கதை 2

பூக்கள்

மணமும், வண்ணமும், அழகும் — பூக்கள் இயற்கையின் அற்புதப் பரிசு.

வாசனையும் வண்ணமும் வனப்பும் கொண்ட பூக்கள் இயற்கை நமக்கு அளித்த கொடை என்பேன். பிறப்பு, திருமணம், திருவிழா, பூஜைகள், என்று நம்மோடு எப்போதும் கூடவே வருவது இந்தப் பூக்கள்.

காலையில் எழுந்தவுடன் நாங்கள் செய்யும் முதல் வேலை பூப்பறிக்கப் போவதுதான். அப்பா வேலை பார்த்துவந்த ராஜாவீட்டு தோட்டத்துக்கு நானும், ரமணி, ராஜாவும் போவோம். ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் கூடை நிறையப் பூக்களோடு வருவோம், அந்த விடியற்காலை வேளை சற்றே இருட்டைப் பூசிக்கொண்டு படு நிசப்தமாக இருக்கும். முக்கால்வாசி வீடுகளில் வாசலில் சாணம் தெளிக்கும் சப்தமும், வரட்டுவரட்டுனு பெருக்கும் சப்தமும் தினப்படி சுப்ரபாதமாகக் கேட்கும்.

அரளி, செம்பருத்தி, முக்கியமாக நாகலிங்கப்பூ...பெரிய பெரிய ட்ரோபால் சைசில், விழுதுகளில் பழுப்பு நிறத்தில் காய்த்துக் கிடக்கும் பூதாகாரமான மரங்களில் இந்த நாகலிங்கப்பூக்கள் குலுங்கிக் கொண்டிருக்கும். ஒரு குட்டி லிங்கத்துக்குக் குடை பிடித்துக் கொண்டு ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷன் இருப்பது போல் அமைப்பு...பொன்வண்ணமும், அரக்குமாக அதைச்சுற்றி ஐந்து இதழ்கள். மனோரஞ்சிதப்பூக்களின் வாசனை மயக்கத்தைத் தரும், பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். அம்மா சொல்லி அனுப்புவாள்...'பாம்பு இருக்கும். ஜாக்கிரதை' என்று, ஒருநாளும் அந்த மாதிரி ஐந்துவுக்குப் பயந்து பூப்பறிக்காமல் இருந்ததில்லை. பவழமல்லி கொட்டிக்கிடக்கும்.

இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. ராஜா வீட்டுத் தோட்டத்தில் வெள்ளைராசிக் கொய்யா மரம் இருக்கும். சின்ன சைஸ்தான். ஆனால் அத்தனை இனிப்பாக இருக்கும். மரத்தில் ஏறி ரமணி பறித்துவிடுவான்.

டிசம்பர் மாதமென்றால் டிசம்பர்ப் பூக்கள். ஏகத்துக்கு வயலட், ரோஸ் வண்ணத்தில். நாரை வைத்துக் கொண்டு முற்றத்துத் திண்ணையில் அமர்ந்து கொண்டு தொடுப்பார்கள். கெட்டியாகத் தொடுத்த பூக்கள் அத்தனை அழகாக இருக்கும்.

விஜயாக்காவுக்கு நீண்ட சாட்டையான பின்னல், சுகுணாக்காவுக்கு மீடியம், சாவித்ரிக்காவுக்குச் சுருட்டையாக அரை முதுகு வரை. பேபிக்கு சுமாரான நீளம். அடர்த்தியாக இருந்தது இந்திராணிக்கும், எனக்கும்தான். தினமும் இரட்டைப் பின்னல்தான். தலைநிறையப் பூதான்!

பெரியநாயகியின் ஸ்ரீசக்கரம் கொண்ட சுவாமி அலமாரியைத் தவிரச் சுவற்றில் பெரிய சைஸ் பார்வதிபரமேச்வரர், ராமர் பட்டாபிஷேகம், யசோதாகிருஷ்ணர் (கண்ணாடியில் வரையப்பட்டது), ஐயப்பன், நடராஜர், புவனேஸ்வரி, கோமதியம்மன், மேனகா/விஸ்வாமித்ரர் படங்கள் இருக்கும். தத்தாத்ரேயர் படமும் அதில் குளவி கூடு கட்டியதும் இருக்கும். அம்மா துணி/ஜிகினா வைத்துப் புடவை கட்டிய லட்சுமி படமும் இருந்தது. அவை எல்லாம் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள், நாங்கள் கொணரும் பூக்கள் எல்லா சுவாமிக்கும் போடப்ப்டிருக்கும். அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதிக் கோலம் போட்டிருப்பாள். ஊதுபத்தி ஏற்றி வைக்கும் யானையும், தூபக்காலும், மணியும் இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

முற்றத்தின் ஒரு கோடியில், அம்மா நங்கவரத்திலிருந்து கொண்டுவந்த சுகந்தராஜிப் பூச்செடி பெரிய வட்டத்தொட்டியில் இருக்கும். சுற்றிவர மஞ்சளும், பிங்குமாக அந்திமந்தாரை. இவற்றின் இடையே, மிது பாகற்காய், வெண்டைக்காய், மணத்தக்காளி என்று அம்மா போட்டிருப்பாள். ஒருதடவை பீர்க்கங்காய் முற்றத்து ஓடு வரை படர்ந்து நிறையக் காய்த்திருந்தது நினைவுக்கு வருகிறது.

நாள் கிழமைகளில் தெருக்கோடியில் உள்ளடங்கி இருந்த வள்ளி ஆச்சி வீட்டிலிருந்து உழக்கு மல்லி வாங்குவதுண்டு, பெரிதுபெரிதான அலாதி வெள்ளை மொக்குகளை அதன்பிறகு நான் எங்குமே பார்த்ததில்லை. கனகாம்பரம் வேண்டுமென்றால் நானும் இந்திராணியும் ரமணியோடு படித்த வெள்ளச்சி வீட்டுக்குப் போய் வாங்கி வருவோம். சாவிதிரிக்காவுக்கு லேடீஸ் கனகாம்பரம் (dark and baby pink petals) சுகுணாக்காவுக்கு ஜிலேபி கனகாம்பரமும் (orange petals) பிடிக்கும். நூறு, இருநூறு என்ற எண்ணிக்கையில்...நாலணா, எட்டணா...அவ்வளவுதான்.

அதுதவிரப் பிரதி வியாழனென்று சாயங்காலம் பூக்காரப் பாப்பாத்தி மூங்கில்கூடை நிறையக் கதம்பம், ஜாதிப்பூ என்று கொண்டு வருவாள். அம்மாவுக்கு எப்போதும் ஒரு கிள்ளு ஜாதிப்பூ தான் பிடிக்கும். சின்னக் கோடாலி முடிச்சில் அந்தப்பூவை வச்சுப்பா. அப்பா மதுரையில் வேலை பார்த்துவந்த போது மாதம் ஒரு தடவை வருவார். அப்போது மதுரை மல்லியும் கூடவே வரும். தொடுத்து மாளாது. அம்மா எல்லோருக்கும் கொடுப்பாள்.

அது தவிர சுகுணாக்கா மணச்சையில் வேலைக்குப் போய்வரும்போது, பெரிதுபெரிதாகத் தாமரைப்பூக்கள் கொண்டு வருவாள், நம் வீட்டுத் தெய்வங்கள் கொடுத்து வைத்தவைதான்....இந்தப்பூக்களின் சுகந்தமும் சூழலும் இன்னமும் மனதுக்கு ரம்மியமாக இருக்கு. இது தவிர இந்திராவும் நானும் நந்தியாவட்டைப் பூக்கள் பறித்து வருவோம். நவராத்திரி அலங்காரத்துக்கு.

திருச்சி வந்த பிறகு மல்லிப்பூ சீசனில் அக்கா எனக்கு மல்லிப்பூ வைத்துத் தைத்து விட்டாள். அது சமயம் அம்மா வாளாடிக்குப் போயிருந்தாள். தான் இல்லாத சமயம் எனக்குப் பூத்தச்சு விட்டது அம்மாக்குப் பார்க்க முடியலைன்னு வருத்தம். எனக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது...

சிங்கப்பூர் பிடித்துப் போகக் காரணம் இந்தப்பூக்களும் பூங்காவும் என்று கூடச் சொல்லுவேன். தோட்டம் கொண்ட வீடு அமைந்த போது மனசு ரொம்பவே குதூகலித்தது. பழம், காய் என்று போடாமல் நிறையப் பூச்செடிகள், அதுவும் ரோஜாச்செடிகள் வைக்கணும் என்ற ஆசை நிறைவேறியது. ரோஜா, மல்லி, செவ்வரளி, செம்பருத்தி, பிச்சிப்பூ என்று தோட்டம் நிறைய மலர்கள் ஒன்று மாற்றி ஒன்று பூத்துக் குலுங்கும்போது மனதுக்குள் சந்தோஷம் பூக்கிறது. அவற்றைச் சுவாமிக்குப் போடும்போது ஏற்படும் மனநிறைவை வார்த்தைகளில் சொல்ல இயலாது. I can see the God's finger print in each flower! மலராலும், இலையாலும், நீராலும் என்னைத் தொழுபவர்களின் பக்தியை நான் அங்கீகரிக்கிறேன் என்று கீதையில் சொன்ன பகவான் கிருஷ்ணரை நினைத்துக் கொள்வேன்.

ஒரு ஒரத்தில் தைவான் வாழைமரம். பூக்காது...இல்லை மட்டும்தான். காரடையான் நோம்புக்கும், மற்ற விசேஷங்களுக்கும் அருமையான இலை! அத்தோடு வெற்றிலையும், மணிப்ளான்டும், மாடத்தில் துளசி. சிறு தொட்டியில் மஞ்சள் கிழங்கு. வீட்டு முன்புறத் தோட்டத்தில் போகன்வில்லா. இடையிடையே நெடிது வளரும் பனை...முன்புறமும் பின்புறமும் இரண்டு பிள்ளையார்கள்...இந்தச் சிறிய தோட்டத்தின் சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டு!

சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் இருக்கும் பூச்செடிகள் அசையும் போது, நம்மை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பது போல் இருக்கும்.

பழைய நாட்கள் நினைவுக்கு வருகிறது....குவைத்திலிருந்து, சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்த நாட்களில், திருச்சி மலைக்கோட்டை வீட்டு வாசலில் அப்பா காத்துக்கொண்டு நிற்பார். அப்பா என்று கட்டிக் கொள்ளும்போது, பூமணம் வீசாதுதான்! ஆனால் அன்பான அப்பாவின் விபூதியும், வெற்றிலை வாசனையும் நூறு மலர்ச்செண்டுக்கு மேல் மணத்து, உற்சாகம் கொடுக்குமே!

அப்பாவின் காலத்துக்குப் பின், சாவித்ரிக்கா படபடத்துக் கொண்டு செம்மண் இட்டுக் கோலமிட்டு ஆண்டார் தெரு வாசலில் எக்ஸ்ட்ரா பால் வாங்கிக் கொண்டு, 'பானு' என்று குரலெழுப்பி அனைத்துக் கொண்டு வரவேற்கும்போது, பூஜை அலமாரியின் மெலிதான குத்துவிளக்கின் பிரகாசமும், மெல்லிய ஊதுபத்தி வாசனையும், மல்லிகைப்பூ மணமும், குக்கரின் விசிலுமாகக் கலந்து கட்டிய ஒரு மணம் பற்றிக்கொள்ளும்.

நம்மை உலகுக்குக் கொண்டு வந்த பெற்றோர்கள் இல்லை....நம்மை வளர்த்து ஆளாக்கிய உடன்பிறப்புக்கள் இல்லை...ஆனாலும் அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள், உள்ளத்துக்குள் பூக்களாக அன்றாடம் மணம் பரப்புவதை என்னால் நுகர முடிகிறது! உங்களால் அப்படி அந்த நினைவுப்பூக்களின் சுகந்தத்தை உணர முடிகிறதா?...... வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பூவைப் போல...மணமானது...மேலும் அழகானது கூட... இல்லையா? அன்புடன் பானுரவி/2nd May 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi