பயம் எத்தனையோ ஆண்டுகளாக என்னோடு நடந்திருக்கிறது. சிறுமியாய் இருந்தபோதே உணவில் ஊற்றப்பட்டது. அதை விட்டுவிடுவது எப்படி என்பதைப் பாரதிதான் எனக்குக் கற்றுக் கொடுத்தான்.
பயம்! பயம்! பயமென்ற இந்தச் சொல் எனக்குள்ளாக எத்தனை ஆண்டுகள் ஒளிந்து கொண்டிருக்கிறது? உடலோடு ஒட்டிய ஒரு மச்சத்தைப் போல இந்தப் பயமும் என்னோடேயே கூடவே எப்போதும் பயணம் செய்து கொண்டு இருக்கிறது! சொல்லப் போனால், இந்த பயத்துக்கு எப்போதும் வயதாவதில்லை...உண்மையிலேயே ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு இணங்கும்படியான ஒருவித பயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை....ஒப்புக் கொள்கிறீர்களா?
நினைத்துப் பார்க்கிறேன். எப்போது இந்தப் பயம் நம்மை ஆக்கிரமித்தது? நமக்குச் சிறு பிராயத்தில் குழந்தைகளாக இருக்கும்போதே சாதத்தோடு பயமும் சேர்ந்து ஊட்டப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான காரணம்....சாப்பிட முரண்பட்ட குழந்தைகளை முன்பின் அறியாத ஒரு ரெட்டைக் கண்ணன் வந்துட்டான் (எல்லோருக்கும் ரெட்டைக்கண் தான்! ஆனாலும் குழந்தைகள் மிரண்டு போகும்படி ஒரு த்வனியில் அப்படிச் சொல்லும்போது பயம் ஏற்படுகிறது!)....பூச்சாண்டி வந்துட்டான்....இப்படிச் சொல்லி கள்ளமற்ற பிஞ்சு மனங்களில் ஒரு பயப்பிராந்தியை உண்டாக்குவது முதலில் பெற்றோர்கள் தான் என்பேன்! அக்காலம் தொட்டு இந்நாள் வரை இந்த முறையில் எந்த மாற்றமும் இல்லை...
ஒரு மாய வலையைப் போல இந்தப் பயம் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது...நாம் வளர வளர இந்தப் பயமானது சிறியதும் பெரியதுமாக நம்மோடு கூடவே வளர்ந்து விடுகின்றன. முக்கியமாக பால்ய காலம்தான் பயத்தின் விளைநிலம்! பகலில் பார்க்கும் பூனையை இரவில் பார்க்கும்போது மனம் பயத்தில் கிலேசம் கொள்ளுகிறது! நானும் இந்தப் பயத்திற்கு விதி விலக்கல்ல. திக்திக்கென்ற பயம் என்னை நிறையச் சீரழித்திருக்கிறது...நான் கொண்ட பயம் ஒரு சித்தெறும்பைப் போல எனது உடம்பில் ஏறத் துவங்கி உடம்பெங்கும் ஒருவித அவஸ்தையை உண்டாகிய தருணங்கள் அநேகம்...எனது நிழலைப் பார்த்தே நான் அதிகம் பயப்பட்டதுண்டு....
பயம் வரப் பல காரணங்கள் உண்டு. இரவு நேரங்களில் கானாடுகாத்தானில் முற்றத்தில் சாப்பாட்டுத் தட்டுக்களை அலம்பி வரிசையாக வைக்கும் வேலை சில நாட்களில் எனக்கு இருக்கும்....ரொம்பவும் பிரகாசமான லைட் இருக்காது. அந்தப் பிறையிலிருந்து தட்டுக்களை எடுக்கச் சொல்லும் போது நீளமாக விழும் எனது நிழலே முதலில் எனக்குத் திடுக்திடுக்னு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும்....அப்புறம் அந்தச் சுவர்களில் பெரியதாக இருக்கும் பல்லிகள்.....கடவுளே! இந்தப் பல்லி பயம் இன்னமும் என்னை விட்டுப் போகவில்லை!
அப்புறம் ஸ்கூலுக்குத் தனியாகப் போகும்போதும் வரும்போதும்....யாரோ என்னைத் தொடர்ந்து வருவது போல் இருக்கும்....திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போயிருக்கேன். விக்கிரமாதித்தன் கதைகளைப் படித்ததால் பூதங்கள், பிசாசுகள் என்று மனம் விபரீத கற்பனையில் என்னை ஆழ்த்தி நிரம்பவே பயந்தது உண்டு. அந்தக் கற்பனைக் கதாபாத்திரங்களை நாம் மனத்துக்குள் உருவகப் படுத்தி விடுவதால் ஏற்படும் கோளாறு!
பள்ளி நாட்களில் கணக்கு எனக்குப் பிணக்கு...ஆமணக்கு! நன்றாக நினைவிருக்கு...விஜயாக்கா கிருபாகரம் டீச்சரிடம் சொல்லி விடுவாள். நான் சரியாக் கணக்குப் போடலைனா விளையாட்டுப் பீரியட்ல போய் விளையாட முடியாது....எல்லோரும் விளையாடும்போது நான் மட்டும் கடன் வாங்கிக் கழித்தலில் முழி பிதுங்கிக் கொண்டிருப்பேன்! அப்போது கணக்கு எனக்குள் ஏற்படுத்திய பயம் ரொம்பவே ஜாஸ்தி!
அப்புறம் வந்த நாட்களில் சிலரைப் பார்க்கவே பயமாக இருக்கும்....அம்மாவோடு குளத்துக்குத் தண்ணீர் கொண்டுவரப் போகும் போதும் இந்தப் பயம் எட்டிப் பார்க்கும். இந்திராணியின் சிநேகிதி ரத்தினவல்லி என்ற பெண் அரளி விதையை அரைத்துத் தற்கொலை செய்து கொண்டதுதான் என்னை அந்தச் சின்னஞ்சிறு வயதில் பயங்கொள்ள வைத்த நிகழ்ச்சி! இப்பவும் அரளி மரங்களைப் பார்க்கையில் இந்த நினைவு என்னைப் பற்றிக் கொள்ளும்! மனதில் இறப்பு பற்றிய எண்ணமும் பயமும் ஏற்பட்டது அப்போது தான்....அப்புறம் நம் பாட்டியின் உடம்பை வாசல் திண்ணையில் கிடத்தி இருந்ததைப் பார்த்ததும் எனக்குள் விவரிக்க இயலாத பயத்தை உண்டாக்கியது...
வாயைக் கட்டி, கால் கட்டை விரலைக் கட்டி என்று பாட்டியைப் பார்த்தது என்னை ரொம்பவும் மிரள செய்திருக்கு....தெளிவற்ற மன நிலையும் பயமும் எப்போதும் மனசுக்குள் சுழன்று கொண்டே இருக்கும்.... அப்புறம் இடி மின்னலுடன் கூடிய மழை என்னை ரொம்பவே பயமுறுத்தி இருக்கு. பயங்கர இடிச் சத்தமும் வீசுகின்ற பெருங்காற்றும் எப்படி ஏற்படுகிறது என்று அவ்வளவாகப் புரியாத வயதில் பயம் ஏற்பட்டது இயற்கையே என்றாலும் மனம் சலனம் கொள்ளுவதும் என்னாகுமோ என்ன நடக்குமோ என்ற கவலையும் கூடவே வந்து விட்டிருக்கிறது.
தெரு நாய், கிறுக்குச் சுந்தரம் செட்டியார், குடுகுடுப்பைக்காரன், வழிச்சுங்கி நரிக்குறவர்கள் பெரிய மரங்கள், கருத்த மேகங்கள், வீட்டில் அவ்வப்போது நடக்கும் உச்சஸ்தாயிப் பேச்சுக்கள், முற்றத்துத் தேரைகள், தவளைகள், பாம்பாட்டி, குரங்காட்டி, பூம்பும் மாட்டுக்காரன், இருட்டுக் கிணற்றடியும் வெளவால்களும், மற்றும் "கண்ணைப் பார்...சிரி" என்று எழுதப்பட்ட வாசகத்துடன் வரும் பெரிய லாரிகள்,.......இப்படி எனது பயத்துக்கு எல்லாமே மூல காரணங்களாகி விட்டிருக்கின்றன...அப்பாவின் பிரகலாதச் சரித்திரக் கதையில் நரசிம்ம அவதாரக் கதையைக் கேட்டு நரசிம்மரைப் பார்த்த போதெல்லாம் மிரண்டு போய் மனதில் கிலி கொண்டிருந்திருக்கிறேன். மனக் கலக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போய்விடுமோ என்று அநேக தருணங்களில் தவித்திருக்கிறேன்....
இப்போது நினைக்கையில் அவை அர்த்தமற்றதாகத் தோன்றினாலும், நமக்கு இயல்பாக இருக்க வேண்டிய மனோ திடத்தை, தைர்யத்தைச் சற்று வீரியம் இல்லாமல் செய்ததில் இந்தப் பயம் முக்கியப் பங்கு வகிக்கிறது..... அப்புறம் அம்மாவுக்கு நேர்ந்த திருட்டு அனுபவம், அது சமயம் மதுரையில் தன் தலை மீது விழ இருந்த பாராங்கல்லில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பித்து வந்த அப்பாவின் அனுபவம், இதெல்லாம் எனது பயத்தை இன்னமும் கூட்டிக் கொண்டே போனது....இன்ன பிற குடும்ப நிகழ்வுகளும் என்னை மிரள செய்தவையாகவே இருந்தன....நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதும் புரிபடத் தொடங்கிய காலம் அது....எதிர்பாராத ஏதேனும் நடந்து விடுமோ...நினைத்தது நடக்காமல் போய்விடுமோ என்று அச்சம் கூடவே தொடர்ந்த வயதில் இருந்தேன்.....
பிறிதொரு நாள் சுய சிந்தனையின் வெளிப்பாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகம் புரிந்து போனது..."மேன்மைப்படுவாய் மனமே கேள்....பயத்தால் ஏதும் பயனில்லை" என்று பாரதி சொல்வது போல பயம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலக ஆரம்பித்தது....உண்மையிலேயே பாரதியின் பாட்டு என்னைப் புதியதோர் பிறவியாய் ஆக்கி விட்டது என்பேன். நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை என்று சொல்கிறானே! பயமென்னும் பேய் தனை அடிப்போம் என்கிறான்...எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் வீழ்கவே என்றும், ஜெயமுண்டு பயமில்லை மனமே என்றும் அவன் சொன்னது எனக்கே எனக்கு என்று தோன்றியது...
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும் அச்சமில்லை என்கிறான். இச்சை கொண்ட பொருட்களை இழந்து விட்ட போதிலும் அச்சமில்லை என்கிறான். நச்சை வாயிலே கொணர்ந்து யாரும் ஊட்டும் போதிலும் அச்சமில்லை என்கிறான்!
நடந்து போனதை நினைத்து வருந்துவதும், இனி நடக்கப்போவதை எண்ணி மயங்குவதும் நம் எல்லோருக்குமே இருக்கும் இயல்புகள் தான்...இன்று புதியதாய்ப் பிறந்தோம் என்ற சிந்தனை நமக்குள் பிறந்தால் நல்லது என்று தோன்றினாலும் நிறையவே நாம் முரண்பட்டுப் போகிறோம்.... திரும்பவும் பாரதியைத்தான் சொல்லுவேன்.... "முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை!. முதல் இறுதி இடை நம் வசத்தில் இல்லை! மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே ஐயமென்னும் பேயெல்லாம் அறுத்துத் தள்ளி....." இப்படி ஒரு மன நிலைமை கிடைக்க வேண்டுவோம்....விட்டு விடுதலையாவோம்!! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற திருநாவுக்கரசரைத் தேடிப் படிப்போம்...இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று உணர்வோம்! அன்புடன் பானுரவி/19th Sep 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi