தபால்
கதை 4

கடிதங்கள்

தபால்காரரின் சைக்கிள் மணி கேட்கும் நாட்களில், வீட்டில் உள்ள ஒவ்வொரு முகமும் மலர்ந்துவிடும்.

கடிதங்கள் அலாதியானவை. தபால்காரரின் கிணுங் என்ற மணியோசைக்காகக் காத்துக் கிடந்த நாட்களை எப்படி மறக்க முடியும்? வாசலில் கிணுங் கிணுங் என்ற சைக்கிள் சத்தம் கேட்டாலே அது தபால்காரரின் வரவைச் சொல்லிவிடும். வீட்டில் இருந்த அத்தனை முகங்களிலும் பூப்பூக்கும்...

அடுக்களையிலிருந்து அம்மா வருவதற்குள், அந்தத் தபால்காரர் பக்கத்து வீட்டுக்குப் போயிருப்பார். போட்டி போட்டுக்கொண்டு அவரிடமிருந்து வந்த கடிதங்களை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுப்போம். யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கு என்பதைத் தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வம் இருக்கும்...அம்மா முதலில் தனக்குள் படித்துவிட்டு, இன்னாரிடமிருந்து என்று விஷயத்தைக் கூறுவார். கடிதங்கள் என்றுமே ஒரு படி மேல்...அம்மா படித்துச் சொல்லும்போதே, அக்கடிதம் எழுதியவர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடும்.

வந்த கடிதங்கள் அனைத்திலும் Received on/ Replied on என்று அப்பா சிகப்பு இங்கில் எழுதி ஒரு கம்பியில் குத்தி சுவற்றில் மாட்டி வைத்து விடுவார். அநேகமாகப் பிரான்மலைச் சித்தி, கரூர் சித்தப்பா, விஜயாக்கா, போன்றவர்களிடமிருந்து கடிதம் வரும். அப்பா மதுரைக்குப் போனபிறகு, பத்து நாட்களுக்கு ஒரு முறையாகக் கடிதம் வரும், அடித்தல் திருத்தல் இல்லாமல் கோர்வையாக இருக்கும். விஜயாக்காவின் கடிதம் அத்தனை அழகாக இருக்கும். புதுவயல் பள்ளிக்கு மாற்றலாகிப் போனதிலிருந்து சுகுணாக்காவின் கடிதம் முத்துமுத்தாக வரும், சுரேஷ் பிறந்திருந்த சமயம், விஜயாக்கா வேலைக்குப் போகும்படி இருந்ததால், சாவித்திரிக்கா திருச்சிக்குப் போகும்படி ஆயிற்று.

POSTதபால்POST BOX

அப்போது சாவித்திரிக்காவின் கடிதம் சிறுசிறு கடுகு பொரிந்தது போல், வீட்டு நடப்புக்களைத் தெரிவித்தும், வருங்கால திட்டங்களைப் பற்றியும் தெரிவிக்கும். கடிதங்கள் தவிர, மஞ்சளும் ரோஜா வண்ணமும் கலந்த திருமணப் பத்திரிகைகள், சீமந்தக் கார்டுகள், யாரும் குடும்பத்து உறவுகள் தவறி விட்டால் வரும் கரிக்கடுதாசிகள் என்று வரும் கடிதங்கள் உண்டு.

இவை தவிர, எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சிலிருந்து ரிநூவல் சம்பந்தமாக, அல்லது பழுப்பு நிறத்தில் அரசாங்கத் தகவல்கள் என்று வரும். சில சமயம் டெலிகிராம் வந்து விடும். அப்போது எல்லோருக்கும் பயத்தில் கிலி பிடித்துக்கொள்ளும். அப்பா/அம்மாவுக்கு, அன்பான சகோதரிக்கு/சகோதரனுக்கு, பிரியமான தோழிக்கு என்று முதல் வரியில் அன்பைச் சுமந்து இனிய தமிழில் இதயங்களை ஈர்த்த கடிதங்கள் எல்லாம் இப்போது நினைவுகளில் மட்டுமே நிழலாடிக் கொண்டிருக்கின்றன. மனதின் எண்ணங்களை வெளிப்படுத்தும் அற்புத வார்த்தைகள் எல்லாம் சின்னச்சின்னக் குறியீடுகளாகக் குவிந்து கிடக்கின்றன.

பண்டிகை சமயங்களில், பொங்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வார்த்து வண்ணஜாலம் தீட்டிய வாழ்த்து அட்டைகள் கூட இப்போது காணக் கிடைப்பதில்லை!!

எனது பள்ளித் தோழி விசாலாட்சி எழுதிய கடிதம் இன்னமும் நினைவில் இருக்கு. "அரபிக் கடலைப் போன்ற அன்பும், பசிபிக் கடலைப் போன்ற பண்பும், இந்துமஹாசமுத்திரத்தைப் போன்ற இனிமையும் கொண்ட பானுவுக்கு" என்று அந்தக் கடிதம் தொடங்கியதைப் படித்து வீட்டில் உள்ள அனைவரும் முற்றத்தில் உரக்கச் சிரித்தது நினைவில் நிழலாடுகிறது.

ReceivedReceivedReceivedReceivedReceivedReceived

உறவினர்களுக்கு பதில் எழுதி, (அநேகமாக இந்தக் கடுதாசி எழுதும் வேலை சாவிதிரிக்காவைச் சேர்ந்தது) போஸ்டாபீஸ் போய் ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணும் வேலையை எனக்குத் தருவார்கள். சிதம்பர விநாயகர் கோவிலுக்கு அருகே, ராஜா வீட்டு அரண்மனைப்பக்கம் அந்தச் சின்ன போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது...அந்தச் சிகப்பு வண்ணத் தபால் பெட்டிக்கு வாய் இருந்தால் கடிதங்களைப் பற்றிய ஆயிரம் கதை சொல்லும்! (இப்பவும் அந்தத் தபால் ஆபீஸைப் போய்ப் பார்த்து வந்தேன்...மறக்காமல் அந்த ஜன்னலையும்!)

அப்புறம் திருச்சியில் அக்காவின் 8B Laala Store/Trichy 620002 என்பதே நமக்கு முகவரியாகப் போயிற்று....எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிலிருந்து ரின்யூவல் செய்யும்படியும், சில அரசாங்க தற்காலிக வேலை உத்தரவும் வரும்...அக்காவோ, அத்திம்பேரோ அதைக் கொண்டுவந்து தருவார்கள்.

அதன் பின்னர், குவைத்தில் இந்த லெட்டர் சமாச்சாரம் அத்தனை லேசாக இல்லை...அனுப்பும் கடிதங்கள் படு தாமதமாக வரும்...சிலது வராது..

உமா,ராஜா அனுப்பும் திருமணநாள் வாழ்த்து அட்டை ஒவ்வொரு வருடமும் குவைத்திலிருந்து தொடங்கிச் சிங்கப்பூர் வரை தொடர்ந்தாற்போல் வருவதுண்டு...ரமணி ஹரித்வாரிலிருந்து அனுப்பிய பொங்கல்/தீபாவளி வாழ்த்துக்களும், கடிதங்களும் இன்றும் உள்ளன. அப்பாவின் அன்பானகடிதங்கள், சாவிக்கா, விஜயாக்கா, சுகுணாக்கா, மற்றும் இந்திராணியின் கடிதங்கள் இன்னமும் என்னிடம் உள்ளன. வாழ்வின் உன்னதமான தருணங்களை, எழுத்தாக்கி நம்மை உறவோடு ஐக்கியப்படுத்திய வகையில் இந்தக் கடிதங்கள் பெரும்பங்காற்றி உள்ளன...

கடிதங்களைச் சுமந்து வரும் கவரில் இருக்கும் ஸ்டாம்புகளைச் சேகரிக்கும் பழக்கம் கூடச் சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது...ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் ஸ்டாம்புகளை ஒட்டி அதற்கு நான் மார்க் வாங்கியிருக்கிறேன். நாளாவட்டத்தில், நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்த நாட்களில் விஸ்வநாதன் என்ற ஒரு பையன் அவ்வப்போது வெளியாகும் புது ஸ்டாம்புகளைக் கொண்டு வந்து தருவான். அத்தனை அழகாகச் சேர்த்த ஆல்பத்தை நன்றியுடன் அவனுக்கே திருப்பிக் கொடுத்தது நினைவில் இருக்கு...

அநேகமாக நான் பிள்ளையார் சேகரிக்கும் பழக்கத்துக்கு இந்த ஸ்டாம்ப் கலெக்ஷன் கூடக் காரணமாக இருக்கும்! சிங்கப்பூரில் மாலா ஸ்வென்டனர் என்ற சினேகிதி எழுதிய கடிதம் அத்தனை கவித்துவமாக இருந்தது...

கொஞ்ச நாட்களுக்கு முன், நம் அம்மா எழுதிய கடிதத்தை ராஜா அனுப்பியபோது, அம்மாவையே நேரில் பார்த்தது போல் உணர்ச்சிப் பெருக்கில் நான் சற்று நேரம் உறைந்து போனது நிஜம்! அது கடிதமாகத் தெரியவில்லை....ஒரு உன்னதமான தாயாரின் பொறுப்பையும், கவலையையும், அன்பையும், வெளிச்சம் போட்டுக் காட்டிய சரித்திரமாகத்தான் தெரிந்தது. பாவம் சரியான கண்ணாடி கூட இல்லாமல் எழுதுவதாக அம்மா எழுதியது நெஞ்சில் ரணமாக இன்னமும் வலிக்கிறது....

தபால்

இப்போது ஈமெயில் வந்து விட்டது...ஆனாலும் எத்தனை பேர் விஸ்தாரமாக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளுகிறோம்? காலம் மாறி விட்டது தான்...கடிதம் எழுதிய அன்றைய நாட்களிலிருந்து நாம் எல்லோருடனும் கொண்டிருந்த தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் முன்னேறியிருக்கும் இந்த நாட்களில் அதிகமாயிருக்கிறதா.... நிச்சயம் இல்லை என்பதை வருத்தத்துடன் தான் சொல்ல வேண்டி இருக்கிறது.... பானுரவி/17th May 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi