கதை 6

அயலவர்கள்

நல்ல அயலவர்கள் ஒரு பெரிய வரம். குவைத்திலிருந்து சிங்கப்பூருக்கு, காணாடுகாத்தான் வரை — அவர்கள் என்னை எத்தனையோ முறை காப்பாற்றியிருக்கிறார்கள்.

நமது கானாடுகாத்தான் வீட்டு முகவரி 3/120 அரு.வீதி. நமது வீட்டின் வலது புறம் நாற்புறச் சந்து. வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய முருங்கை மரம்...அதையொட்டி ஒரு பெரிய திடல் நீண்டு போகும்...அது யாருடைய நிலமோ...அந்த இடமானது, இயற்கை உபாதைக்கு ஏற்ற மரப்பொந்துகள் நிறைந்த மறைவிடமாக இருந்ததால், பொதுக் கழிப்பிடமாக அத்திடலை எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்....கழிவறை இல்லாமல் நாம் எல்லோரும் எப்படி அங்கு வாழ்ந்தோம் என்பது மிகவும் மலைப்புக்குரிய விஷயமாகத் தெரிகிறது...அக்காவெல்லாம் இளம்வயதில் நிச்சயம் சங்கடப் பட்டிருப்பார்கள். ஹூம்!

நமது வீட்டையொட்டி இடப்புறம் கிணற்றடி வாசல். அதை அடுத்து இருந்த வீட்டில் ஒரு ஊமை ஆச்சியும் அவரது மூன்று பையன்களும் வாடகைக்கு இருந்தனர். அந்த ஆச்சியின் கணவர் இறந்து விட்டதால், ஆச்சி எப்போதும் வெள்ளைப்புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக மொழுக்கென்று ஒரு சொருகு கொண்டையுடன் இருப்பாள். பெரிய பையன் பெயர் ஜவஹர் என்று நினைவு...பஞ்சாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். எப்போதும் அவர்கள் வீட்டிலிருந்து சாம்பார் மணமும், பூண்டு/சோம்பு வாசமும் வந்து கொண்டிருக்கும். ஆச்சி ரொம்பவும் கெட்டிக்காரி என்று அம்மா சொல்லுவார். சைகையிலேயே நூறு விஷயங்களைச் சொல்லுவாளாம். பைசாவிலும் படு கெட்டிக்காரி....யாரும் அவளை ஏமாற்ற முடியாது...கொஞ்ச நாட்களில் அந்த ஆச்சி வேறு எங்கோ போய்விட்டாள்.

அதன்பிறகு அந்த வீட்டுக்கு ஒரு தெலுங்கு பிராமணர் குடும்பம் வந்தது. அந்த மாமா நல்ல ஆஜானுபாகுவாக தேஜஸுடன், சந்தனம் துலங்க இருப்பார். வாளிக் கடுக்கன், தடித்த மூக்குக் கண்ணாடி, பளிச் பூணூல், கையில் எப்போதும் விசிறிமட்டை என்று டிபிக்கல் சாஸ்திரிகளாக இருப்பார். அந்த மாமி அவருக்கு இரண்டாம் தாரம்...சற்றே மாறு கண்ணோடு இளமையாகவும், சுருட்டைத் தலை முடியுடனும், பிடிபிடியாய்ச் சங்கிலியுடனும், கருகமணித் திருமங்கல்யத்துடனும் இருப்பாள். அவர்களது ஒரே பையன் லட்சுமி நாராயணன். அண்ணாமலை பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்துப் படிக்க அங்கு வந்திருந்தார்கள்.

உள்ளங் கழுத்தில் உருண்டையாகக் கொட்டைப்பாக்கு சைஸில் எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் யாரைப் பார்த்தாலும் அந்த லட்சுமி நாராயணன் முகம்தான் வந்து போகும். ஒரு ஜாடைக்கு, கறுப்பு நிற TN சேஷகோபாலன் மாதிரி இருப்பான்...ரொம்ப ஜொள்ளுப் பேர்வழி...வயசுக் கோளாறு வேறு. அவர்கள் வீட்டில் போட்டிருந்த ஓலைத்தட்டி வழியே தெருவில் நடமாடும் பெண்டுகளை வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பதும், அசடு வழிய இளிப்பதுமாக இருப்பான்.

இந்தக் குடும்பம் நம்மோடு ஆரம்பத்தில் ரொம்ப நன்றாகவே பழகி வந்தார்கள். அதுவும் விஜியாக்கா அந்த மாமியை அத்தை என்று வேறு கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அது மற்றைய பேர்களுக்கு அறவே பிடிக்கலை என்றாலும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. நம் அம்மா வாசலில் போடும் கோலம், செம்மண் இத்யாதியிலிருந்து அந்த மாமி காப்பி அடித்துக் கொண்டிருப்பாள். அம்மா மாதிரியே பிச்சோடா போட்டுக் கொள்ளுவதும், நடையுடை பாவனைகளை அப்படியே பின்பற்றுவதுமாக இருந்தாள்.

அவர்கள் வீட்டு ரேடியோவிலிருந்து வரும் இலங்கை வானொலிப் பாடல்களும், விவித பாரதியும் எங்களுக்குப் பொழுது போகும்படி இருந்தாலும் அப்பா "ஒரே நாராசமா இருக்கு...குழந்தைகள் படிக்க முடியாம" என்று சங்கடப்பட்டுக் கொள்ளுவார். அந்த மாமிக்கு நமது வீட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமும், வம்பும் அதிகமாகவே அம்மாவுக்கும் நாளாவட்டத்தில் எரிச்சல் ஏற்படத் தொடங்கியது...அல்ப சினேகிதம் பிராண சங்கடம் என்பது மாதிரி அந்தத் தொடர்பு இருந்தது...அப்பா வேறு "இருக்கிற இடம் தெரியாமல் இருக்கணும்....ரொம்ப இழைய வேண்டாம் யாரோடையும்...பெண் குழந்தைகளை வைத்தக்கொண்டு" என்று உதார் காட்டியபடி இருப்பார். இதனால் அம்மா யாருடனும் கொஞ்சம் எட்டி நின்றேதான் பழகுவார்.

போகப்போக இந்தப் பழக்கத்தில் மெதுவாக விரிசல் ஏற்பட்டது..எதனால் என்பது நினைவில் இல்லை...ஆனால் ஒருமுறை கிணற்றடியில் நீர் இறைப்பதில் தொடங்கிய வாக்குவாதம் ஞாபகத்தில் இருக்கு....ரமணி அந்த மாமாவை 'கிழட்டுப் பயலே' என்று திட்டிவிட்டான். அவர்கள் ஏகத்துக்கும் feel பண்ணிப் பேசியபோது, விஜியாக்கா ரொம்பவும் சமயோசிதமாக 'கழட்டிப் போடு ராட்டினத்தை' என்று தான் ரமணி சொன்னான். உங்களுக்கு வேற மாதிரி கேட்டிருக்கு" என்று சொல்லி ஒரேயடியாகச் சமாளித்து விட்டாள். அப்புறம் அந்தப் பயன் படிப்பு முடிந்த கையோடு அவர்கள் வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட்டார்கள்.

மூன்றாவது வீடு சரோஜா/காத்தமுத்து வீடு, திமுதிமுவென்ற அந்த சரோஜா (வடிவுக்கரசி மாதிரி) எப்போதும் சண்டை போடும் தோரணையில் தான் இருப்பாள். நான்காவது வீடு ஆசாரி வீடு. MN ராஜம் மாதிரி ஆசாரியின் மனைவி. வேலம்மாள், தனம், அப்புறம் ஒரு பையன். ராஜா வீட்டுக்கு வெள்ளிச்சாமான்கள் செய்யும் பட்டறையில் அந்த ஆசாரிக்கு வேலை. ஐந்தாவது வீடு சாத்தையா/பெரிய நாயகியின் வீடு. அவர்களுக்கு இரு பெண்கள். ஜானகி, சின்னம் என்று.

அதையடுத்து அடுக்குமல்லி வாங்கப் போகும் வள்ளி ஆச்சியின் வீடு...உள்ளடங்கிய காம்பவுண்டுக்குள் இருந்தது. நமது வீட்டின் எதிர்புறம் திடலைப் பற்றிச் சொன்னேன். அதையொட்டி, பெருமாள் ஐயாவின் பெட்டிக்கடை. நமது சேகரின் ஆஸ்தான இருப்பிடம்...அதுபற்றிப் பிறகு எழுதுகிறேன்... திரும்பவும் ஒரு பாழடைந்த வீடு...அங்கு காளி என்ற பம்பைத்தலை பெண்மணி ஒருத்தி இருந்தாள். வாய் வெற்றிலை போட்டுச் சிவந்து கிடக்கும்.

அதன் பக்கத்து வீடுதான் அழமி ஆச்சியின் வீடு. முன்புறம் இடிந்து நீண்டுகிடக்கும் அந்த வீட்டைப் பற்றி ஆச்சிக்கு அத்தனை பெருமை! நல்ல வளமையாக வாழ்ந்த குடும்பம்... ரவிக்கை இல்லாமல், வெள்ளைச் சேலை கட்டி ஆடி ஆடி நடந்து வருவாள். நம் அப்பா மீது ஏக மரியாதை...அம்மா மீது ஏக அன்பு. நம் அனைவரின் மீதும் மிகவும் வாஞ்சை. சாவித்திரி அக்கா தான் அந்த ஆச்சி கடிதம் எழுதித் தருவதும், கணக்கு வழக்கு பார்த்துத் தருவதும். தனது செட்டியார் கணவருடன் அந்த நாட்களில் கப்பலில் சென்று வந்த தேசங்களை (மலாயா, சிங்கப்பூர், பினாங்கு, தாய்லாந்து, பர்மா....) மூச்சு விடாமல் சொல்லுவாள். அது போல் இந்தியாவில் சென்று வந்த ஊர் பெயர்களையும் மறக்காமல் கடகடவென்று சொல்லுவாள்.

தன் ஒருத்திக்குத் தான் என்றாலும் வக்கணையாகச் சமைப்பாள். தினம் ஒரு கீரை. துவட்டல், வத்தல், துவையல், பொரியல் என்று அருமையாகச் சமைத்து உடம்பைக் கவனித்துக் கொண்டவள். கொல்லைப் புறத்தில் கறிவேப்பிலை மரமும், சப்போட்டா மரமும் தழைந்து இருக்கும்..சில சமயங்களில் .நம் ராஜா அங்கே போய் சுவரேறிக் குதித்து அவற்றைக் கொள்முதல் செய்து கொண்டு வருவான்,

அலமி ஆச்சிக்குக் கோபம் வந்து ஜாடைமாடையாக "பட்டுக்கிடப்பான்....எந்த வீட்டுப் புள்ளைங்களோ இப்படிச் சுவரேறிக் குதிச்சு அதம் பண்ணுதுங்க...என் கண்ணுல படாம ஓடிப் போயிடுதுங்க' என்று முணுமுணுக்கும் போது, நாங்கள் கழுக்கமாகச் சிரித்துக் கொள்ளுவோம். திருட்டுக் கறிவேப்பிலை கமகமவென்று மணக்கும்தான்...

கிணற்றடியை ஓட்டிப் பின்னால் நாம் மாடு கட்டும் கட்டுத்துறை. பெரிய எல் வடிவில் கன்றுக்குட்டிகளும், பசுவும், காளைமாடும் கட்டையில் கட்டப்பட்டிருக்கும் இடம். அங்கிருந்த ஒரு சிறிய ரூமில் நிறைய வைக்கோலும், புண்ணாக்கும் மூட்டை மூட்டையாக இருக்கும். நானும் இந்திராணியும், எள்ளுப்புண்ணாக்கைக் கொஞ்சம் எடுத்துக் கருபட்டியோடு சேர்த்துக் கொண்டு தின்போம்...

கட்டுத்துறையை ஒட்டிக் கொல்லைப்பக்கம் இருந்தது அந்த வள்ளியின் வீடு. பெரிய பல்லும், ஒரு மாதிரி விகாரமான உருவமும் கொண்ட வள்ளியும் சண்டை போடும் வர்க்கம் தான்...அவளுக்குப் பாப்பா என்ற பெண்ணும் கங்கா என்ற (ரொம்ப நாள் கழித்துப் பிறந்த) பெண்ணும். அவள் கணவன் சுப்புராமன் சென்னையில் வேலை பார்த்து வந்தார். மிகவும் அமைதியான கம்பீரமான மனிதர். வள்ளிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத மனிதர்...

ஆனால் அத்தனை அண்டை வீட்டாரும் "ஐயர் வீடு" என்று நம்மீது மிகவும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் இருந்தார்கள் என்பதுதான் இதில் நாம் அறிய வேண்டிய ஒன்று..

அன்புடன், பானுரவி

With love, Banooravi