கதை 8

வீட்டு நடப்பு

பெரிய குடும்பம் என்றால், மாதத்தில் ஒருமுறை — சில சமயம் இருமுறை — பழனியப்பா ஸ்டோர்ஸிலிருந்து மளிகைச் சாக்குகள் வீட்டை நிறைக்கும்.

பெரிய குடும்பமாக இருந்தபடியால், மாதம் ஒருமுறை, சமயங்களில் வரக்கூடிய பண்டிகை அல்லது விசேஷங்களைப் பொறுத்து, இருமுறை என்று வீட்டில் மாதாந்திரச் சாமான்கள் வாங்கி வைப்பார்கள். நமது வீட்டிலிருந்து சுமாராக ஒரு பதினைந்து நிமிஷம் நடந்தால் வருவது பழனியப்பா ஸ்டோர்ஸ். அந்தக் கடையின் முதலாளி அத்தனை சிகப்பாக, கம்பீரமாகப் பளபளவென்று இருப்பார். நம் வீட்டார் மீது அலாதி மரியாதை கொண்டவர். நாம் வாங்கும் பலசரக்குச் சாமான்களுக்கு எப்போதும் மாதாமாதம் பணம் கொடுப்பது வழக்கம். அநேகமாக இந்திராணி, ரமணி...கூடவே நானும் என்று போய்ச் சாமான்களை அம்மா சொன்னபடி அக்கா எழுதிக் கொடுத்த சிட்டைப்படி, வாங்கி வருவோம். அரிசி மட்டும் அந்தக் கடைச் சிப்பந்தி கொண்டு வந்து போடுவார்.

அப்படிக் கடைக்குப் போகும் நாட்களில் அந்தக் கடையில் சாமான்களைக் கட்டும் சணல் ஒரு பிரமிடு மாதிரி மேலிருந்து தொங்குவதையும், அதை லாகவகமாகச் சர்சர் என்று உருவிப் பொட்டணத்தில் கட்டுவதையும் பார்க்க வேடிக்கையாக இருக்கும். மேலும் மூன்று விதமான எண்ணை வாங்கும் தூக்குப் பாத்திரம் இன்னமும் நினைவில் இருக்கு. ஒரு பச்சைக் கலர் கரண்டியுடன் ஒடுக்கமான கடலை எண்ணைத் தூக்கும், உருண்டையாகப் பறங்கிக்காய் மாதிரியான அலுமினியத் தூக்கு நல்லெண்ணெய்க்கும், குறுகிய கழுத்துடன் இருந்த தேங்காய் எண்ணைத் தூக்கும் நினைவிருக்கு. அந்தக் குடுவையில் எண்ணை அளந்து போடுவது பார்க்கப் படு சுவாரஸ்யமாக இருக்கும்.. சாமான்களுடன் சுமார் இருநூறு கிராமுக்குப் பேரிச்சம்பழமும் இலவசமாகப் போட்டு விடுவார்கள்.

வாரந்தோறும் பிரதி ஞாயிறு சந்தை. அப்பாவோடு சந்தைக்குப் போவது படு ஜாலியாக இருக்கும். அப்பா சைக்கிள் எடுத்து வருவார். சந்தைத்திடல் நேமத்தான்பட்டிக்குப் போகும் வழியில் சற்றுத் தொலைவில் இருந்தது. முருங்கை, கத்தரி, சிகப்பு முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெண்டை, அவரை, புடலை என்று அப்பா வாங்கித் தள்ளி விடுவார். வைத்தியருக்குக் கொடுப்பதை வாணிகனுக்குக் கொடுப்பதால், உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் அப்படி ஒரு அலாதி நம்பிக்கை...

திரும்பி வரும்போது பன்றிக்குட்டிகளைக் கட்டையில் தலைகீழாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போவதைப் பார்ப்போம்...மனசு சங்கடப்பட்டுப் போகும்! அந்தக் கீரைத் தண்டு அப்படி தளதளனு இருக்கும். கீரையை மசித்து விட்டுத் தண்டைப் போட்டு அம்மா சாம்பார் பண்ணுவார்...தண்டைப் பொடியா நறுக்கித் தட்டப்பயிறு போட்டு ஒரு கூட்டு பண்ணுவா...அப்படி மணக்கும்! .அட அடா... சாதம் போட்டு, .நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு அந்தக் கூட்டில் பிசைந்து சாப்பிட்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கு....அது போல மூங்கில் மாதிரி விளைந்த கீரைத்தண்டை நான் எங்குமே பார்க்கவில்லை...

அம்மாவின் சமையல் அத்தனை ருசியாக இருக்கும். வத்தல் குழம்பு, பொரிச்ச குழம்பு, மெந்தியக் குழம்பு, மாங்காய்க் குழம்பு, அப்பளாக் குழம்பு, பச்ச மோர்க்குழம்பு, புளியிட்ட கீரை, வாழைத்தண்டு மோர்க்கூட்டு, என்று அருமையாகச் சமைப்பார். கீரை மசியலில் குழம்புக் கருவாடம் போட்டுத் தாளிச்சிருப்பா...அது போல அலமி ஆச்சி கொண்டு வந்து கொடுக்கும் முருங்கைக்காயில் பொரிச்ச கூட்டு...முருங்கைகீரை போட்டு அடை, அது தவிர நார்த்தங்காய் போட்டு வெல்லம் சேர்த்து ரெண்டு செகப்பு மிளகாய் தாளித்து ஒரு பச்சடி....அமிர்தம்னா அதுதான்...நம் எல்லாருக்கும் கறி, கூட்டு போட்டுப் பரிமாறிட்டுத் தனக்கு இந்தப் பச்சடியைத் தான் போட்டுண்டு சாப்பிடுவா...பச்சடி இல்லாட்டா மாவடு!

அந்த நாட்களில் சப்பாத்தி பூரி எல்லாம் கிடையாது...எப்பவும் இட்லி, தோசை தான். அரிசி உப்புமா, சேவை, ரவை உப்புமா, உப்புமாக் கொழுக்கட்டை, மோர்க்கூழ், பச்சமாப் பொடி உப்புமா, என்று அத்தனையும் பலகாரங்களாகத் திணுசு திணுசாக இருக்கும். அதுவும் புழுங்கரிசியை அரைச்சு (சாவித்திரிக்கா தான் அரைப்பது வழக்கம்) சேவை பண்ணுவார்...கடவுளே! அந்தச் சேவை பிழியும் நாழி ஒரு முக்காலி மாதிரி இருக்கும். வெந்த மாவைச் சீராகக் கட்டியில்லாமல் உருட்டுவது பேபியின் வேலை. நின்று கொண்டு நிறைய அழுத்தம் கொடுத்து அந்தச் சேவை பிழிவது பெரிய சேவைதான்! அதில் வெகரட்டி வேறு இருக்கும்...எள்ளுச் சேவை, தேங்காய் சேவை, புளிச் சேவை, எலுமிச்சை சேவை, வெல்ல சேவை, தயிர் சேவை என்று விதவிதமாக இருக்கும்...

அப்புறம் தேங்காய்ப் பால் பிழிந்து வெல்லம் போட்ட பால் கொழுக்கட்டை,....அம்மா தட்டில் போடப் போடப் போறும்னு சொன்னதே இல்லை....வயிறு முட்டச் சாப்பிடுவது என்பதே எங்களுக்கெல்லாம் வாடிக்கையாகிப் போனது.. இதெல்லாம் செய்த பிறகு முற்றத்தில் ஒரு வண்டிப் பாத்திரம் விழும்...பாவம்...அவர்கள் தான் தேய்த்து வைப்பார்கள். சமைத்த சுவடு தெரியாமல் அடுப்பு மொழுகி, ஒரு அலம்பு அலம்பி விட்டுத் தான் படுக்கையைப் போடுவார்கள்...எத்தனை ஆயாசமாக இருந்திருக்கும்! பாவம்!

சமையற்கட்டின் சாப்பாட்டு வரிசை கூட நினைவிருக்கு. பெரிய ஓவல் சைஸ் சில்வர் தட்டு அப்பாவுக்கு. அப்பா தண்ணீர் மேடையை ஒட்டி முதலில் அமர்ந்துப்பார். அப்பா அருகில் சேகர்.நெக்ஸ்ட் ராஜா, அவனுக்குப் பக்கத்தில் நான். எனக்கப்புறம் இந்திராணி, பேபி...அப்புறம் சாவித்ரிக்கா சுகுணாக்கா எல்லாம் ரெண்டாம் வரிசை. சமையற்கட்டுக்கும் முற்றத்துக்கும் இடைப்பட்ட கதவருகே விஜயாக்கா, அப்புறம் ரமணி. இந்த ஆர்டரில் தான் மதியச் சாப்பாடு நடக்கும். இரவுச் சாப்பாடு தினமும் அநேகமாக எட்டு மணிக்குள் முற்றத்தில்தான் நடக்கும். அந்த நாட்களில், இந்த. இரவுச் சாப்பாடு அத்தனை ஆனந்தமாக இருக்கும்...அதுவும் நிலா நாட்களில், சிலுசிலுனு லேசான தென்றலுடன்...கலகலவென்று பேசிக்கொண்டு அந்த இரவுச் சாப்பாட்டுக்கு இணை எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் டின்னருக்கும் இல்லை என்று அடித்துச் சொல்லுவேன்,

அப்பாவிற்குத் தினமும் இரவில் பலகாரம் தான்!...சில சமயம் விஜயாக்காவும் சாதம் வேண்டாம் என்று ஸ்டிரைக் பண்ணுவா. அப்பா ராத்திரி அப்படி டிபன் சாப்பிடும்போது நானும் ராஜாவும் கன காரியமாக அப்பா கிட்ட வந்து நின்னுப்போம்...அப்பா தரும் அந்த ஒரு வாய் உப்புமாவுக்கும், ஒரு விள்ளல் தோசைக்கும் தான்! ஞாயறன்று மட்டும் விஜயாக்காவின் சமையல்...அரைத்துக் கரைத்து, தடபுடலாகச் சாம்பாரும், நல்ல ரோஸ்ட் பண்ணின உருளை அல்லது சேப்பங்கிழங்குமாக ரொம்ப ராயலாக இருக்கும்...அது போல அக்கா பண்ணும் ரவா பொங்கலும் அப்படி மணக்க மணக்க இருக்கும்...அம்மா திட்டுவா...ஒரே நாளில் இப்படி எண்ணையும், நெய்யும் செலவழிச்சா தாங்காதுன்னு..

அம்மா பண்ணும் வெல்ல அப்பம் அப்படி இருக்கும். பச்சரிசி மாவிடித்து, வெல்லப்பாகு செலுத்தித் தேங்காயும் எள்ளும் சேர்த்து, நெய்யும் எண்ணையும் கலந்து குழிக கரண்டியில் விட்டுப் பண்ணும் போது அந்த அப்பம் பூரித்துக் கொண்டு எழும்பும். அதைப் பார்த்துக் கொண்டே, அம்மா இந்த அப்பத்தை எப்போ சீக்கிரம் நைவேத்யம் பண்ணிட்டுத் தருவான்னு நான் காத்துண்டு இருப்பேன்....செட்டி வீட்டுக் கந்தரப்பம் மாதிரி அத்தனை மிருதுவா இருக்கும். இப்பவும் என்னோட பேவரிட் ஸ்வீட் அப்பம் தான்.

அம்மா அநேகம் பக்ஷணங்கள் பண்ணி இருக்கார். பொரிளங்கா உருண்டை (பொருள் விளங்கா உருண்டை) செல்லூரப்பம், தவளை அடை, பயத்தம் உருண்டை, மணகோலம், தினைப்பாயசம், தேன்குழல், கை முறுக்கு...சீட்டை, ரிப்பன், பக்கோடா.

பட்சணத்துக்கு வேண்டிய மாவை அரவை மெஷினில் கொடுத்து அரைத்து வருவோம். இந்த வேலை எனக்குப் பிடிக்காத ஒன்று. சோலைச்சி டீச்சர் வீட்டுக்குப் பக்கத்தில் தான் அரவை மெஷின்...அந்தக் கொர்ர சத்தம் (மோட்டார்) கர்ண கடூரமாயிருக்கும். மேலும் பலவிதமான நெடி அடித்துக் கொண்டு என்னால் அதைச் சகித்துக் கொள்ளவே முடியாது.. சிலசமயம்...அந்த வேலைக்கு ரமணி வருவான்...அவனுக்கும் இருப்புக் கொள்ளாது. நீ வரிசையில் இருந்து அரைச்சுண்டு இங்கேயே காத்துண்டு இருன்னு சொல்லிட்டு அக்கம்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பயல்களோடு போய் விடுவான்...

சில சமயங்களில் வீட்டில் பட்சணம் ஏதும் இல்லா விட்டால், அம்மா சத்து மாவு பண்ணித் தருவார். பொரி அரிசி மாவில் வெல்லமும், வெந்நீரும் விட்டுப் பிசைந்து ஆளுக்கு ஒரு பெரிய சைஸ் உருண்டை. டம்னு இருக்கும். வெல்லம் இல்லாட்டா, மோர் விட்டுப் பிசைந்து தருவார். அப்புறம் புளிப் பொங்கல்....மெந்தியம், சிகப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் குருணை அரிசியில் நல்லெண்ணெய் சேர்த்துப் பண்ணும் பொங்கல் இது....சுடச்சுடச் சாப்பிடணும். படு ஜோரா இருக்கும்! தொட்டுக்க அரிசி அப்பளம். செமயான காம்பினேஷன்..

விஜயாக்கா ஆவக்கா ஊறுகாய் மண்டியில், நல்லெண்ணெய் விட்டுச் சாதம் போட்டு சமயங்களில் கொடுப்பார்...அதுவும் நன்றாக உரைத்துக் கொண்டு டாங்கர் மாப்பச்சடியோடு வெளுத்துக்கட்டுவோம்... விறகு அடுப்பிலும், குமுட்டி அடுப்பிலும், அம்மா சமைத்துப் போட்டு இத்தனை பேரையும் வயிறு வாடாமல் வளர்த்திருக்கா....ஒரு நாள் கூட அலுப்பில்லை...சலிப்பில்லை. அந்த நாட்களில் திடும்மென்று வரும் சொந்தங்கள் வேறு உண்டு...முகச் சுளிப்பு என்பதே இல்லாமல் அத்தனை பேரையும் கொண்டு செலுத்துவது என்பது லேசான காரியமல்ல. அதுவும், ஏனோ தானோவென்று இல்லாமல், பூஜை, புனஸ்காரம், மடி, ஆச்சாரமென்று இருந்த நாட்கள் அவை....

பிரிட்ஜ் கிடையாது...எந்தவொரு வசதியுமில்லாமல், இப்படியாகப் பெரிய சம்சாரத்தைச் சமாளித்து, வழிக்குக் கொண்டு வந்து விட்ட அந்த நாளைய அம்மாக்களுக்கு அல்லவா பதமஸ்ரீயும், பதமவிபூஷணும் கொடுத்திருக்கணும்! பானுரவி/13th June 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi