மன்னிப்புஅன்புசொல்லாத சொல்
கதை 16

சொல்லாத சொல்

பூங்காக்களில், நிலையங்களில், சாலையோரங்களில் — பேசுவதற்கு காரணம் தேடும் முதியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏனென்றால், சொல்லப்படாதது அழிக்கும்.

பேச்சு!! பேச்சு!! பூங்காவில், ரயில் நிலையத்தில், சாலை ஓரத்தில், வீட்டுத் திண்ணைகளில் (திண்ணைகள் இப்பொழுது கிடையாது...) கடற்கரையில் என்று எல்லா இடங்களிலும் மனிதர்கள், முக்கியமாக முதியவர்கள் தம்மை மறந்து பேசுவதைக் கவனித்திருக்கிறேன்...பேசிக் கொள்வதற்காகவே, இது போல் இவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்களோ என்று தோன்றும்! ஒவ்வொருவருக்கும் வயது ஏறிக்கொண்டு போகும் போதுதான் பேசும் ஆசையும் அதிகரிக்கிறது என்று எண்ணுகிறேன்.....சில சமயங்களில் தன்னோடு யாருமற்ற சமயங்களில் கூடத் தனக்குத்தானே ரொம்பவும் சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கும் வயதானவர்களைக் காணும் போது, மனதுக்குள் திக்கென்று ஒரு அதிர்வு ஏற்பட்டு கண்ணில் ஈரம் கசிகிறது....

இந்தப் பேச்சின் மீது எதனால் எல்லோருக்கும் இத்தனை பிடிப்பு ஏற்படுகிறது? பேச்சைப் போல் மிகுந்த ருசி உடையது என்று எதுவும் இல்லாமல் போய் விட்டதா, என்ன? சுமாராக ஒரு ஒன்றரை வயதில் பேசத் தொடங்கும் குழந்தை, பேச ஆரம்பிக்கும் போது மழலையாகத் தான் தனது பேச்சை ஆரம்பிக்கிறது....அந்தக் குழந்தைகளின் அர்த்தமற்ற சப்தங்களும், ஒலிகளும் காதில் நமக்குத் தேனாக வந்து பாய்கிறது, இல்லையா? அப்படிப் பேசத் தொடங்கும் குழந்தை நாளாவட்டத்தில் பேச்சில் திறம் மிகுந்து கடகடவென்று மழலையைத் தொலைத்து விட்டு அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பிக்கும்....

வற்றாத ஒரு ஜீவ நதியைப் போல, ஒரு ஆற்றொழுக்குப் போல அந்தப் பேச்சானது வித விதமான பரிமாணங்களில் எங்கேயும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும்....அப்படித் தொடங்கும் பேச்சுதான், ஒருவருடன் ஆன நட்பை, உறவை, காதலை, அன்பை, பகையை, அகந்தையை, கோபத்தை, அறிவை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகப் போய் விடுகிறது! பேச்சில் அதீத ஆர்வமும் பிடிப்பும் அப்படித்தான் ஏற்படுகிறது......இது அனைவருக்குமே உண்டாகும் ஒரு சுவாரஸ்யமான பற்றுதல் தான்....இல்லையா?

ஒன்றரை வயதுக் குழந்தை பேசத் தொடங்குவது எப்படி நியதியோ, அது போல ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அப்படியே பேச்சைக் குறைத்துக் கொள்ளுதலும் கூட ஒரு நியதிதான் என்று ஏதும் வரையறை இருக்கிறதா என்ன? ஆனால் தற்காலத்தில் பெரும்பான்மையான இடங்களில், குடும்பங்களில் நடப்பது என்ன? எழுதப்படாத விதியைப் போலப் பேச்சைக் குறைப்பது நல்லது என்றல்லவா அறிவுறுத்தப் படுகிறது? இது சாத்தியமா?

முதுமை என்பது என்ன? தோற்றம் முதிர்வது மட்டுமல்ல...மனம் முதிர்வதும், வார்த்தைகள் முதிர்வதும், அனுபவம் முதிர்வதும், ஒரு முதுமையில் தெரிய வேண்டும்....பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகிப் போகும் பேச்சும் அப்போது கனிந்து மிகவும் ருசி உடையதாகத் தானே இருக்க வேண்டும்? அப்போது ஏன் பேச்சைக் குறைக்க வேண்டும்? இது ஒரு விடை தெரியாத வினாவாகவே இன்றளவும் இருக்கிறது...

ஆனால் உலக நியதி பல்வேறு காரணங்களைக் காட்டுகிறது....எப்படி ஒரு குழந்தை ஒவ்வொரு சுவையாக ருசிக்கக் கற்றுக் கொள்ளுகிறதோ, அது போல் அந்தக் குழந்தை வளர்ந்து, வாலிபமாகி, முதுமை அடைகையில் ஒவ்வொரு ருசியாக விடுபட வேண்டுமென்று சொல்லுகிறது... நமது அம்மா ஒரு பழமொழி கூறுவார்...."விட்டதடா ஆசை விளாம் பழத்து ஒட்டோடு"...ஆனால் இது அத்தனை எளிதா என்ன? உப்பு, இனிப்பு போன்ற சுவை மிகு பண்டங்களை விடுவதற்கே வயதானவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, ஒன்றரை வயதிலிருந்து ஆரம்பித்த பேச்சை விடுவது என்பது அத்தனை சீக்கிரம் கைவரக் கூடியதா என்ன? கஷ்டம்...கஷ்டம்!

பாஷை என்பது சக மனிதனின் மகத்தான ஒரு கண்டுபிடிப்பு.....தண்ணீருக்கு மூன்று நிலை உண்டு அல்லவா? வாயுவாகவும், உருகிய திரவ நிலையிலும், உறைந்து பனிக்கட்டியாகவும் இருப்பது ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீருக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அது போலவே நாம் பேசும் மொழியும், பேச்சும், வார்த்தையும், மழலையாகத் தொடங்கி, பிரவாகமான உரையாடலாக வளர்ந்து, பின்னே மௌனமாக ஒரு உறைந்த பனி போல ஆகி விடுவது யாராலும் மறுக்க முடியாத உண்மை அல்லவா?

still speaking...

அப்படிச் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை என்று கண்ணதாசன் பாடி விட்டுப் போயிருக்கிறானே!

கானாடுகாத்தானில் இருந்த போது, முச்சந்திகளிலும், வீதிகளிலும், குளக்கரையிலும் அழுக்குத் துணியோடு ஒருவர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருப்பார்...தோற்றம் மெலிந்தார் போலிருந்தாலும், கண்களில் ஏதோ ஒருவித உயிரோட்டமும் ஏமாற்றமும் இருக்கும்...ஏனெனில் அவரது பேச்சில் அவர் உறவுகளிடம் ஏமாந்து போனதும், வாழ்வில் தோற்றுப் போனதும் மட்டுமே பிரதிபலிக்கும்...நன்றாக காசும் பணமுமாக பங்களாவும் வேலையாட்களுமாக வாழ்ந்தவர் தான்....அவரது உறவுகள் அவரை ஏமாற்றி வஞ்சகம் செய்ததில் புத்தி பேதலித்துப் போனது......வீடு போய், குடும்பம் போய், சொந்தம் போய், கௌரவம் போய்....மானம் போய்.....பித்தனாய்ப் பிச்சை எடுத்து வாழ்ந்த அந்த சமயத்தில் அவரை விட்டுப் போகாமல்...அவரது துணையாக இருந்தது அவரது பேச்சுத்தான்! பேச்சு மட்டும்தான்...

கீழே குனிந்து கொண்டு, விரல்களை மடக்கிக் கொண்டு, யாருக்கும் புரியாத வகையில் அவரது தொடர்ச்சியான பேச்சு இருக்கும்! இன்னமும் மனதைப் பிசைகின்ற நினைவு இது....கிறுக்குச் சுந்தரம் செட்டியார் என்பார்கள்....அதே போல் லாவாண்டைத் திடலில் படுத்துறங்கி எல்லோரிடமும் உணவு வாங்கிச் சாப்பிட்ட காபூலிச்சியின் பேச்சும் மிகவும் விநோதமாக இருக்கும்...எதுவும் புரியாது...ஆனாலும் அவளுக்குப் பசி என்று நம் அம்மாவுக்குப் புரிந்து உடனே சாதம் போடுவார்..அது சரி....பசிக்கிறது என்று சொல்ல ஒரு பாஷை தேவையா என்ன?

எனது இரண்டு தோழியர்களைப் பற்றிய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது சரியாக இருக்கும்...

silence under stone

என்னிடம் அதீதமான அன்பு கொண்டவர் அந்தச் சிநேகிதி....அந்த அன்பின் காரணமாக அவர் எனக்குத் தந்திருக்கும் அன்பளிப்புகள் நிஜமாலுமே ஏராளம்....ஏராளம்! ..தங்கம், வெள்ளி, பட்டுப் புடைவைகள்,....என்று மட்டுமல்ல, நான் அவர் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அப்படி ஒரு வரவேற்பு கொடுத்து, உபசரித்து என்னைத் திக்கு முக்காட வைப்பார்......மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர், அவரது கணவர் தங்கக் கம்பி....கோபம் கொண்ட மனிதர்களைக் கண்டதாலோ என்னவோ, அவர் எதற்கும் கோபப் படுவதே இல்லை.....மிக அருமையான மனிதர்...எனக்கு ஒரு சகோதரனைப் போல...

நான் கதைகள், கவிதைகள் எழுதுவது தெரிந்ததும், எனது தோழி கூட என்னிடம் பகிராத சங்கதியை அவரது சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்டு, என்னை அது பற்றி ஒரு கதை எழுதும்படி கேட்டுக் கொண்டார்.

....அவர்களது தந்தையார் மிகவும் கண்டிப்பானவர். என் தோழிக்கு அவரது அம்மா வழி ஒன்றுவிட்ட மாமன் மகனைப் பிடித்திருந்தது...அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பித் தனது விருப்பத்தைக் கூறிய போது அவரது தந்தை மறுக்க, தாயார் முன்னின்று திருமணத்தை நிகழ்த்தி விட்டார். அன்போடும் ஆசையோடும் நடக்க வேண்டிய திருமணம், வெறுப்போடும் குமுறலோடும் ஒருமாதிரி நடந்தது...நாளடைவில் என் சிநேகிதியின் அப்பா, (தன் மனைவியுடன்) பேசுவதைக் குறைத்துக் கொண்டார்...யாராலும் அவரைச் சமாதானப் படுத்த முடியவில்லை...

இதற்கு அடுத்த படியாக அவர்களின் ஒரே பையனும் (எனது தோழியின் சகோதரன்) வேற்றினப் பெண்ணைச் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்ட போது அவரது கோபம் தலைக்கேறித் தனது மனைவியுடன் சுத்தமாகப் பேசுவதையே நிறுத்தி விட்டார்......அனைத்திற்கும் தனது மனைவியைக் குற்றம் சுமத்தி வெறுப்பை உமிழ்ந்தார்...குடும்ப கௌரவம் போய் விட்டதாகக் கொந்தளித்தார்...தனது மனைவியைப் பலிகடாவாக ஆக்கினார்! விளைவு, குடும்பத்தின் சூழல், புயலுக்குப் பின் அமைதியாகிப் போனது...

பாவம்..மேற்படி நிகழ்வுகளுக்கு, அவரது மனைவி எப்படி காரணமாக அல்லது பொறுப்பாக முடியும்? பேசாமல் தவிர்க்கும் படியாக, அப்படி அவர் செய்த தப்பு தான் என்ன? நாளடைவில் அந்த அம்மா தனக்கு வந்த புற்று நோயைக் கூடச் சொல்லாமல், தவித்துப் போய் ஒரு நாள் திடும்மென்று ஆதரவின்றி, யாருடைய கவனிப்பும் இல்லாமல் இறந்த போது, ஸ்தம்பித்துப் போனதாம் குடும்பம்! கோபக்காரரான இந்த மனிதர் அடித்துக் கொண்டு அப்படி அழுது புலம்பினாராம்...... .மன உளைச்சலுக்கு ஆளான மனைவி போன பிறகு, தினமும் மனைவியின் அருமையையும் பெருமையையும் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பாராம்.

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்! அவரது இறுதி நாட்களில் எனது தோழியே அவரைத் தங்களோடு வைத்துக் கொண்டு கடைசி காலம் வரை பார்த்துக் கொண்டு இருந்திருக்கார். ஆனாலும் ஒரு விதக் குற்ற உணர்ச்சியுடனேயே இருந்தாராம் அவர்.... மேற்படி நிகழ்ச்சியை எனது சிநேகிதியின் சகோதரர் கூறிய போது அனைவரின் கண்களிலும் நீர் பூத்திருந்தது.....கோபத்தைப் போல ஒரு உயிர்கொல்லி பாஷாணம் எதுவும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது...... அந்தத் தோழி என்னிடம் இந்தத் துயர சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளாத படியால், தோழியின் பெரிய சகோதரியிடம், நான் சற்று ஆதரவாகப் பேசினேன்.... அவர்களது அந்தரங்கம் புனிதமானது என்பதால் அதைக் கதையாக எழுதுவது சரியாகாது என்பதைத் தெளிவு படுத்தினேன். ஆனாலும் அந்த முகம் தெரியாத அவர்களின் தாயாரை எண்ணி உண்மையிலேயே மனம் கசிந்தேன்......

அடுத்த தோழியும் என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தத் தோழியும் மிகவும் பரோபகாரி...குழந்தைகளின் பிறந்த தேதி எனக்குக் கூட மறந்து போகும்..ஆனால் தவறாமல் வாழ்த்துச் சொல்லிப் பழைய நாட்களை நினைவு கூர்வார். மிகவும் அன்பானவர்...இங்கிதமானவர்!

நல்ல சிவந்த நிறமும் களையும் கொண்டவர். ஆனால் இவரது வீட்டார் அத்தனை பண அந்தஸ்து உடையவர்கள் இல்லை என்று சொல்லி அவரது மாமியார் இவரை மணக்க வேண்டாமென்று தனது பிள்ளையிடம் சொல்லியும் அந்தப் பிள்ளை கேட்கவில்லை...எனது சினேகிதியை மணப்பதில் அந்தப் பிள்ளை அத்தனை ஆர்வமாக இருந்திருக்கிறார். அதனால், நாளடைவில் நிறைய நகை போடலை...நன்றாகச் சீர் செய்யலை என்று சொல்லி எனது சினேகிதியின் மாமியார் ரொம்பவே ஜாடையும் மாடையுமாகப் பேசுவாராம்...சுத்தமாக எனது சினேகிதியிடம் பேசுவதே இல்லையாம்! வார்த்தைகளுக்குக் கூட வலி ஏற்படும் வகையில் தான் அவரது பேச்சு இருக்குமாம்.....வள்ளுவன் கூட நாவினால் சுட்ட வடு என்று தானே சொல்கிறான்?

ஆனால் நாட்கள் எப்போதும் ஒரே மாதிரிப் போவதில்லை....வயதும் மூப்பும் கூடும்போது, மனிதர்களின் தயவும் ஆதரவும் ஒருவருக்கு ஒரு காலத்தில் தேவைப்படுகிறதே! எனது சினேகிதி, தனது மாமியாரின் அத்தனை உடல் நல கவனிப்பையும் சிரமேற்கொண்டு நல்லபடியாக அவரைக் காப்பாற்றி வந்தார்......எந்தவொரு முகச் சலிப்பும் இல்லை...காம்ப்பும் இல்லை. கடமை என்று செய்து வந்திருக்கிறார்.

ஒரு நாள் அந்த அம்மாள், தனது நகைகளை எல்லாம் எடுத்து...."நான் உன்னைத் தப்பாக நடத்தி இருக்கிறேன்...சரியாகப் பேசியது கூட இல்லை. ஆனால் நீ என்னை அருமையாகக் கவனித்துக் கொள்ளுகிறாய். இனி எனக்கு நகை எதுவும் தேவை இல்லை...இவை எல்லாம் உனக்குத் தான்...உனக்குப் பிறகு உனது பெண்ணுக்கு என்று இந்தப் பரம்பரை நகைகளைப் போட்டு விடு" என்று சொல்லித் தந்திருக்கார்.

......

எனது தோழி..."எனது கடமையைச் செய்தேன். நகைகள் தேவை இல்லை..." என்று சொல்ல அந்த அம்மாள் அழுது கொண்டே வாங்கிக்கணும் என்று கட்டாயப் படுத்தி இருக்கிறார். இரக்க சுபாவமும், மனிதாபிமானமும் கொண்ட எனது சினேகிதி அந்த நகைகளை வாங்கிக் கொண்டு, ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாகக் கட்டி சுவாமி அலமாரியில் வைத்து விட்டு...."இந்த நகையை அப்படியே திருப்பதி உண்டியலில் போட்டு விடுவேன்...உங்களுக்குப் புண்ணியம் சேரட்டும்" என்று கூறி விட்டாளாம்.

நான் இந்தச் சிநேகிதியின் வீட்டுக்குப் பல வருஷ இடைவெளிக்குப் பிறகு சென்றிருந்த போது இதைக் கூறினார். நான் மனிதர்களில் இத்தனை நிறங்களா என்று வியந்து போயிருந்தேன்..... மேற்சொன்ன இரண்டு விஷயங்களுமே பேச்சை முன்னிறுத்தி நடந்தவை தான்...அற்ப சமாச்சாரங்களுக்காக உணர்வையும், நெகிழ்வையும், அன்பையும் காட்டக் கூடிய பேச்சை ஒருவர் நிறுத்தி விட்டால், அதனால் எந்த அளவுக்கு அவர்களது வாழ்வு அர்த்தமற்றதாகிப் போய் விடுகிறது? அதை அவர்கள் ஒரு நாள் உணரும் போது காலம் கடந்து போய் விடுகிறது, இல்லையா?

சற்றே

மனைவி அகலிகை கூறும் தன்னிலை விளக்கத்தைக் கேட்கும் முன்பே அவளைக் கல்லாகும்படி அவசர அவசரமாகச் சாபம் கொடுத்த கௌதமரும் கூட இந்தக் கோபத்துக்கு ஆளானவர் தானே? தனது பிள்ளை பரசுராமனிடமே ஒரு கோடரியைக் கொடுத்துத் தனது மனைவி ரேணுகாவின் தலையைக் கொய்த ஜமதக்கினி முனிவரும் கூட இந்த வகை தானே? இப்படி நமது புராணங்களில் கூடக் கோபத்தின் நிலைப்பாடும், அதன் விளைவுகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதே...

முற்றத்தில் அமர்ந்து கொண்டு நமது அப்பா சொன்ன திருநீல கண்ட நாயனார் கதையும் கூடக் கிட்டத்தட்ட அப்படித்தான். மழைக்காக ஒரு கணிகையின் வீட்டு வாசலில் ஒதுங்கியதை அறிந்து கொண்டு அவரின் மனைவி தனது கணவர் வேசியின் வீட்டுக்குப் போய் விட்டாரே என்று ரொம்பவே மனம் வெதும்பிப் பேசுவதை நிறுத்தி விடுவதாகவும், கடைசியில் சிவபெருமானருளால் அவர்கள் குளத்தில் மூழ்கி எழும்போது மனமொத்த தம்பதிகளாகி வருவார்கள் என்றும் அந்தப் புராணம் இருக்கும்...

இன்னொரு விஷயமும் கூட இப்போ நினைவுக்கு வருகிறது... மகா பாரதத்தில் விதுரன் மிகவும் வயதாகிப் போய் துறவறம் மேற்கொள்ளுகிறான். பேச்சைத் துறந்து மலையடி வாரத்தில் மௌனியாகத் திரிகிறான். தன்னையும் அறியாமல் நாவு அசைந்து, பேச்சு வந்துவிடக்கூடும் என்று எண்ணி, நாவிற்கு அடியில் கூழாங் கற்களை அடக்கிக் கொண்டு இருந்தானாம்....

அச்சம் தவிர்க!Let go of fear!

வாழ்நாள் முழுவதும் அரச குடும்பத்துக்காக ஆயிரம் யோசனைகள் சொன்ன விதுரனின் நாக்கு பேச்சின்றி இந்தக் கூழாங்கற்களால் அடங்கி விடுகிறது....பேச்சு என்பது ஒருவரின் வாழ்வில் எத்தனை முக்கியமானது என்பதற்கு இதுவே உதாரணம்....

ஆனால் பிறந்தது முதல், தேசத்துக்காகப் பாடுபட்டு நித்திய பிரம்மச்சாரியாக மௌனமாகத் தனிமையில் வாழ்ந்த பீஷ்மரோ, யுத்தத்தில் காயம்பட்டு அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போதும், எதையெதையோ நினைத்துப் பேசிக் கொண்டே இருக்கிறாராம்! அந்தப் பேச்சு தொடர்ச்சியாகவே இருக்கிறதாம்....கண்கள் எங்கோ வெறித்தபடி அவர் கிடந்தாலும், பேச்சில் எந்தப் பிறழ்ச்சியுமில்லை....

தன்னைச் சந்திக்க வந்த கிருஷ்ணன், கர்ணன், யுதிஷ்டிரன் என்று அனைவரின் கேள்விகளுக்கும் வாய் மூடாது பதில் சொல்லிக் கொண்டே இருந்தாராம்....இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? தனது வாழ்நாளின் கடைப் பகுதியில், அந்திமம் நெருங்கும்போது, பீஷமரே கூடப் பேச்சைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளுகிறார் என்பதுதான் தொக்கி நிற்கும் வினாவிற்கான பதிலாகச் சுட்டெரிக்கும் உண்மையாகத் தெரிகிறது!

ராமாயணமும் மகாபாரதமும் மற்றைய புராணங்களும் சுவாரஸ்யமான பெரும் கதைத் திரட்டுக்கள் மட்டுமல்ல...ஆழ்ந்து படித்தால், அவற்றின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நமது புரியாத புதிர்களுக்கு விளக்கம் தருவதாகத் தான் எனக்குப் படுகிறது! உங்களுக்கு?...... அன்புடன் பானுரவி/26TH AUG 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi