கோலிகள், பாண்டி, கண்ணாமூச்சி, பாட்டு நினைவு விளையாட்டு. முழுத் தெருவும் எங்களுக்கு ஒரு வரவேற்பறை.
வீதியில் நம்மாத்து வாசல் பெரியதாக இருக்கும். தினந்தோறும் அந்தத் தெருவில் இருந்த அத்தனை சிறுவர், சிறுமியரும் அங்குதான் விளையாடுவோம். கோலி, கிட்டுப்புள், கபடி, நொண்டி, கண்ணாமூச்சி, இப்படிப் பலவிதமான விளையாட்டுக்கள். குளம் கரை என்றொரு விளையாட்டு. அப்புறம், ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது..ரெண்டு குடம்..மூணு குடம் என்று விளையாடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடிக் கொண்டே போகும் மற்றொரு விளையாட்டு. எல்லோரும் வரிசையாகக் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு அட்டலங்கா பொட்டலங்கா, அடுப்பெரிச்ச மாதுளங்கா, உறியிலே பருப்புத் துவையல் வச்சிருந்தேன், எந்தப் பூனை தின்னுது? இந்தப் பூனை..... என்று ஒருத்தரைப் பிடித்துத் தள்ளுவது ஒரு விளையாட்டு. எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு, "சங்கிலி புங்கிலி கதவைத் திற! நான் மாட்டேன் வேங்கைப்புலி....ஆட்டுக்குட்டியைக் கண்டீங்களா? கண்டோம்! எங்க? வீட்டுக்குள்ள...வரலாமா? வரக்கூடாது" இப்படிச் சொல்லிக்கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஒன்று இருக்கும். பாண்டி விளையாட்டு...இச்சா, இனியா, காயா, பழமா, ரைட்டா? என்று கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடுவது. எல்லாமே சுவாரஸ்யமானவை...
அந்த வீதியே அப்படிக் கலகலப்பாக இருக்கும். நாங்கள் விளையாடுவதற்குத் தோதாக வாசல் இருந்தது மட்டுமல்ல...மற்றைய வீட்டுப் பெண்டிருக்கும் அந்த இளமாலைப் பொழுது இளைப்பாறிக் கொள்ளும் வகையில் இருக்கும். அவரவர்கள் அன்றைய வீட்டில் சமைத்த பண்டங்களைப் பற்றியும், மற்றைய நாட்டு நடப்புக்களையும், நம்மாத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். பூக்காரி வந்து போவதும், குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பஞ்சு மிட்டாய் விற்பவர்களும், புழுதி வாரிக்கொண்டு அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் செல்லும் அண்ணாமலைப் பாலிடெக்னிக் இளவட்டங்களும், பெருமாள் ஐயா கடைக்கு வந்து போகும் ஜனங்களுமாக அந்த அரு.வீதி களை கட்டிக் கொண்டிருக்கும்.
செவ்வாய் வெள்ளி மட்டும் கரெக்டாக ஆத்துக்குள்ள இருக்கணும். சுவாமி விளக்கேற்றி அம்மா, அக்காக்கள் சொல்லும் ஸ்லோகங்களை நாமும் சேர்ந்து கொண்டு சொல்லணும். விளக்கு ஸ்லோகம், அயிகிரிநந்தினி, கனகதாரா, அன்னபூர்ணாஷ்டகம் என்று அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும். அப்படிக் கற்றுக் கொண்டவை இன்னமும் அப்படியே மனசோடு ஒட்டிக்கொண்டு அந்த வரிசைப்படியே போய்க்கொண்டிருக்கு....அது தவிர தேவாரம், திருப்புகழ், அப்பா பாட்டு என்று சகலமும் நடந்து கொண்டிருக்கும்.
நானும் ராஜாவும் ரொம்பவே கிரியேட்டிவ். எங்களுக்குள்ளேயே சில விளையாட்டுக்கள். அப்போது விவித்பாரதி பிரபலமாக இருந்த சமயம். பக்கத்து வீட்டுத் தெலுங்கு மாமி வீட்டில் ரேடியோவிலிருந்து ஒலிபரப்பாகும் அத்தனை இசை நிகழ்ச்சியும் எங்களுக்கு அத்துபடி, இலங்கை வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுக்களும், அதை விட அந்தப் பாட்டை விரும்பிக் கேட்ட நேயர்களின் ஊரும் எங்களுக்கு விசித்திரமாக இருக்கும். (மட்டக்களப்பு, கைமுனை, நெகம்போ, காடுவெள்ள, கொட்டடவா, அட்டங்களை..இந்த மாதிரியான பெயர்கள் சிரிப்பை வரவழைக்கும்).
"இருமலா, கரகரப்பா? தொண்டைக்கு என்ன? கொண்டு வா விக்ஸ்! கேட்பவரெல்லாம் போட்டுப் பாருங்க லாலா மசாலா...லாலா மசாலா ஹார்லிக்ஸ் அதிக சக்தியளிக்குது. ஹார்லிக்ஸ் அதிக சக்தியளிக்குது..ஹார்லிக்ஸ் அதிக சக்தியளிக்குது...ஹார்லிக்ஸ்! பெரியவர் சிறியவர் அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு! அன்றும் இன்றும் என்றும் விரும்பிடும் நிஜாம் பாக்கு...நிஜாம் பாக்கு... ஜி ஒ எல் டி கோல்ட்ஸ்பாட், காளையர்கள் விரும்புவது கோல்ட்ஸ்பாட்கோல்ட்ஸ்பாட், கன்னியர்கள் விரும்புவதும் கோல்ட்ஸ்பாட்கோல்ட்ஸ்பாட்....மீண்டும் மீண்டும் அருந்தத் தூண்டும் சுவை மிகுந்த இனிய பானம் கோல்ட்ஸ்பாட்..... டினோபால் டினோபால் டினோபால்...நீங்கள் என்றும் வீட்டில் வைப்பீர் டினோபால்..
கோ-ஆப்டக்ஸ் துணி இருக்கு...நல்லநல்ல வகையிருக்கு...தரமான நிறமிருக்கு! நாட்பட உழைக்கும் திறமிருக்கு...கோ-ஆப்டெக்ஸ்!.... வான வில்லின் வண்ணஜாலம்! ஆனந்தா கார்ப்பரேஷன்....வண்ணமயில் தோகை ஆடும்...ஆனந்தா கார்ப்பரேஷன்.... லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம் வஜ்ரதந்தி வஜ்ரதந்தி வஜ்ரதந்தி....வஜ்ஜிரம் போல் பல்லுக்குறுதி வஜ்ரதந்தி மகேந்திரா மகேந்திரா மகேந்திரா....காடுமேடு ஏறிவரும் மகேந்திரா கல்லுப்பாதை கடந்துவரும் மகேந்திரா...நீண்ட தூரம் ஏற்றிச் செல்லும் மகேந்திரா (டிராக்டர் மற்றும் வாகன விளம்பரம்)
......இன்னும் பல விதமான விளம்பரப் பாடல்களை வைத்து நானும் ராஜாவும் விளையாடுவோம். அதிலும் இருவரும் எதிரும் புதிருமாக நடந்து கொண்டு "ஒரு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு" என்று எதையோ வசனம் பேசி ஒருவிதமாகக் கலாட்டா பண்ணிக் கொண்டிருப்போம். எங்களை ஒருவித கதாபாத்திரமாக சிருஷ்டித்துக் கொண்டு...வசனம் பேசி....படு தமாஷ்!
இடையில் பரமபதம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், தாயம்....இதெல்லாம் வேறு வீட்டுக்குள், முற்றத்திலோ அல்லது கட்டு என்னும் பகுதியிலோ நடந்து கொண்டிருக்கும். தாயத்தில் விளையாடும் போது, தோற்று விட்டால் ரமணிக்கு மஹா கோபம் வந்துவிடும். அந்த தாயக் கிளிஞ்சல்களை அல்லது சோழியை....எடுத்துக் குழவிக் கல்லால் தூள் செய்துவிட்டுத் தாயம் விளையாட முடியாமல் செய்து விடுவான். அதே போல் பரமபத விளையாட்டிலும் அவனைக் கட் பண்ணிட்டால், தாங்க முடியாது...
அதே போல் கேரம்போர்ட்....கிருஷ்ணன் ராஜாவுக்கு வாங்கிக் கொடுத்த செஸ் விளையாட்டு, சீட்டு விளையாட்டு, டிரேட் விளையாட்டு,... இம்மாதிரி விளையாட்டெல்லாம் அநேகமாக வெள்ளையன், கண்ணனோடு சிகப்பி ஆச்சி வீட்டில் நடக்கும். பொட்டுக்கடலையும் நல்ல பாகுக் கருப்பட்டியும் வெள்ளையன் கொண்டு வருவான்...அந்தக் கருப்பட்டி தான் எப்படி இருக்கும்! இடுக்கில் நம்மாத்திலிருந்து கொண்டு போன நொறுக்குத் தீனி வேறு இருக்கும். அம்மா ரெண்டு அதட்டுப் போட்டு இழுத்துண்டு வருவார்...மனசே இல்லாமல் அம்மாவைப் பின் தொடர்ந்து போனாலும், சாப்பிட்ட உடனே வந்து திரும்பவும் தொடருவோம்...
இப்படியாக.... வீட்டில் இனிய பாட்டின் முழக்கம்! இப்புறம் சுலோகம்! அப்புறம் கீதம்! எதிரே கோவிலில் மேளத்துச் சப்தம்! வீதியெங்கும் திருவிழாக் கோலம்! பாடகர் பண்டிதர் நாவலர் பாவலர்....பாகவதர்கள் பஜனைப் பாடல்கள்! மல்கிய சூழலில் மகிழ்ச்சியாய் வளர்ந்தோம்! கேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றோம்! கலைகள் பலவும் கைவரப் பெற்றோம்!!! அன்புடன் பானுரவி/15th July 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi