கதை 7

கூட்டாஞ்சோறு

வார இறுதிகளில் கூடி, கூட்டாஞ்சோறு என்ற ஒரு குலுக்குமல்லி விருந்து. இந்த நினைவுகள் உங்கள் வயிற்றையும் நிரப்பட்டும்.

அந்த பாலபருவத்தில், படிப்பு, விளையாட்டு தவிர வேறு பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நாம் நிகழ்த்தி இருக்கோம். நாம் வயதில் சிறியவர்களாகி விட்டதால், இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு ரமணியும் இந்திராணியும் தான் முதல் காரணமாக இருந்தார்கள். முன்மாதிரி எனலாம்.

நமது வீட்டு மொட்டை மாடியில் ஒரு புறாக்கூண்டு இருந்தது. நிறையப் புறாக்களுக்கு அது அடைக்கலம். அந்தப் புறாக்கள் நம் வீட்டுக் கட்டுத்துறையிலிருந்து வைக்கோலை எடுத்து வந்து, முட்டை பொரிப்பதற்கு ஏதுவாக அந்த இடத்தில் போட்டு அமளி பண்ணி வைத்திருக்கும். முதல் காரியமாக, இந்தக் கூட்டாஞ்சோறு பண்ணும் நாட்களில், ஒரு பெரிய தென்ன விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு, நானும் இந்திராணியும் அந்த இடத்தைப் பெருக்குவோம்.

ரமணி பெரிய அடுக்கில் (அப்போது பிளாஸ்டிக் வாளி எல்லாம் புழக்கத்தில் இல்லை) தண்ணீர் கொண்டு வருவான். நானும் ராஜாவும் அடுப்பெரிக்க நிறையத் தேங்காய்நாரும், சுள்ளிகளும் கொண்டு வருவோம்.

அங்கு ஏற்கனவே மூன்று பெரிய செம்பராங்கல் இருக்கும். ஏற்கனவே ரமணி அண்டை அசல் பையன்களிடம் சொல்லிப் பைசா கலெக்ட் பண்ணி வச்சிருப்பான். பெருமாள் ஐயா கடையிலிருந்து கருப்பட்டி அல்லது அச்சு வெல்லம் வாங்கி வருவான். அப்புறம் பெரிசு பெரிசான பூவரசம் இலையை வேறு பறிச்சிண்டு வந்திருப்பான். அதற்குள் இந்திராணி அடுப்பு மூட்டி (கை வலிக்க வலிக்க நானும் ராஜாவும்தான் விசிறணும்!) புகை மண்டிக் கொண்டு தஸ்க்புஸ்க் என்று திணறிக்கொண்டு இருப்போம். ஆத்திலிருந்து கொண்டு வந்த அடுக்குப் பாத்திரத்தில் அரிசி களைந்து போட்டுக் கிளறிக் கொண்டிருப்பாள். நான் வெல்லம் நசுக்கும் சாக்கில் (உருண்டைக் குழவிக்கல்) இரண்டு பெரிய கட்டியை நைசாக எடுத்துப் பாவாடையில் செருகிக் கொண்டு விடுவேன். களைந்து போட்ட அரிசி, பதமாக வெந்து வருவதற்குள், இந்திராணியை எல்லோரும் அவசரப்படுத்தி, வெல்லத்தைப் போட்டு விடுவோம். அரையும் குறையுமாக வெந்த சாதம் வெல்லத்தோடு சேராமல், விரைவிரையா முழிச்சிண்டு இருக்கும்...ஆனால் அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை! கொதிக்கக் கொதிக்க அந்த அரச இலையில் ஆளுக்கு ஒரு கரண்டி என்று ஒடஓடப் போட்டுக் கொண்டு (வீட்டு மனுஷாளுக்கெல்லாம் இல்லை) சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டு சாப்பிடுவோம்...அந்த அபார ருசி இன்னமும் நாக்கில் தேனாக இனிக்கிறது.

ஒரு தடவை உள்ளில் ஊஞ்சல் பலகைக்கு மேலே இருந்த பிறையில் அப்பா பண்ணி வைத்திருந்த பச்சை இங்க்கை யாரோ கொட்டி, அங்கு இருந்த அரிசியில் அது கலந்து போய் அரிசியெல்லாம் நிஜமாகவே பச்சரியாக மாறி இருந்தது. அதையும் விடலை...எடுத்து வந்து நிறையத் தடவை களைந்தோம். களைவதற்கு நல்ல தண்ணீரை எடுத்து விட்டதால், அம்மாவிடம் நன்றாக வசவு வாங்கிக் கட்டிண்டோம்...(Good water water was precious for us because we had to bring it from the ponds at the distance.... so how could Amma let us use it sparingly for our play?) அந்தத் தடவை செய்த பொங்கல் பச்சைக் கலரில் இருந்தது மட்டும் இன்னமும் பசுமையாக நினைவிருக்கு. பசுமை நிறைந்த நினைவுகள் தான்....இல்லையா?

அந்தக் கொல்லை புறத்தில் வள்ளி வீட்டுக்கு முன்பக்கமாக ஒரு பப்பாளிமரம் இருந்தது. அதிலிருந்து ஒரு பெரிய இளநீர் சைஸுக்கு ஒரு பப்பாளிக்காயை ரமணி பறித்து வந்தான். விடுவாளா இந்திராணி? அதைப் போட்டுக் கூட்டுப் பண்ணினாள். ஆனால் உப்பு மட்டும் கொஞ்சம் கூடப் போய்டுத்து....அம்மாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடிக் கொஞ்சம் சாதம் கொண்டு வந்து கூட்டோடு கலந்து ஒருவழியா பப்பாளிக்கூட்டைக் காலி பண்ணிட்டோம்! (உப்பிட்டவரை உள்ளவரை நினைக்கணும்ன்னு தான் இந்திராணி அன்னிக்கு நிறைய உப்புப் போட்டுக் கூட்டுப் பண்ணினாளோ?)

ரமணி சனி ஞாயிறு என்றால் சுத்தமாக வீட்டிலேயே இருக்க மாட்டான். நிறைய முந்திரிப் பழங்களைக் கொண்டு வருவான். அத்தனை முந்திரிப்பழம் (கரகரனு தொண்டையில் கோகக்கோலா மாதிரி ஒரு எரிச்சல் மிகுந்த இனிப்போடு இருக்கும்) எங்குமே அதற்கப்புறம் நான் சாப்பிட்டதில்லை. அவ்வளவு ஜூசியாக இருக்கும். அதன் கொட்டையை எடுத்து இலுப்பச்சட்டியில் போட்டு வறுத்து முந்திரி எண்ணை எடுப்பாள் அம்மா. (பித்தவெடிப்புக்கு நல்லது என்பார்). அதனால் வீடு மட்டுமல்ல, அந்தத் தெருவே முந்திரி நாற்றமெடுக்கும்....

அப்புறம் நவாப்பழம்...பெரிதும், சிறிதும், வெள்ளை ராசிப் பழமுமாக அள்ளிக் கொண்டு வருவான். அதைத் தின்ன முடியாமல் தின்று நாக்கெல்லாம் நீலம் பாரிச்சுத், தொண்டை கட்டிக்கொண்டு பேச முடியாமல் நன்றாகத் தவித்திருக்கேன். அப்புறம் ஏற்கனவே ராஜா எழுதின மாதிரி டவுன் கிளப்புக்குப் போய் அரநெல்லிக்காய் பறித்து வருவோம்...அந்த நெல்லிக்காயை அம்மா வெல்லம் சேர்த்து இனிப்பு ஊறுகாய் செய்வார். பச்சடி மணக்கும்.

இவைதவிர பனம்பழம், (சுட்டுத் திங்கணும்), கருப்பட்டிப்பழம், கொடுக்காப்புளி ஈச்சம்பழம், மகிழம்பழம் இப்படிக் கொண்டுவரும்....எதுவொன்றும் நிஷிதம் இல்லை...வெளுத்துக்கட்டுதான். பற்றாக்குறைக்கு புளியம்பூ,கொழுந்து,பிஞ்சு,அரைப்பழம், முழுப்பழம் என்று மரத்தில் ஏறிப் பறித்துக் கொண்டு வருவான் ரமணி. எல்லாம் மரத்தில் ஏறி, அவனுடைய தொளதொள டிராயர் பாக்கெட்டில்தான்...பையெல்லாம் எதுவும் கொண்டு போக மாட்டான். சட்டை டிராயர் எல்லாம் கரையாக இருக்கும்...

ராஜா வீட்டிலிருந்து நமக்கு சாக்கு மூட்டையில் புளியம்பழம் வரும். எல்லோரும் அதை உடைத்துக், கொட்டையை நீக்கிச் சுளையாக எடுக்கும் வேலை வேறு நடக்கும். அம்மா அந்தப்புளியைப் பெரிய பானையிலும் ஜாடியிலும் ஸ்டாக் செய்வார். புளியங்கொட்டை ஏகத்துக்குச் சேர்ந்து கிடக்கும். சும்மா இல்லாமல் அதை வெறும் இருப்புச்சட்டியில் வறுத்துத், தோலை நீக்கிப் பருப்பை எடுத்து உப்பு நீரில் ஊற வைத்துச் சுண்டல் மாதிரித் தருவார்கள். ருசி மட்டுமில்லை...வாசனையாகவும் இருக்கும். படு டேஸ்டி!

நானும் ராஜாவும் புளியம்பிஞ்சை வாசற்படியில் துவையல் மாதிரி உரைத்து வழித்து முழுங்குவோம். புளியம்பழத்தை எடுத்துக் கோது நீக்கி, உப்பு, வெல்லம், கொஞ்சம் காரப்பொடி சேர்த்து சொட்டு நல்லெண்ணெய் விட்டு ஒரு சின்ன எலுமிச்சங்காய் சைசுக்கு உருட்டி ஒரு தென்னங்குச்சியில் சொருகித் தருவாள் சாவித்ரிக்கா. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும். இப்படியாக அந்த நாட்களில் அம்மா ஆக்கி வைத்த உணவோடு மட்டுமல்லாது, அவ்வப்போது இனிப்பு, உப்பு,உறைப்பு,துவர்ப்பு,புளிப்பு,கசப்பு என்ற அறுசுவையும் கலந்து உண்டிருக்கிறோம். உணவு மட்டுமல்ல, நமது வாழ்க்கையும் கூட ருசியானது தான்! இல்லையா?

அன்புடன், பானுரவி

With love, Banooravi