ரவிக்கைத்துணி, சின்னக் கண்ணாடி, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாகு என்று வாங்கி வருவார்கள். அம்பாளுக்கென்று சிகப்புப் பட்டுத் துணியில் பேபி பாவாடை தைத்திருப்பாள். அப்பாவே ட்வைன் நூலில் சரடு தயாரித்துக் கொடுத்து விடுவார்...அம்மா இரு தினங்களுக்கு முன்பே, மடியாகக் கொழுக்கட்டைக்கு மாவு திரித்து வைத்து விடுவார். நோன்பிற்கு முதல் நாளே பச்சரிசி இட்டிலி, அப்புறம் புழுங்கரிசி இட்லி என்று ரெண்டு திணுசு...சாவித்ரிக்காவும் சுகுணாக்காவும் தான்...வெல்லம் நசுக்கி, தேங்காய் துருவி, கறிகாய் நறுக்கி, என்று பேபியும் இந்திராணியும் செய்வார்கள். (நான் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்களா? ஹாஹா...அப்புறம் சொல்றேன்)!

முதல் நாளே சமையலுக்கு வேண்டிய காய்களும் நறுக்கி வைத்து விடுவார்கள். இந்த நோன்பு கொஞ்சம் அதிகம் வேலை வாங்கும் பண்டிகை என்று சொல்லலாம். உப்புக் கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, வடை, சுகியன், அப்பம், பாயசம், இத்யாதி.....வழக்கமான சாம்பார், கறி, கூட்டு, ரசம் என்று பண்டிகைச் சமையல் வேறு பண்ணணும்... .பாவம் பெரிய குடும்பம்...குமுட்டி அடுப்பும், விறகடுப்பும் கோலோச்சிய அந்தக் காலம்...போனால் போறதுன்னு ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் இருந்தது....அம்மியும், உரலும், ஆட்டுக்கல்லும்....இரும்புலக்கையும்!

எத்தனை சரீர ஸ்ரமப் பட்டிருப்பார்கள்....எல்லாம் போஜனப் பிரியர்கள்...எல்லாப் பதார்த்தங்களும் ஒரு வண்டி பண்ணணும்...அப்புறம் எல்லோருக்கும் வச்சுக் கொடுக்கணும்...அண்டை அயலாருக்குத் தந்தாகணும்...அம்மா நிச்சயம் தெய்வம் தான்....

நோன்புக்கு முதல் நாள் வியாழனன்று செம்பில் வரைந்த அம்மனை ஒரு ஸ்டூலில் (நீலவண்ண ஸ்டூல்) வைப்பார் அம்மா. அந்த ஸ்டூலில் அம்மாவின் பட்டுப் புடவையைப் போட்டு அதன் மீது நல்ல வாழை இலையை வைத்து அதில் அரிசியைப் பரப்பி அதன் மீது பட்டுப்பாவாடையை வைத்து அதன் மீது அந்தச் சொம்பு வைப்பார்கள். சொம்பிற்குள் அரிசி, பருப்பு, மஞ்சள் கிழங்கு, நாணயங்கள், வெள்ளிக் காசு, வெல்லம் எல்லாம் போட்டு நிறைத்து அதன் மீது நன்றாக மஞ்சள் குங்குமம் தடவிய தேங்காயை வைப்பார்கள். மாவிலைக் கொத்தும் கூடவே. ஒவ்வொரு மாவிலையிலையும் சந்தனம் குங்குமம் வைத்து விழாமல் இருக்க ஒரு நாரால் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிடுவார்கள். பிறகு பூ அலங்காரம்....ஸ்டூல் இருப்பது மாதிரி இல்லாமல் பூவாலேயே சுற்றிலும் அழகு படுத்தி விடுவார்கள். இந்த ஸ்டூல் மணிமண்டபம் வரையப்பட்ட சுவருக்கு எதிரே வைக்கப்படும். முதல்நாள் சாயுங்கால நிவேதனமாக வெண்பொங்கல் பண்ணி நிவேதனம் பண்ணுவார் அம்மா....

மறுநாள் வெள்ளிக் கிழமையன்று அம்மாவுக்கு இறக்கை கட்டினாற் போலிருக்கும்....பத்தரையிலிருந்து பனிரெண்டுக்குள் ராகுகாலம் வந்துவிடுவதால், டாணென்று மூன்று மணிக்கே எழுந்து, இட்லி, பூரணம், கொழுக்கட்டை எல்லாம் செய்து ஒற்றைப்படையில் நிவேதனத்துக்கு எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர்வார். மற்றைய சமையல் வேலைகளைச் சகோதரிகள் தொடர்வார்கள். அம்மனை அழைப்பது என்ற சம்பிரதாயம் உண்டு. தகதகவென்று மின்னும் அம்மனை "லக்ஷ்மி ராவே மா இன்டிக்கு" என்று பாடியபடியே மண்டபம் வரையப்பட்ட சுவற்றுக்கு நடுவே மெதுவாகக் கொண்டு வருவார். வரலக்ஷ்மி பூஜை செய்து, கற்பூரம் காட்டி, நிவேதனம் செய்து, அம்பாளுக்குச் சரடு கட்டிவிட்டுத் தானும் கட்டிக்கொண்டு எங்களுக்கும் ஒவ்வொருவராகக் கட்டிவிடுவார். எனக்கு ரொம்பக் குஷியாக இருக்கும். புதுசாப் பாவாடை கிடைச்சிடும்...எப்போ நைவேத்யம் பண்ணி எல்லாவற்றையும் ஒருகை பார்ப்போம்னு இருக்கும்! (இதுதான் என்னோட வேலை....ஹாஹா)

ராஜா வீட்டு கார் ஓட்டுனர் சுப்பையா ராஜூ வீட்டில் காரைப் போட்டுக் கொண்டு தடபுடலாக வருவார்கள். அவர்கள் வரும்போதே நிறையப் பழங்கள், வெல்லம், அரிசி, பருப்பு...அம்மாவுக்குத் தாம்பூலம் எல்லாம் கொண்டு வருவார்கள். அம்மாவும் அவர்களுக்கு அம்மனின் ஆரத்தி காட்டித் தாம்பூலமும், பிரசாதமும் தருவார். அவர்களுக்குச் சரடு கட்டி விடுவார். பிரின்சிபால் வீட்டிலிருந்தும் மாமியும் பெண்களும் வருவார்கள். அந்த மாமி பளபளவென்று நிறைய நகைநட்டோடு வருவாள். கூடவே, சங்கரி, காமேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற மூன்று பெண்களும் ஈஸ்வர் என்ற பையனும் வருவான். இந்த ஈஸ்வர் ராஜாவோடு படித்தவன். வீடே ஒரே அமர்க்களமாக இருக்கும். பழங்களும், இனிப்பும், சாம்பிராணிப் புகையும், ஊதுபத்தியும், பூக்களுமாக அந்த இடம் பல்வேறுவித வாசனைகளால் துழப்பட்டிருக்கும். ஆப்பிளும், பேரிக்காயும், மாம்பழமும் கொய்யாப்பழமும், சாத்துக்குடியும்....அம்பாள் முன்னே மலை போலிருக்கும்.

அம்மாவைக் கையில் பிடிக்க முடியாது...அநேகமாக அக்காக்கள் லீவு போட்டிருப்பார்கள். ஒரு வழியாக இந்த அமர்க்களமெல்லாம் ஓய்ந்த பிறகு சாப்பாடு ஆரம்பமாகும்....அப்பாவும் ஆபீசிலிருந்து வந்திருப்பார். இலையைப் போட்டு வரிசையாகப் பரிமாறி....நினைத்தாலே வயிறு இப்பவும் முட்டிப் போகிறது. பச்சடியும், பாயசமும்....கொழுக்கட்டையும், இட்லியும், பிட்டையும்......மணக்க மணக்க இருக்கும். நிச்சயம் அம்மாவுக்கு ஆயாசமாக இருந்திருக்கும்....

பட்டினி கிடந்து, தனது குடும்பம் சுபிக்ஷமாகவும் சுகமாகவும் வாழ வேண்டி இப்படி எல்லாம் பூஜை செய்ததாலோ என்னவோ, எல்லோருமே இன்றைய நாளில் வளமாகவும் செழிப்பாகவும் இருக்கிறோம்! இறை நம்பிக்கை என்று மட்டுமில்லை...பெற்றோரின் பரிபூரண ஆசியும் அன்பும் தானே ஒரு குடும்பம் ஆல் போல் தழைத்து, அரசு போல் வேரூன்றவும் செய்ய வைக்கிறது! அம்மா அளித்த வரம் தானே நமது இன்றைய பொன்னான வாழ்வு? அவள் தந்த வரங்கள் அல்லவா, நாம் வாழும் வாழ்வும் வளமும்? பிறந்த நாள்முதல் அழகம் தந்து, அறிவைத் தந்து, கலைகள் தந்து, கற்றுத் தந்து, அனைத்தும் தந்த வரமஹாலக்ஷ்மி, நமது அம்மாவை அன்றி யாராக இருக்க முடியும்?

வரலக்ஷ்மி விரத நாளில் மட்டுமின்றி, எந்நாளும் அந்த அகிலாண்டநாயகியை மட்டுமல்லாது, நம்மை இந்த அண்டத்திற்குக் கொணர்ந்து, அன்னபூரணியாய் நமக்கு அன்னம் பாலித்து, அன்னவாஹினி சரஸ்வதியாய் நமக்குக் கலையை உணர்த்தி, தயாபரியாய் அன்பைச் செலுத்தி, சம்பத்துக்களும், சத்துக்களும் நிரம்பியவர்களாக நம்மை ஆக்கி, இவ்வுலகில் வாழ வழி செய்த நமது அன்னையை, அந்த வரலக்ஷ்மியாகப் பாவித்து வணங்குவோம்! அன்புடன் பானுரவி/28th July 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi